தனியார் மயமாக்கல் : ஒரு தனித்த பார்வை

This entry is part [part not set] of 10 in the series 20001203_Issue

சின்னக் கருப்பன்


இந்தியாவில் இருக்கும் பல அரசாங்க தொழில் நிறுவனங்கள் அரசாங்கத்தின் கையிலிருந்து பொதுமக்கள், முதலீட்டாளர்கள் கைக்கு மாற்றப்பட இருக்கின்றன.. ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், பி ஹெச் ஈ எல் போன்ற பெரும் நிறுவனங்கள் தனியார் கைக்கு மாற்றப்படுவது அங்கு உழைக்கும் பல தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறது.

உதாரணமாக தொலைபேசி நிறுவனத்தில் உழைப்பவர்கள் (உழைப்பவர்களா அல்லவா என்பது விவாதத்துக்குரியது என்று பொதுமக்கள் கேலி பேசுவது ஒருபுறம்) தனியார் மயமானால் தங்கள் வேலைக்கு இருக்கும் உத்திரவாதம் போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் மிக மோசமாக இருக்கும் இந்தியாவில் இந்த பயம் நியாயமானதுதான். வெகுகாலம் அரசாங்க நிறுவனத்தில் உழைத்துவிட்டு வேலையை விட்டு அனுப்பினால் வேறு வேலை எப்படி தேடுவது என்பது வயதான காலத்தில் ஒரு வயிற்றுப் பிரச்னை.

இருந்தும் அரசாங்க அலுவலகங்கள் தரும் தங்கக் கைகுலுக்கலைப் பெற்றுக் கொண்டு பலபேர் இன்று அரசாங்க உத்தியோகத்தை விட்டு வெளியே செல்கிறார்கள். இவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் தனியார் நிறுவனங்களில் ‘கன்ஸல்டன்ஸி ‘ வேலை செய்து நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், தொழிற் பயிற்சியோ இன்று வேலைச் சந்தையில் தேவைப் படும் திறமைகளோ இல்லாத கீழ் மட்டத் தொழிலாளர்கள் நிலை கொஞ்சம் மோசமானது.

இந்தப் பிரச்னைகளால் இந்திய அரசாங்கம் அது போல் யாரும் வேலையை விட்டு தூக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறது என்று அறிகிறேன். அப்படி உத்தர வாதம் இல்லையென்றால் அதைப் பெறவும் அமல் படுத்தவும் தொழிற்சங்கங்கள் முயல வேண்டும். அப்படியொரு உத்தரவாதம் இருப்பினும் தனியார் மயத்தை கம்யூனிஸ் கட்சிகளின் தொழிலாளர் சங்கங்கள் எதிர்க்கின்றன.

அரசு தொழில்கள் ஏன் எப்படித் துவக்கப் பட்டன என்று பார்க்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றபின்பு கொஞ்சம் சோஷலிசச் சார்புடன் இருந்த ஜவகர் லால் நேருவின் முயற்சியால் பல அரசுத் தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன. உள்ளூர் மூலதன உருவாக்கம் பெரிதும் வளராத நிலையில், வெளிநாட்டுக் கம்பெனிகள் நம்முடைய சோவியத் சார்பு கொள்கையால் சற்றே விலகி நின்றிருந்தனர். பெருமுதலீடு போடுவதற்கான தனியார் முன் முயற்சி சுணங்கியிருந்த நிலையில், அரசு சார்பில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால், பல துணைத் தொழிற்சாலைகள் ஏற்பட்டன. சில துறைகளில் தொழில் வளர்ச்சி சாத்தியமாயிற்று. ஆனால், வேலைக் கலாசாரம் சரியாக வளர்ச்சி பெறாததால், அரசாங்க வேலையின் நிர்வாகம் ஊழலும் , சிபாரிசுமயமாகவும், வேலைச் சுணங்கலுமாய் ஆயிற்று. உற்பத்தி பாதிக்கப்பட்டது. லாபம் ஈட்டாத நிலையில் தொழிற்சாலைகள் ‘நோய் ‘ வாய்ப் பட்டன. ஆனாலும் சில தொழிற்சாலைகள் லாபம் ஈட்டி வருகின்றன. இந்த நிலை முக்கியமாய், நல்ல நிர்வாகம் மற்றும் உற்பத்தியாகும் பொருளுக்கான தேவையால் உருவானது.

தனியார் மயமாக்குவதால் இப்படிப் பட்ட நிறுவனங்கள் லாபம் ஈட்ட இயலுமா ? லாபம் ஈட்ட இயலுமெனில் இது வரையில் லாபம் ஈட்டாமல் நோய்வாய்ப் பட்டதிற்கு யார் காரணம் ? நிர்வாகமா ? லாபம் ஈட்ட இயலாத தொழிற்சாலைகளை யார் வாங்க முன்வருவார்கள் ? அப்படியென்றால் தொடர்ந்து நட்டமாகிக் கொண்டே இருக்கிற தொழிற்சாலைகளை வெறும் தொழிலாளர் பண வினியோகக் கேந்திரமாய் வைத்திருக்கத் தான் வேண்டுமா ?

சரியான ஒரு கோட்பாடு இல்லாமல் தனியார் மயமாக்குவது தவறு என்பது என்னுடைய கொள்கையுமாகும். தனியார் மயமாக்குவது என்பதை இன்று அரசாங்கத்துக்கு இருக்கும் பங்கை வேறொரு தனியார் கம்பெனியிடம் நல்ல விலைக்கு விற்று விடுவது என்று கொள்கை ஏற்படுத்திக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இது நல்ல போக்கு என்று சொல்ல முடியாது.

அங்கு காலம் காலமாக உழைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு பங்கு வேண்டும். இரண்டாவதாக அரசாங்கம் இன்று வைத்திருக்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அதற்கான பணமும் இந்திய மக்களிடமிருந்து பெறப்பட்டவை. எனவே இந்தத் தொழிற்சாலைகளின் பங்குகள் சரிசமமாக ஒவ்வொரு குடிமக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

உதாரணமாக பி ஹெச் ஈ எல் தொழிற்சாலையின் அரசாங்க பங்குகள் சுமார் 3000 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது என்றால், இதில் ஒரு பங்கு சுமார் ஆறில் ஒரு பாகம் அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு என்று 500 கோடி ரூபாய் பெறுமான பங்குகள் சரிசமமாக (தோட்டியானாலும் மானேஜரானாலும்) வழங்கப்பட வேண்டும். இப்படி வழங்கப் பட்டால் கம்பெனியின் நலனில் தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு இருக்கும். அதில்லாமல், அவர்களுக்கு வழங்கப் படும் – பிராவிடெண்ட் பண்ட் போன்ற – சலுகைகளும் பங்குகளாய் வழங்கப் பட வேண்டும்.

மீதமுள்ள 2500 கோடி ரூபாய்க்கான பங்குகள் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சரிசமமாக வழங்கப்பட வேண்டும். அல்லது அவர்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் இதர வரிகள் சம்பந்தமாகவும் வழங்கப்படலாம். (இது எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பது விவாதத்துக்குரியது) ஆனால் இது அவர்களின் சொத்து என்பதில் யாருக்கும் எந்தவிதமான ஐயமும் இருக்க வேண்டியதில்லை.

வாக்காளர் அடையாள அட்டை (வோட்டர் ஐடி கார்டு )என்று ஒன்றை கொண்டுவந்திருக்கிறார்கள் இந்திய அரசாங்கத்தார். இது மிகவும் பயனுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவருக்கும் நூறு பங்குகள் என்ற மேனிக்கு அனைத்து மக்களுக்கும் இந்த பங்குகள் சென்றடைய வேண்டும். பின்னர் இந்த பங்குகளை விற்பதோ, அல்லது மேலும் பங்குகளை வாங்குவதோ, வழக்கமான முறையில் பங்குச் சந்தையில் செய்து கொள்ளலாம். மக்கள் விற்ற பங்குகளை வாங்கி அனுமதிக்கப்பட்ட பெரிய கம்பெனிகள் இந்த ஏர் இந்தியாவையோ, பி ஹெச் ஈ எல்-லையோ நடத்தட்டும்.

அப்போது, ஒரு சில அரசியல் வாதிகளை ‘கவனித்துவிட்டு ‘ அடிமாட்டு விலைக்கு பி ஹெச் ஈ எல்லை, ஒரு தனியார் கம்பெனி வாங்குவது இயலாததாகி விடும். இதை எப்படிச் செய்ய முடியும் என்று விளக்க வேண்டியது என் வேலை அல்ல. இது மக்களின் சொத்து, இதை அவர்களுக்கே விற்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் ஆயிரத்தெட்டுச் சிக்கல்கள் இருக்கலாம். சிக்கலில்லாத பிரச்னைகளில்லாத ஒரு செயல் என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இந்த முறையில் நூறுசதவீத மக்களில் சுமார் 20 சதவீத மக்கள் இந்த பங்குகளை பெறாதவர்களாகவோ அல்லது அப்படிப் பெறப்பட்டு சில இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டவர்களாகவோ இருக்கலாம். ஆயினும் 80 சதவீத மக்கள் இங்கு அவர்கள் கொடுத்த வரிக்கு பதிலாக இங்கு தொழில் நிறுவனங்களில் பங்குகளைப் பெற்றால், இந்திய அரசாங்கத்தின் மீதும், இந்திய ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வர ஏதுவாகும்.

நாகாலாந்து, காஷ்மீரிலிருந்து தெற்கே லச்சத்தீவு, அந்தமான் தீவுகள் வரை இந்திய மக்கள் வரிகளை கட்டுகிறார்கள். சில இடங்களில் வரிகள் குறைவாக வசூலிக்கப்படுகின்றன, அல்லது வசூலிக்கப் படுவதில்லை, அல்லது நாகாலாந்து போன்ற இடங்களுக்கு இந்திய அரசாங்கம் செலவிடும் தொகை அங்கிருந்து பெறப்பட்ட வரியை விட அதிகமானது என்று யார் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். இவ்வாறெல்லாம் நுணிகி ஆராய்ந்து கொண்டிராமல், குக்கிராமத்திலிருந்து மாநகரங்கள் வரை எல்லோருக்கும் பொதுவாக இந்த பங்குகள் சென்றடையவேண்டும்.

இவ்வாறு அரசாங்கம் தன் பங்குகளை விற்பதே அதன் கடனை அடைக்கத்தான்; இவ்வாறு கொடுத்துவிட்டால் அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும் என்றும் வாதிடலாம். உண்மைதான். இருப்பினும் பங்குகள் மக்களை சென்றடைவதே சரியான விஷயம்.

**

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்