தந்தை தாயான கதை

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

ரா.கோபிநாதன்


ஒருவருடைய தந்தை அவருக்குத் தாயாகவும் இருக்கமுடியுமா ? அது எப்படி முடியும் ? இது என்ன, கனவிலும் சாத்தியமில்லாத விஷயமாகத் தெரிகிறதே ? மனிதனால் முடிகிற காரியமா இது ? அடடா, எத்தனைக் கேள்விகள் நம் மனதில்!

முன்னொரு காலத்தில் காவிரிப்பூம்பட்டிணத்தல் ரத்தினகுப்தன் என்ற வணிகர் வாழ்ந்துவந்தார். அவர் ஒரு சிவபக்தர். அவருக்கு ஒரு மகள் பிறந்தாள். தன் மகளுக்கு ரத்தினாவதி என்று பெயரிட்டார் ரத்தினகுப்தன். ரத்தினாவதி பெரியவள் ஆனதும், அவளுக்கு மாப்பிள்ளையைத் தேடிய ரத்தினகுப்தன், சிராப்பள்ளியில் வாழ்ந்துவந்த தனகுப்தன் என்பவனைத் தன் மகளுக்கு உகந்தவனாகத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். சில காலத்துக்குப் பின்னர் ரத்தினகுப்தன் இஇறந்துவிட்டார்.

காலம் சென்றது. ரத்தினாவதி தாய்மை அடைந்தாள். இதற்கிடையில் அவள் கணவன் வணிகம் செய்ய வெளியூர் சென்றுவிட்டான். குழந்தை பிறக்கும் நேரமும் நெருங்கியது. ரத்தினாவதிக்குப் பிரசவம்பார்க்க அவள் தாய் புறப்பட்டு வந்தாள். காவிரியைக் கடந்துதான் அவள் ரத்தினாவதி இஇருந்த இடத்தை அடையமுடியும். ஆனால் விதி வேறுவிதமாகச் செயல்பட்டது. காவிரியில் அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரியில் வெள்ளப்பெருக்கு என்றால் சாதாரணமான விஷயமா என்ன ? இன்றைக்கு மனிதரின் மதிகெட்ட செயலால், முதுமையடைந்து உயிருக்குப் போராடும் கிழவியைப்போல் உருக்குலைந்து போயிருக்கும் மணலாறான காவிரியைப் போலல்லாமல் அன்றையக் காவேரி பார்ப்பவர் மனம் பதைபதைக்கும் வண்ணம் பொங்கிப் பிரவாகமாக ஓடுவாள். கடலே பொங்கிக் கரையேறி வந்துவிட்டதோவெனக் காண்பவர் உள்ளம் பேரச்சம் கொள்ளும் பெருவெள்ளமன்றோ அது ? அன்று வீராதிவீரரையும் வாய்பொத்தி மெளனமாக்கும் ஆற்றலுடனும், ஆக்ரோஷத்துடனும் ஓடிக்கொண்டிருந்தாள் பொன்னி. பொன்னியைக்கடக்க முடியாமல் ரத்தினாவதியின் தாய் அங்கேயே நிற்கும்படியானது. மகளின் நிலை என்னவாயிற்றோ ? இஇப்போது நான் ஆற்றைக் கடக்க முடியாது போலிருக்கிறதே. பிரசவ நேரத்தில் துணைக்கு யாருமில்லாமல் என் மகள் என்ன செய்வாள் ? சர்வேஸ்வரா நீதான் என் மகளைக் காக்கவேண்டும் என்று வேண்டினாள் அந்தத்தாய்.

அங்கே ரத்தினாவதிக்குப் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. இன்னும் அவள் தாய் அங்கு வந்து சேர்ந்தபாடில்லை. கல்லுக்குள்ளிருக்கும் தேரைக்கும் அருள்செய்யும் அந்தக் கருணைக்கடலான அம்மையப்பன் மகளின் வேதனையைக் கவனிக்காமலா இருப்பார் ? சரியான நேரத்தில் வந்து சேர்ந்தாள் ரத்தினாவதியின் தாய். சரியான நேரத்தில் தாயாரின் வரவு ரத்தினாவதிக்கு நிம்மதியைத் தந்தது. பிரசவமும் நல்லபடியாக முடிந்தது.

அடுத்ததாக நடந்ததுதான் விந்தையான விஷயம். ரத்தினாவதியின் தாயைப்போலவே தோற்றமளிக்கும் ஒருத்தி அங்கு வந்தாள். இல்லை, அவள் தாயைப்போலவே தோற்றமளிக்கும் ஒருத்தி அல்ல, அவளின் தாயேதான் அவள். அப்படியானால் முதலில் வந்து ரத்தினாவதிக்குப் பிரசவம் பார்த்தது யார் ? உண்மையில் நடந்தது என்னவென்றால், காவிரியின் வெள்ளப்பெருக்கால் அக்கரையிலேயே நின்ற ரத்தினாவதியின் தாய், நீண்ட நேரம் அங்கேயே தங்கவேண்டியிருந்தது. ரத்தினாவதியின் பிரசவம் முடிந்தபின்தான், காவிரியில் வெள்ளம் குறைந்து அவள் தாயாரால் இக்கரைக்கு வரமுடிந்தது. அப்படியானால் பிரசவ நேரத்தில் அங்கு வந்து, ரத்தினாவதிக்குத் துணையாக நின்றது யார் ? அது நம் ஈசனைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும் ? பக்தர்கள் கூப்பிட்டபோதெல்லாம் ஓடோடி வந்த அந்த கருணாமூர்த்தியின் திருவிளையாடலே இது. ஒரு தாயால்தான் ஒரு பெண்ணுக்கு அந்த நேரத்தில் சரியான துணையாக இருக்கமுடியும் என்னும்போது, அந்த தாயால் அங்கே வரமுடியவில்லை என்றால், அந்தத் தாயின் வடிவாகத் தானே வரவும் தயங்காதவன் என்பதை உணர்த்திய அந்த ஈசனின் கருணையை என்னென்று சொல்வது !

இப்படி இவ்வுலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தந்தையான அந்த லோகநாயகன், தாயாகவும் வந்து தன் கருணையைப் பொழிந்த காரணத்தால் அவனைத் தாயுமானவன் என்று அழைக்கின்றனர். மட்டுவார்குழலம்மைத் தாயாரோடும் உச்சிப்பிள்ளையாரோடும் திருச்சிராமலையில் குடிகொண்டுத் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கெல்லாம் அருள்மழை பொழியும் அந்த ஈசனை, மாத்ருபூதேஸ்வரர், தாயுமானவர், செவ்வந்தி நாதர், திருமலைக்கொழுந்தீசர் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். சம்பந்தர், அப்பர், தாயுமானவர் எனப் பல மகான்களால் பாடப்பட்டது இந்த ஆலயம். இந்தத் திருச்சிராமலைதான், திருச்சிராப்பள்ளி என்று இந்த ஊருக்குப் பெயர்வரக் காரணமானது.

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய முதல் திருமுறையில் பாடல்கள் 1058 முதல் 1068 வரையும், திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய ஐந்தாம் திருமுறையில் பாடல்கள் 841 முதல் 844 வரையும் திருச்சிராப்பள்ளி ஈசனைப் பற்றிப் பாடப்பட்டுள்ளன. [இத்தலத்தில் திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் 5 முதல் 10 வரையிலான பாடல்கள் சிதைந்துவிட்டனவாம். 1 முதல் 4 வரையிலான பாடல்களே 841 முதல் 844 வரையிலான பாடல்களாக ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன]

நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளேறு

ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிருமே

– திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய முதல் திருமுறை [ பாடல் 1058 ]

தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்

பேய னேனையும் ஆண்ட பெருந்தகை

தேய நாதன் சிராப்பள்ளி மேவிய

நாய னாரென நம்வினை நாசமே

– திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளிய ஐந்தாம் திருமுறை [ பாடல் 844 ]

Series Navigation

ரா.கோபிநாதன்

ரா.கோபிநாதன்