ஜோதிடம் கல்லூரிகளில் சொல்லித்தருவதில் தவறில்லை.

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

சின்னக்கருப்பன்


இது தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றல்ல. இருப்பினும் இது சமீபத்தில் மிகவும் முக்கியமானப் பிரச்னைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. முக்கியமாக சமீபத்தில் படித்த நல்ல புத்தகங்களில் ஒன்று, கல்வி பற்றி வசந்திதேவி – சுந்தரராமசாமி சந்திப்பு பற்றி வெளிவந்த புத்தகம். இதில் வசந்தி தேவி இது பற்றி பேசுகிறார். யூ-ஜி-ஸி அனுப்பியச் சுற்றறிக்கையில் ஜோதிடம் ஒரு பாடமாக வைக்கலாம் என்று வந்திருக்கிறது என்றும் இதை வசந்தி தேவி அவர்கள் எதிர்த்தார்கள் என்றும் அறிகிறேன்.

அரசு கல்வியைக் காவியடிக்கிறதா, சிவப்படிக்கிறதா ? இடதுசாரியா வலது சாரியா அல்லது சில்க் சாரியா, காட்டன் சாரியா என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம். எனவே ஜோதிடம் ஒரு பாடமாக இருக்கலாமா என்பது பற்றி ஆராயலாம் என்பதற்காக இந்தக் கட்டுரை.

***

உங்களிடம் யாராவது ‘ஜோதிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ‘ என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ? நான் என் மனதுக்கு உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால், ‘எனக்குத் தெரியாது ‘ என்றுதான் சொல்ல முடியும்.

எனக்குத் தெரிந்து ஜோதிடம் சொல்லி அதுபோல நடந்த விஷயங்களும் உண்டு. ஜோதிடம் சொல்லி அது போல நடக்காத விஷயமும் உண்டு. எப்போதும் சரியாகச் சொல்லும் ஜோதிடர்கள் சொல்லும் விஷயம் பலிக்காமல் போனதும் உண்டு. நான் எனக்கு என்றைக்குமே ஜோதிடம் பார்த்ததில்லை என்றாலும், எனது நண்பர்களும் குடும்பத்தாரும் பார்க்கும் ஜோதிடம் என் காதுகளில் விழாமல் போவதில்லை.

நான் ஜோதிடம் பார்க்கிறேனா அதை நான் நம்புகிறேனா என்பது முக்கியமான விஷயமில்லை. எனக்கு மிருகக்காட்சி சாலை பிடிக்காமல் இருக்கலாம். மிருகங்களைக் கூண்டில் அடைத்து வேடிக்கை காட்டுவது எனக்குப் பிடிக்காத விஷயம் தான். ஆனால், மிருகக்காட்சி சாலையே இருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியுமா ? கூண்டுகளில் அடைத்து, குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதைத் தாண்டி இன்று பல மிருகக்காட்சி சாலைகள் முன்னேறி விட்டன. அழிந்து வரும் சில மிருகங்களை மீண்டும் பெருக்கி அவைகளை அதன் சுற்றுப்புறச் சூழ்நிலையில் விட்டு பல மிருக இனங்களைக் காப்பாற்றி இருக்கின்றன. மிருகக்காட்சி சாலைகள் மூலம் பெரும் வருமானத்தை மிருகக்காட்சி சாலைகள் பல நல்ல வழிகளில் உபயோகித்து வருகின்றன. மக்களுக்கு மிருகங்களின் முக்கியத்துவத்தையும், அவைகள் தங்களது சூழ்நிலையில் வாழவேண்டிய அவசியத்தையும், மிருகங்களைப் பற்றிப் படிப்பதற்கும், அவைகளைப் பற்றி ஆராய்வதற்கும் அதன் மூலம், மனிதர்கள் உலகத்தில் தங்களின் இருப்பை சரியான முறையில் அறிந்து கொள்ளவும் பயன்படுகின்றன. முன்னைப்போல மிருகங்கள் கூண்டுகளில் அடைக்கப்படுவதில்லைதான். நான் சென்றமுறை நியூயார்க்கில் இருக்கும் மிருகக்காட்சி சாலையைப் பார்த்தபோது அங்கு சிங்கம் தன் ஜோடியோடு ஒரு தீவுக்குள் உட்கார்ந்திருந்தது. கும்பலாக வேடிக்கை பார்க்கும் எங்களைப் பார்த்து அலுத்து திரும்பிப் படுத்து ஒரு ஏக்கர் தீவில் இருந்த ஒற்றை மரத்தடியில் தூங்கிவிட்டது. எங்களுக்கும் சிங்கத்துக்கும் நடுவே ஒரு பெரிய பள்ளம். அதில் அடி ஆழத்தில் தண்ணீர். பிள்ளைகள் சந்தோஷமாக சிங்கம் பார்த்தார்கள். ஒரு மானை வேட்டையாட முடியாத அந்தச் சிங்கத்தைப் பார்த்தால் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் இதன் பிள்ளைகள் ஏதாவது ஒரு காட்டில் சுதந்திரமாக திரிய வாய்ப்புண்டு என்பதால் பொறுத்துக்கொள்ள முடிகிறது.

ஆகவே எனக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். அதே போல நான் ஜோதிடம் பார்க்காமல், ஜோதிடம் ஒரு அறிவியலே இல்லை என்றுகூட சொல்லலாம். ஜோதிடத்துக்கும் வானவியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூட வாதிடலாம். ஆனால் அது சிலருக்குப் பிரயோசனப்படுகிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா ?

நான் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் வழியில் கிளி ஜோஸ்யக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். ‘உனக்கு எம்பெருமான் முருகன் படம் எடுத்துக்கொடுத்திருக்கிறார் சுகப்பிரம்ம ரிஷி ‘ என்று சொல்லி, ‘உனக்கு பணக்கஷ்டம் வரும், மனக்கஷ்டம் வரும். பின்னால் எல்லாம் சூரியன் பட்ட பனிபோல மறையும், இன்னும் மூன்று மாதம் பொறுத்துக்கொள் ‘ என்று அங்கு உட்கார்ந்திருக்கும் கூலியாட்களிடமும், வண்டி இழுப்பவர்களிடமும் ஜோஸ்யக்காரர்கள் சொல்கிறார்கள். இது சுத்தமான மனத்தெம்பு. அதென்ன மூன்று மாதம், ஏன் நாலு மாதம் இல்லை என்று நாம் வாதிடலாம். வாதிடுபவர்களுக்காக கிளிஜோஸ்யக்காரர் சொல்லவில்லை. நம்புபவர்களுக்காகச் சொல்கிறார். ஜோஸ்யம் அறிவியல் இல்லை என்று வாதிடுபவர்கள் கூட அந்த கிளி ஜோஸ்யக்காரரையும், அதனைக் கேட்பவர்களையும் ஜெயிலில் போட விரும்புவார்களா ?

அடுத்த நிலைக்கு வருகிறேன்.

ஏன் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று ஆராய முயற்சிக்கிறேன்.

எனது காரியங்கள் எல்லாமே என் கட்டுப்பாட்டில் இருப்பது எனக்குத் தெரிகிறது. நான் தட்டச்சு செய்ய நினைத்து என் விரல்களை நான் என் சொந்த சிந்தனையைப் பயன்படுத்துகிறேன். இதில் எந்தக் கிரகமும் என்னை ஆட்டுவிக்கவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. எனவே ஏதோ ஒரு கிரகம் என்னை கட்டுப்படுத்துகிறது என்பதும், அந்தக் கிரகம் இன்னொரு இடத்துக்குச் செல்வதன் மூலம் என் வாழ்க்கை மாறுகிறது என்பதும் எனக்கு ஒப்புக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது.

மனிதனுக்கு ‘free will ‘ என்ற சுதந்திரச் செயல் இருக்கிறது என்று நினைக்கிறேன். என் செயல்களும், உலகத்தின் நடக்கும் விஷயங்களும், முன்பே முடிவு செய்யப்பட்டவை அல்ல என்று நினைக்கிறேன். நான் ஒரு கல்லை எடுத்துத் தூக்கி எறிய நினைத்தால், அதன் இரண்டு விளைவுகளும் எனக்குத் தெரியும். ஒன்று நான் அந்தக்கல்லை தூக்கி எறியலாம். அல்லது கல்லை எடுக்காமல் விட்டு விடலாம். இரண்டுமே நான் நினைப்பது போலவே நடக்கிறது. (நான் ஹிப்னாடிஸத்தில் கட்டுண்டால் மட்டுமே, நான் எடுக்க வேண்டாம் என்று நினைத்தாலும் தடுக்க முடியாமல் அந்தக்கல்லை எடுத்து எறியும் வாய்ப்புண்டு)

அடிப்படை அறிவியலில் மிகவும் தீவிரமான சிந்தனைக்குள்ளான விஷயம் இந்த ‘சுதந்திரச்செயலும் ‘, ‘முன்பே முடிவுசெய்யப்பட்ட செயல்களும் ‘. இந்த விவாதத்தின் முடிவு இன்னும் தெளியாதது.

அதே கல்லை எடுத்துக் கொள்வோம். ஒரு கல்லை எடுத்து எறிந்தால், அந்தக்கல் எவ்வளவு சக்தியுடன் எறியப்பட்டது, எந்த திசையில் எறியப்பட்டது, காற்றின் வேகம் என்ன, காற்று எந்தத் திசையிலிருந்து கல்லைத் தாக்குகிறது, பூமியின் புவியீர்ப்பு விசை எவ்வளவு போன்ற சில விஷயங்களை வைத்துக்கொண்டு அந்தக் கல் எந்த இடத்தில் விழும் என்று துல்லியமாக கணிக்கலாம். அது மட்டுமல்ல, காற்றில் அந்தக்கல் சென்று கொண்டிருக்கும் போது, இந்த நேரத்தில், இந்த இடத்தில் இருக்கும் என்பதையும் துல்லியமாகக் கணிக்கலாம்.

அதே போல இந்த பேரண்டம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட ஆரம்பக் காரணிகளுடன் ஆரம்பித்தது. அந்த ஆரம்பக் காரணிகள்தான் ஒளியின் வேகத்தையும், புவியீர்ப்பு விசையின் அளவையும், இன்னும் பல அடிப்படையான எண்களுக்கு காரணம் என்பது இன்று அறிவியலறிஞர்கள் சொல்வது. (பார்க்க – ஸ்டாபன் ஹாக்கிங் எழுதிய நேரத்தின் வரலாறு History of Time by Stephen Hawking)

ஆக ஆரம்பக்காரணிகள் இந்த பேரண்டம் எவ்வாறு வளரும், எப்போது உயிரிகள் தோன்றும், எப்போது பேரண்டம் அழியும், அழியுமா அழியாதா, அழிந்தால் எந்த முறையில் அழியும், ஒரே நாளில் அழியாமல் மெல்ல மெல்லச் சாகுமா, விரிந்து கொண்டே போகுமா அல்லது விரிந்து பிறகு சுருங்குமா ? சுருங்கும்போது, நேரம் தலைகீழாக போகுமா போன்ற அனைத்து விஷயங்களையும் ஆரம்பக் காரணிகளே தீர்மானிக்கின்றன என்றும் ஒரு சாரார் அறிவியலறிஞர்கள் கூறுகிறார்கள்.

அதே போல வாழும் நாமும், நமது மூளையும் பொருள்களால் ஆனவை. இந்தப்பொருள்கள் உலகத்துக்கு வெளியே இருந்து வந்தவை அல்ல. இந்த உலகத்தின் பொருட்கள். அவைகளுக்கு பரிமாணமும் எடையும் பொருண்மையும் உண்டு. இந்தப் பொருள்களும் எல்லா அறிவியல் விதிகளின் படியே இயங்க வேண்டும்.

அப்படி அறிவியல் விதிகளின் படி இயங்கும் இந்தப் பொருள்களுக்கு, நம் மூளைக்குள் தொடர்ந்து செலுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் மின்சார செய்திகளுக்கும் அறிவியல் விதிகள் மட்டுமே பொருந்தும். ஆகவே இந்த மின்சார செய்திகள் தாண்டி நமது சிந்தனை இல்லை. நமது செயல்களும், நமது எண்ணமும், நமது ‘நான் ‘ என்ற எண்ணமும், வெறும் அறிவியலின் விளைவான மின்சாரச் செய்திகள்தாம்.

இந்த முறையில் நமது ஒவ்வொரு எதிர்கால இறந்தகால நடவடிக்கையும் சிந்தனையும் செய்கைகளும் முன்னமே தீர்மானிக்கப்பட்டவை என்று வாதிடலாம்.

நான் சொல்வது ‘மேலே சொன்ன இதுதான் உண்மை ‘ என்று அல்ல. நாம் அறிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பதையே.

ஜோதிடம் அறிவியல் அல்ல என்று மேல்நாட்டுக் கல்வி படித்த நாம் சொல்கிறோம். ஜோதிடம் அறிவியல்தான் என்று ஜோதிடர்களும், ஜோதிடப்பத்திரிக்கை நடத்துபவர்களும் சொல்கிறார்கள். ஜோதிடம் அறிவியல் அல்ல, கலை என்று சிலர் சொல்கிறார்கள். ஜோதிடர்களுக்கு அறிவியல் தாண்டி ஒரு உள்ளுணர்வை கேட்கும் சக்தி வேண்டும் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ள முயற்சி செய்வது ஒரு மனிதனின் அடிப்படை சுபாவம். பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்பது தமிழ்ப்பாட்டி சொன்னது. ஜோதிடம் சரியானதா இல்லையா என்பதை ஆராயக்கூட நமக்கு ஜோதிடத்தின் அடிப்படை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

இன்றைய இந்தியாவில் பரம்பரைப் படிப்பும், குருகுலக்கல்வியும் அழிந்து விட்டன. இன்று பழமையான ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் நாம் பல ஆயிரம் பேர்களைக் கேட்டு, அந்த குறிப்பிட்ட விஷயம் தெரிந்த ஒரு கிழவனாரை தள்ளாடும் வயதில் சந்திக்க வேண்டும். அவருக்குச் சொல்லித்தர சக்தி இருந்தால் நமக்கு அந்த அறிவு கிடைக்கலாம். இல்லையென்றால் அது அவரோடு செத்து சுண்ணாம்பு ஆக வேண்டியதுதான்.

இது போல பல பல கலைகளும் அறிவியலும் நம்மிடமிருந்து மறைந்துவிட்டன. தமிழ்நாட்டின் பாரம்பரிய தாளம் கொட்டும் கலையை கற்றுக்கொள்ள ஒரு புலவர் 10 வருடங்கள் ஆள் தேடி அலைந்தது எனக்குத் தெரியும். தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்டடக்கலை அறிவு இன்று கோவில்களைப்பற்றி மட்டும் இருக்கிறது. அதுவும் ஒரு சில குடும்பங்களிடம் மட்டும் இருக்கிறது. தமிழ்நாட்டு கிராமங்களின் அமைப்பும் வீடுகளின் அமைப்பும் பற்றிய எம்-ஐ-டி ஆராய்ச்சிக் கட்டுரை ஒரு அமெரிக்கர் வந்து புரிந்து கொண்டு எழுத வேண்டி இருக்கிறது. நம் கல்லூரிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன ? 170 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன தமிழ்நாட்டில். அனைத்தும் வேலையாட்களை மட்டுமே உற்பத்திச் செய்கின்றன. சிந்திப்பவர்களை, உருவாக்குபவர்களை உருவாக்குவதில்லை.

இன்னும் எத்தனை எத்தனையோ கலைகளும் அறிவியலும் அரசாங்க கல்லூரிகள் ஆதரவின்றி குருட்டுத்தனமான ‘மக்காலே கல்விமுறையைப் ‘ பின்பற்றியதால், ஆங்கிலம், தமிழ் (போனால் போகிறதென்று), மற்றப்படி மனப்பாடம் செய்யும் அறிவியல், கணிதம், புவியியல் வரலாறு என்று சுருங்கி நமது பாரம்பரியக் கல்வியை இழந்துவிட்டோம். நமது நாட்டு விவசாயம், அதில் பயன்படும் பொருட்கள், கட்டட வேலை, மாடுகளைப் பராமரித்தல், நமது பாரம்பரிய துணி நெய்யும் கலைகள், அதில் பயன்படும் தொழில்நுட்பம் ஆகிய எல்லாமே அழிந்து விட்டன, அழிந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் ஏதேனும் ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எடுத்து ஆராய்ந்தால் மட்டுமே இதற்கு வெளிச்சம் கிடைக்கும், அப்படி கிடைத்தாலும் அந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பட்டம் வாங்கியவுடன் இவை மீண்டும் செல்லரிக்கும் நூலக இருட்டில் மெல்ல மெல்ல இறக்கும். இவைகள் நம் விவசாயிகளுக்கும், விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் ஏன் குமாஸ்தாவின் பிள்ளைகளுக்கும் கூட தேவையான அடிப்படைக்கல்வி என்பது நம் மனத்தில் இன்னும் ஏறவில்லை. நம் ஊர் சலவைத்தொழிலாளர் பயன்படுத்தும் வெள்ளாவி மண்ணில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தவர்கள் எத்தனை பேர் ? அடிப்படைக் கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயான மனப்பாடம் செய்யும் அறிவியலும், கணிதமும் மட்டுமல்ல, தினம் தினம் வாழ்க்கைக்குப் பயன்படும் தொழில் நுட்பமான, மாட்டு வண்டி ரிப்பேர், சைக்கிள், கார் ரிப்பேர் போன்றவையும்தான் என்பதை நாம் இன்னும் உள் வாங்கிக் கொள்ளவில்லை. இவைகளை நாம் சிறு வயதிலேயே நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்து கொண்டிருக்கிறோம்.

நமது பாரம்பரியக் கலைகளையும் (அது எதுவாகவும் இருக்கட்டும்) அறிவியல்களையும் தொழில்நுட்பத்தையும் கேள்விப்பட்டால், நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும், நாடெங்கும் இருக்கும் துணை வேந்தர்களுக்கும் பிற்போக்குச் சிந்தனையாகத் தோன்றுகிறது.

நமது பாரம்பரியக் கலைகள், அறிவியல் தொழில் நுட்பம் போன்றவற்றைப் பற்றி நமக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை இந்த கடந்த 50 வருடங்களில் வெற்றிகரமாகத் தோன்றிவிட்டது. அதை உடைப்பதும், நமது கலைகளை மறுபடி உயிர்விப்பதும் கடினமான விஷயங்கள். நமது கல்லூரிகள் மனப்பாடம் செய்விக்கும் பயிற்சிக் கேந்திரங்களாக இருந்து பழக்கப்பட்டுப் போய்விட்டதில், வேலையாட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளாக இருப்பதில் பழக்கப்பட்டுப் போய்விட்டதில், சுதந்திரச் சிந்தனையும், சுதந்திர ஆராய்ச்சியும் பின் தங்கி விட்டன.

ஒரு பல்கலைக்கழகத்தின் வேலை என்ன ? ஒரு கல்லூரியின் வேலை என்ன ?

மனச்சாய்வின்றி அறிவைத்தேடுவதுதான் ஒரு படித்தவனின் நிலைப்பாடாக இருக்க முடியும், இருக்க வேண்டும். ஆயினும், இன்றைய தேவைக்காகவும், நாளைய உணவுக்காகவும், பொறியியல் மருத்துவம் கம்ப்யூட்டர் படிப்பவர்களை திசை திருப்பி ஜோதிடம் படிக்க வற்புறுத்த முடியாது. இன்றைய இளைஞனின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதுதான் அதற்கு காரணம். ஆகமப் படிப்புக்காக தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் படிக்க ஆள் வராமல் இழுத்து மூடப்பட்டது அனைவரும் அறிந்ததுதான்.

ஜோதிடம் என்று ஒரு பட்டப்படிப்பு வைத்தால் எத்தனை பேர் அதற்கு படிக்க வருவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஆனால், பட்டப்படிப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் ஒரு தனிநபர் ஆர்வத்தில் படிக்க வரலாம் என்ற ஒரு அமைப்பு வர வேண்டும். வேலைக்குச் சம்பந்தமில்லாமல்., அறிவுக்காகவும் தன் ஆத்ம திருப்திக்காகவும் படிக்க வரும் ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டியது நம் கல்வி முறையின் கடமையாக இருக்க வேண்டும்.

ஜோதிடம் சொல்வது போல பேரண்டத்தின் எதிர்காலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதுதானா ? பேரண்டத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டது என்றால் அது எவ்வாறு ஜோதிடம் மூலம் சொல்லப்படுகிறது ? அறிவியல் மூலம் சொல்லப்படும் எதிர்காலமும் ஜோதிடம் மூலம் சொல்லப்படும் எதிர்காலமும் ஒன்றுதானா ? ஜோதிடம் சரியானது அல்லது தவறானது என்பதை நிர்ணயிக்க என்ன வழிமுறைகள் ? ஜோதிடத்தை அறிவியல் போல அணுக முடியுமா ? ஜோதிடத்தை மறுபதிப்புச் செய்ய வேண்டுமா ? ஜோதிடத்தின் அடிப்படைகள் என்ன ? ஜோதிடத்தின் அடிப்படைகள் காலத்துக்கு தகுந்தாற்ப் போல மாறுமா ? இன்னொரு சூரியனுக்கு மக்கள் சென்றால் எந்த அடிப்படையில் ஜோதிடம் அமையும் போன்ற அனைத்தும் கேள்விகள்தான்.

எந்தக் கேள்விக்கும் பதில், அந்தத் துறையைப் பற்றி நாம் கொண்டிருக்கும் மனச்சாய்வின் மூலம் வராது. அந்தத் துறையை ஆராய்ந்தால் தான் அதன் அடிப்படை புரிந்தால் தான் நாம் ஆராய முடியும். தவறான தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை தவறென்று நிரூபிப்பது கடினமல்லவே. ஜோதிடம் ஒரு பாடமாக நாம் ஏற்றுக்கொள்ளாத போது, நாம் எப்படி ஜோதிடத்தை ஆராயக்கூடிய அறிவுத்தளத்தை ஏற்படுத்த முடியும் ?

ஜோதிடம் படிப்பது அதன் மூலம் அதிகமான ஜோதிடர்களை உருவாக்குவது என்பதுதான் இந்த ‘ஜோதிடப்பாடத்தின் ‘ முக்கியமான நோக்கம் என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால், ஜோதிடம் சொல்லிக்கொடுப்பதன் மூலம், பாரம்பரிய ஜோதிடர்களை கல்லூரிகளில் விரிவுரைஆற்றும்படி அழைப்பதன் மூலம், அவர்களின் அறிவை நமது பொது அறிவாக ஆக்குகிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். இது மட்டுமல்ல, நமது கல்லூரிகள் நமது கலைக் கல்லூரிகள், சித்த மருத்துவம், எலும்பு கட்டு போன்றவற்றையும், பாரம்பரியச் சமையல், சமையலில் பயன்படும் பொருட்கள், பாரம்பரிய உடைகள் தயாரித்தல், கட்டில் கட்டுவது, குடிசை போடுவது, கயிறு திரிப்பது, பாய் முடைவது, கைவினைப்பொருட்களை செய்வது, பாரம்பரிய விவசாயம், விவசாயப் பொருட்கள், அந்தந்த கிராமத்தின் விவசாயப் பொருளாதாரம், இன்னும் சிலம்பம், சண்டை முறைகளான மான் கொம்பு சுற்றுதல் போன்றவற்றையும், இரவு நேரத்தில் வரும் குடுகுடுப்பைக்காரரின் வாழ்க்கையையும், சிந்தனையையும், குறிசொல்வதையும் ஆவணப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பரம்பரை கலைஞர்களுக்கு மனசாய்வின்றி ஆதரவளித்து, கல்லூரிகளை, சமூகத்தின் பொதுச்சொத்தாக ஆக்க வேண்டும். கல்லூரிகள் ஒவ்வொரு ஊரின் பாரம்பரியத்தை ஆவணமாக்கவும், அந்தக் கலைகளைத் தொடர்ந்து எடுத்துச் செல்லவும் புதிய செயல்திட்டம் செய்ய வேண்டும்.

Series Navigation