ஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் !

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” எனச் சொல்லிச் சமாளிக்கப்பார்த்தாலும் உலகிலேயே மிக இலகுவான தொழில் முடிதிருத்தும் தொழில்தான் என்ற எண்ணம் சிறுவயதில் எனக்கிருந்தது.
எனது ஏழு அல்லது எட்டு வயதுக்கு முன்னரான காலப்பகுதியில் ஜெயசுந்தர பார்பர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் எனது முடிவெட்டுவதற்காக வீட்டுக்கே வருவார்.அது பெரும்பாலும் மதியப்பொழுதாகவே இருக்கும்.அவர் தனது சலூன் கடையை மூடிவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குப் போகும் நேரமது.பெரும்பாலும் ஊரிலுள்ள அத்தனை சிறுவர்களையும் அவர் அறிந்திருந்தார்.ஊரில் உள்ள அத்தனை பேரும் கூட அவரை நன்கு அறிந்திருந்தனர்.’ஜெயா’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அவர்தான் ஊருக்கேயிருந்த ஒரே பார்பர்.எப்பொழுதும் புன்னகையைத் தேக்கிய முகம் அவருக்கு வாய்த்திருந்தது.வெள்ளைச் சாறன்,மேற்சட்டை.அவர் செருப்பணிந்து நான் பார்த்ததில்லை.
பள்ளிக்கூடம் விட்டு வந்து முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் நான் வாசல் படலையை விலக்கிக்கொண்டு அவர் வருவதைக் கண்டால் ஓடிஒளிய சகுனம் பார்ப்பேன்.ஓடி விளையாடும் பருவத்தில் முக்கால் மணித்தியாலம் உட்காரவைத்து முடிவெட்டுவதென்றால் பெரும் சித்திரவதை அந்நேரம்.
முற்றத்து வேப்பமரத்தடியில் எனக்குக்கதிரை போடப்படும்.மழைக்காலமென்றால் பின் கொல்லைவாசல் திண்ணை.கதிரையில் நான் வலுக்கட்டாயமாக அமர்த்தப்படுவதோடு நான் ஓடிப்போய் விடாமல் கைகளைப் பிடித்துக்கொண்டு வாப்பா பக்கத்திலேயே நிற்பார்.சிலவேளைகளில் நான் அழுவேன் என்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
முதலில் மேல் சட்டை எதுவும் அணியாத என் உடல் மேல் அவர் கொண்டுவரும் வெண்ணிற மல்பீஸ் துணியை ஒரு உதறு உதறிப் போர்த்துகையில் அதில் வியர்வையும்,பவுடரும் கலந்தவொரு வாடையடிக்கும்.அதுவே அன்று பெரும் வதையாக உணர்வேன்.வீட்டிலேயே ஒரு கிளாஸ் தண்ணீர் வாங்கி தலைமுடி பூராவும் தெளித்து ஒருமுறை சீவிவிடுவார்.முன் நெற்றி முடிகளிலிருந்து கத்தரிக்கத் தொடங்குவார்.
தண்ணீர் விசிறப்படும்போது காதுமடல்களில்,கழுத்தில் துளிகள் பட்டு உடல் சிலிர்க்கும்.இரு விரல்களில் சிறிதுசிறிதான முடிக்கற்றை பிடித்து இயலுமானவரை குட்டையாக வெட்டிவிடுவார்.அதற்கே அரை மணித்தியாலங்களுக்கும் மேல் பிடிக்கும்.கத்தரிக்கப்பட்ட பின் பார்த்தால் ஒரு முடியின் நீளம் ஒரு அங்குலம் கூட இருக்காது.பின்னர் இறுதி வேலையாக பொலிதீன் பைக்குள் சுற்றி எடுத்துவந்த ஒரு பழங்கால மெஷினை எடுத்து ‘டிக் டிக் டிக்’ எனச் சந்தம் கேட்க பின்மண்டையில்,கழுத்தின் மேற்புறமாக இயக்க ஆரம்பிப்பார்.
அப்பழைய மெஷினின் இடுக்குகளில் சிக்கி சில முடிகள் பிடுங்கப்பட்டு வர ஆரம்பிக்கையில் அழ ஆரம்பிப்பேன்.வாப்பா அழாமல் இருக்கும் படி ஐஸ் பழ,மிட்டாய் ஆசை காட்டினாலும் நிற்காத அழுகை ஜெயா சவரக்கத்தியைக் கையில் எடுத்ததும் தானாக நின்றுவிடும்.
ஏறத்தாழ நாற்பத்தைந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தலைமுடி சீராகக் குட்டையாக வெட்டி முடிக்கப்பட்டிருக்கும்.என் தலை தடவிப் புன்னகைத்து ‘இனி அழப்படாது’ எனத் தமிழில் சொல்லி அவரது சட்டைப்பைக்குள்ளிருந்து ஒரு டொபியை எடுத்து நீட்டுவார்.அவர் மகனுக்குக் கொண்டுசெல்வதாக இருக்கக் கூடும்.என் வயதில் அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
பால் கலந்த தேனீர் குடிக்கமாட்டார் என்பதால் கொடுக்கப்படும் வெறும் சிவப்புச் சாயத்தேனீரோடு சீனியைக் கையில் வாங்கித் தொட்டுக்குடிப்பார்.முடிவெட்டியதற்கான கூலியாக அரிசியைக் கேட்டு வாங்கிக்கொண்டு அவர் போக,உம்மா வெட்டப்பட்டுக் கீழே கிடக்கும் முடிக்கற்றைகளை ஒன்றாய்க்கூட்டி முற்றத்து மருதோன்றி மரத்தினடியில் புதைக்க, நான் வாப்பாவோடு ஆற்றுக்குப் போவேன்.
எட்டு,ஒன்பது வயதிற்குப் பிற்பாடு நான் அழமாட்டேன் என்ற தைரியத்தில் வாப்பா அவர் முடி வெட்டச் செல்லும்பொழுது என்னையும் ஜெயாவின் பார்பர் சலூனுக்கு அழைத்துச் செல்வார்.சலூனென்றால் இப்போதைய சலூன்கள் போல சுவரின் நான்கு பக்கங்களுக்குக் கண்ணாடியும்,நிலத்தில் மாபிள் கற்களும் பொருத்தப்பட்டு காற்றில் வாசனை கமழும் சலூனல்ல அது.
முடிவெட்டப்படும் வாடிக்கையாளர் உட்கார ஒரு கதிரை.நீள்வாக்கில் போடப்பட்ட இரண்டு பலகை வாங்குகள் காத்திருக்கும் வாடிக்கையாளர் உட்காரப் போடப்பட்டிருக்கும்.ஒரு பெரிய கண்ணாடி,சீப்பு,ஒரு பழைய பவுடர் பேணி,கத்தரிக்கோல்,மெஷின்,தண்ணீர்க் கோப்பை,வெண்ணிறக்கல்,துருவேறிய ப்ளேட்கள் ஒரு டப்பா மேசையில் இருக்கும்.சுவர்முழுதும் அக்காலச் சிங்கள நடிகைகள் குத்துவிளக்குகளோடு கலண்டர்களில் புன்னகைக்க,வலது மேல்மூலையில் சிறிய புத்தர் படத்துக்குக் கீழ் சந்தனத் திரி எரியும்.
வாப்பாவுடன் சலூனுக்குப்போனால் அங்கு அவருக்குப் பெரும் மரியாதை கிடைக்கும்.எனக்கும் தான்.வாப்பாவை உட்காரச் சொல்லிவிட்டு எனக்கு முடிவெட்ட ஆரம்பிப்பார்.அதே வெள்ளைத் துணி,அதே கத்தரி,சீப்பு,மெஷின்.மெஷினால் வெட்ட ஆரம்பிக்கும் போது வாப்பா வந்து பக்கத்தில் நிற்பார்.நான் அவர் கையைப் பிடித்துக்கொள்வேன்.பின்னர் வாப்பாவுக்கு முடிவெட்டும் வரை அங்கு போடப்பட்டிருக்கும் நீளவாங்கில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன்.
சலூனின் பின்மூலையில் வெட்டப்பட்ட முடிக்கற்றைகள் மூடைகளாக நிறைந்திருக்க,வாங்குகளில் ரேஸ் பேப்பர்கள் இறைந்திருக்கும்.எப்பொழுதும் வாடிக்கையாளர் தவிர்த்து குறைந்தது நான்கு பேர் வாங்குகளில் மூட்டை கடிப்பதையும் மறந்து உட்காந்திருப்பர்.ஊர்க்கதை பேசவும்,ரேஸ் பேப்பர் படிக்கவும் வரும் ஜெயாவின் நண்பர்களாக இருக்கக்கூடும்.
எப்பொழுதுமே ரேஸ் பேப்பர்கள் சாதாரணப்பத்திரிகைகளை விடவும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.அதில் சிறிய ஆங்கில எழுத்துக்கள் நெருக்கி நெருக்கி அச்சடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.வாப்பா சொல்லித்தான் அதன் பெயர் ரேஸ் பேப்பர் என்றே தெரியும்.வாப்பா அதற்கு மேல் எதுவும் சொன்னதில்லை.ஒருவேளை அவருக்கும் தெரிந்திருக்காது.
அந்நாட்களில் ரேஸ் பேப்பர்கள் படிக்க பெரும் அறிவு வேண்டும் என எண்ணியிருந்தேன்.ஜெயா ஆங்கிலப் பேப்பரெல்லாம் படிக்கிறார் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.ஏனெனில்,நான் வீட்டில் படிக்காமல் விளையாடித் திரியும்போது ‘இப்படிப் படிக்காமல் விளையாட்டுப்பிள்ளையாத் திரிஞ்சால் பிறகு ஜெயாவைப் போலத்தான் வீடு வீடாகப் போக வேண்டிவரும்’ எனத் திட்டு வாங்கியிருக்கிறேன்.அப்பொழுது முதல்தான் நினைத்திருந்தேன் ‘மூலதனமாக ஒரு சீப்பு,கத்தரிக்கோல் போதும்.உலகிலேயே மிக இலகுவான தொழில் முடிதிருத்துவது தான்’ என்பதாக.
பிந்திய வயதுகளில் சலூனுக்கு நான் தனியாகவே போக ஆரம்பித்தேன்.மேலும் புதிய அழகான சலூனொன்று ஊருக்குள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.ஊர் இளைஞர்கள் எல்லோரும் அதில் நிறைய ஆரம்பித்தனர்.
எங்கள் வீட்டு வயலின் நாற்றுக்கள் பிடுங்கி நடும் காலங்களிலும்,களையெடுக்கும் காலங்களிலும்,அறுவடைக்காலங்களிலும் ஜெயசுந்தரவின் மனைவி செனகலதா தன் மகனோடு கூலிவேலைக்கு வருவாள்.நானும் அவர் மகனோடு சேர்ந்து சேற்றில் இறங்கி நாற்றுநட்டிருக்கிறேன்.
இருவரும் பேசிக்கொண்டதில்லை.எனக்கு சிங்களமோ,அவனுக்குத் தமிழோ தெரியாது.புன்னகை மட்டும்தான் பாஷை.காற்றடிக்கும் காலங்களில் பட்டம் விடுவதற்காக எங்கள் வயலுக்கு வருவான்.எனக்கும் பட்டம் கட்டித் தந்திருக்கிறான்.ஊரிலிருந்த சிங்களப் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தான்.
உண்மையில் இதனைத் தவிர ஜெயசுந்தர பற்றியோ,அவனது குடும்பம் பற்றியோ எனக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை அன்றைய இரவு வரும் வரைக்கும்.கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் பதினாறு வயது எனக்கு அப்போது.பரீட்சைக்காக வகுப்பு நண்பர்கள் அனைவரும் எனது வீட்டில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தோம்.
நடுச்சாமத்தில் பெண்ணின் அலறல் கேட்டது.தன்னைக் கொல்ல வருவதாகக் கத்திக்கொண்டு வீட்டு முன் வீதிவழியே ஓடி வந்தாள்.வாப்பாதான் முன்கதவைத் திறந்து பார்த்தார்.படித்துக்கொண்டிருந்த நாங்கள் எல்லோரும் எல்லாவற்றையும் அப்படியப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு வந்தோம்.
காப்பாற்றச் சொல்லி இரு கைகளையும் தலையிலடித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே செனகலதா வந்துவிட்டாள்.நன்றாகக் குடித்துச் சிவந்த விழிகளோடு பின்னால் ஜெயா கத்தியோடு துரத்தி வந்திருந்தார்.அன்றுதான் நாங்கள் அனைவரும் ஜெயசுந்தரவின் இன்னொரு முகத்தையும் கண்டோம்.
வாப்பாவைக் கண்டதும் ஜெயசுந்தரவின் வெறி சற்றுத் தணிந்தது போலிருந்தது.
“ஹாஜியார், இவள்…இவள்…நான் காசு கேட்டா தர மாட்டேங்குறா.இவளை உயிரோடு விடக்கூடாது ” என்று போதையில் உளறிக்கொண்டிருந்தார்.
வாப்பா ஜெயசுந்தரவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு செனகலதாவை அன்றிரவு எங்கள் வீட்டில் தங்கி காலையில் போகச் சொன்னார்.ஜெயா தினமும் குடித்துவிட்டு வந்து தான் கூலி வேலை செய்து தேடும் பணத்தைக் கேட்டுச் சண்டை பிடிப்பதாகவும்,தன் விருப்பத்துக்கு மாறாக மகனை படிப்பை விட்டும் நிறுத்தி கொழும்பு ஹோட்டலொன்றுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டதாகவும்,தான் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ்வதில்லை எனவும் உம்மாவிடம் சொல்லி அன்றிரவு நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தாள் செனகலதா.
காலையில் ஜெயா கடைக்குப் போகும் வரை பார்த்திருந்து பின் வீடு சென்றாள்.
பரீட்சைக்குப் பின் நாங்கள் ஊரில் இருக்கவில்லை.வீட்டையும் வயலையும் விற்றுவிட்டு குடும்பத்தோடு கொழும்பு வந்துவிட்டோம்.ஒவ்வொருமுறை முடிவெட்டும் போதும்,காது மடல் சிலிர்த்திடும் போதும் எனக்கு ஜெயா சம்பந்தமான நினைவுகள் வந்துபோகும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கொழும்பிலிருந்த முதியோர் இல்லமொன்றுக்கு அன்பளிப்பாக மின்விசிறிகள் தேவைப்படுவதாக எனக்கு மெயில் ஒன்று வந்தது.அது சம்பந்தமாக என்னுடன் வெளிநாட்டிலிருந்த ஊர் நண்பர்கள் அனைவரும் இணைந்து சில மின்விசிறிகள் வாங்கினோம்.நான் இலங்கைக்குச் செல்லவிருந்த காரணத்தால் கொண்டு சென்று ஒப்படைக்கும் பணி என்னிடம் தரப்பட்டது.
அதன் படியே நானின்று இந்த முதியோர் இல்லம் வந்தேன்.எல்லா மின்விசிறிகளையும் பொறுப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பிவர எண்ணிய போது அவர் என்னை அம்முதியவர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்க விரும்பினார்.நானும் அதை விரும்பினேன்.
இரண்டாம் மாடியில் ஒரு நீண்ட பெரும் அறையில் இரு புறங்களிலும் கட்டில்கள் போடப்பட்டு வெள்ளைச் சட்டை,பிஜாமா சாறனணிந்திருந்த முதிய ஆண்கள் உட்காந்திருந்தனர்.பொறுப்பாளர் எனது உதவி பற்றிச் சொல்ல எல்லோரும் எனைக் கை கூப்பி நன்றி தெரிவித்தனர்.அதில் ஒருவராய்த் தான் நான் திரும்பவும் ஜெயாவைச் சந்தித்தேன்.
தலை முழுதும் மொட்டையடிக்கப்பட்டிருந்த அவரைக் காட்டி ‘அவர் ஜெயாவா?’ எனப் பொறுப்பாளரிடம் கேட்டேன்.ஆமென்றதோடு அவரை யாரும் பார்க்கவருவதில்லையெனச் சொன்னார்.தன் மனைவியை உலக்கையால் தாக்கிக் கொலை செய்த குற்றத்திற்காக பத்து வருட சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு,பார்வை மங்கி,யானைக்கால் நோய் தாக்கிய நோயாளியாகி கவனிக்க யாருமற்ற நிலையில் பொலிஸாரால் இங்கு கொண்டுவந்து விடப்பட்டதாகவும் கூறினார்.
நான் அவருடன் பேசவிரும்புவதாகக் கூறி அவரருகில் செல்ல பொறுப்பாளர் என்னை அவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.நான் ‘ஜெயா’ எனப்பெயர் சொல்லி அழைக்க,அவர் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.உடனே என்னிரு கரங்களையும் பற்றிக்கொண்டார்.அதில் அன்பைத் தேடும் ஒரு ஆதங்கம் தெரிந்தது.அவரது வலதுகைப் பெருவிரல் பின்னோக்கி வளைந்திருந்தது.கத்தரிக்கோல் பிடித்துப் பிடித்தே வளைந்திருக்கக்கூடும்.
கண்பார்வை குறைந்திருந்ததால் நான் மங்கலாகத் தெரிவதாய்ச் சொன்னார்.இன்னாரின் மகன் எனச் சொன்னதும் அவருக்கு என்னை அடையாளம் தெரியலாயிற்று.”நீங்களாவது என்னைப் பார்க்க வந்தீங்களே.என் மகனைப் பார்ப்பதைப் போலிருக்கு” என்றார்.கால்கள் இரண்டும் நோய்த் தாக்கத்தில் வீங்கியிருந்தன.இவர் இருப்பது முன்னரே தெரிந்திருந்தால் உணவுப்பொருள் ஏதாவது எடுத்துவந்திருக்கலாம்.
தன் மகனைப் பற்றி எதுவுமே தெரியவில்லையென்றும் நான் சந்திக்க நேர்ந்தால் ஒரு முறை இங்கு வந்துபோகச் சொல்லும் படியும் சொன்னார்.
“நான் வேலை,வேலைன்னு அலைஞ்சப்போ பையனை ஒழுங்காப் பார்த்துக்கல.இன்னிக்கு வேலையெதுவும் இல்லாம இங்க இயலாம இருக்கேன்.என்னைப் பார்த்துக்கப் பையனும் இல்ல.”
இவரா தன் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்றார்? ஆச்சரியமாக இருந்தது.
“என்ன செய்ய தம்பி?நான் குடிச்சது அவளுக்குப் பிடிக்கல.ரேஸ் போட்டது அவளுக்குப் பிடிக்கல.நீங்களே யோசிச்சுப் பாருங்க.நாள் முழுக்க நின்னுக்கிட்டு,ரெண்டு கைகளையும் உயர்த்திக்கிட்டு,நான் வெட்டுறது இவனுக்குப் புடிக்குமோ புடிக்காமப் போய் சண்டை பிடிப்பானோன்னு ஒரு பதற்றத்தோட முடி வெட்டுறதுங்குறது லேசான காரியமா? ராத்திரியான ரெண்டு கையும்,காலும் பயங்கரமா வலிக்கும்.அதான் குடிச்சேன்.அந்தத் தரித்திரம் புடிச்ச வாழ்க்கையில ஏதாவதொரு அதிஷ்டம் வரும்னு நம்பித்தான் இருந்த ஒரே வீட்டையும்,கடையையும் அடகுவச்சு ரேஸ் போட்டேன்.இது எதுவுமே அவளுக்குப் புரியல.அதான் ஒரு வாக்குவாதத்துல இப்படியாகிப் போச்சு.இன்னிக்குக் கூட நிறைய பேர் முடிவெட்டுறதுங்குறது ரொம்ப லேசான காரியம்னுதான் நெனச்சிட்டிருக்காங்க “எனச் சொல்லி அவர் கீழ் நோக்க அவரது பிஜாமா சாறனில் இரு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் விழுந்தன.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” எனச் சொல்லி அவரை சமாதானப்படுத்தப் பார்த்தாலும் உலகிலேயே மிக இலகுவான தொழில் முடி திருத்தும் தொழில்தான் என்ற எனது எண்ணம் தூள்தூளானது.


எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
msmrishan@gmail.com

Series Navigation