ஜாதிகள் ஜாக்கிரதை

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

ராமலக்ஷ்மி


‘அப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ் ‘

‘ஏண்டா இப்படிக் கிளம்புற நேரத்தில் உயிரை வாங்கிற! சொன்னா சொன்னதுதான். ‘ பெட்டிகளை வேனில் ஏற்றுவதில் மும்முரமாக இருந்த ரகுபதி சுள்ளென்று எரிந்து விழுந்தார்.

முரளிக்கு கண்ணீர் வந்தது. மெல்ல மண்டியிட்டு அமர்ந்து ஜானியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். ‘இல்லடா ராஜா ‘ உன்னை விட்டுட்டு போயிட மாட்டேன் ‘ என்றான் அடிக்குரலில். அதற்கு புரிந்ததோ என்னமோ வழக்கத்தை விட அதிக பாசத்துடன் வாலை ஆட்டியபடி அவனிடம் குழைந்தது.

வீட்டுக்குள் இருந்து எதேதோ சாமான்களை வேனில் ஏற்றுவதற்காக சிரமத்துடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த அக்கா கல்பனா கோபத்தில் கத்தினாள். ‘எப்படி அல்லாடுறேன்! இங்க வந்து ஒரு கை கொடேன். இன்னும் ஏன் அதோடயே இழைஞ்சிட்டு நிக்கறே ? சனியனை என்னவானாலும் கூட்டிட்டுப் போகறதில்லேன்னு ஆயிடுச்சு. ‘ ஜானியைக் கண்டாலே அவளுக்கு அப்படியொரு வெறுப்பு. ஜானிக்கு பயந்துதான் தன் தோழிகள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்று வேறு நினைப்பு.

‘போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு ‘ பதிலுக்குச் சீறினான் முரளி. ‘சே! ஜானி எவ்வளவு நன்றியாய் பாசமாய் இருக்கிறது! யாரும் அதைப் புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறார்களே! ‘ வருத்தம் மேலிட அதைத் தடவிக் கொடுத்தான்.

ஜானி குட்டியாய் இருந்த போது, ஒரு மழை நாளில் குளிரில் நடுங்கியபடி இவன் வீட்டு வராந்தாவில் பதுங்க, பாவப்பட்டு அடைக்கலம் கொடுக்கப் போய் இவனுடனேயே ஒட்டிக் கொண்டது. இந்த இரண்டு வருடத்தில் ‘திமுதிமு ‘ என ஒரு பெரிய கன்றுக்குட்டியின் சைசுக்கு என்னமய் வளர்ந்து விட்டது. ஸ்கூலுக்கு, கடைக்கு, நண்பர் வீடுகளுக்கு என் எங்கு போனாலும் கூடவே வரும்.

இப்போது அப்பாவுக்குப் பதவி உயர்வோடு மாற்றலாகி விட்டது. வீட்டு சாமான்களெல்லாம் டெம்போவில் போயாகி விட்டது. இவர்களும் இன்று கிளம்புகிறார்கள். ஜானியைக் கூட அழைத்துப் போக வேனில் இடமிருந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் மனதில் இடமில்லையே.

கடைசி நிமிடம் வரை போராடிப் பார்த்து விடுவது எனத் தீர்மானித்தவன் போல ‘அப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ் ‘ என மறுபடியும் கெஞ்ச ஆரம்பித்தான் முரளி.

‘டேய் சும்ம தொணதொணக்காதே! ஏதோ ரொம்ப ஆசைப்பட்டியேன்னு இது நாள் வரை அதை இருக்க விட்டதே பெரிசு. நான்தான் அங்கே போனதும் உனக்கு வேற நாய் வாங்கித் தர்றேன்னு சொல்றனே! ‘ என்றார்

எரிச்சலாய்.

‘ஏம்பா! அந்த புது நாய் என் ஜானியாகிட முடியுமா என்ன ? ‘ கண்ணில் நீர் முட்டக் கேட்டான் முரளி.

‘புரியாம பேசறியேடா! வாங்கிற நாய்க்கும் ஜானின்னு பேர் வச்சா போச்சு! நாம போற இடத்தில அவனவன் டாபர்மேன், அல்சேஷன், பொமரேனியன்னு வளர்த்திட்டிருப்பான். அங்கே இந்த தெரு நாயைக் கூட்டிட்டுப் போனா நம்ம ஸ்டேட்டஸ் என்னாகிறது ? ‘

‘சரியா சொன்னீங்கப்பா, ‘புசுக் புசுக் ‘குன்னு பட்டுப் போல ஒரு பொமரேனியனை வாங்கி வளர்ப்போம் என்று ஒத்துப் பாடினாள் கல்பனா.

‘நீ சும்மா இருடி ‘ என்று அவளை அதட்டிய முரளி ஒரு கணம் அப்பாவை உறுத்துப் பார்த்து விட்டுக் கேட்டான், ‘ஏம்ப்பா இந்த வாயில்லா ஜீவன்கள் கிட்டேயே ஜாதி பார்க்கிற நீங்களா மனுஷ ஜாதிப் பிரிவுகளை ஒழிக்கப் பாடுபடப் போறீங்க ? ‘

பத்து வயது பாலகனின் அந்தக் கேள்வி, பல ஆயிரம் பாம்புகள் கொத்தியது போலிருந்தது ரகுபதிக்கு.

நேற்று அவருக்கும் குடும்பத்தினருக்கும் தரப்பட்ட பிரிவு உபசார விழாவில், தான் பேசியதைத்தான் முரளி குறிப்பிடுகிறான் எனப் புரியாமல் இல்லை.

‘எனக்குப் பதவி உயர்வு கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சதும் ஜாதி சங்கத்திலே இருந்து கூட்டமா வந்து எனக்குப் பாராட்டு விழா எடுக்க விரும்புறதா சொன்னாங்க. ‘முதல்ல உங்க சங்கத்தை கலைச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு பெரிய விழா எடுத்துட்டுப் போறேன் ‘னு நான் சொன்னேன் ‘

நன்றியுரை ஆற்றும் போது அவர் சொன்னதைக் கேட்டு சிரித்த கூட்டத்தை நோக்கி கையமர்த்தி விட்டு ஆவேசமாய் ‘ஜாதி என்னய்யா ஜாதி ? நான் உசந்தவன், நீ தாழ்ந்தவன்கிற சண்டையே ஜாதியாலதான் வருது. ஜாதிகள் மறையணும்னா முதல்படியா சங்கங்கள் கலையணும். போற இடத்திலே எல்லாம் நான் இதை அஞ்சாமல் அடித்துச் சொல்லத்தான் போகிறேன் ‘ என்றார் ரகுபதி.

அப்போது கை தட்டிக் கரகோஷித்தக் கூட்டம் இப்போது கை கொட்டி சிரிப்பது போல மனதுக்குள் ஒரு பிம்பம் தோன்றி மறைய, தலையை உலுக்கிக் கொண்டார் ரகுபதி.

‘எவ்வளவு திமிர் இருந்தா அப்பாவையே எதிர்த்துப் பேசுவ நீ ‘ என்று சமயம் பார்த்துத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள கை ஓங்கிய கல்பனாவைத் தடுத்த ரகுபதி, முரளியைக் கனிவுடன் நோக்கி ‘ஜானியும் நம்ம கூட வருது ‘ என்றார்.

***

ஆகஸ்ட் 1992 ‘நண்பர் வட்டம் ‘ இதழில் பிரசுரமான சிறுகதை.

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி