சொல்லிச் சென்றவள்!

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சந்திரவதனா

பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா..! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது.

விமானத்திலிருந்து குதிக்க முடியுமா.. ?

என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்..!

விமானம் ஏதாவதொரு நாட்டில் தரையிறங்கும் போது பிள்ளைகளுடன் ஓடி விடுவோமா.. ? மனசு நிலை கொள்ளாமல் தவித்துத் தத்தளித்துக் கொண்டேயிருந்தது. பேதைத் தனமாக எதையெதையெல்லாமோ எண்ணிக் குழம்பியது.

எப்படிப் போய் யார் முகத்தில் முழிப்பது ? பணம் போய் விட்டது. யேர்மன் ஆசை மண்ணாகி விட்டது. அவரைக் காணும் களிப்பும் கனவாகி விட்டது.

எல்லோருக்கும் பயணம் சொல்லி ஊரிலிருந்து புறப்பட்டு, அகதிகளாய் வவுனியா கொறவப்பத்தானை ரோட் தேவாலயத்தில் அவதிப் பட்டு கொழும்பிலும் பயணம் சொல்லி விமானம் ஏறிய பின் மொஸ்கோவில் விசா சதி செய்யும் என்று யார் கண்டது!

அப்பவே பக்கத்து வீட்டு மகேசக்கா சொன்னவ-

‘நீ…. சரியான துணிச்சல்க்காரிதான். மூண்டு பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு தனிய பிளேன் ஏறப் போறியே…! அதுவும் களவா.. ஏஜென்சிக் காரனுக்கு இவ்வளவு காசைக் கொட்டி…. காசைக் கரியாக்கிற வேலையள்தான் இதுகள்..! ‘

வார்த்தைகளை அவ கொட்டிய விதத்திலேயே நான் யேர்மனிக்குப் போவதில் அவவுக்கு உள்ள அதிருப்தி அப்பட்டமாகத் தெரிந்தது. நான் எனது கணவரிடம் போவது அவவுக்குப் பிடிக்கவில்லை.

இப்ப நான் திரும்பி வந்து விட்டேன் என்ற உடனே

‘நான் சொன்னன் கேட்டியோ..! ‘ என்று நாடியைத் தோள்ப் பட்டையில் இடிக்கத்தான் போறா. அவவாவது எனக்கு முன்னால் இடிப்பா. எனக்குப் பின்னால் இடிக்கப் போகிறவர்கள் எத்தனை பேர்.. ?

மனசு இந்த அவமானங்களைத் தாங்கும் துணிவின்றி அல்லாடிக் கொண்டிருந்தது.

‘அக்கா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. செத்திடலாம் போலை இருக்கு. ‘ எனக்கு நான்கு சீற் தள்ளியிருந்த சாந்தி அரை குறை அழுகையுடன் சொன்னாள்.

என்னையும் எனது பிள்ளைகளையும் சேர்த்து எல்லாமாக 32 இலங்கையர்

மனசுக்குள் அழுத படி இந்த விமானத்துள். ஐந்து நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயர்லங்காவில் ஏறிய போது இப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் கூட ஏஜென்சி மகாதேவனுக்கு சுளையாக 75000 ரூபா கொடுத்தேன். யேர்மனிய மார்க் எட்டு ரூபா பெறுமதியாக இருந்த 1986ம் ஆண்டில் இந்த 75000 ரூபா கொஞ்சக் காசில்லை.

எல்லாம் ஏஜென்சிமாரின் பிழைதானாம். சரியாக விசாரிக்காமல் மூன்று ஏஜென்சிமார் 32 பேரிடமும் காசை மட்டும் சுளையாக வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏற்றி விட்டுக் ?ாயாக இருந்து விட்டார்கள். மொஸ்கோ வரை ஒரு பிரச்சனையுமில்லை.

‘அக்கா உங்கடை அவர் யேர்மனியிலை எங்கை இருக்கிறார் ? ‘ முதலில் வெறுமனே சிரித்த சாந்தி இப்படித்தான் என்னுடன் விமானத்துள் கதைக்கத் தொடங்கினாள்.

எத்தனை தரம் கடிதம் எழுதி என்வலப்பில் அவரின் விலாசம் எழுதி அஞ்சல் செய்திருப்பேன். ஆனாலும் அந்தப் பெயர் வாயில் நுழையவோ நினைவில் நிற்கவோ மறுக்கிறது.

எந்தச் செக்கிங்கிலும் யார் கண்ணிலும் பட்டு விடாதபடி விலாசத்தைச் சுருட்டி எனது சட்டை மடிப்புக்குள் சொருகியிருந்தேன். நான் யேர்மனிக்குத்தான் போகிறேன் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. பெய்ரூட் (Beirut) போவது போலத்தான் எல்லாம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. யேர்மனியில் ஃபிராங்போர்ட் (Frankfurt) விமான நிலையத்தில் விமானம் தரிக்கும் போது இறங்கி அகதி விண்ணப்பம் கோர வேண்டும்.

விமானத்துள் வந்த ஒவ்வொரு தமிழரும் போக எண்ணிய இடங்கள் சுவிஸ், பாரிஸ், ெ ?ாலண்ட், இத்தாலி… என்று வேறு பட்டிருந்தாலும் எல்லோரும் பெய்ரூட் போவது போலத்தான் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஃபிராங்போர்ட்(Frankfurt) இல் எப்படிக் கதைக்க வேண்டுமென வெளிக்கிடுவதற்கு முதல்நாள் இரவே எனது கணவர் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருந்தார்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் செக்கிங்கின் போது எனது சிறிய புகைப்பட அல்பத்தில் இருந்த எனது கணவரைப் பார்த்து அவர் இருக்கும் இடம், வளம்… என்று கேள்விகளை அடுக்கினார்கள். வாய் கூசாமல் ‘பெய்ரூட் ‘ என்று பொய் சொல்லி வைத்தேன்.

‘திரும்பி வருவாய் தானே.. ? ‘

அதற்கும் ‘ஓம் ‘ என்று பொய்தான் சொன்னேன்.

விமானம் மேலெழும்பிய போது ஊரை உறவுகளை விட்டுப் பிரியும் துயரில் மனதின் ஒரு பக்கம் கனமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கனவுகள் கற்பனைகள் என்று இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது. யேர்மனிக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.

கோழிக் குருமா சுவைத்தது. மூன்று சின்னப் பிள்ளைகளுடன் பறக்கிறேன் என்பதால் அக்கறையாகக் கவனிக்கப் பட்டேன். பிள்ளைகள் அந்த உணவுகளின் சுவைகளை ருசிக்க முடியாதவர்களாக இருந்ததால் அடிக்கடி பழங்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

நான்கு இருக்கைகள் தள்ளியிருந்த சாந்தி ஆரம்பத்தில் சிரித்து, பின் கொஞ்சமாய்க் கதைக்கத் தொடங்கி.. மொஸ்கோவை சென்றடைவதற்குள் கிறீம் தந்து ‘கையுக்குப் பூசுங்கோ அக்கா ‘ என்று சொல்லுமளவுக்கு நட்பாகி விட்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். கனவுகளையும் ஆசைகளையும் கண்களுக்குள் நிறையவே தேக்கி வைத்திருந்தாள். கணவனை இரண்டு வருடங்களின் பின் சந்திக்கப் போவதில் என்னைப் போலவே ஆவலாய் இருந்தாள்.

மொஸ்கோவில் விமானம் தரையிறங்கும் போது காது விண்ணென்று வலித்தது.

பிள்ளைகள் வாந்தி எடுத்தார்கள். எமக்கு அங்கே ரான்ஸ்சிட் (Transit).

நாம் அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட ெ ?ாட்டேல் ஒன்றில் ஒரு நாள் தங்கி அடுத்த நாள் மதியம் லுஃப்தான்சாவில் (Lufthansa) யேர்மனி புறப்படுவதாய்த்தான் ஏற்பாடு.

விமான நிலையத்திலிருந்து எம்மை பஸ்சில் ெ ?ாட்டேலுக்கு அழைத்துச் சென்றார்கள். மொஸ்கோ குளிரில் உறைந்து ஒரு வரண்ட பிரதேசம் போல் காட்சி அளித்தது. பஸ்சில் இருந்து இறங்கிக் ெ ?ாட்டேலினுள் நுழையும் போது குளிர் அறைந்தது. காது மடல்கள் விறைத்தன. ஆனாலும் அவை என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

மூன்று பிள்ளைகளுடன் உள்ளே சமாளிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு 19வது மாடியில் இரட்டை அறை ஒன்று தந்திருந்தார்கள். ஓரளவு வசதியான அறை. ஐன்னலால் வெளியில் பார்க்கப் பயமாக இருந்தது. அதே மாடியில் இன்னும் சில தமிழருக்கு அறைகள் கொடுக்கப் பட்டிருந்தன. மிக அமைதியாக இருந்த மாடி எம்மவரின் வருகையில் சற்று அல்லோல கல்லோலப் பட்டிருப்பது போலத் தெரிந்தது.

எவ்வளவுதான் வசதியாக அந்த அறை இருந்தாலும் ஏதோ வசதிக் குறைவு போலவே மனசு சங்கடப் பட்டது. பிள்ளைகளைக் குளிக்க வைத்து சாப்பிடுவதற்காக வெளியில் கீழே கன்ரீனுக்கு அழைத்துப் போன போதுதான் 32 தமிழர்களையும் ஒன்றாகக் கண்டேன்.

பரிச்சயமில்லாத உணவுகளைச் சாப்பிட முடியாமல் சங்கடப் பட்டோம். இரண்டு மேசை தள்ளியிருந்த நான்கு இளைஞர்களில் ஒருவனான ராஜன் சீனியென நினைத்து தேநீருக்கு உப்பைப் போட்டு விட்டு சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான். பார்ப்பதற்குக் கொஞ்சம் ரவுடித் தனமாய்த் தெரிந்தான்.

இரவானதும் சாந்தி பிள்ளைகளுடன் என் அறைக்கு வந்தாள். முகம் தெரியாதவனை மணம் செய்து கொள்ளச் செல்லும் சில பெண் பிள்ளைகளும் வெளிநாடு எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று தெரியாத பதினெட்டு பத்தொன்பது வயது நிரம்பிய அப்பாவித்தனம் கலையாத ஆண் பிள்ளைகளும் வந்தார்கள்.

எங்கள் கதைகள் – ஊரில் விட்டு வந்த உறவுகளைப் பற்றியும் புகலிடத்தில் சந்திக்கப் போகும் உறவுகளைப் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தன. சிலருக்கு கண்கள் கலங்கி கன்னங்களில் வழிந்தன. நடு இரவில், நினைத்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் தத்தமது அறைகளுக்குப் போனார்கள்.

அடுத்தநாள் மதியம் எமக்கான பஸ்சில் ஏறி விமான நிலையத்துக்குச் சென்று ரிக்கெற்றை ஓகே பண்ணுவதற்காக வரிசையில் நின்ற போதுதான் விதி சதி செய்திருப்பதை அறிந்து கொண்டோம். ஒவ்வொருவராக விமானம் ஏறுவதற்கான அனுமதி மறுக்கப் பட்டோம். நானும் சாந்தியும் குழந்தைகளுடன் இருப்பதால் எங்களுக்கு மற்றவர்களை விட கூடிய சலுகை வழங்கப் படுமென எதிர் பார்த்து ஏமாந்தோம். ரான்ஸ்சிற் விசா இல்லாமல் லுஃப்தான்சா (Lufthansa) விமானம் எங்களை ஏற்க மறுத்து விட்டது.

எத்தனையோ விதமாகக் கதைத்துப் பார்த்தோம். கெஞ்சிப் பார்த்தோம். ம்கும்.. எங்கள் விமானம் எங்களை மொஸ்கோ விமான நிலையத்தில் விட்டு விட்டு தன்பாட்டில் பறந்த போது அழுகை வந்தது. ஆனாலும் கெஞ்சிக் கூத்தாடி வென்று விடமாட்டோமா..! என்ற நப்பாசையோடு போராடினோம்.

ஆனாலும் திரும்ப அந்த ெ ?ாட்டேலுக்கே அனுப்பப் பட்டோம். ெ ?ாட்டேலில் ஆங்கிலம் தெரிந்தவர்களே இல்லை என்று சொல்லலாம். அவர்களுடன் எங்கள் பிரச்சனைகளைப் பேசுவதே பெரும் பிரச்சனையாக இருந்தது. கன்ரீனில் அவர்கள் சாப்பாடுகளைப் பரிமாறும் போது நேற்றிருந்த மரியாதை குறைந்து போனது போலத் தெரிந்தது.

காவலுக்கு நின்ற பொலீசிடம் போய் எங்கள் நாட்டுப் பிரச்சனைகளைச் சொல்லி எங்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுப் பார்த்தோம். அவர் உரியவர்களோடு ரஷ்ய மொழியில் பேசி விட்டு ‘அவர்கள் உங்களை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரை பொறுத்திருங்கள். ‘ என்று சொன்னார். நம்பிக்கையுடன் நல்ல முடிவுக்காய் காத்திருந்தோம்.

அடுத்த நாள் ராஜனையும் இன்னொருவனையும் தவிர மற்றவர்களெல்லோரும் எனது அறைக்குள் வந்து கூடத் தொடங்கினார்கள். என்ன செய்யலாம் என்பதே எல்லோரது கேள்வியும். இப்போது எல்லோரும் தத்தமது நிலைப்பாடுகளை ஆற்றாமையோடு வெளியே சொல்லத் தொடங்கினார்கள்.

பதினெட்டு வயது நிரம்பிய சேகரை அவனது அம்மா வீட்டை ஈடு வைத்துத்தான் அனுப்பியிருந்தா. இருபது வயது லோகனுக்கு அவனது அக்கா தாலிக்கொடியை அடகு வைத்துப் பணம் கொடுத்திருந்தா. இப்படியே ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை. வீணாய்ப் போன பணத்தையும் தடைப் பட்டு விட்ட பயணத்தையும் நினைத்து நினைத்து எல்லோரும் மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தோம்.

விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு விமானமும் மேலெழுந்து பறக்கும் போது அந்தச் சத்தம் மனதை என்னவோ செய்தது. யன்னலால் வெளியில் பார்த்த போது மொஸ்கோ குளிர் நிறைந்த பாலைவனம் போலவே காட்சியளித்தது. மெது மெதுவாக மனசுக்குள் வெறுமை சூழத் தொடங்கியது.

ஒவ்வொரு அறையிலிருந்தும் வேறு நாட்டவர்கள் ஃபிளைட்டுக்காக (Flight) உடமைகளுடன் வெளியேறும் போது ஆதங்கம் தலை தூக்கியது. எனது கணவருக்கு எப்படியாவது விடயத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதால் ஒரு கடிதம் எழுதி விட்டு அஞ்சல் செய்ய இடம் தேடிய போது ஒரு பின்லாந்து வயோதிபரைச் சந்தித்தேன். அவரிடம் எங்கள் 32 பேரது நிலைமைகளையும் சொன்ன போது, அவர் மிகவும் இரக்கப் பட்டு – கடிதத்தைத் தானே அஞ்சல் செய்வதாகச் சொல்லி வாங்கிச் சென்றார்.

போகப் போக ராஜனின் கதைகள் ஏடா கூடமாக இருந்தன. அவன் நீர் கொழும்பைச் சேர்ந்தவனாம். அவனது தமிழே ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக அவன் ஒரு குரூரமான யுக்தி சொன்னான்.

‘ஒரு குழந்தையை யன்னலால் தூக்கிப் போட்டு விட்டால் எங்களைத் திருப்பி அனுப்ப மாட்டார்கள். ‘ என்றான். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஒரு தரம் நெஞ்சு துடிக்க மறந்து பின் படபடத்தது. அவன் குறிப்பிட்டது எனது மூன்று பிள்ளைகளில் ஒருவரையோ அல்லது சாந்தியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவரையோதான்.

அதன் பின் எனக்கும் சாந்திக்கும் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் பஞ்சாய் பறந்து விட்டது. சாந்தி ஒரேயடியாக பிள்ளைகளுடன் எனது அறையில் வந்து இருந்து விட்டாள். அவன் செய்தாலும் செய்வான் அக்கா. எனக்கு அவனைப் பார்க்கவே பயமாக இருக்கு என்றாள்.

எங்கு சென்றாலும் நானும் சாந்தியும் பிள்ளைகளுடன் ஒன்றாகவே சென்றோம். ெ ?ாட்டேலை விட்டு வெளியில் எங்காவது ஓடி விடுவோமா என்று மனசு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது. எப்படி… ? அது சாத்தியமாகுமா..! ெ ?ாட்டேலை விட்டு வெளியில் காலடி வைக்கவே எங்களுக்கு அனுமதி இருக்கவில்லை. ெ ?ாட்டேலினுள் எங்கு பார்த்தாலும் ரஷ்ய மொழியிலேயே எல்லாம் எழுதப் பட்டிருந்தன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களைக் கண்டு பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது:.

நான்காம் நாள் எம்மைத் திருப்பி அனுப்புவதாக முடிவெடுத்து விட்டதாக அறிவித்தார்கள். இரண்டு பொலீஸ் காரர்கள் ஒவ்வொரு அறையாக வந்து ‘நாளை விடிய மூன்று மணிக்கு ரெடியாக நில்லுங்கள். ‘ என்று சொல்லிச் சென்றார்கள்.

அந்த இரவு – ராஜனைத் தவிர மற்றைய எல்லோரும் எனது அறைக்குள் வந்து கூடி விட்டார்கள். ராஜன் வந்து பார்த்து விட்டு, ஒரு பிள்ளையின் உயிரைத் தியாகம் பண்ண மறுத்து விட்டேன் அதனால்தான் எல்லாம் என்பது போல என்னில் கோபப் பார்வை ஒன்றை வீசி விட்டுச் சென்றான்.

அன்று எங்களில் யாருமே நித்திரை கொள்ளவில்லை. பெண்பிள்ளைகளில் சிலர் என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யாரும் அவரவர்க்குரிய அறைகளில் இல்லையென்பதை எப்படியோ அறிந்து கொண்ட பொலீஸ் கூட்டம் இரண்டரை மணியளவில் என் அறையை வந்து மொய்த்து விட்டது.

உடைகளை மாற்றி வெளிக்கிடும் படி கட்டாயப் படுத்தப் பட்டோம். நாங்களும் முடிந்தவரை மறுத்துப் பார்த்தோம். எதுவும் பயனளிக்கவில்லை. திருப்பி அனுப்புவதற்காக எங்களை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றார்கள். ‘போனால் செத்து விடுவோம் ‘ என்றும் சொல்லிப் பார்த்தோம். அவர்கள் மசிய வில்லை. காலை ஏழு மணிக்குப் பறக்கப் போகும் விமானத்துக்காக எம்மை மூன்று மணிக்கே கூட்டிச் சென்று ஒரு குளிரான இடத்தில் நிற்பாட்டி வைத்தார்கள். விமானத்துக்கான பஸ்ஸின் வரவுக்கான காத்திருப்பு நீண்டதாக தண்டனை தருவது போல அமைந்திருந்தது. குறிப்பிட்ட நேரத்தின் பின் பிள்ளைகள் சுருண்டு விழத் தொடங்கினார்கள். குளிரில் அவர்களின் கால்களில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. மனசு துடித்தது.

இனி முடியாது என பெரியவர்கள் நாங்களும் ஓய்ந்து போய் நிலத்தில் சாய்ந்த ஒரு கட்டத்தில் பஸ் வந்து கட்டாயப் பயணம் ஆரம்பித்தது. ஓவ்வொருவர் மனதிலும் போராட்டம். எல்லோர் வாயிலும் அவர்களை அறியாமல் வந்த வார்த்தைகள் ‘செத்து விடுவோமா…! ‘ என்பதுதான்.

விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கிய போது எல்லாம் பச்சையாகத் தெரிந்தது.

இறங்கி ஓடி விடுவோமா என மனசு அந்தரித்தது. எதுவும் என் கையில் இருக்கவில்லை. கட்டுநாயக்காவில் வந்திறங்கியபோது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஏமாற்றம். எதிர் கொள்ளப் போகும் உறவினர்களிடம் எப்படி முகம் கொடுப்பது என்ற மனப் போராட்டம்.

வெள்ளவத்தையில் இருக்கும் மாமாவைத் தொiபேசியில் அழைத்து விடயத்தைச் சொல்லி விட்டு ரக்சியில் ஏறினேன்.

சாந்தி கலங்கிய கண்களுடன் ஓடி வந்து என் கைகளை அழுத்திக் கொண்டு ‘அக்கா நான் எப்பிடியக்கா ஊருக்குப் போறது ? செத்திடலாம் போலை இருக்கக்கா..! ‘ என்று சொல்லி விட்டு இன்னொரு ரக்சியில் பிள்ளைகளுடன் ஏறினாள். அவளுக்கு கொழும்பில் யாரும் இல்லையாம். லொட்ஜ் இல் தங்கி விட்டு விடிய யாழ் புறப்படுகிறாளாம்.

மாமா வீட்டில் இரவுச்சாப்பாடு இடியப்பமும் உருளைக்கிழங்குக் கறியும். எதுவும் ருசிக்கவில்லை. விடயமறிந்து யேர்மனியிலிருந்து கணவர் தொலைபேசியில் அழைத்து ‘அவசரப் பட்டு ஊருக்குப் போக வேண்டாம. வேறு ஏதாவது வழி இருக்கோ என்று பார்ப்போம். ‘ என்று சொன்னது சற்று ஆறுதலாக இருந்தது.

அடுத்தநாள் மதியம் இன்னொரு ஏஜென்சியிடம் போவதற்கு நானும் மாமாவும் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம் – யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகோவுக்கும் அனுராதபுரத்துக்கும் இடையில் பயணிகளுடன் சேர்த்து எரிக்கப் பட்டு விட்டது. – என்ற செய்தி வந்தது.

அவசரமாய் சாந்தி இருந்த லொட்ஜ்க்குத் தொலைபேசி அழைப்பை மேற் கொண்டேன்.

‘அவள் அறையைக் கான்சல் பண்ணிக் கொண்டு காலை பஸ்சில் புறப்பட்டு விட்டாள். ‘ என்றார்கள்.

சந்திரவதனா

யேர்மனி.

29.11.2002

பிரசுரம் – பூவரசு (வைகாசி-ஆனி 2003)

Oru Parvai

TUESDAY, AUGUST 24, 2004

chandra1200@yahoo.de

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>