சொல்லத்தான் நினைக்கிறேன்

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

இளந்திரையன் –


‘அன்புள்ள அப்பா……. ‘ எழுதத் தொடங்கிய கடிதம் இரண்டொரு வாக்கியங்களுடன் நகர மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

எதை எழுதுவது எதை விடுவதென்று தெரியாமல் அவள் குழம்பிப்போயிருந்தாள்.எதையும் விட்டு விடாது எல்லாவற்றையும் எழுதி விடவேண்டுமென்ற ஆதங்கத்தில் தவித்துக் கொண்டிருந்தாள். தலை வலித்து வேதனை தந்து கொண்டிருந்தது. கன்னங்களில் அவன் விரல்கள் பதிந்த இடத்தில் வீங்கி எரிந்து கொண்டிருந்தது. உதடுகளை அழுத்தி வேதனையைத் தாங்க முயற்சி செய்தபோது கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.

‘அப்பா….. எத்தனை ஆசை ஆசையாக வளர்த்து…… கலியாணமும் கட்டிக் கொடுத்து கனடாவுக்கும் அனுப்பி வைச்சியள் …….. இண்டைக்கு உங்கடை மகளின் நிலையைப் பாருங்கோ …… ‘

உள்ளத்து வேதனை கண்ணீராக அவள் கன்னங்களின் வழியே ஓடிக்கொண்டிருந்தது. கனடா வந்த இரண்டு மாதங்களிலேயே அவளின் வாழ்க்கையின் திசையறியாது தவித்தாள்.

இன்று எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல் கன்னத்திலும் அறைந்து விட்டான்.

இதற்கு மேல் என்ன செய்வது என்றே தெரியாது திகைத்துப் போய்விட்டள். எத்தனை கனவுகளைக் கண்ட, சுமந்து வந்த திருமண வாழ்க்கை இப்படி ஆகும் என்று அவள் கனவு கூடக் கண்டதில்லை.

வந்த புதிதில் அவனும் அன்பாகத்தான் இருந்தான். அப்படித்தான் அவளும் நினைத்திருந்தாள்.தொடர்ந்து வந்த நாட்களில் அவன் உறவினர் நன்பர்கள் என்று அழைத்து அழைத்து விருந்து வைத்த போதும் அவர்கள் ஆனந்தமாகத் தான் சென்று வந்தார்கள்.

புதிய வாழ்க்கை அழகாகத்தான் இருந்தது.வசதிகள் …. வாய்ப்புகள் …. அன்பான கணவன் ……. தன்னைப் போல் அதிர்ஸ்டசாலி யாருமில்லை என்றே அவளுக்குத் தோன்றியது.

எல்லாம் அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து சிறிது சிறிதாக மது பாவிக்கும் வரைதான். விருந்துகளில் சிறிதாக எடுத்தவன் வீட்டிலும் எடுக்கத் தொடங்கினான். என்ன இது என்று கேட்டபோது , பதினைந்து வருடப் பழக்கம் உனக்காக மாற்ற முடியாது என்று நிர்த்தாட்சண்யமாகவே பதிலளித்து விட்டான்.

எத்தனை இரவுகள் அவனுக்காகவே காத்திருந்து பசியுடனே அப்படியே தூங்கியும் விட்டிருக்கிறாள். திடாரென்று அவன் அவளை எழுப்பும் போது எத்தனை மணி என்ன ஏது என்று தெரியாது திகைத்துத் தடுமாறும் அவளைப் படுக்கைக்கு அழைப்பான்.

நெருங்கி வரும் அவனிலிருந்து வரும் நாற்றம் அவளுக்கு குமட்டலை ஏற்படுத்தும். அவள் மறுப்பையும் பொருட்படுத்தாது தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கிப் போய்விடுவான்.

அவளால் இவை ஒன்றையும் ஜீரணித்துக் கொள்ளத்தான் முடியவில்லை. அதிர்ந்து பேசாத அப்பா ….. அமைதியான அம்மா …… சிரிப்பும் , சங்கீதமும், சாம்பிராணி வாசமுமாக இனிக்கும் வீடு ……. இங்கோ எல்லாமும் தலைகீழ் …… இரைச்சல் ….. எதிலும் பலாத்காரம் …….

காலையில் எழுந்தவுடன் எதுவுமே நடவாதது போல இயல்பாக நடந்து கொள்வான். என்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டு வாங்கி வருவான். வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் அவனுடன் என்ன கதைக்க முற்பட்டாலும் இரவு கதைப்போம் என்று கூறிவிட்டுப் போய்விடுவான்.

இரவு இரண்டு ஆளாக வரும் அவனுடன் என்னத்தைக் கதைப்பது. இன்று எப்படியும் கதைப்பது என்று முயற்சி செய்யப் போக அவனுடைய எரிச்சல் கன்னத்தில் இடியாய் இறங்கி விட்டது. முதல் முதல் வாழ்க்கையிலேயே அடி வாங்கிய அதிர்ச்சி அவள் மனதில் மாற்ற முடியாத காயமாகப் பதிந்து விட்டது.

ஏன்…… இப்படி ….. அவன் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென்றே அவளுக்குத் தோன்ற வில்லை. ஏனெனில் அவனின் வாழ்க்கை, அவன் சொன்ன நியாயங்கள் அவளின் புரிதலுக்கு அப்பாற் பட்டதாக இருந்தது.

பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள , பேசிக்கொள்ள ஒரு உறவும் இல்லாத தொலை தேசத்தில் வாழ வந்திருப்பதன் அவலம் இப்போது தான் அவளுக்கு உறைத்தது.

அவன் ஆறுதல் என்று வந்த இடத்தில் அவனே பிரச்சினைக்குக் காரணம் என்றால் அவள் என்னதான் செய்வாள். அவனிடம் இதைச் சொன்ன போது அவனும் இதைத்தான் பதிலாகச் சொன்னான். அன்பாக மகிழ்வாக வாழவென்று அவளைத் திருமணம் செய்தால் , அதைச் செய்யாதே …. இதைச் செய்யதே ….. என்று அவளே பிரச்சினையாக இருந்தால் என்ன செய்வது …… எத்தனையோ வருடம் வாழ்ந்து வந்த வாழ்க்கையை உனக்காக உடனே மாற்றச் சொன்னால் …. என்ன செய்வது என்று கேட்டு விட்டுச் சென்று விட்டான்…..

‘அப்பா …… எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்லத்தான் வேணும் …. யார் சரி …. யார் பிழை ….. நான் உங்களிடமே வந்து விடட்டுமா … அப்பா…. ‘

அவள் எல்லாவற்றையும் எழுத முயற்சி செய்துகொண்டிருந்தாள். தலை வலியுடன் கன்னமும் எரிந்து கொண்டிருந்தது. உள்ளத்தின் வேதனை கன்னத்தின் வழியே வழிந்தோடிக் கொண்டிருந்தது.

Ssathya06@aol.com

Series Navigation