சே குவாரா – புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

K. ரவி ஸ்ரீநிவாஸ்


(உயிர்மை ஜனவரி 2005 இதழில் வெளியானது)

1

சே குவாராவின் இந்தப் புகைப்படம் உலகெங்கும் புகழ்பெற்றது.இன்றும் வெகு ஜன இயக்கங்களால், புரட்சியாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இப்புகைப்படத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இப்புகைப்படம்

டி ஷர்ட்களில், தேனீர் கோப்பைகளில், சுவரொட்டிகளில், புத்தகங்களின் அட்டைகளில் என்று பலவற்றில்

காணப்படுகிறது. இப்புகைப்படத்தினை 1960 ல் எடுத்த ஆல்பர்டோ ல்ய்ஸ் குடிஈரிஸ் (Alberto Diaz Guttierez)

பரவலாக கோர்டா (Korda) என்ற பெயரில் அறியப்பட்டவர். 1960 ல் இந்தப்படம் எடுக்கப்பட்டாலும் 1967க் குப்பின்னரே இது வெளிவுலகிறகு அறிமுகமானது.பொலிவியாவில் 1967ல் சே கொல்லப்பட்டப் பின்னரே இப்புகைப்படம் வெளியிடப்பட்டது.1960ல் ஒரு வெடிகுண்டு தாக்குதலில் ஹவானா துறைமுகத்தில் கொல்லப்பட்ட 80 பேரின் இறுதி ஊர்வலத்தில் சேகுவாரவை இரண்டு முறை படமெடுத்த கோர்டா, இரண்டாவது முறை எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பிண்ணணியில் இருந்த ஒரு மரத்தினையும், ஒரு மனிதனின் உருவத்தினையும் நீக்கி இந்தப் புகழ் பெற்ற புகைப்படத்தினை வெளியிட்டார். 1967ல் இப்புகைப்படத்தின் இரண்டு பிரதிகளை இத்தாலியைச் சேர்ந்த இடது சாரி பதிப்பாளர் பெல்டிரினெலி (Giangiacomo Feltrinelli) அவர் கொடுத்தார்.

இப்புகைப்படத்தின் மதிப்பினை உடனடியாகக் கண்டுகொண்ட பதிப்பாளர் சேயின் பொலிவிய நாட்குறிப்புகளை வெளியிட்ட போது அந்நூலின் அட்டைப்படத்தில் அதை பயன்படுத்தினார்.சே கொல்லப்பட்ட பின் அவரது அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் ஊர்வலத்தில் காஸ்ட்ரோ உரையாற்றினார். அப்போது அவர் பேசிய மேடைக்கு எதிர்ப்புறம் இருந்த கட்டிடத்தில் இப்புகைப்படம் இடம் பெற்றிருந்தது. பின்னர் 1968ல் ஐரோப்பாவில் மாணவர்கள் போராட்டத்தின் போது இப்புகைப்படத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள் பரவலாக இடம் பெற்றன. பின்னர் இப்புகைப்படம் உலகெங்கும் பல்வேறு இயக்கங்களாலும், இடதுசாரி கட்சிகளாலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாலும், இளைஞர்கள், இளைஞிகள் மத்தியில் இது மிகவும் பிரபலமானதாலும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படி பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டாலும் இப்புகைப்படத்தினை எடுத்தவருக்கு ராயல்டியாக எதுவும் கிடைக்கவில்லை. இப்புகைப்படம் மிகப்பரவலாக தெரிய வந்தாலும் இதை எடுத்தவர் யார் என்பது

கூட பரவலாக தெரியவில்லை. பலர் கியுபாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் என்பதை மட்டும் அறிவர். இதற்கு ஒரு முக்கிய காரணம் இதை வெளியிட்ட பதிப்பாளர் அவர் பெயரை

சரியான முறையில் வெளியுலகிறகு அறியத்தராததே. இதானல் இதைப் பயன்படுத்தி பலர் லாபம் சம்பாதித்தாலும்

படத்தை எடுத்தவருக்கு உரிய பெயரோ, புகழோ, பணமோ கிடைக்கவில்லை. மேலும் 1997ல்தான் க்யுபா

பெர்ன் ஒப்பந்த்ததில் (Berne Convention) கையெழுத்திட்டது. மேலும் பலர் இப்புகைப்படம் பொதுக்களனில்

(public domain) இருப்பதால் இதற்கு ராயல்டி தர வேண்டியதில்லை என்று கருதிவிட்டனர்.

ஆனால் 2000ல் இப்புகைப்படம் ஒரு மதுபான விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்ட போது அவர் தன் பதிப்புரிமை

குறித்து ஒரு வழக்கினைத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார். லண்டனைச் சேர்ந்த க்யுபா ஆதரவு இயக்கம் அவர் சார்பாக இந்த விளம்பரத்தினை உருவாக்கிய நிறுவனம் (Lowe Lintas Ltd), புகைப்பட நிறுவனம் (Rex Features) மீது வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கில் அவர் பக்கம் நியாயம் இருப்பதாகவும், இப்புகைப்படத்தின்

பதிப்புரிமை அவருக்கு உண்டு என்றும், அவர் அனுமதியின்றி இதைப் பயன்படுத்தியது தவறு என்றும், அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தீர்ப்பானது. அத்தீர்ப்பினை ஏற்று விளம்பர நிறுவனமும், புகைப்பட நிறுவனமும்

கொடுத்த தொகையினை க்யுபாவில் குழந்தைகள் மருத்துவ, மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில்

நன்கொடையாக அவர் கொடுத்துவிட்டார். சமுக மாற்றத்திற்காக, நியாயமான நோக்கங்களுக்காக இப்புகைப்படம் பயன்படுத்தப்படுவது குறித்து தனக்கு மகிழ்ச்சி, ஆனால் மதுபானம் போன்ற ஒன்றிற்கு இதை

விளம்பரம நோக்கங்களுக்கு பயன்படுத்துவது தனக்கு ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார். இத்தீர்ப்பு வழங்கப்பட்ட போது இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது முதலாளித்துவத்ற்கு எதிரான வெற்றி

என்று சிலர் கருதினாலும் இதை அவ்வளவு எளிதாக அவ்வாறு கருதிவிட முடியாது

2

ஆய்வாளர் அரியானா இது குறித்து சில முக்கியமான கருத்துக்களை முன் வைத்துள்ளார். கோர்டா கியுபாவின்

பிரஜை. அவர் தன் பதிப்புரிமை குறித்து வேறொரு நாட்டில், இன்னும் சரியாகக் சொன்னால் ஒரு முதலாளித்துவ

நாட்டில் சட்ட ரீதியாக தன் உரிமை குறித்து வழக்குத் தொடர்ந்தார். அதற்கு கியுப அரசின் ஆதரவும் இருந்தது.

தான் இப்புகைப்படத்தின் ஆசிரியர் என்று அவர் வழக்குத் தொடர்ந்த போதிலும் க்யுபாவில் அவருக்கு அவ்வாறு

உரிமை கோர சட்ட ரீதியாக உரிமை இருந்ததா என்பது கேள்விக்குறி. ஏனெனில் அவர் ஒரு சுதந்திரமான

புகைப்பட நிபுணராக இப்புகைப்படத்தினை எடுக்கவில்லை, மாறாக க்யுப அரசின் ஒரு ஊழியராகவே இதை

எடுத்தார். சட்ட ரீதியாக அவர் இப்புகைப்படத்தின் மீது உரிமை கோர முடியாது. ஏனெனில் க்யுபா உட்பட

பல சோசலிச நாடுகள் இப்படிப்பட்ட உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக அறிவு சார் சொத்துரிமை

என்பதில் அவர் வேறொரு கண்ணோட்டத்தினைக் கொண்டிருந்தன. இதன்படி ஒருவரின் படைப்பு தனி நபர்

உரிமை என்றில்லாமல் பொதுச்சொத்தாகிறது. அப்படைப்பாளியை கெளரவிக்கும் வகையில் அரசு பாராட்டு

பத்திரம், பட்டம், கெளரவம், விருது போன்றவற்றை அளிக்கும், ஆனால் அவர் தனி உரிமை கொண்டாடுவதினை

ஏற்காது. உதாரணமாக இந்தியாவில் அல்லது பிரிட்டனில் அவர் போன்ற ஒரு புகைப்படக்காரர் தன் புகைப்படம்

மீதான உரிமையினை பிறருக்கு விற்கலாம், தன் பதிப்புரிமையினைக் கொண்டு அதைப் பயன்படுத்துவோரிடமிருந்து ராயல்டி பெறலாம், இப்புகைப்படம் இதற்குதான் பயன்படுத்தலாம் என்று நிபந்தனை விதிக்கலாம். பதிப்புரிமை என்பது சொத்துரிமையைப் போல் பயன்படுத்தக்க்கூடிய ஒரு உரிமை. அது மட்டுமல்ல படைப்பளி என்ற வகையில் அவர் தன் தார்மீக உரிமைகளை (moral rights) நிலைநாட்ட நீதிமன்றத்தின் உதவியினை நாடலாம்.

இதற்கு இரண்டு உதாரணங்களைத் தர முடியும். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது ஆனந்த விகடனின் மாப்ஸ் என்கிற பார்த்தசாரதி எடுத்த புகைப்படங்கள் பின்னர் பரவலாக பல வெளியீடுகளில் பயன்படுத்தப்பட்டன. அவை

விகடனின் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டன. இதற்கு விகடன் எவ்வளவு கட்டணம் வசூலித்தது என்பது எனக்குத்

தெரியாது. ஆனால் விகடன் வசம் பதிப்புரிமை இருந்ததால்தான் இது சாத்தியமானது. சமீபத்தில் ஹிந்து தன்

புகைப்பட தொகுப்பினைப் பயன்படுத்த உதவியாக ஒரு இணையதளம் அமைத்துள்ளது. இங்கும் புகைப்படத்தின்

பயன்பாடு குறித்த தகவல்கள் கோரப்படுகின்றன. மேல் நாடுகளில் இது போல் புகைப்படங்களின் மீதான உரிமைகளை நிர்வகிக்கும் அமைப்புகள் உள்ளன. புகைப்படங்களின் மீதான பதிப்புரிமை புகைப்படம் எடுப்பவருக்கு.

ஆனால் பல நிறுவனங்களிலும், ஊடக நிறுவனங்களில் புகைப்படமெடுப்பவரின் வேலையின் ஒரு பகுதியாக

அது கருதப்படுவதால் பதிப்புரிமை பெரும்பாலும் அந் நிறுவனங்களுக்கே சொந்தம் என்ற வகையில் ஒப்பந்தம்

செய்து கொள்ளப்படுகிறது. பல சமயங்களில் சட்டமும் இத்தகைய கண்ணோட்டத்தினையே முன் வைக்கிறது.

இது குறித்த விரிவான விளக்கத்திற்கான இடம் இதுவல்ல என்பதால் இந்த பொதுவான குறிப்புகளை தந்துள்ளேன்.

3

ஆனால் சோசலிச நாடுகளில் படைப்பாளிக்கு இத்தகைய உரிமைகள் கிடையாது. மேலும் பல சோசலிச

நாடுகள் முன்பு அறிவுசார் சொத்துரிமைக் குறித்த சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதில்லை. இதனால்

அவை இவ்வொப்பந்தங்களின்படி தங்கள் சட்டங்களை மாற்றவேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. ஆனால்

1989ல் சோவியத் ஒன்றியம் சிதைந்த பின், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வேறு பாதையில் சென்ற பின் இந்த

நிலை வெகுவாக மாறிவிட்டது.இன்று சில நாடுகளே உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இல்லை அல்லது

அதில் உறுப்பினராக முயற்சி எடுக்கவில்லை. 1990 களிலும், அதன் பின்னரும் அறிவு சார் சொத்துரிமைகளின் முக்கியத்துவம் வணிகரீதியாக அதிகரித்துள்ளது. வணிக தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த

ஒப்பந்தம் (Trade Related Intellectual Property Rights – TRIPS) உலகளாவிய அளவில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து சில முக்கியமான விதிகளை முன்னிறுத்துகிறது. எனவே பதிப்புரிமையின் முக்கியத்துவம்

வணிக ரீதியாகவும், சர்வதேச சட்டரீதியாகவும் அதிகரித்தது.

இந்தப் பிண்ணனியில் அரியானா சுட்டிக்காட்டும் சில தகவல்கள் முக்கியமானவை :

1, கோர்டா கடந்த காலத்தில் க்யுப அரசு இப்புகைப்படத்தினை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதை

எதிர்க்கவில்லை.உதாரணமாக க்யுப அரசு ஸ்வாட்ச் என்ற கடிகாரத் தயாரிப்பு நிறுவனம் சே கடிகாரம்

என்ற பெயரில் கடிகார வகையினை உற்பத்தி செய்து, விற்க அனுமதித்தது.அதாவது சே யின் பெயரும்,

புகைப்படமும் பயன்படுத்தப்பட அனுமதி கொடுத்தது

2,இதற்கு முன்னர் ஒரு பீர் தயாரிப்பு நிறுவனம் சேயின் பெயரை பயன்படுத்தியுள்ளது

3,சேயின் புகைப்படம் இதற்கு முன் வணிக ரீதியாக பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பொழுதெல்லாம்

கோர்டாவோ அல்லது க்யுப அரசோ ஆட்சேபிக்கவில்லை.

4, இப்படி ஆட்சேபிக்காததால் அப்புகைப்படம் பொதுக்களனில் உள்ளது என்று தாங்கள் அனுமானித்தாக

விளம்பர நிறுவனம் கூறியது

இத்தாலிய பதிப்பாளருக்கு தான் இப்புகைப்படத்தினை கொடுத்தாலும் தன் பெயரை அவர் வெளியிடவில்லை என்றும், பல லட்சக்கணக்கான சுவரொட்டிகள் விற்கப்பட்டாலும் தனக்கு அதிலிருந்து வருவாய் ஏதுமில்லை என்றார் கோர்டா. ஆனால் பதிப்பாளரோ தான் இதிலிருந்து பெற்ற லாபத்தினை க்யுப

அரசுக்கும்,பிற புரட்சிகர இயக்கங்கள் போன்றவற்றிற்காவும் கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

கோர்டா ஏன் முன்னர் இது போன்ற வழக்குகளை தொடரவில்லை. ஏனென்றால் 1990 களின் மத்தி வரை

க்யுபாவில் படைப்பளிகளால் இது போல் வழக்குகள் தொடர முடியாத நிலை இருந்தது. க்யுப அரசு அவர்களது படைப்புகள் மீதான் அறிவுசார் சொத்துரிமைகளை அங்கீகரிக்கவில்லை. எனவே சர்வதேச அளவில் அவர்களால் அத்தகைய உரிமைகள் குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியவில்லை.ஆனால் 1990களில் க்யுபாவில் ஏற்பட்ட மாற்றங்களினால் அவர் இப்படி வழக்குத் தொடருவது

சாத்தியமானது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால் க்யுப அரசு படைப்பளிகளுக்கு படைப்பு மீது தார்மீக மற்றும் சொத்துரிமை இருப்பதை அங்கீகரித்த பின்னரே அவர்களால் சர்வதேச அளவில் தங்கள் உரிமைகளை குறித்து வழக்குத் தொடர முடிகிறது.இது உழைப்பு, படைப்பு, சொத்துரிமை குறித்து

ஒரு மாற்றம் ஏற்பட்டதால்தான் சாத்தியமாயிற்று. 1990 களில் க்யுபா தனது அறிவு சார் சொத்துரிமை குறித்த சட்டங்களை மாற்றியது.இதனால் பதிப்புரிமை அங்கீகரிக்கப்பட்டதோடு, படைப்பளிகள் படைப்புகள் மீது

உரிமை கொண்டாவது மட்டுமின்றி, சுதந்திரமான தொழில் முனைவோராக, அதாவது சர்வதேச சந்தைக்கு தங்கள் படைப்புகளை உற்பத்தி செய்வோராக இருக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இது எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், புகைப்படகலைஞர்கள் போன்றோர் தங்கள் திறனையும், படைப்பாற்றலையும் பயன்படுத்தி அன்னிய செலாவணி சம்பாதிக்கவும், சர்வதேச அளவில் தங்கள் படைப்புகளை கொண்டு

செல்லவும் வழிவகுத்தது. ஒரு காலத்தில் இவர்கள் சோசலிச அரசின் ஊழியர்கள் மட்டுமே, சம்பளம்

தரும் அரசுக்கே இவர்கள் படைப்புகள் மீதான உரிமை இருந்தது. அந்தப் படைப்பினை எப்படி பயன்படுத்த

வேண்டும் என்பதனையும் அரசே தீர்மானித்தது. இதற்கு காரணம் பாரம்பரிய மார்க்சிய கோட்பாட்டின்படி

சோசலிச சமூகத்தில் உருவாக்கப்படும் அனைத்தும் பொதுவுடமையாக இருக்குமே, ஒழிய தனி உடமை

என்பதற்கு கிட்டதட்ட இடமே கிடையாது. பொதுவுடமை என்பது நடைமுறையில் அரசுடமை, அரசின்

கொள்கைகளை தீர்மானிப்பது கட்சியின் கண்ணோட்டமே என்றான போது, கட்சிதான் அனைத்தையும்

தீர்மானிப்பது என்றாகிவிட்டது. எனவே சோவியத் ஒன்றியம் உட்பட பல சோசலிச நாடுகளில் படைப்பாளி

என்பவன் ஒரு தொழிலாளி, கட்சிக்கும் அரசுக்கும் அவற்றின் தேவைக்கேற்ப படைப்புகளை உற்பத்தி செய்பவன். எப்படி ஒரு தொழிலாளிக்கு தான் உருவாக்கும் பொருள் மீது உரிமை இல்லையோ அது போல்தான் படைப்பாளிக்கும். சோசலிச அரசுகள் படைப்பாளிகளை விருதுகள், சான்றிதழ்கள், கெளரவங்கள் மூலம் ஊக்குவித்தன.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்தில் பொருளுற்பத்தியும், அது குறித்த

உற்பத்தி உறவுகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது. அன்று விவசாயமும், தொழிற்துறையுமே

பொருளாதார ரீதியாக மிக முக்கியமானவையாக இருந்தன. ஊடகங்கள் பெரு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. எனவே படைப்பு, அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து மார்க்ஸும், ஏங்கெல்ஸும் அதிகம் கவனம்

செலுத்தவில்லை. இருப்பினும் மார்க்ஸ் மூலதனத்தின் முதலாம் பாகத்தில் கலைஞன் அல்லது கலைஞி கூலித் தொழிலாளியாகவோ அல்லது தன் உழைப்பின் வெளிப்பாட்டினை பொருளாக மாற்றக்கூடிய ஒரு வியாபாரியாகவோ இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளதை அரியானா சுட்டிகாட்டுகிறார்.

மார்க்சிய சிந்தனையில் அந்நியமாதல் ஒரு முக்கியமான கருத்தாக்கம். இதனடிப்படையில் அறிவு சார்

சொத்துரிமைகளை புரிந்து கொள்ள முடியும். எப்படி உற்பத்தியான பொருள் மீதான உரிமையினை,

கட்டுப்பாட்டினை ஒரு தொழிலாளி இழந்துவிடுகிறானோ, அது போல் அறிவுசார் சொத்துரிமை

என்ற பெயரில் ஒரு படைப்பாளி தன் உரிமைகளை பிறருக்கு கொடுப்பதன் மூலம் தன் உரிமைகளை

இழந்துவிடுகிறான். மார்க்சிய சிந்தனையில் அறிவு சார் சொத்துரிமை குறித்த விவாதம், விமர்சனம்

குறைவாகவே உள்ளது, குறிப்பாக பண்டமயமாக்கல், உற்பத்தி உறவுகள் போன்றவை குறித்த

விமர்சனங்கள், விவாதங்களுடன் ஒப்பிடுகையில். அறிவு சார் சொத்துரிமைகளை குறித்த த்ததுவார்த்த

ரீதியான விவாதங்களில் லாக்கியின் கருத்துக்கள், ஹெகலின் கருத்துக்கள் மிக முக்கியமானவையாக

கருதப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமை என்பது மன உழைப்பினால் உருவாவது, எனவே அதை

உருவாக்கியவருக்கு உள்ள உரிமையே அறிவுசார் சொத்துரிமை என்று இது நியாயப்படுத்தப்படுகிறது.

புதியனவற்றை சமூகத்திற்கு அளிப்பதற்கான ஒரு ஊக்குவிப்பாகவும், அதனால் சமூகம் பயன் பெறுவதால்

அப்பங்களிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தரப்படும் உரிமை என்றும் அறிவுசார் சொத்துரிமையினை

கருதுவதும் உண்டு. பாரம்பரிய மார்க்சிய சிந்தனையோ இதை இன்னொரு சொத்துரிமை என்ற ரீதியில்

மட்டும் காண்பதால் சொத்துரிமையே இல்லாத சோசலிச சமூகத்தில் இதற்கோ, இதை நியாயப்படுத்தும்

கண்ணோட்டங்களுக்கோ எப்படி இடமிருக்க முடியும். அறிவுசார் சொத்துரிமை குறித்த தத்துவம் குறித்து

எழுதியுள்ள பீட்டர் டிரோகோஸ் தன் நூலில் மார்க்சிய கண்ணோட்டம் குறித்தும், அதன் பலங்கள், பலவீனங்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். #

4

க்யுப அரசு படைப்பளிகளின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களை சர்வதேச சந்தையில் பங்கேற்க அனுமதிக்கும் போது அது சமூகத்தில் ஒரு புதிய வர்க்கம் உருவாக வழி வகுக்கிறது. படைப்பாளி சமூக

கடமைகளிலிருந்து விடுபட்டு தன் உழைப்பின் பயனை தனி நபராக அடைய முடிகிறது. மேலும் அறிவு சார்

சொத்துரிமை என்பது சர்வதேச அளவில் நிலை நாட்டப்பட வேண்டிய உரிமை என்பதால் படைப்பாளி

தன் படைப்பினை வெளியிடுவது குறித்து மட்டுமின்றி, அதை பிறர் முறைகேடாக பயன்படுத்தி லாபம் அடைவதை தடுக்க வேண்டியுமுள்ளது. இதை செய்ய வேண்டுமெனில் வழக்கறிஞர்கள் உட்பட பலரின்

உதவி தேவை. மேலும் மொழிபெயர்ப்புகள், கலை நிகழ்வுகள், இசைத்தட்டு விற்பனை என பலவகைகளில்

வருமானம் பெற முடியுமென்பதால் இது குறித்தும் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவற்றின் விளைவாக க்யுபக் கலைஞர்களும், படைப்பாளிகளும் தவிர்க்க இயலாதபடி முதலாளித்துவ நிறுவனங்களுடன்

தொடர்பு கொள்ள வேண்டியிருப்பதுடன், அவற்றின் சேவைகளை பயன்படுத்துவதும், அவற்றிற்கு தம் படைப்புகளை வழங்குவதும் தவிர்க்க இயலாதவையாயின. உதாரணமாக இசைக்கலைஞர் ஒருவர் தன்

வாத்ய இசையினை நேரில் நிகழ்த்துவதன் மூலமும், அதை ஒலி நாடா, குறுந்ததகடு போன்றவற்றில்

பதிவு செய்வதன் மூலமும் வருவாய் ஈட்ட முடியும். அவர் அதை பிறர் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும்,

விளம்பரங்கள், ஒலிபரப்புகளில் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும் வருவாயீட்ட முடியும். எனவே உபரி மதிப்பு என்பது பிறர் இதை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும் உருவாகிறது.

மேலும் இன்றைய உலகமயமாக்கலில் கலாச்சாரம் என்பது ஒரு முக்கியமான பொருளாதார செயல்பாடும் ஆகும். நுகர்வு என்பது பல்கிப் பெருகும் போது, ஒரு கலைப்பிரதி அல்லது படைப்பு என்பது பல வழிகளில், உலகெங்கும் நுகரப்படுவது சாத்தியமாகிறது. இணையம் ஒரு உலகளாவிய சந்தை உருவாக்கத்திற்கு உதவியாக உள்ளது. இவையெல்லாம் படைப்பாளிக்களுக்கும், கலைஞர்களுக்கும் பொருளீட்ட பல புதிய வாயில்களை திறந்துவிட்டுள்ளன.

ஆனால் இதைப் பயன்படுத்திக் கொள்ள படைப்பளிக்கும் தன் படைப்பின் மீது உரிமை இருப்பது அவசியமாகிறது. அறிவு சார் சொத்துரிமை இதை உறுதி செய்கிறது. இந்த உரிமையினை உறுதி செய்யவும், அதிலிருந்து மிக அதிகமான பயனைப் பெறவும் படைப்பாளி தன் படைப்பின் நுகர்வு, உபயோகம், அது பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அக்கறை காட்ட வேண்டும். எங்காவது அனுமதி பெறாமல் யாராவது

தன் இசையினை பிரதி எடுத்து விற்கிறார்களா அல்லது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க

பல நாடுகளில் உள்ள இதற்கென்று பிரத்யேகமாக செயல்படும் நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. மேலும் இசையினை பயன்படுத்த அனுமதித்தால் அது குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காகவும்,

ராயல்டியினை பெற்றுத்தரவும் வழக்கறிஞர்களையும், ராயல்டினை பெற்றுத்தரும் அமைப்புகளின் உதவினையும்

நாட வேண்டும். மேலும் அறிவுசார் சொத்துரிமைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

உதாரணமாக ஒரு நாவலாசிரியரின் பதிப்புரிமை நாவலாசிரியரின் ஆயுள், அதற்குப்பின் 60 அல்லது 75 ஆண்டுகள் வரைதான். அதே சமயம் நுகர்வுப் போக்குகள் வேகமாக மாறும் போது குறுகிய காலத்திற்குள்

சந்தையில் தேவையும், மதிப்பும் இருக்கும் போதே எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிப்பதே புத்திசாலித்தனம். ஒரு படைப்பின் மூலம் பல வழிகளில் சம்பாதிக்கமுடியும் போது படைப்பு என்பதே

ஒரு மூலதனமாகிறது. அதை திறம்பட பயன்படுத்துவதான் படைப்பாளிக்கு முன் உள்ள சவால். இத்தகைய

நிலையினை க்யுப கலைஞர்கள் எதிர்கொண்ட போது, பலர் திடாரென்று பணக்காரர்களாக மாறினார்கள்.

ராயல்டிகளை வெளிநாட்டில் சம்பாதிக்க முடியும், அதுவும் அந்நிய செலாவணியாக சம்பாதிக்க முடியுமென்பதால் வெளிநாட்டுப்பயணங்களும், உல்லாச வாழ்க்கையும் சாத்தியமாயிற்று. இதற்கு உதாரணமாக கோர்டாவைக் கூறலாம்.

அவர் 1992 அரசுப்பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.பின் ஒரு பிரேசிலிய-க்யுப புகையிலை நிறுவனத்திற்கு

விளம்பர புகைப்பட கலைஞராகப் பணியாற்றினார். கடந்த காலத்தில் காஸ்ட்ரோ உட்பட பலரது புகைப்படங்களை அவர் எடுத்திருந்தார். அவற்றைக் கொண்டும், க்யுபாவில் தான் எடுத்த பிற புகைப்படங்களைக் கொண்டும் உலகெங்கும் புகைப்பட கண்காட்சிகள் நடத்தினார். பல நாடுகளுக்கு

சென்று இக்கண்காட்சிகள் மூலம் பொருளீட்டினார். மேலும் புகழ்பெற்ற அந்தப் புகைப்படம், சேயின் புகைப்படத்தின் பதிப்புரிமை அவரிடம் இருந்ததால் அப்புகைப்படம் அனுமதியின்றி பிரசுரிக்கப்படுவதை

தடுக்க பல நாடுகளில் வழக்கறிஞர்களை நியமித்தார். அவரே ஒரு பேட்டியில் வெகு விரைவில் நான்

ஒரு பலலட்சாதிபதியாகிவிடுவேன் என்றார். இவர் போல் பல கலைஞர்கள் வறுமையிலிருந்து திடாரென்று பெரும் பணக்காரர்களாக மாறினார். சராசரி மாத வருமானம் 223 பெசோக்களாக அதாவது 10 டாலராக இருக்கும் நாட்டில் உச்ச நிலையில் உள்ள இசைக்கலைஞர்கள் வருட வருமானம ஆறு இலக்கத்தில் அதுவும் டாலரில். க்யுப சமூகத்தில் பேராசியர்கள், விஞ்ஞானிகள் நிலை முன்பு போலவே இருந்தது.

5

இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன.1988ல் க்யுப கலாச்சார பொருட்களை அமெரிக்காவில் விநியோகிக்க

இருந்த தடை நீக்கப்ப்ட்டது. இதனால் க்யுப படைப்பளிகளும், கலைஞர்களும் அமெரிக்காவிலிருந்து

ராயல்டி பெறுவது சாத்தியமானது. க்யுப இசைக்கு அமெரிக்க சந்தை முக்கியமான சந்தை.1990 களில்

சர்வதேச அளவில் அறிவுசார் சொத்துரிமையில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன.க்யுப அரசு அறிவுசார்

சொத்துரிமை குறித்த சட்டங்களை வலுப்படுத்தியது. 1997ல் பெர்ன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி படைப்பாளிகள் அந்நியச் செலாவணியில் ராயல்டி சம்பாதிப்பதும், பிற நாட்டு நிறுவனங்களுடன்

கையெழுத்திடுவதும், தனி நபர் உரிமைகளை படைப்பளிகள் பெறுவதும் சாத்தியமானது. மேலும் க்யுப அரசு

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவமளித்தது. இவற்றால் உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் கலாச்சாரப் பொருட்களுக்கான சந்தை விரிவுற்றது. சில அரசு நிறுவனங்களின் பிரச்சாரத் துறைகள் விளம்பர நிறுவனங்களாக உரு மாறின. இவை நிரந்தர் ஊழியர் என்பதற்கு பதிலாக திட்டங்களைப் பொறுத்து

கலைஞர்களை பயன்படுத்திக் கொண்டன.பல கலைஞர்கள் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சுதந்திரமாக செயல்பட முடிந்தது. சர்வ தேச அளவில் அங்கீகாரம் பெறவும், தன் மதிப்பினை உயர்த்தவும் க்யுப அரசு கலைஞர்களுக்கும், படைப்பளிக்கும் பல சலுகைகளை வழங்கியது. இவர்கள்

மூலம் க்யுபா குறித்து வெளிநாடுகளில் நல்லெண்ணம் ஏற்படும் என்றும் அரசு கருதியது. இவர்கள் வெளிநாட்டு கலைஞர்கள், படைப்பாளிகளிம் கூட்டமைப்புகளில் சேர அனுமதித்து. அதே சமயம் உள்நாட்டில் அவர்கள் ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்துவதை அது ஏற்கவில்லை. பல சமயங்களில் க்யுப அரசு அவர்களின் படைப்புகளை இலவசமாக பயன்படுத்திக் கொண்டது. சுதந்திரமாக செயல்படும் கலைஞர்கள் அரசுக்கு வரி செலுத்தினர். பலர் தங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டும், புரட்சிகர கருத்தியலுக்கு தங்கள் ஆதரவு உள்ளது என்பதை வெளிப்படுத்தவும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியினை

நன்கொடையாகக் கொடுத்தனர். அதே சமயம் அரசின் ஊழியர்களாக இருக்கும் கலைஞர்கள் அரசின்

ஊழியர் என்ற நிலையில்தான் இருந்தனர்.

இப்படி அரசுக்கும், படைப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும், சமூகத்திற்கும் இருந்த உறவில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. சோசலிச நாடு முதலாளித்துவ அறிவு சார் சொத்துரிமைகளை அங்கீகரித்ததுடன், ஒரு பிரிவினர் அதை கொண்டு பெரும் பயனடையும் அனுமதித்தது. இதன் விளைவாக க்யுப கலைஞர்கள்

சோசலிச சித்தாந்தத்தின் கருத்தியலை வலுப்படுத்தவும், மக்களின் புரட்சிகர உணர்வுகளை வளர்த்தெடுக்கவும் உதவும் ஊழியர்கள் என்ற நிலையிலிருந்து தங்கள் படைப்புகளின் பயனை பெறும்

உற்பத்தியாளர்களாகவும், தங்கள் படைப்புகளின் பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் உரிமை கொண்டவர்களாகவும் மாறினார்கள். இந்த மாற்றம் ஏற்ப்டத் துவங்கிய போது உலகமயமாதல் ஒரு உத்வேகத்துடன்

கட்டுப்படுத்த முடியாத வியக்தியாக உருவெடுத்திருந்தது. கலாச்சார நுகர்வினை உலகமயமாக்கல் அடுத்த

கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அறிவு சார் சொத்துரிமைகள் மிகப் பெரும்பான்மையான நாடுகளில்

வலுப்பெறத்துவங்கின. இது போன்ற பல காரணிகளால் சேயின் புகைப்படம் குறித்த வழக்கு நடைபெற்ற

போது அது ஒரு பதிப்புரிமை குறித்த வழக்காக இருந்தாலும் க்யுப சமூகத்தில் ஏற்பட்ட ஒரு மாறுதலின்

உதாரணமாக அதை கருத முடியும். உள்நாட்டில் பண்பாட்டுத் துறையில் தன் கட்டுப்பாடுகளை தளர்த்தாத அரசு வேறு சிலவற்றில் தாரளமாகவும், நீக்குப்போக்காகவும் நடந்து கொண்டது.

6

ஒரு புரட்சியாளரின் புகைப்படம் குறித்த உரிமையினை நிலைநாட்ட முதலாளித்துவ உரிமைகள் தேவைப்பட்டன.அதை ஏற்று ஒரு சோசலிச அரசு ஒரு படைப்பாளிக்கு உள்ள தார்மீக மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளுக்கு ஆதரவாக வாதிட்டது. அதே சமயம் இந்தப் புகைப்படத்தினை பயன்படுத்த உதவிய

புகைப்பட நிறுவனம் அப்புகைப்படம் அனைவரும் பயன்படுத்த்க் கூடிய வகையில் பொதுக்களனில் இருந்ததாக கருதினோம் என்று வாதிட்டது. இதில் உள்ள நகைமுரண் எதைக் காட்டுகிறது. உலகமயமாதலின் விளைவாக ஒரு புரட்சியாளரின் புகைப்படம் கூட ஒரு நுகர்வுக் குறியீடாக மாற்றப்படக் கூடுமென்பதனையும்,

அந்த நுகர்வுக் குறியீட்டினை எதிர்க்க சோசலிச அரசு கூட முதலாளித்துவ விழுமியங்களையும், உரிமைச்சட்டங்களையும் பயன்படுத்த வேண்டி வந்தது என்பதனையும்.

நுகர்வு, கலாச்சார உற்பத்தி, அறிவுசார் சொத்துரிமைகள்- இவற்றிற்கிடையே உள்ள உறவு என்பது

சிக்கலானது. எதையும் நுகர்விற்கு உரியதாக மாற்றமுடியும், எதன் மீதும் அறிவு சார் சொத்துரிமை

கொண்டாட முடியுமென்பது போல் தோன்றினாலும் கலாச்சார உற்பத்தியும், நுகர்வும் முரண்படும்

சக்திகள் மோதும் களங்களாக உள்ளன. இதில் சமரசம் ஏற்பட்டாலும் அது எத்தகைய சமரசம்

என்பதை கவனிக்க வேண்டும். வேறொரு கோணத்தில் பார்த்தால் நுகர்வுக்கான சந்தையின் விரிவாக்கம்

படைப்பாளி முன்னெப்போதும் இருந்திராத வகையில் படைப்பினை மூலதனமாக மாற்றவும், அது கொண்டு

லாபம சம்பாதிக்கவும், படைப்பின் பரவலாக நுகர்வினை பல ஊடகங்கள் மூலம் அதிகரிக்கவும் வாய்ப்புகளை

ஏற்படுத்தியுள்ளது. இதை சாத்தியமாக்க படைப்பாளி அறிவுசார் சொத்துரிமைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இது அப்படைப்பாளி சில விழுமியங்களை ஏற்றுக்கொண்டால்தான் சாத்தியம். அப்போது

படைப்பாளி விரும்பியோ விரும்பாமலோ படைப்பாளியாக மட்டுமிராமல படைப்பு மீதான உரிமைகள்

குறித்த நிர்வாகியாகவும் அதற்காக திட்டமிடவும் வேண்டியுள்ளது. அதற்கென நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. இதன் விளைவாக படைப்பாளி நுகர்வுக் கன்ணியின் ஒரு பகுதியாக மாற வேண்டியுள்ளது.

படைப்பு,படைப்பாளி குறித்த நம் வழக்கமான புரிதலையும், பண்பாடு, நுகர்வு குறித்த புரிதல்களையும் உலகமயமாக்கலும், அறிவு சார் சொத்துரிமைகளுக்கும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சேயின் புகைப்படம் குறித்த சர்ச்சை புலப்படுத்துவது இதைத்தான்

குறிப்புகள்

1, இக்கட்டுரைக்கான தகவல்கள் இணையத்திலிருந்தும், Copyrighting Che : Art and Authorship Under Cuban Late Socialism – Ariana Hernandez-Regunat , Public Culture Vol 16 No 1 , 2004

என்ற கட்டுரையிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இக்கட்டுரையாளர் முன் வைத்துள்ள வேறு சில கருத்துக்களை

நான் இங்கு பயன்படுத்த வில்லை. ஏனெனில் அது குறித்து எழுதினால் கட்டுரை இன்னும் நீண்டு விடும்,

மேலும் ஒரு விரிவான அறிமுகமின்றி அவற்றை முன்வைக்க முடியாது.

2, ‘A PHILOSOPHY OF INTELLECTUAL PROPERTY ‘ by Peter Drahos APPLIED LEGAL PHILOSOPHY SERIES, DARTMOUTH, 1996 இது ஒரு முக்கியமான நூல். டிரகோஸ் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து பல கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் ஜான் பிரேய்த்வாததிடுடன் சேர்ந்து எழுதியுள்ள Information Feudalism என்ற நூல் மிக முக்கியமானது.

3, பெர்ன் ஒப்பந்தம் – The Berne Convention for the Protection of Literary and Artistic Works- பதிப்புரிமை குறித்த சர்வதேச ஒப்பந்தம். முதலில் 1886ல் கையெழுத்திடப்பட்டது. பின்னர் மாறுதல்களுக்குட்படுத்தப்பட்டது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு WIPO இதை நிர்வகிக்கிறது.

4,பொதுக்களன் இது பல பொருட்களில் குறிப்பிடப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமைகளைப் பொறுத்த வரை இவ்வுரிமைகள் காலாவதியான அல்லது அவை கட்டுப்படுத்தாதவை உள்ள தொகுப்பு பொதுக்களன் எனலாம். உதாரணமாக பாரதியார் பாடல்கள், ஷேக்ஸ்பியர் படைப்புகளை பயன்படுத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை. இவை பொதுக்களனில் உள்ளன. ஆனால் மனுஷ்ய புத்திரனின் படைப்புகளின் பதிப்புரிமைக் காலம் முடியவில்லை என்பதால அவை பொதுக்களனில் இல்லை. அரசு அதை நாட்டுடமையாக்கினாலோ அல்லது அவர் பதிப்புரிமையினை விட்டுக் கொடுத்தாலோ அவை பொதுக்களனில் வந்துவிடும். புதுமைப்பித்தன் மறைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னரே, 2008ல் அவர் படைப்புகள் பொதுக்களனின் பகுதியாகும். ஆனால் அரசு அதை நாட்டுமடையாக்கியதால் அவை 2008க்கு முன்னரே பொதுக்களனின் பகுதியாகிவிட்டன.

5,தார்மீக உரிமைகள் இவை படைப்பாளி அல்லது படைப்பாளியின் வாரிசுதாரர்கள் அல்லது பிரதிநிதிகளால் நிலை நாட்டக் கூடிய உரிமைகள். ஒரு படைப்பாளி தன் பதிப்புரிமையினை பிறருக்குக் கொடுத்தாலும்

தார்மீக உரிமைகள் படைப்பாளிக்கு உண்டு.படைப்பினை அதன் நோக்கத்திற்கு முரணாக பயன்படுத்தல்,

படைப்பினை படைப்பாளிக்கு எதிராக பயன்படுத்துதல், அதன் ஒருமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில்

பயன்படுத்துதல் போன்றவற்றை தார்மீக உரிமைகளை மீறிய செயல் என்று கருதும்பட்சத்தில் படைப்பளி

நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக படைப்பாளி ஒரு சிற்பத்தினை உருவாக்கி விற்ற பின்னரும்

கூட அச்சிற்பம் சிதைக்கப்பட்டு ஒரு காட்சியகத்தில் வைக்கப்படுமானால் அதை தடுக்க இவ்வுரிமைகளை

பயன்படுத்த முடியும். அது போல் ஒரு பக்திப்பாடலின் வரிகளை அதன் பொருளுக்கு முற்றிலும் மாறாக

வெறொரு பாடலில் அப்பாடல் பாராட்டும் இறைவனை கிண்டல செய்யும் வகையில் பயன்படுத்தினால்

தன் தார்மீக உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்று படைப்பாளி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

பொதுவாக ஐரோப்பாவில் இவ்வுரிமைகளுக்கு பெரும் மதிப்பளிக்கப்படுகிறது, அதே அளவு மதிப்பு அமெரிக்காவில் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.

—-

ravisrinivas@rediffmail.com

Series Navigation