செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

பா. சத்தியமோகன்


ஆன்மீகம் பலதரப்பட்ட நிலை உடையது. ஒவ்வொருவர் அடையும் ஆன்மீக அனுபவமும்

மாபெரும் ஞானவெளிப் பாதையின் பொதுவழியில் முடிகின்ற தன்மை

கொண்டதாயினும் உள்ளத்தளவில் உணர்வளவில் புதிய புதிய இரகசியங்கள்

கொண்டதாகவே என்றும் உள்ளது.

இறைவா நான் செய்யும் தொழிலெல்லாம் நின் தொழிலே காண் என்கிறார்

விநாயகர் நான்மணிமாலையில். அதில் சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்

என்கிறார் தொடர்ந்து. இன்னொரு பாடலில் பாருங்கள் :

“மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்

வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர்பாய்ச்சா விடினும்

வகைவகையாக நெற்கள் புற்கள்மலிந் திருக்குமன்றே ?

உணவு இயற்கை கொடுக்கும்

பூமியிலே உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டார்”

என்று தொழிலை நிராகரிப்பதும் அவர் பாடலே. ஒட்டுமொத்தமாக தொழிலை

நிராகரித்து பூமியிலே வாழ்பவர் யாருமில்லை. இந்த உலகம் செயல் மயம்.

அப்படியிருக்க பாரதி இவ்வாறு கூறுவது முரணாக இல்லையா என்றால் “இல்லை”

தான்.

நான் இந்த புவியிலே பிறந்தேன். தொழில் செய்கிறேன். அதில் நீ நலம்

சேர்க்கிறாய்.சில நாளில் என் உடல் சலிக்கிறது. மனம் சலிக்கிறது.

அப்போது நினைக்கிறார்.

தொழில் ஆற்றுவதைவிட மலர்கின்ற – மலர்ந்து விட்ட பூ – விளைந்த நெல் –

கனிந்த பழக்குலை கண்ணில் படும்போது – ஓ … இவை என்ன தொழில்

செய்யாமலும் வாழ்கின்றதே.. நாமும் இப்படி மலர்ச்சியான ஒரு நிலையை

செயலற்ற பரிபூரண நிலையை அடைய இயலுமா என்று எண்ணுகிறது பாரதியின்

கவியுள்ளம்.

அது எப்படி ?

செயலுமில்லை, ஆனால் செயலில் பூரணம் என்றால் வியப்பு வரத்தான் செய்யும்.

முழுவேகத்தில் இயங்குகின்ற பம்பரத்தின் சுழற்சி இயக்கமற்ற தோற்றத்தைக்

காட்டுகிறது. னால் அது பூரண இயக்கம். தலால்தான் அப்படி ஒரு வரியை

எழுதுகிறார்.

செயல்! செயல் ! தொழில்! தொழில் ! என்று இருபத்துநான்கு மணி நேரமும்

சலித்துக் கொள்ளாதே. அதில் ஒன்றிப் போ. அதிலேயே லயம் காண்க.

அதிலேயே ஓய்வும் கொள்க என்கிற தெளிந்த நாட்டமே பாரதியை அவ்விதம்

எழுதச் செய்தது.

“தனக்குள் விடுதலை ஆகாதவன் விடுதலைக்கு வழி காட்ட முடியாது” என்கிறார்

மகான் அரவிந்தர். அப்படிப்பட்ட கொள்கையிலே பாரதிக்கும் இயல்பிலே

நாட்டம் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்கிற வரியினில் காணும் கருமையை,

-நிந்தன் கருமை நிறம் என்று இறைத்தன்மையை சுட்டி அனுபவித்தார்

பாரதியார். அதாவது அவரது அக விடுதலை- பறவையின் வழியேயான

பார்வையில் -பரம்பொருளுடன் இணைகிறது.

ஆக, பாரதியின் ஆன்மீகம் தனக்குள்ளே மேலும் மேலும் ஆழ்வதோடு மட்டுமின்றி

அதன் அக விடுதலையை பல உயிர் நிலைக்கும் பொருந்துகிற ஒன்று.

வாளைவிட பேனா முனை என்பது கூரானது என்ற புரிதலுடன் இயங்கிய பாரதிக்கு

தன் எழுத்தின் சக்தி புரிந்திருந்தது. “நம் வலக்கையில் மின்னல் தோன்றுக”

என்கிறார் புதுக்கவிதையில் வால்ட் விட்மன் வரையில் பயின்ற பாரதி.

ஏன் வலக்கை ? வலது கை என்பது ஆற்றலின் குறியீடு. அதிக ஆற்றலை விரும்பிய

பாரதி அவ்விதம் கூறியிருக்க வேண்டும். அவர் குரலின் ஓசை மட்டும் கேட்பவர்

அல்ல. ஆன்மாவின் இசையை சுண்ணம் இடிக்கும் பெண்களின் “உக்” ஓசையிலும்

ஏற்றப்பாட்டிலும், ஓடை நீரின் சலசலப்பிலும், பிடாரனின் பாம்பு குழல்

ஓசையிலும் கேட்டவர்.

உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை

உள்ளம் விட்டு ஓரடி நீங்கா இறைவனை

உள்ளமும் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உரு அறியாதே ?

— என்பதாக மும்மல மறைப்பு பகுதியில் திருமூலர் பாடும்

ஏக்கங்களோடு பாரதிக்கும் சம்மதம் உண்டு. ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று

தேடியே என்று துவங்குகிற ஒரு பாடல் இதற்குச் சான்று.

சிறுதெய்வ வணக்கத்தை மறுத்தவர் அல்ல மகாகவி. எதன் பொருட்டு இரு

பிரிவினர் தமக்குள் கடவுளின் பெயரால் மோதிக் கொள்வதைத்தான்

மறுக்கிறார்.

அது மட்டுமல்ல, அவரது நோக்கம் பெண்களை உயர்த்துவதொன்றே. இதோ அவரது

வரியிலே கேட்போம் சிறிது :

“கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற

தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம் உன் தாய், மனைவி, சகோதரி, மகள்

முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும்

பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய், அவளைப்

போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி

வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.

சிவன் நீ; சக்தி உன் மனைவி

விஷ்ணு நீ; லஷ்மி உன் மனைவி

பிரம்மா நீ; சரஸ்வதி உன் மனைவி.”

ஆக ஆன்மிகம் உலகளாவிய விரிவு கொண்டது. தத்தரிகிட

தத்தரிகிட தித்தோம் என்கிற முழக்கத்தில் காணும் அக்னிக் குஞ்சை

ஞானத்தின் மகவாக ஈன்ற ஞானவான் அவர்.

ஜக்கம்மா என்றும் காளி என்றும் சாமுண்டி என்றும் முழங்குகிற பாரதி

“காட்டுவெளியினிலே அம்மா நிந்தன் காவல் உற வேணும்” என்று கேட்டுக்

கொள்கிறபோது காதலுக்கும்கூட காவலாக கடவுள் கொள்கையே உள்ளது என்ற

விரிவைக் கொண்டது புலனாகிறது.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பிரமிக்கிற பாரதியின்

அத்தனை கவிதை வெளிச்சங்களும் எழுத்து லயிப்புகளும் மூலமான ஒரு சக்தியின்

ழ்ந்த லயிப்பாகவும் னந்தக் கூத்தாகவும் சுடர் விட்டிருப்பதை உணரலாம்.

****

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்