சென்னை இலக்கிய நிகழ்வு

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

லதா ராமகிருஷ்ணன்


`வீணை`அதன் பேர் தனம் (எழுதியவர் சோழநாடன்), `மொழியும், நிலமும்` (எழுதியவர் ஜமாலன்), `ஹொஸே மார்த்தி. ஓர் அறிமுகம்` (எழுதியவர் அமரந்தா) ஆகிய மூன்று நூல்களைப் பற்றிய அறிமுகக் கூட்டம் ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தேறியது. நாடக வெளி மற்றும் புதுமலர் பதிப்பகம் ஆகிய இரண்டு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர் விட்டல்ராவ், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், நவீனத் தமிழ் இலக்கிய விமர்ச்சகரும், படைப்பாளியுமான எஸ்.ஷண்முகம், பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்குறிப்பிட்ட நூல்களைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்கள். இசை ஆய்வாளர் நா.மம்மூதின் சோழநாடனின் புத்தகம் பற்றி எழுதியனுப்பியிருந்த கட்டுரையை எழுத்தாளர் ரவி சுப்ரமணியன் வாசித்தார்.

`காலக்குறி` என்ற சிற்றிதழின் ஆசிரியராக இயங்கிய காலத்தில் ஜமாலன் காலக்குறியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு `மொழியும், நிலமும் ‘. இந்தப் புத்தகம் பற்றிய கருத்துக்களை பேராசிரியர் க.பஞ்சாங்கம் மற்றும் எஸ்.சண்முகம் முன் வைத்தனர். வடமொழியிலிருந்து தொல்காப்பியம் பிறந்தது என்ற பார்வை சரியில்லை. அதையும் ஜமாலன் கட்டுடைத்திருக்க வேண்டும் என்று திரு. பஞ்சாங்கம் கூற `மொழியின்` உள்ளார்ந்த மனம் என்கிறர் ஜமாலன். மனம் தான் மொழி என்பது தான் சரி` என பின் நவீனத்துவ அணுகுமுறையில் ஜமாலனின் நூல் குறித்த தனது பார்வைகளை முன் வைத்தார் எஸ். சண்முகம்.

சோழநாடன் என்ற பெயரில் தமிழிசை முதலான பல ஆய்வு நூல்கள் எழுதி வருபவர் தமிழ் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்ட `தாமரைச்லெ¢வி` பதிப்பக உரிமையாளர் திருநாவுக்கரசு தான் என்பதை விட்டல்ராவ் மேடையில் தெரிவித்த போது ஆச்சரியமாக இருந்தது. திரைப்படங்கள் முதலான விஷ்வல் மீடியா சம்பந்தப்பட்ட கனமான விஷயங்களைத் தாங்கி வரும் `நிழல்` மாதப் பத்திரிகையையும் இவர் தான் கொண்டு வருகிறார். `அரசியல் எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே கடந்த ஐந்து வருடங்களாக இசை பற்றியே கவனம் செலுத்திட்டிருந்தேன்` என்று தெரிவித்த சோழநாடன் தமிழிசை குறித்து பேசுகிறோமே தவிர உருப்படியான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. இதற்கு திராவிட அரசுகளும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். விருத்தம் பாடுதல், ராகமாலிகை முதலிய மரபுகள் இன்று வழக்கொழிந்துவிட்டன. ஆதிக்கசாதி எதைக் கைப்பற்றினாலும் மூலத்தை அழித்துவிடுவார்கள். அப்படித்தான் இபபோதைய வீணை உண்மையில் முந்தைய யாழ்தான்- வீணை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டால் யாழ்- என்ற வரலாற்றுண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்றும், தமிழுக்கென்று 2000 வருட ஓவிய மரபு இருக்கிறது என்றும் கூறிய திருநாவுக்கரசு `தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களை மீள் உருவாக்கம்` செய்வதே தனது நோக்கமும். இலக்கும் என்றார்.

`ஹோஸே மார்த்தி` `ஓர் அறிமுகம்` என்ற நூலை எழுதியுள்ள அமரந்த்தா மூன்றாம் உலகப் படைப்புகளை தமிழில் கொண்டு வரும் மொழிப் பெயர்ப்புப் பணியில் தீவிரமாக இயங்கி வருபவர். ஆரம்பத்தில் விசாலாட்சி என்ற தனது இயற்பெயரில் அவர் எழுதிய சில படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றிரண்டு கணையாழி குறுநாவல் திட்டத்தில் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. `எக்ஸில்` இதழில் வெளிவந்த அவருடைய சிறுகதை `சுழல்` குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் க்யூபாவிற்குப் `ஹோஸே மார்த்தியின் 150வது பிறந்த நாள் விழாக் கமிட்டியின் அழைப்பின் பேரில் பயணமாகி வந்திருக்கிறார். அவருடைய இந்த நூல் குறித்து மிக நீண்ட அறிமுக உரையாற்றிய (சமயங்களில் வகுப்பு எடுக்கும் தோணியில்) பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் அமெரிக்காவின் அரசியல் சூழ்ச்சிகளை க்யூபா அரசியலைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டு அந்தக் க்யூபாவின் புரட்சித் தலைவர்களின் ஆசான்`ஹோஸே மார்த்தி` என்றார். எந்த மண்ணின் விடுதலைக்காக மார்த்தி தனது ரத்தத்தை சிந்தினாரோ அந்த மண்ணிற்கே சென்று அவருடைய எழுத்துக்களை நான் முதல் முதலாக வாசித்தேன். வாசித்த உடனேயே `ஹோஸே மார்த்தியை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். `ஹோஸே மார்த்தி` இறந்து 108 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் இன்றைய க்யூபாவின் மக்கள் மனதில் அவர் வாழ்கிறார். வெற்றி பெற்ற க்யூபாப் புரட்சியின் நாயகனாக பிடல் காஸ்ட்ரோவின் உருவில் நடமாடிக் கொண்டிருப்பவர் அந்தப் புரட்சிக்கான அடிப்படைகளை அமைத்து கொடுத்த `ஹோஸே மார்த்தி`யே என்று தனது என்னுரையில் குறிப்பிடுகிறார் அமரந்த்தா. ஏற்புரையிலும் `ஹோஸே மார்த்தி` என்ற ஆளுமை தன்னை கவர்ந்த விதம் குறித்து பேசினார் அவர். நாடக வெளி அமைப்பின் சார்பில் `வெளி ரெங்கராஜன்` கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

தகவல் : லதா ராமகிருஷ்ணன்

—-

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்