சுயசவுக்கடிக் கழைக் கூத்தாடிகள் : நம் தலித்-திராவிட-இடதுசாரி அறிவுஜீவிகள்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

மஞ்சுளா நவநீதன்


தமிழ்நாட்டு கழைக்கூத்தாடி வினோதமானவன். பல கழைக்கூத்தாடிகள் வெறுமே கயிற்றின் மீது நடப்பது, கை ஊன்றாமல் தாண்டுவது போன்றவற்றைச் செய்து காசு வாங்குவார்கள். ஆனால், என்ன இருந்தாலும், தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்கும் கழைக்கூத்தாடிக்கு கிடைப்பது போல காசு வேறு யாருக்கும் கிடைக்காது.

உடம்பெல்லாம் ரத்தவிளாறாக இருக்கும், முதுகைக் காண்பிப்பான். கோடு கோடாக சவுக்கு கீறியிருக்கும். சிலர் கண்களிலிருந்து கண்ணீர் கூட வரவைத்துக்கொள்வார்கள். பெரிய அடியும் மெல்லிய நுனியும் கொண்ட சவுக்கால் விளாறும்போது பளிச்சென்று காற்றில் சவுக்கு சுண்டுவது அவன் உடம்பு மீது சுண்டுவதாக தோன்றும். அவனும் வலியால் தவிப்பான். (அல்லது நடிப்பான்). பார்க்கும் பார்வையாளர்கள் அவனுக்கு கையை நீட்டி காசு போடுவார்கள்.

இந்தியர்களைப் பார்த்தால் இப்படி தன்னைத்தானே அடித்துக்கொள்ளும் கழைக்கூத்தாடி ஞாபகம்தான் வருகிறது.

தன்னைத்தானே அடித்துக்கொள்ளும் ஒரு கழைக்கூத்தாடிக்கு காசு கொடுப்பவர்கள் என்ன மாதிரியான மக்கள் என்பது எனக்கு பலகாலம் புரியாத விஷயம். அது சாதாரண படிப்பறிவற்ற இந்தியர்களிடமிருந்து, மெத்த படித்து ஆங்கில அறிவுடன் தி இந்து, எக்ஸ்பிரஸை காலையில் விரித்துப் படிக்கும் மேல்தட்டு, இதர மேல் மத்திய வர்க்கத்துக்கும் அதே குணம்தான் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது என் ஆச்சரியம் பல மடங்காகிறது.

உதாரணமாக, இந்தியர்கள்தான் தவறு செய்தவர்கள், இந்திய அரசாங்கம் கெட்டது, இந்து மதம் கெட்டது, இந்தியாவை சுக்கு நூறாக உடைக்க வேண்டும், எல்லா இந்தியர்களும் கேவலமானவர்கள் என்று யாரேனும் எழுதினால் ஆமாம் ஆமாம் என்று விழுந்து விழுந்து படிப்பார்கள். (இந்தக் கட்டுரை உட்பட)

இப்படி எழுதுபவர்களில் இரண்டு வகையானவர்கள் உண்டு. ஒரு விதமானவர்கள், இந்தியர்கள் திறந்த வெளிக் கழிப்பிடத்தை உபயோகிப்பவர்கள், கண்ட இடத்தில் எச்சில் துப்புபவர்கள் , மற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்காதவர்கள், சினிமாக்காரனுக்கு ஓட்டுப்போட்டுப் பதவியில் ஏற்றுபவர்கள், என்று அங்கலாய்ப்பவர்கள். இவர்கள் அறிவுஜீவிகள் அல்லர். நடைமுறையில் ஏதும் செய்துவிடக்கூடிய இந்த விஷயம் பற்றி எழுதுவதால் இவர்களை மற்ற அறிவுஜீவிகள் மதிப்பதில்லை. இதெல்லாம் பெரிய விஷயமா, அழுக்காய் இருப்பதும், தண்ணி அடிப்பதும், கண்ட இடத்தில் ஒண்ணுக்குப் போவதும் கலகம் என்றும் சொல்லாடல் நடத்துபவன் தான் ஒரிஜினல் அறிவுஜீவி. இவன் அக்கறைகள் இது மாதிரி சாதாரண பிசாத்து விஷயம் பற்றியெல்லாம் இருக்காது. இந்த அறிவு ?ீவி இரண்டாம் வகையானவன். இவனும் கூடச் சுயசவுக்கடியில் திளைக்கும், தம் எ ?மானர்களை மகிழ்விக்கும் கழைக் கூத்தாடி தான் என்றாலும், இவன் அக்கறைகள் வேறுவிதமானவை. இந்தியாவை ஆளும் வர்க்கம் பற்றியும், அந்த வர்க்கம் எப்படி தரகு முதலாளித்துவம், அல்லது பனியா கும்பல், அல்லது பிராமண மேலாண்மையாளர்கள் (இது பற்றி இன்னமும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை – இந்தச் சவுக்கடிகள் ஒருவருக்கொருவர் சொல்வது எப்படித் தவறு என்று ஆயிரம் பக்க வியா ?ங்கள் எழுதக் கூடியவர்கள் தான் – ), நாடாளுமன்றம் எப்படி பன்றித் தொழுவம் என்பது பற்றியும், பு ?-க்கு வால் பிடிக்கும் இந்திய அரசு சீனாவிற்கு தன் எல்லைப்பரப்பை விட்டுக்கொடுத்து பெருந்தன்மையாய் ஏன் இருப்பதில்லை என்பது பற்றியும், பாகிஸ்தான் பஞ்சாப் பிரசினையை ஏற்படுத்தி இந்திய மக்களைக் கொன்று குவித்தாலும், காஷ்மீர்ப் பிரசினையில் மூக்கை நுழைத்து 70,000 பேருக்குமேல் கொலை செய்யப்படக் காரணமாய் இருந்தாலும் இந்திய அரசு ‘காஷ்மீரி மக்களின் தேசீய சுய நிர்ணய உரிமை ‘யை அங்கீகரித்து பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி காஷ்மீரத்தை பாகிஸ்தானின் சர்வாதிகார அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் எழுதுவான்.

நம் அறிவுஜீவிகளும், நம் ஆங்கிலப்பத்திரிக்கைகளிலும், சிறுபத்திரிக்கைகளிலும் எழுதும் கட்டுரையாளர்களும் இதே வார்ப்பில் வார்க்கப்பட்ட அச்சுகளே. இவர்களைப் படித்து மெய்ம்மறந்து தம்மை முற்போக்காய்க் கருதிகொள்ளும் ஆங்கில-சீன விசுவாசிகளுக்கு இன்னமும் சீனா மக்கள் சீனம். திபெத் ஆக்கிரமிப்பு முற்போக்கு. மாசேதுங் இவர்களின் தலைவர். (சீனர்களே மாவோவை தம் தலைவராய்க் கொள்வதில்லை என்றாலும்.) ஆஃப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது அது சோஷலிஸ்ட் புரட்சி. போல் போட் மக்களைக் கொன்று குவித்தபோது அது வர்க்கப் போராட்டம். ஸ்டாலின் சைபீரியாவிற்கு மக்களை அனுப்பியபோது, அது மக்கள் வளர்த்தெடுப்பு, அல்லது களையெடுப்பு.

உதாரணமாக சில விஷயங்களை எடுத்துக்கொள்வோம். சில வாரங்களுக்கு முன்பு நடந்த விஷயம், மலேசியாவில் இந்திய தொழில்நுட்ப தொழிலாளர்கள் அவமானப்படுத்தப்பட்டது. இதை எந்தப் பத்திரிக்கையாவது கண்டித்தது என்று தேடிப்பாருங்கள். இருக்காது. உண்மை என்ன ? இதுவரை மலேசியாவில் ஆயிரமாவது தடவையாக இந்திய தொழிலாளர்கள் இப்படி அவமானப்படுத்தப்படுகிறார்கள். அதைப் பற்றி எப்போதாவது நீங்கள் இந்திய பத்திரிக்கைகளில் படித்ததுண்டா ? நாம பிச்சைக்காரர்கள் (தி இந்து படிப்பவர்களாக இருந்தால், ‘ பெக்கர்ஸ் ‘) நாமதான் அவனுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போவணும். என்ற பாட்டுத்தான் கேட்கும். நாம் அங்கே போய் இருக்கோமே, காசு சம்பாதிக்க மனித உரிமையெல்லாம் பேசினால் வீட்டுக்குப் போன்னு திருப்பி அனுப்பிடுவான், என்பார்கள்.

சரி நாம இனி பெக்கர்ஸா இருக்கவேண்டாம், நாம முன்னேறிய நாடா ஆவணும் என்று யாரேனும் எழுதியிருப்பார்களா ? இருக்காது. அப்படி எழுதினால் அவன் இந்து வெறியனாக, இந்திய மேலாண்மையை விரும்பும் ஆளாக ஆகிவிடுவான்.

பாகிஸ்தான் நாட்டு விமானங்களுக்கு இந்தியாவில் நுழையத்தடை என்று இந்தியா அறிவித்தது. இதனைக் கண்டித்து யார் எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். சரியான விடை. தி இந்துதான். உடனே அடுத்த வாரமே மஸ்கட் வழியாக பாகிஸ்தான் சென்று, பாகிஸ்தானிய ராணுவ சர்வாதிகாரியை சந்தித்து, சோடா ஜ்ஊஸ் குடித்து, ஒரு பக்கத்து நாட்டுக்கு வருவதற்கு இப்படி தொலைதூரம் கடந்து வந்து பார்க்கும்படி செய்த இந்து வெறி அரசை கண்டித்து பேசி பேட்டி வெளியிட்டது. அதற்கு சில மாதங்களின் பின்னர், இந்தியா அந்தத் தடையை நீக்கிவிட்டது. ஆனால் ஒன்று தெரியுமா ? இந்திய நடவடிக்கைக்கு பதிலாக பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு விதித்த தடையை இன்னும் நீக்கவில்லை. அதனைப் பற்றி தி இந்து கவலைப்பட்டு எந்த பேட்டியோ, கட்டுரையோ வெளியிடவில்லை. அப்படி வெளியிட்டால் அவர்கள் இந்து வெறியர்கள் ஆக ஆகிவிடுவார்களே.

சமீபத்தில், ஏன் சீக்கியர்கள் இந்துக்கள் அல்ல என்ற கட்டுரையை தி இந்துவில் வெளியிட்டது. சீக்கியர்கள் சுதந்திரத்துக்கு சற்று பின்னர் வரைக்கும் இந்துக்குடும்பங்களின் மூத்த ஆண் பிள்ளைகளின் வழிவந்தவர்கள். ஒவ்வொரு இந்துவின் வீட்டிலிருந்தும் முதல் பிள்ளையை சீக்கியனாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள். (ஏன் அவ்வாறு இந்துக்கள் தங்கள் முதல் குழந்தைகளை சீக்கியனாக ஞானஸ்நான பண்ணிக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் நான் இந்து வெறியனாகிவிடுவேன். அதனால் எழுதவில்லை. ) அந்தக் கட்டுரை சொல்வது போலவே, சீக்கிய கோவில்களில் இந்து கடவுள்களின் சிலைகள் இருந்தன. சமீபத்தில்தான் அவை எடுக்கப்பட்டன. ஏன் சீக்கியர்களை இந்துக்கள் இல்லை என்று சொல்லி விலாவாரியாக கட்டுரை வெளியிடவேண்டும் ? இத்தனைக்கும் சீக்கியர்களை இந்துக்கள் என்று எண்ணம் கொண்ட பாஜகவுடன் அகாலிதளம் என்ற சீக்கியக் கட்சியே அரசியல் கூட்டணியில் இருக்கும்போது ? அகாலிதளமே அதனை மறுக்கவில்லை என்னும்போது. (ம்ம்.. அதுவே காரணமாக இருக்கலாம். முடிந்தவரை இந்து மதத்திலிருந்து எல்லோரையும் வெளியேற்றுவதன் காரணம், இந்து மதம் பற்றிய நல்ல அபிப்பிராயம் தி இந்துவுக்கே கிடையாது என்று காரணமாக இருக்கலாம். அல்லது பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்கள் என்ற உணர்வு அதற்கு இருக்கலாம். இன்குலூஸிவ்வாக – எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கி அவர்கள் மீது தம்முடைய ஒற்றைபார்வையைத் திணிக்காமல் பரந்த நோக்கோடு இந்து மதம் இருக்கக்கூடாது, அது எக்ஸ்க்ளூஸிவ் ஆன இஸ்லாம் அல்லது கிரிஸ்தவம் போல – தனித்தன்மையும், தளர்வற்ற கடவுட்கொள்கையும், இறுக்கமான சமூக நிபந்தனைகளும் உடையதாக – ஆகவேண்டும் என்று இவர்கள் கருதலாம். அல்லது அகாலிதள-பா ?க கூட்டணியை உடைத்து, காங்கிரசுக்கு நிரந்தர ஓட்டு வங்கியாக சிறுபான்மையினர் எல்லோரும் இருக்க வேண்டும் என்றும் இருக்கலாம். அல்லது கம்யூனி ?ட் கட்சி உறுப்பினர் கார்டு செய்யும் வேலையாக இருக்கலாம். அல்லது எல்லாமே காரணமாக இருக்கலாம்.)

உதாரணமாக இந்துமதம் பற்றி கட்டுரை தி இந்துவில் வெளிவந்தால் என்னவாக இருக்கும் என்று தி இந்து படிக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது காஞ்சா அய்லய்யா, பிரகாஷ் காரத், அஸ்கார் அலி என்ஜினியர், ஹரிஷ் காரே, கெயில் ஓம்வேத் என்று ஒரு நீண்ட வரிசை வரும். தி இந்துவில் கட்டுரை வரவேண்டும் என்றால் என்ன செய்வது என்று யாராவது கேட்டால் மிக எளிதாக விடை சொல்லிவிடலாம். சீனாவை பாராட்டி, பாகிஸ்தானை பாராட்டி, இந்தியாவை திட்டி, இந்துக்களை பிற்போக்கான வெறியர்களாக காட்டி, இந்துமதத்தை திட்டோதிட்டு, பார்ப்பனியத்தை – அது என்ன என்று யாருக்கும் தெரியாவிட்டாலும் – பாசிஸம் என்று திட்டி ஒரு கட்டுரை எழுதினால் பிரசுரம் நிச்சயம்.

மற்றவர்கள் எப்படி ? சமீபத்தில் ஒரு போட்டோ ஒன்றைப் பார்த்தேன். ராய்ட்டர்ஸ் போட்டோ. இதில் ஒரு போலீஸ்காரர் ஒரு ஆளை அடிக்கிறார். இன்னொரு போலீஸ்காரர் வேடிக்கை பார்க்கிறார். தலைப்பு என்ன ? ‘ஈராக் போர் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு காஷ்மீர மாணவனை ஒரு இந்திய போலீஸ்காரர் அடிக்கிறார். மற்றொரு இந்திய போலீஸ்காரர் வேடிக்கைப் பார்க்கிறார் ‘. அதெப்படி மாணவர் காஷ்மீரியாகவும் போலீஸ்காரர் இந்தியராகவும் ஆனார் என்பது எனக்குத் தெரியவில்லை. காஷ்மீர மாணவனை இந்தியன் என்று சொல்லாத வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் போலீஸ்காரரை காஷ்மீரி என்று சொல்வதில்லை. இந்திய போலீஸ்காரர் என்று சொன்னால்தான் இந்தியா காஷ்மீரை அடக்கி ஆள்கிறது என்று தெரியும் அல்லவா ? இதனை விமர்சிக்க எந்த தி இந்துவும் வராது. சொல்லப்போனால், இந்திய போலீ ? அடக்குமுறை என்று விலாவாரியாக தலையங்கம் எழுதும். சீனாவிலிருந்தோ அல்லது பாகி ?தானிலிருந்தோ எழுதிக்கொடுக்கப்பட்டுவிட்டால், எழுதும் வேலையும் மிச்சமோ என்னவோ. கிண்டல் இல்லை. ஃப்ரண்ட் லைனின் திபெத் கட்டுரைகள் அப்படிப்பட்டவைதான் மேம்போக்காகப் படித்தால் கூட தெரியும்.

இப்படி கழைக்கூத்தாடிகள் தங்களைத்தாங்களே அடித்துக்கொள்வதைப் படிக்க தமிழ்நாட்டில் பெருங்கூட்டம். தி இந்து பத்திரிக்கை அமோகமாக விற்கிறது. இந்த அறிவு விபச்சாரம் போதாதென்று, அறிவுஜீவி சிறுபத்திரிக்கைகளும் இதனையே வாந்தி எடுக்கும். உலகெல்லாம் பார்ப்பன சதியை பார்க்கும் சிறுபத்திரிக்கை சீமான்களுக்கு, அப்போது தி இந்து பத்திரிக்கையை நடத்துவது பார்ப்பனக் குடும்பம் என்பதெல்லாம் தெரியாது. இது சமீபத்தில் பார்ப்பன நிறுவனங்களுக்கு தங்களை முற்போக்கு சீமான்களாக காட்டிக்கொள்ள ஒரு உவப்பான வழியாக மாறியிருக்கிறது. தங்களை பார்ப்பனர்கள் என்று யாரேனும் சொல்லி தங்கள் பிஸினஸை கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று, ‘அதான் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக எழுதி இந்து மதத்தை திட்டிவிட்டேனே. நான் புராகிரசிவ் -ங்கறதுக்கு இதை விட என்ன நிரூபணம் என்ன வேண்டும் ? . ‘ என்று சொல்லிவிடலாம் பாருங்கள். இந்த அறிவுஜீவிகள் இந்து-வில் வரும் கட்டுரைகளை மேற்கோள் காட்டும்போது மட்டும் இந்து பார்ப்பனீயப் பத்திரிகையாய் இருக்காது. ஆனால் வேறு விவகாரங்களில் அது எடுக்கும் நிலை பாடு பார்ப்பனியம் ஆகிவிடும். எது எப்படியானாலும் இந்துவிற்கு , இந்து நடத்தும் குடும்பத்துக்கு லாபம் தானே ?

இந்துக்களை திட்டுவதை விட முக்கியமாக பார்ப்பனர்களையே திட்டவேண்டும். அதற்கு என்ன காரணம் கண்டுபிடித்தாலும் சரிதான். உதாரணமாக சமீபத்தில் வந்த தலையங்க கட்டுரைகளை பார்ப்போம். பேரையூரில் குழந்தைகளை புதைத்து எடுத்து கும்பிட்டார்கள் என்பதை மனித உரிமை மீறலாகவும், ஆபத்தான சடங்காகவும் எழுதி இதனை தடை செய்யவேண்டும் என்று கோரி தலையங்கம் எழுதினார்கள் தி இந்துவில். இதற்கு முன்னோடி கட்டுரை ஜ்ஊனியர் விகடனில் வெளிவந்தது. (விடலை விகடன் என்று தமிழில் பெயர் வைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்). எழுதி வைக்கப்பட்ட பார்முலாக்களைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத பத்திரிக்கையாளர் கூட்டம் நிறைந்தது இந்தியா. உடனே எல்லோரும் பாய்ந்து பாய்ந்து அந்த ஏழை மக்களைத் திட்டித் தீர்த்தார்கள். அந்தப் பெற்றோரைக்காட்டிலும் குழந்தைகள் மேல் அக்கறை இருப்பதாய்க் காண்பித்துக் கொண்டு நாடகமாடினார்கள்.

சமீபத்தில் தி இந்துவில் அந்தச் சடங்கிற்கு ஆதரவு கட்டுரை எம்.எஸ்.எஸ் பாண்டியன் எழுதியிருந்தார். ஆச்சரியம் . இந்துவின் அதிகார பூர்வமான பார்வையை விட்டுவிட்டு குழிமாற்றத் திருவிழாவில் தப்பில்லை. மக்கள் செய்யும் சடங்கை தீங்கு விளையாத வண்ணம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆச்சரியகரமாக எழுதியிருந்தார். தேவலாமே என்று பாராட்ட எண்ணிய நிமிஷம் மீண்டும் அதே பழைய பிராமண எதிர்ப்புச் சாக்கடையில் கலக்கிறது பாண்டியனின் சிந்தனை. அதிலும் பார்ப்பனர்களை வாரித்தூற்றித்தான் எழுதியிருந்தார். இதுதான் சரியான இந்துமதம் என்று பார்ப்பனர்கள் நிச்சயம் செய்துவிட்டு, அந்த கருத்துக்களை மற்ற இந்துக்கள் மீது திணிக்கிறார்கள் என்று இவர் எழுதுகிறார். என்ன விளையாடுகிறாரா பாண்டியன் ? இதைக் கண்டித்தது இந்து பத்திரிகை மற்றும் திராவிட இயக்கத்தினர் தான். பெரியார் இது போன்ற சடங்குகளை மிகக் கீழ்த்தரமாய்த் திட்டியிருக்கிறார். பிராமணர்கள் ஏதும் இது பற்றிச் சொல்லவே இல்லை. 2000 வருடங்களாக பிராமணர்கள் யாரும் மற்ற பிரிவினரின் சடங்குகளை விமர்சித்தது இல்லை. எல்லா வழிகளிலும் இறைவனை அடையலாம் என்ற தாரக மந்திரத்திற்கு ஒப்ப மற்ற பிரிவினரின் சடங்குகளை வழிப்படுத்த அவர்கள் முயலவில்லை என்பது வரலாற்றைப் பயின்ற சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஆனால் நம் சுய சவுக்கடி கழைக்கூத்தாடிகளில் ஒருவரான அறிவுஜீவி பாண்டியனுக்குத் தான் தெரியவில்லை.

இவர்கள் எப்போது இந்துமதம் என்று ஒன்று இருக்கிறது என்று ஒப்புக்கொண்டார்கள் ? ஆச்சரியம்தான். இல்லாத இந்துமதத்தில் எந்த வழியில் சாமி கும்பிட்டால் இவர்களுக்கு என்ன ? அது சரி எப்போது பிராம்மணர்கள் இதுதான் சரியான வழி என்று தங்கள் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணித்தார்கள் ? எந்த வழியில் கும்பிட்டாலும் கடவுளுக்குச் சரிதான் என்பதைத்தானே அவர்கள் பல முறையில் பல்வேறு கோவில்களில் பூசாரிகளாக இருந்து திரும்பித்திரும்பி கூறிவருகிறார்கள். துலுக்க நாச்சியார் கோவிலிருந்து வரும் ரொட்டியையும் வெண்ணையையும் லுங்கியையும் பெருமாளுக்கு சார்த்துபவர்கள் என்ன எம்.எஸ்.எஸ் பாண்டியன் வழி கிரிஸ்தவ நாடார்களா ? உண்மை என்னவென்றால், பெரியார் -கார்ல் மார்க்ஸ் இயற்றிய வேதத்தைக் கையில் வைத்துக்கொண்டு அலையும் அரைகுறை நவீனர்கள்தான் இப்போது தி இந்துவில் உட்கார்ந்து கொண்டு இந்துமதத்தின் கேவலங்களைப் பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்ப்பனர்களாக இருப்பது ஒரு விபத்துதானே ஒழிய வேறில்லை. கிரிஸ்தவ மதம் போன்ற கார்ல் மார்க்ஸ் மதத்துக்கு மாறியவர்கள் செய்யும் அபத்தம்தான் இது. கிறிஸ்தவர்கள் ஆகாதவர்கள் எல்லாம் ரட்சிக்கப் படாதவர்கள் என்பது போல , எல்லாமே பார்ப்பனச் சதி தான் இவர்களுக்கு. இந்து பத்திரிகையினர் முன்னாள் பார்ப்பனர்கள் என்பது இரண்டாம் பட்சம்தான். அதிலும் பார்ப்பனீயத்தைக் கண்டுபிடித்து விட்டால் பாவம் இந்து மதத்திலிருந்து கார்ல்மார்க்ஸ் மதத்துக்கு மாறிவிட்ட பார்ப்பனர்கள் என்ன செய்வார்கள் ? அப்பா அம்மாவை போட்டு உதைக்கலாம். நீ ஏன் என்னை இந்துவாகப் பெத்தாய் என்று திட்டலாம். நான் பிறக்கும்போது இந்துவாய் இருந்தேன் , இறக்கும்போது இந்துவாய் இருக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, எல்லா இந்து மதச் சடங்குகளையும் வீட்டில் பின்பற்றலாம். பெற்ற அப்பாவின் பெயரை மாற்றுகிற அருமந்த பிள்ளை திருமாவளவன் போல் கிடைத்தாலும் நல்லது தான். அப்படி அம்மா அப்பாவைத் திட்டி ஒரு கட்டுரை வந்தாலும், சுய சவுக்கடிக்கு வாசகர் வட்டத்துக்கு மட்டும் குறைவே இருக்காது.

என்னைக் கேட்டால், இன்றைக்கு பிராமணர்களுக்கு 3 சதவீதத்தை தாண்டி மதிப்பு கொடுக்க ஏதும் இல்லை. இதைச் சொல்லிவிட்டால், தெருவுக்குத் தெரு பிராம்மண சதியைப் பார்க்கும் திராவிட விடலைப்பையன்களுக்கும், இப்படிப்பட்ட சுய முக்கியத்துவத்தை வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் பிராமண முடிசூடா மன்னர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் என்னசெய்வது ? அதுதான் உண்மை. தமிழ் சமூகத்தில் பிராமணனின் நிலைமை என்ன ? பிராமணன் என்றால் இன்றைக்கு பாங்கி குமாஸ்தா அல்லது மென்பொருள் தொழில்நுட்ப வேலையாள். என்ன பிரச்னை என்றால் இந்த இரண்டு இடங்களிலும் ஏராளமான தலித்துகள், பிற்பட்டவர்கள் வந்தாயிற்று. எந்தக் கம்பெனியில் நுழைந்தாலும் பிராம்மணர்கள் சிறுபான்மையே. அது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. ஏராளமான கம்பெனிகள் திறக்கப்படும்போது அதற்கு ஆட்களை வெறும் பிராம்மணர்களை மட்டும் வைத்து நிரப்ப முடியுமா ? எல்லோரையும் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஏற்கெனவே உள்ளே வந்து உட்கார்ந்திருக்கும் பிராம்மணர்களின் ஆட்சி கொஞ்ச நாள் ஓடத்தான் செய்யும். ஆனால், நிகழ்காலமும் எதிர்காலமும் அவர்களுடையதல்ல. ஆனால், இந்த உண்மையைச் சொல்லிவிட்டால், சோவியத் யூனியன் என்ற எதிரி இல்லாத அமெரிக்காவுக்குப் பைத்தியம் பிடித்து ஈராக்கை உதைப்பது போல, வழக்கமாக பிராமண வசை பாட்டுப்பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். இதனால் பாண்டியன் போல எல்லாரையும் பார்ப்பனர்களாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

பிராமணர்கள் தமிழ்நாட்டின் பிரிக்க முடியாத அங்கம். அருந்ததியர், முஸ்லீம்கள், கிரிஸ்தவர்கள், தெலுங்கு நாயுடுகளும், கன்னட ராவ்களும், செளராஷ்டிர மக்கள், பள்ளர்கள், பறையர்கள், வன்னியர்கள், சேட்டுகள், ரெட்டியார்கள், தேவர்கள், கள்ளர்கள், கவுண்டர்கள், நாயர்கள், செட்டியார்கள், முதலியார்கள் , ஆச்சாரிகள் போலவே பார்ப்பனர்களும் தமிழ்நாட்டின் ஒரு அங்கம். இவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான். நீ தமிழன் இல்லை, நான் தான் தமிழன் என்று சான்றிதழ் வழங்க யாருக்கும் உரிமை இல்லை. ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக்கூடாது மட்டுமல்ல, யார் மூலத்தை பார்த்தாலும் ‘பெருமைப்பட ‘ விஷயமும் இருக்கும் ‘அவமானப்பட ‘ விஷயமும் இருக்கும். நீ கைபர் போலன் கணவாய் வழியே வந்தவன் என்று 5000- பத்தாயிரம் வருட கதைகளை சொல்பவனின் மூன்று தலைமுறையை நோண்டினாலே, அவனே தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவனாய் இருப்பான்.

உலக மகா அபத்தங்கள் எல்லாம், ஆங்கிலப்பத்திரிக்கை கொடுக்கும் இடத்தின் காரணமாக பிரசுரம் ஆகிவிடுகின்றன. உதாரணம் மணி சங்கர் ஐய்யர் என்ற காங்கிரஸ் ஆளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஆள், போக்ரானின் அணு குண்டு வெடித்ததை இந்து வெறியர்களின் இமாலயத்தவறாக எழுதியிருக்கிறார். ஈரான் ஈராக் போரின் போது ஈராக்கின் நண்பனாக இருந்த அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஈராக் வேதி ஆயுதங்களுக்கும், உயிரியல் ஆயுதங்களுக்கும் தொழில்நுட்பத்தை கொடுத்ததும், குவாய்த்தை எடுக்கவும் அனுமதி கொடுத்ததும், பிறகு ஈராக்கை வில்லனாக ஆக்கி, கொடுத்த அதே ஆயுதங்களை அழிக்காவிட்டால் உன்னை அழிப்பேன் என்று இன்று போர் தொடுப்பதும் இவருக்கு தெரிந்தே பேசுகிறாரா அல்லது உள்நாட்டு கட்சி அரசியலுக்காக இந்திய பாதுகாப்புக்கு வேட்டு வைக்கிறாரா என்பது தெரியவில்லை. போக்ரானில் அணுகுண்டு வெடித்தது இந்து வெறியர்களின் இமாலயத்தவறு என்றால், இந்திரா காந்தி அதே இடத்தில் முன்பு வெடித்ததும் இந்து வெறியர்களின் இமாலயத்தவறா ? உளறலுக்கு ஒரு எல்லை உண்டா காங்கிரஸ் ஆட்களிடம் ? காங்கிரஸ் ஆட்கள் பாஜக ஆட்சியை இந்து வெறியர்களின் ஆட்சி என்று காலையிலிருந்து சாயந்திரம் வரை பிரச்சாரம் செய்வது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. ராஜீவ் காந்தி ஆட்சியில் தான் பாபரி மசூதி பூட்டு உடைக்கப்பட்டது என்பது இவருக்குத் தெரியாதா ?

அடுத்த தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துவிட்டால், அமெரிக்காவிடம் சென்று, இந்து வெறியர்களின் அரசாங்கத்தை அழித்து எனக்கு ஆட்சியைக் கொடு என்று கேட்பார்கள் என்றே எதிர்பார்க்கிறேன். நான் விளையாட்டுக்கோ கிண்டலுக்கோ சொல்லவில்லை. குஜராத் கலவரத்தின் போது குஜராத் காங்கிரஸ் கட்சித்தலைவரும் இன்ன பிற காங்கிரஸ் தலைவர்களும் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு போர்க்குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல் குற்றங்களுக்காகவும் மோடியை உலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பேசினார்கள். அதனை தி இந்து போன்ற ‘அமெரிக்க எதிர்ப்பு, சோவியத்-சீனா-பாகிஸ்தான் ஆதரவு பத்திரிக்கைகள் ‘ கண்டிக்கக்கூட இல்லை. அடுத்த முறை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், இந்தியாவை விடுதலை செய்ய அமெரிக்காவை கோரி தி இந்து தலையங்கம் எழுதினால் கூட ஆச்சரியப்பட மாட்டேன். பாஜக ஆட்சியில் இருக்கும்போது ஒரு பிரச்னை இல்லையென்றாலும் இருக்கவே இருக்கிறது பேரையூர் கோவில் மனித உரிமை மீறல்கள். அதனை வைத்து ஒரு விலாவாரியான தலையங்கம் எழுதி மனித உரிமைகளுக்காக அமெரிக்கா இந்தியாவை விடுதலை செய்யவேண்டும் என்று எழுதிவிடமாட்டார்களா என்ன ? அமெரிக்கா வரமாட்டேன் என்றால், திபெத்தை சீனா விடுதலை செய்தது போல இந்தியாவையும் விடுதலை செய்யவேண்டும் எனக்கோரி சீனாவுக்கு ஓலை எழுதமாட்டார்களா என்ன தி இந்து , பிரண்ட்லைன் பத்திரிக்கையினர் ?

மார்ச் 21ஆம் தேதி தி இந்துவின் தலையங்கத்தைப் பாருங்கள். ஹ்ஊ ஜின்டாவ் என்ற பயங்கரவாதி சீனாவுக்குத் தலைமை ஏற்றதை வெண்ணெய் போல பாராட்டி , அகமும் முகமும் இன்ன பிற உறுப்புகளும் குளிர்ந்து எழுதியிருப்பதை. அதை விட பஞ்ச் லைன் கடைசி வரிதான். சீனாவின் தலைமை உள்ளேயே மாறிக்கொண்டிருந்தாலும் மூன்றாம் உலக நாடுகளில் சீனாவின் தலைமை மாறிவிடக்கூடாது என்று எல்லா மூன்றாம் உலக நாடுகளும் விரும்புகின்றனவாம். இந்துவின் வரிகளை ஆங்கிலத்திலேயே அப்படியே கொடுத்திருக்கிறேன்.

‘But even as China goes about transforming itself internally, the developing world would continue to hope that Beijing will not withdraw from the leading role that it has performed for the past many decades. ‘

இந்த வரிகளை அப்படியே ஆங்கிலத்தில் வழங்கியிருக்கிறேன். தமிழ் மொழிபெயர்ப்பில் நான் தவறு செய்துவிட்டேன் அப்படியெல்லாம் இந்துவில் வெளிவந்திருக்காது என்று யாரும் சொல்லிவிட நேரலாகாது அல்லவா ? இந்து பத்திரிகையின் அதிகாரபூர்வமான நிலைபாடு இது. ஏனென்றால் இது இந்துவில் வெளிவந்த யாரோ ஒருவருடைய கட்டுரை அல்ல. தலையங்கம். மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் அட்டை செய்கிற வேலையாகவும் இருக்கலாம். என்ன திமிர் இந்துவிற்கு ? சீனா அப்படி என்ன தலைமையினை வளரும் நாடுகளுக்கு வழங்கியுள்ளது ? அணுகுண்டு தொழில் நுட்பத்தை பாகிஸ்தானுக்கும் , வடகொரியாவிற்கும் வழங்கிய செயலா ? நக்சல்பாரி இயக்கத்தை ஊக்குவித்து சீனாவில் போதனையும், ஆயுதமும் வழங்கிய செயலா ? மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் மூலம் நேபாளத்தில் மலரும் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவும், இந்திய எதிர்ப்பு முயற்சிகளின் விளை நிலமாகவும் நேபாளத்தை ஆக்கிய செயலா ? மிஜோ, நாகர்களைப் பிரிவினைக்கு ஊக்குவித்து ஆயுதப் பயிற்சி வழங்கிய செயலா ? பத்துலட்சம் முஸ்லீம்கள் கிழக்கு வங்காளத்தில் கொன்று குவிக்கப் பட்டபின்பும், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கிய செயலா ?

என்னய்யா இது ? யாரய்யா அந்த மூன்றாம் உலக நாடுகள் ? போல்பாட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து கோடிக்கணக்கில் கம்போடியர்களைக் கொன்று கம்போடியாவை நாசம் செய்த சீனா என்பதை மூன்றாம் உலக நாடுகள் மறந்துவிட்டனவா ? கம்போடியாவுக்கு சீன சர்வாதிகாரி வந்தபோது கம்போடிய மக்கள் கறுப்புக்கொடி காட்டி போராடினார்கள். ஒருவேளை தி இந்துவின் பத்திரிக்கையாளர்கள் கறுப்புக்கொடியை ஆதரவுக்கொடி என்று அப்போது பார்த்தார்களோ என்னவோ ?

யார் இந்த ஹ்ஊ ஜின்டாவ் என்று திபேத்தியர்கள் சொல்வார்கள். இவனுடைய திபெத் ஆட்சியின் போதுதான் மிகக்கொடிய அடக்குமுறை திபெத்தில் தலைவிரித்து ஆடியது. உயிருக்கு பயந்து கொண்டு இந்த ஆள் திபெத்துக்கே வருவதில்லை. இவன் ஆட்சி செய்தபோது கூட திபெத்தை எட்டிப் பார்த்ததில்லை. ஹன் சீன ராணுவத்தை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று திபெத்தில் சுதந்திரமாக விட்ட ஆள் இவன். அப்படி ‘அமைதியை ‘ திபெத்தில் நிலைநாட்டியதற்கான பரிசாகத்தான் இன்று சீனாவின் தலைமை பதவி இவனுக்கு வந்திருக்கிறது. திபெத்தின் ‘அமைதி ‘ இன்று சீனா எங்கும் பரவும். இந்த சுடுகாட்டு அமைதிக்கு வெண்ணெய் அடிக்க சென்னை (மன்னிக்கவும் மெட்ராஸ்) யிலிருந்து ஒரு கும்பல். இந்த சீனக் கம்யூனிஸ மாநாடு சமயத்தில் ஏதும் பெரும் பிரச்னை வந்துவிடக்கூடாது என்று நவம்பரிலேயே கண்டுபிடிக்கப்பட்ட சார்ஸ் வைரஸை மூடி மறைத்துவிட்டது தொழிலாளர்களின் சொர்க்கப்பூமியான, மவுண்ட்ரோடு தி இந்துவின் தீர்த்தஸ்தலமான சீனா. எவன் கேட்கப்போகிறான் ? அப்போதே சார்ஸ் பற்றிய விபரம் வெளிவந்திருந்தால் இது இவ்வளவு தூரம் பரவியிருக்காது. உலகு தழுவிய பிரசினையாய் உருவாகியிருக்காது. (சதாம் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் விடவும் அட்டகாசமாகத்தான் ஜிண்டாவின் தேர்வும் நடந்தது. )

சீனாவிலேயே கம்யூனிசம் செத்தொழிந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயர் கொண்ட கட்சி முதலாளித்துவம் பாவித்தாலும் கம்யூனிஸ்ட் என்ற பெயருக்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்திருக்கிறதா இந்து ?

முஸ்லீம்களையும் கிரிஸ்தவர்களையும் தலித்துகளையும் இந்திய அரசு கொன்று குவிப்பதாக ஒரு பிரச்சாரமும் நடந்து கொண்டிருக்கிறது. முஸ்லீம் தீவிரவாதிகளால் இந்துக்கள் கொலையுண்டாலோ, கஷ்டப்பட்டு அந்த இடத்துக்குக் காவடி எடுத்து யாரேனும் ஒருவர் கொன்றது இந்திய ராணுவம்தான் என்று சொல்லும்வரைக்கும் நோண்டி, பிரமாதமான ஒரு அறிக்கையை வெளியிடுவது. (அதுவும் இங்கிலாந்திலோ அல்லது வாஷிங்டன் அல்லது நியூயார்க்கிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகளில்- பெயர் ரமாலட்சுமி அல்லது அனிதா பிரதாப் அல்லது பங்கஜ் மிஷ்ரா என்று இருக்கும்.) அதே பத்திரிக்கையின் வேறொரு ஆள் வந்து நம் ஊர்க்காரர்கள் போலில்லாமல் உண்மையை அறிந்து, கொலை செய்த ஆளையே சிறையில் பேட்டி கண்டு வெளியிட்டால் இவ்வாறு எழுதி பிரசுரித்த நம் இந்திய அறிவுஜீவிகள் அதனை கண்டுகொள்ளவே மாட்டார்கள். சாட்டிசிங்புரா கொலையை செய்த ஆட்களில் ஒருவனையே நியூயார்க்டைம்ஸ் இதழில் பேட்டி கண்டு பிரசுரம் ஆனது 1 வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் சென்றவாரம் கூட நம் அறிவுஜீவிகள் கொலையைச் செய்தது இந்திய ராணுவம்தான் என்று பேசிவருகிறார்கள். என்ன செய்வது ?

இதே கும்பலின் இன்னொரு பரிணாமம், இந்திய ஜனநாயகத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் முஸ்லீம்களையும், கிரிஸ்தவர்களையும், தலித்துகளையும் ‘விலை போய்விட்டார்கள் ‘ என்று தூர்த்துவது. (இப்படி தூர்த்தும் ஆட்கள் எல்லோரும் அரசாங்கத்தின் பணஉதவியில் நடக்கும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் என்பது வேறொரு விஷயம்). ‘போர்க்குணமிக்க ‘ ‘இன உணர்வு கொண்ட ‘, ‘இனமானம் ‘ போன்ற வார்த்தைகள் சர்வசாதாரணமாக இவர்களது அகராதியில் இருக்கும். இந்த வார்த்தைகளில் இருக்கும் இனவாதம் இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிடமுடியுமா ? நிச்சயம் தெரியும். பிரச்னைகள் இல்லாத சமூகம் எது ? பிரச்னைகள் இல்லாத ஊர் எது ? பிரச்னைகள் இல்லாத குடும்பம்தான் எது ? ‘போர்க்குணத்தோடு ‘ ஒவ்வொரு பிரச்னையையும் அணுகிக்கொண்டிருந்தால் ரத்த ஆறல்லவா ஓடும் ? பிரச்னைகளை சுமுகமாக தீர்ப்பதற்கு பேச்சு சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பெற்றிருக்கும்போது ஏன் இவர்கள் கூறும் ‘போர்க்குணம் ‘ தேவை ? பிரச்னை என்னவென்றால், இவர்களுக்கே பேச்சு சுதந்திரம் என்றால் என்னவென்றும் தெரியவில்லை. ஜனநாயகம் என்றால் என்னவென்றும் தெரியவில்லை. இதன் விளைவே குடும்ப ஆட்சிக்கும், காரிஸ்மா அரசியலுக்கும் வெண்ணெய் அடிக்கும் இன்னொரு வகை அறிவுஜீவிக்கும்பல் உருவாகியிருக்கிறது. ஜனநாயகம் பரவுவதற்கும், பேச்சு சுதந்திரம் பரவுவதற்கும், கல்வியறிவு பரவுவதற்கும் துணையிருக்கவேண்டிய அறிவுஜீவிகள் அந்த அடிவேரையே வெட்டுவதற்கல்லவா கோடாலியை உயர்த்தியிருக்கிறார்கள் ? தலித்துகள் இந்தியாவில் கஷ்டப்படுகிறார்களா ? நிச்சயம் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இந்திய ஜனநாயகத்தில் கலந்து கொள்ளாமல் வெளியே நின்றால் எப்படி அவர்களது கஷ்டம் குறையும் ? அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் அவர்கள் நிற்க கிராமத்து தேவர்கள் அனுமதிப்பதில்லை. அப்படியாயின் என்ன செய்யவேண்டும் அரசு ? அரசு தன் படையோடு சென்று சட்டத்தை நிலைநிறுத்தவல்லவா இந்த அறிவுஜீவிகள் தூண்டவேண்டும் ? அதே போல, தலித்துகள் கிராம பஞ்சாயத்து தலைவர்களாக இருப்பதையும் அவர்கள் கிராமத்துக்கு ஜாதி கடந்து நல்லது செய்துகொண்டிருப்பதையும் அல்லவா பிரபலப்படுத்த வேண்டும் ? அதுவல்லவா மற்ற ஜாதிகளிடம் இருக்கும் ஜாதிவெறி உணர்வை குறைக்கும் ?

சுயசவுக்கடி கழைக்கூத்தாடிகள் உலா வரும் நேரம் பெரும் வேடிக்கை தான். ஆனால் அது வெறும் வேடிக்கையாய் நிற்பதில்லை என்பது தான் பிரசினையே. இந்திய அறிவு ஊற்றில், இந்தியப் பொது வாழ்வில் இது போன்ற ஒரு இந்திய எதிர்ப்பு விஷத்தை மெல்ல மெல்லப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்த சுய சவுக்கடிகள் . காலனியாதிக்கம் ஏற்படுத்திய உளவியல் பாதிப்புகளையும் மீறிய உளவியல் பாதிப்பை மக்களிடையே ஏற்படுத்தவல்ல ஒரு போக்கு இது. தம்முடைய நாட்டையும் , மக்களையும், நிறுவனங்களையும் பற்றிய நியாயமான பெருமித உணர்வை மழுங்கடிக்கச் செய்து அதற்குப் பதிலாக , ஒரு பிளவுண்ட நாடு என்பது போன்ற தோற்றத்தை மதம், சாதி, மொழி, இனம் இவற்றினால் உருவாக்கும் முயற்சி இது. உண்மையான வகுப்புவாதிகள் இந்த சவுக்கடிகளேயாம். அபிரகாம் லிங்கன் சொன்னார் : ‘A nation divided against itself can not stand ‘ இப்படிப்பட்ட ஒரு பிளவுபடுத்தலை முற்போக்கு என்ற போர்வை போர்த்திக் கொண்டு இவர்கள் செய்கிறார்கள்.

இன்னும் சற்று யோசித்தால் ஏன் இப்படிப்பட்ட முற்போக்குகள் உலவுகிறார்கள் என்பதன் காரணமும் வெளிப்படையாகவே தெரியும். கார்ல் மார்க்சும் அதற்கு முந்தி திருவள்ளுவரும் சொல்லிவிட்டுச் செல்லவில்லையா என்ன ? பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று. எல்லாவற்றுக்கும் அடிப்படை பொருளாதாரம்தான் என்றும், மழை பெய்யவில்லை என்றால் கடவுளுக்கே பூசை கிடையாது அம்பி என்று சொல்லிவிட்டுச் செல்லவில்லையா ? எல்லாம் காசுதான். முன்பு சோவியத் யூனியனிலிருந்து இப்படிப்பட்ட ஆட்களுக்கு பணம் வந்து கொண்டிருந்தது. அதற்கு போட்டியாக போர்டு பவுண்டேஷன், கொலம்பியா பல்கலைக்கழகம் இன்ன இதர அமெரிக்க பல்கலைக்கழகங்கள், தவிர தன்னார்வக் குழுக்கள் என்ற என்ஜிவோ குழுக்களுக்கு வரும் பணம் ஆகியவை தான் காரணம் என்றால் மிகையில்லை.

இவர்கள் அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் இவர்கள் பிரதிபலிப்பது அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் வித்திடப் பட்ட கருத்தாக்கங்கள் தாம். மார்க்ஸியம் ‘கம்யூனிஸ்ட் அகிலம் ‘, ‘உலக பாட்டாளிகள் ஒற்றுமை ‘ என்ற கோஷத்தை கொண்டு வந்தபோது, அதனை திரித்து, ‘தேசங்களின் சுயநிர்ணய உரிமை ‘ என்ற கோஷத்தை ஸ்டாலினிஸம் தோற்றுவித்தது. அது அன்றைய காலனியாதிக்கத்துக்கு எதிராக இருந்த அடிமையான மக்களை கம்யூனிஸத்தின் கீழ் கொண்டுவர எழுப்பப்ப்ட்ட கோஷம். ஜனநாயக அமைப்பில் இருக்கும் மக்களையும் அதில் ஊறிவிடாமல் இருக்க இன ரீதியில் கம்யூனிஸத்தின் கீழ் கொண்டுவர உருவாக்கப்பட்ட கோஷம். இந்த பிரச்சாரம் வெற்றிபெற்றது என்பதை, இதற்கு, ஏற்கெனவே முழு ஜனநாயகம் கொண்ட, மக்கள் பிரதிநிதித்துவம் உடைய இந்தியாவில் இதற்கு நம் அறிவுஜீவிகளிடம் இருக்கும் மதிப்பை பார்த்தாலே தெரியும். காலனியாதிக்கம் இருந்தபோது இது சரியாக இருக்கலாம். அதுவும் கூட அந்த தேசிய இனங்களை ஜனநாயகம் நோக்கி செலுத்துவதற்கு பயன்பட்டால் சிறப்பு அடைந்து இருக்கும். ஸ்டாலினிஸத்தின் நோக்கம் அதுவல்ல. இன்று இந்தியாவில் இதனை பேச என்ன முகாந்திரம் ? அடிப்படை இல்லையென்றாலும் அதனை பார்ப்பன, பனியா, குட்டி முதலாளித்துவம், இன்னபிற யாருக்கும் புரிபடாத வார்த்தைகள் போட்டு பேச ஒரு கும்பலே அலைந்து கொண்டிருக்கிறது. சோவியத் இறந்ததும், இம்பீரியலிஸம் போய்விடுமா என்ன ? ஐரோப்பிய அமெரிக்க பிரச்சாரங்களுக்கு அதே ஆட்கள் வரிசையாக. காலனியாதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை பெற்ற மக்களை , பழைய பிரித்தாளும் முயற்சியின் தொடர்ச்சியாய் இனவாத தேசியம் என்ற பெயரில் பிரித்தாள்வதே அமெரிக்க- ஐரோப்பிய அரசுகளின் நோக்கம். இந்த மொழிவாத இனவாத மதவாத தேசிய இயக்கங்களுக்கு ஆயுத சப்ளையும் இவர்களே. இப்படிப்பட்ட இயக்கங்கள் வெற்றி பெற்றால் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப் படும். சர்வாதிகாரிகள் உருவாகிவிடுவார்கள். சர்வாதிகாரிகளைச் சமாளிப்பது மேல் நாடுகளுக்குச் சுலபம். இதனால் தான் ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தைக் காட்டிலும் இனவாத, மொழிவாத, மதவாத தேசியம் என்ற கருத்தாக்கம். அதனைத் தொடர்ந்த முன்குடிகள் என்ற பெயரில் Ethnic studies என்றும் இவர்கள் தோற்றுவிக்கும் ஃபவுண்டேஷன்கள் காசு கொடுக்கத் தயாராய் இருக்கின்றன. இதற்குத் துணை போகிறவர்கள் தான் இவர்கள். அதாவது ஜனநாயக தேசியம் என்ற உளறாட்டு ஜனநாயக அமைப்பு எனக்கு- இனவாத தேசியம் உனக்கு என்ற பிளவு படுத்தல் .

இந்த இந்து எதிர்ப்பு கருத்தியல், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ஏற்பட்டிருக்குமாயின் அதற்கு ஒரு நியாயம் இருந்திருக்கலாம். ஆனால், மதச்சார்பற்ற சோசலிஸத்தில் நம்பிக்கை கொண்ட நேருவின் காலம் தொடங்கியே நேருவைக்கூட பிராம்மணர் தரகு முதலாளி என்று அடையாளப்படுத்தி ஆரம்பித்த பிளவுவாதம் இது.

இந்த மாதிரி அமைப்புக்களில் சேர மெத்தப் படித்திருக்க வேண்டும். மெத்தப் படித்திருப்பதன் பக்க விளைவு, தான் செய்வதுதான் சரி என்று நிலைநிறுத்தும்படிக்கு வாதம் செய்யவும் தெரிந்திருக்கவேண்டுமல்லவா ? 50 வருடங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் பணம் இப்படிப்பட்ட இந்திய அரசு எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என்று அறிவுஜீவி மயமாகிக் கிடக்கிறது.

உதாரணமாக, தேசிய சுய நிர்ணய உரிமை சமாச்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஜெர்மனியும் சேர்ந்து ஒரே ஜெர்மனியாக ஆயின. அமெரிக்காவில் 50 மாநிலங்கள் இருக்கின்றன. டெக்ஸாஸ் மாநிலத்தில் தனி டெக்ஸாஸ் நாடு கேட்கும் கிறுக்கர்கள்கூட இருக்கிறார்கள். ஆனால் எங்காவது ஜெர்மனி ஒரே நாடா என்ற கேள்வியையோ, அல்லது அமெரிக்கா ஒரே நாடா என்ற கேள்வியையோ அறிவுஜீவிகள் கேட்டிருப்பார்களா ? இருக்கவே இருக்காது. ஆசியாவின் (அதுவும் முக்கியமாக இந்தியாவின்) அரைவேக்காட்டு அறிவுஜீவிகள் மட்டுமே கேட்கவேண்டும் என்று அமெரிக்காவும், ஐரோப்பாவும், ரஷ்யாவும் கொடுக்கும் காசு நிர்ணயிக்கிறது. (அல்லது அப்படி கேட்கும் ஆட்களுக்கு மட்டுமே காசு கொடுக்கப்படும்.)

அமெரிக்காவும் ரஷ்யாவும் மனவியல் போருக்காக பெரும் அளவு செலவு செய்கின்றன. அமெரிக்காவின் ஆயுதங்கள், அமெரிக்க கலாச்சாரம், அமெரிக்க மதம், அமெரிக்க வாழ்முறை ஆகியவைகளின் புகழை பரப்புவதும், மற்ற கலாச்சாரங்கள் காட்டுமிராண்டி கலாச்சாரங்கள் என்ற பிரச்சாரத்தை செய்வதும் திட்டமிட்டு நடக்கும் போர் முறைகள். இதன் வெளிப்படையான பிரயோகத்தை சென்ற ஈராக் போர்களில் பார்த்திருக்கலாம். மனவியல் போர் என்பது இன்று மிக முக்கியமான போர். அந்த எதேச்சதிகாரங்களின் இம்ப்பீரியல் அமைப்புகளின் காலாட்படையே இந்திய அறிவுஜீவிவர்க்கம்.

சோவியத் யூனியன் வெளிப்படையாக தமிழிலிருந்து எல்லா இந்திய மொழிகளிலும் சோவியத் யூனியனில் பூத்துக் குலுங்குகிறது, சோவியத் மக்கள் எப்போதுமே கரம் கோர்த்துக்கொண்டு ஆடிப்பாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது போல பத்திரிக்கைகளை நடத்தி சல்லிசு விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள் இவைகளைப் படித்துவிட்டு கனவு கண்டிருப்பார்கள். (ஒரு சிலர் சோவியத் யூனியன் உடைந்ததும் இரண்டுமாதம் வெளியே கூட வரவில்லை. என்ன செய்வது ? ஒரு யுகக்கனவு உடைந்த சோகம்)

இந்த பிரச்சாரத்துக்கு எதிரியாக அமெரிக்காவும் இறங்கியது.ஆனால் அமெரிக்காவின் வழிமுறைகள் நுணுக்கமானவை. உதாரணமாக, இந்தியாவில் ‘என்கவுண்டர் ‘ என்ற ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை இது போன்ற ஒரு அறிவுஜீவிப் பத்திரிக்கையாக கம்யூனிஸத்தை எதிர்த்து வரமுயன்றது. (அமெரிக்காவின் வேலை அவ்வளவு வெளிப்படை இல்லை. இதனை நடத்தும் ஆசிரியருக்கே வெகு நாட்களுக்குப்பிறகுதான் என்கவுண்டர் நடத்தப் பணம் கொடுத்தது சி.ஐ.ஏ என்பது தெரிந்தது). ஆனால் இன்று அமெரிக்கா இப்படி மறைமுகமாகவெல்லாம் இருப்பதில்லை. எம்டிவியிலிருந்து, சி.என்.என்லிருந்து, நியூஸ் கார்ப்பிலிருந்து, நேஷனல் ஜியாகிரபிக் வரை அதன் பிரச்சார வீச்சு மிகவும் வெளிப்படையானது. அனைத்து உலக மொழிகளிலும் பிபிஸி தன் செய்திஅறிக்கைகளை வாசிப்பதற்குக் காரணம் இது போன்றதொரு பிரச்சாரம்தான். அதனால் இப்படிப்பட்ட மேற்குலக செய்தி நிறுவனங்களில் இருக்கும் இந்தியர்களிடம் மிகவும் வெளிப்படையாகவே இந்திய எதிர்ப்பு இருப்பதை எளிதில் காணலாம்.

சைக்கோ வார்ஃபேர் என்ற மனவியல் போர் விஷயம் பெண்டகனில் உருவானது. வெறும் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை. இதில் பொழுதுபோக்கு மோனோபாலியை உருவாக்குவதும் இதன் ஒரு அங்கம். அமெரிக்கா உருவாக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே உலகமெங்கும் பார்க்க வேண்டும் என்பதன் உள்நோக்கம், அமெரிக்க உருவாக்கும் திரைப்படங்களிலும் அதன் பொழுது போக்கு நிகழ்ச்சிகளிலும் இருக்கும் அமெரிக்க மேலாண்மைக்கான பிரச்சாரம். சமீபத்தில் வந்த ட்ரூ லைஸ் என்ற ஆர்னால்ட் ஷ்ரவாக்னகர் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் விமானங்கள், ராணுவ அமைப்புகள் அனைத்தும் இலவசமாக அமெரிக்க ராணுவத்தால் கொடுக்கப்பட்டவை. அத்தோடு கூட அமெரிக்க ராணுவத்தை எப்படி உலகமகா ராணுவமாகக் காட்டவேண்டும், அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் ஒரு சாதாரண வீரன் எப்படி முட்டாள்த்தனமான ரஷ்ய, இஸ்லாமிய, கொரிய போர்வீரர்களை கொன்று குவிக்கிறான் என்ற பிரச்சாரம் எல்லாமே ராணுவத்தின் ஆலோசனைதான். ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறது அமெரிக்க ராணுவமும் பிரிட்டிஷ் ராணுவமும். சமீபத்தில் ஈராக் போர்ப்படைத்தளபதிகளுக்கு மின்னஞ்சல் மீது மின்னஞ்சல். ‘உன் படையை வீட்டுக்கு அனுப்பு. என் ராணுவத்தை நீ சமாளிக்க முடியாது. அதுதான் ட்ரூ லைஸ் படத்தில் பார்த்திருப்பாயே. நீ எந்த வீட்டில் இருக்கிறாய் என்று கூட எனக்குத் தெரியும். பேசாமல் ஆயுதத்தை விட்டுவிட்டு வைப்பாட்டி வீட்டுக்குப்போ. உனக்கு இவ்வளவு பணம் தருகிறேன்… இத்யாதி.. ‘

இந்த இம்பீரியல் அரசுகளின் மனவியல் போருக்கு நம் அறிவுஜீவி கும்பல் காலாட்படை என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது ? உதாரணமாக நம் அறிவுஜீவி ஆட்கள் வெளிநாட்டுப் பத்திரிக்கைகளில் எழுதும் செய்திகளைப் பாருங்கள் தெரியும். ‘இன்று இந்தியா ராக்கெட் விட்டது. ‘ கூடவே ‘இந்தியாவில் அடுத்த வேளை சாப்பாடு இல்லாமல் 30 கோடி இருக்கிறது.சரியான சுகாதார வசதி கிடையாது. பலர் தெருக்களில் படுத்து தூங்குகிறார்கள். ஜாதி வெறி தலைவிரித்தாடுகிறது இத்யாதி.. ‘ அமெரிக்கா ராக்கெட் விட்டால் இப்படியா செய்தி எழுதுகிறார்கள் ? ‘அமெரிக்கா ராக்கெட் விட்டது. நியூயார்க்கில் பலர் தெருக்களில் படுத்துத் தூங்குகிறார்கள். அமெரிக்காவில் வேலையில்லாத்திண்டாட்டம் 9 சதவீதம். சிக்காகோவில் குற்றங்களின் எண்ணிக்கை வானத்தைத் தொட்டுவிட்டது. அமெரிக்காவில் மூன்றில் இரண்டுபேர் சரியான மருத்துவ பாதுகாப்பு இல்லாதவர்கள். கறுப்பு ஆண்களில் மூன்றில் இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் ‘ என்றல்லவா இவர்கள் செய்தி எழுத வேண்டும் ? ஊகும், உங்களால் இந்த வரிகளைப் பார்க்கவே முடியாது. அத்தனையும் ஆனால் உண்மை. இவ்வாறு அமெரிக்கா என்றால் பூத்துக்குலுங்குகிறது என்பது போலவும் இந்தியா சாதனை செய்தாலும் தவறு செய்கிறது என்பது போலவும் செய்தி எழுத வேண்டிய அவசியமென்ன ? இந்தியாவைப் பற்றி எப்போது எழுதினாலும் கேவலமாக எழுதவேண்டிய அவசியமென்ன ? இது ஒரு மனவியல் போர், சைக்கோ வார்பேர் என்று புரிந்து கொள்ளமுடியாதா என்ன ?

இந்தியாவில் பிரசினைகள் இல்லாமலில்லை. ஆனால் ஜனநாயகம் என்ற பெரும் பலம் நம்மிடையே இருக்கிறது. மக்கள் சக்தியைத் திரட்ட ஒரு பெரும் ஆயுதத்தை நம் ஜனநாயகமும், சகலருக்கும் வாக்குரிமை என்ற உன்னதமான உரிமையையும் வழங்கியிருக்கிறது. தவறுகளைச் சரிசெய்து கொள்ளக் கூடிய ஒரு திறந்த வாய்ப்பை திரண்ட ஜன சமூகத்திற்கு இந்தியா வழங்கியுள்ளது. இதன் சாத்தியங்களைப் பற்றி நேர்மறையாய் எழுதி மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்ப முடியாதவர்கள் பிளவு படுத்தும் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். சுயசவுக்கடியின் வீச்சுக் குரல் இதைத்தான் சொல்கிறது.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்