சிவமடம்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

விசாலம் ராமன்


ஆதவன் இளம் சிவப்பை அள்ளித் தெளித்து மறைந்து கொண்டிருந்தான். அந்தக் காட்சியை நான் ரசித்து கொண்டிருந்தேன். “வவ் …வவ்.. என்ற இனிமையான சத்தம் என் காதில் விழுந்தது. நான் பால்கனியிலிருந்து இறங்கி கீழே வந்து அந்த திசையில் பார்த்தேன்..ஆம் ..அது நான் கட்டியிருக்கும் சிவமடத்திலிருந்து வந்தது..ஒரு பெரிய வேப்பமரம் நிழலை அள்ளிக் கொடுத்தது. அதற்கு கீழ் ஒரு மேடை..அந்த மேடைக்கீழ் நான்கு அருமையான நாய்க்குட்டிகள் தங்கள் தாயிடம் பாலைக் குடித்துக் கொண்டிருந்தன. தாய் நாய் மிகவும் ஆசையாக் தன்னுடைய நாக்கால் நக்கிக் கொடுத்து தன் பாசத்தைக் காட்டியது. இந்தக் காட்சியைப் பார்த்து வியந்தேன். தாயின் பாசம் என்றாலே தனிதான். அதில் ஒரு நாய் என்னை மிக கவர்ந்தது. கருப்பும், வெள்ளையும் கலந்தது அதன் உடல். நெற்றியில் நாமம் போல் கருப்பு வண்ணம்.. அதை அள்ளி எடுக்கத் துடித்தது மனது. மெள்ள ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து வந்தேன். எனக்கு பிடித்த ஹீரோவிற்கு பாலைக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா நாய் குழ்ந்தைகளைக் கொஞ்சியபின் சற்று வெளியே போயிற்று. நான் என் மனம் கவர்ந்த ஹீரோவைத் தூக்கி அணைத்து பாலைக் கொடுத்தேன். அது தன் பிஞ்சு நாக்கால் நக்கி, நக்கி ஒரு இன்பமான சத்தத்தை எழுப்பி நடுநடுவே என்னையும் தன் ஒரக்கண்ணால் பார்த்தது. தன் சிறு வாலை ஆட்டி கறுப்புப் பட்டன் போன்ற கண்களை சுழற்றி…..ஆஹா; என்ன கவர்ச்சி, என்ன அழகு ! அப்படியே அதன் வசமானேன்.

என் சிவமடத்திற்குள்தான் என் அருமை சிவா இருந்தது ..நடந்து முடிந்த கதை..நான் இட்ட பெயர்தான் .நான் வளர்த்த என் அருமை ஜெர்மன் ஷெப்பெர்டு.அது தான் சிவா. அதை நாய் என்று யாரவது சொன்னால் எனக்கு ஆகாது. அது என் குழந்தை. அதன் மேல் அத்தனை பாசம்..பத்து நாள் குட்டியாக வந்தது.,,வளர்ந்தது..அதை ஆன்மீகமாக வளர்த்தேன். அது முன்பிறவியில் சன்யாசியோ என்னமோ,வெளியே போனால் தன் இனத்துடன் சேர்ந்து ஓடாது.என் கூடவே இருக்கும். நான் கீதைப் படிக்கும் நேரம் மணி 9. அதுவும் என் அருகில் அமரும். முழு பூசையை கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கும். கற்பூரம் ஏற்றிய பின்னர் நான் அதன் கண்ணில் ஒற்றி விடுவேன் அது வரை அந்த இடத்தை விட்டு நகராது. பாட்டு ரசித்து கேட்கும். வெளியிலிருந்து வந்தால் நேரே பாத்ரூமுக்கு போய் நிற்கும். கால் அலம்பிய பிற்குதன் உள்ளே வரும் எல்லாம் பழக்கி விட்டேன்.

ஒருதடவை ஒரு திருடன் உள்ளே நுழைந்தான்.அது கத்திக் குரைத்த்து. ஊரைக் கூட்டிவிட்டது. அவனிடைருந்து அடிகள் பெற்றுமவனை எதிர்த்தது. அவன் ஒடிவிட்டான் நான் பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன் ஒரே ஷாக். அந்த சிவா என்னிடம் ஒடி வந்தது. நக்கியது தன் முதுகைக்காட்டி பல விஷயங்கள் சொல்லாமல் சொல்லியது,

அந்தப் பாஷை எனக்கு புரிந்தது..டில்லியில் கொளுத்தும் வெய்யில்.பத்து நாட்கள் சிம்லா போனபோது அந்தச் சிவாவை நாய் காக்கும் நிலயத்தில் விட.,,அது நாய் காக்கும் நிலயம் அல்ல பணம் பிடுங்கும் நிலயம் என்று பிறகு தான் புரிந்தது. உஷ்ணம் தாங்காமல். தண்ணீருமில்லாமல் மஞசள் காமலை வ்ந்து என் சிவா என் மடிமேல் உயிரை விட்டது. முடிவு காலம் தெரிந்த உடனேயே ராம நாமம் பாட்டு போட காதில் ராம்,ராம் என்றுசொல்ல வாயில் கங்கை நீர் ஊற்ற என்னை நன்றியுடன் பார்க்க …..மறக்க முடிய வில்லையே அந்த தினம்.

அந்த சமாதி தான் இந்த மடம் அதில் ஒரு வேப்பமரம் நட்டு மரமும் பெரிதாகி அதன் நிழலில் இன்று பல பூனைக் குட்டிகள், நாய் குட்டிகள்,,,,..என் ஹீரோ புடவையைப் பிடித்து இழுக்க பழைய நினைவிலிருந்து விடுப்பட்டு என் ஜுனியர் சிவாவை வெளியிலிருந்தே வளர்க்க ஆரம்பித்தேன்.

அந்த நாளும் வந்தது. நான் கறிகாய் வாங்கச் சென்றேன் என் அருமை ஜுனியர் சிவா என்னைத் தொடர்ந்து வந்தது. “போ சிவா’ உன் அம்மாவிடம் போ. பால் குடி பாவம் அவள் உன்னைத் தேடுவாள் நான் திரும்பி வந்ததும் வா “என்றேன். ரொம்ப புரிந்தது போல் தன் முகத்தை ஒரு பக்கமாக சாய்த்து சம்மதம் தெரிவித்தது. வேகமாக நான் என் வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வந்தேன். பாவம் அது நடைப் பாதையில் எதிர்பக்கம் பொறுமையாக உட்கார்ந்திருந்தது. என் கையில் பிஸ்கட் இருந்தது. மோப்பச் சக்தியால் அது தெரிந்து கொண்டு ஆவலாக என்னிட்ம் வர வேகமாக குறுக்கே பாய்ந்தது.

பீம்….பீம்…. அவ்வளவுதான்..நான் வீல் என்று கத்தினேன். கண்மண் தெரியாமல் வந்த காரின் அடியில் என் அருமை ஹீரோ,,,.யமன் ரூபத்தில் வந்துவிட்டான் அவன் ,,,,,,, .மனதை உருக்கும் ,…உலுக்கும் கூக்குரல் என் ஹீரோ எழுப்ப ஒரே கூட்ட்ம் ..கார் ஒட்டியவன் நிற்காமலே ஒடிவிட்டான். கார் ந்ம்பரைப் பார்த்தேன். அவன் தெரிந்தவன்தான். முன் வாரம் அஹிம்சையைப் பற்றி மேடையில் பேசினவன்.

பசுவதை சங்கத்தின் மெம்பர்…என் எதிரே ரத்த வெள்ளத்தில் என் ஹீரோ கிடக்க ஒரு சிலர் பாவம் என்று சொல்ல மற்றவர்கள் ஏதோ நாயாம் இறந்து விட்டதாம் என்று சொல்லி அலட்சியமாக இடத்தைக் காலி செய்தார்கள். அதன் தாய் ஒடி வந்து. சுற்றிச் சுற்றி அதை முகர்ந்து அழுதது. பின்னர் அதை இழுத்து. இழுத்து சற்று ஒரமாகப் போட்டது. என் கண்களில் நீர் பொங்க தாய் நாயைத் தடவி விட்டேன் . என்னால் வேறு என்ன செய்ய முடியும்? மெல்லப் போய் என் ஹீரோவை ஒரு அட்டைப் பெட்டிக்குள் வைத்தேன். உயிர் போயிருந்தது. அதை மேலும் அறையில் வைத்தோ அல்லது கழுகு கொத்திச் செல்லும் காட்சியைக் காணவோ என்க்கு மனதில் தெம்பு இல்லை.

சீனியர் சிவாவின் அருகில் குழி தோண்டி உப்பும் பாலும் விட்டு அடக்கம் செய்தேன்.

மனம் கார் ஒட்டியவனை அசைப்போட்டது. லஞ்சம் ஒழிக்க மேடையில் பேசி அவனே லஞ்சம் வாங்குகிறான், மிருகவதைப் பற்றிபேசி அவனே மிருகத்தை அழிக்கிறான். சொல்வது ஒன்று செய்வது ஒன்று இது எங்கே போய் நிற்கும்? கடவுளே ;……

உள்ளே வந்தேன். சுவரில் மாட்டிய கீதசாரம் என்னைப் பார்த்து சிரித்தது. “நீ என்னகொண்டு வந்தாய் அதை இழ்ப்பதற்கு ?”

….மனதைத் தேற்றிக்கொண்டேன்…..போதும் அப்பா. இனி நாய் வளர்க்கவே மாட்டேன். என் மனம் சொல்லியது.

பிரசவ வைராக்கியம் போலும். ஒரு வாரத்திற்குப் பின்னர் ….வவ் வவ். இனிமையான குரல் ஒடினேன் பாலை எடுத்துகொண்டு.

மாயை என் கண்ணை மறைத்தது. மூன்றாவது சிவா வந்து விட்டான். வளரப் போகிறான் ..வாழ்க சிவமடம்


விசாலம் ராமன்.

vishalam raman
ஏப்ரல் 17, 2008

Series Navigation

விசாலம் ராமன்

விசாலம் ராமன்