சில நேரங்களில் சில மனிதர்கள்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஆரிப் முகமது கான் பாரதிய ஜனதாகக் கட்சியில் சேருகிறார், ரால்ப் நாடெர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.இம்முடிவுகள் சரியா, இல்லை, இவர்கள் எதிர்பாராத மோசமான விளைவுகளை ஏற்படுத்துமா ?

கான் பேட்டியில் அவர் இம்முடிவினை எடுத்த பிண்ணனி தெளிவாகிறது ? ஆனால் இதுதான் சரியான தீர்வா ? பா.ஜாவை விட்டால் வேறு வழியே இல்லையா ? கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரால் செயல்பட முடியாதா ?- மிகுந்த மனவேதனைக்குப் பின் இம்முடிவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.இதற்காக அவர் பின் வருந்தக் கூடும் என்றே தோன்றுகிறது.

நாடெர் ஜனநாயக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்கள் நியாயமானவையே.புஷ்ஷிற்கு பலமான எதிர்ப்பினை அவர்கள் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கவில்லை. கட்சி வேறுபாட்டிற்கு அப்பாற்படு இரண்டு கட்சிகளும் பொதுவான நிலைப்பாடுகள் எடுப்பத்தில் வியப்பில்லை. ஆனால் அதற்காக இரண்டும் ஒன்றேதான் என்பது சரியல்ல. ஆனால் இம்முடிவு யார் தரப்பை வலுப்படுத்தும், ஒட்டுகள் சிதறினால் யார் பயனடவார்கள் ?

நாடெர் செய்வது சரியா ? இது புஷ்ஷின் ஒட்டைப் பிரிக்காது, ஜனநாயகக் கட்சியின் ஒட்டுகளைத்தான் பிரிக்கும் என்பது உண்மை. இரண்டு கட்சிகளில் எது குறைவாக மோசமானது என்றுதான் யோசிக்க வேண்டியுள்ளது.இன்னொரு முறை புஷ் என்றால் தாங்காது என்பதால் வேறுவழியே இல்லை என்போரும் உண்டு.லெசிக்கின் வலைக்குறிப்பில் இது குறித்து ஒரு விவாதம் உள்ளது.இது போல் நாடெர் நிற்கவேண்டாம் என்று கூறும் தளமும் சில வலுவான காரணங்களையே முன்வைக்கிறது. இவையெல்லாம் தவிர முன்பு அவரை ஆதரித்தவர்கள் கூட இன்று ஆதரவு தருவார்களா அல்லது அவருக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்வார்களா என்பது கேள்விக்குறி.பசுமைக் கட்சியினை சார்ந்தவர்கள் கூட அவருக்கு ஒட்டுப் போடமாட்டார்கள், மாறாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகப் போடப்படும் ஒட்டு புஷ் பதவிக்கு வருவதை தடுக்க உதவும்.

பலருக்கு ஆதர்சமான செயல்வீரர் நாடெர். நுகர்வோர் நலன், சுற்றுப்புறச் சூழல் உட்பட பலவற்றில் அவர் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம்.மேலும் அவர் ஆதரவுடன்/மேற்பார்வையில் பல திட்டங்கள்- அணு ஆற்றல் முதல் அறிவு சார் சொத்துரிமைகள் செயல்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் குறித்தும், சுதந்திர வர்த்தகம் குறித்தும் அவர் நிறுவிய அமைப்புகள் தொடர்ந்து பல முக்கியமன பணிகளை செய்து வருகின்றன. எனவே அவர் மீது பல அமைப்புகளுக்கு பெரும் மரியாதை உண்டு.மேலும் கிட்டதட்ட 45 ஆண்டுகளாக மனச்சாட்சியின் குரலாக அவர் செயல்பட்டுள்ளதால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் மீது பலருக்கு அவர் மீது மரியாதை உண்டு. இந்த முடிவு அதை அதிகரிப்பதாக இல்லை. இங்கு பிரச்சினை அமெரிக்க அரசியல் அமைப்பில் உள்ளது.இதை நாடெர் போட்டியிடுவதன் மூலம் மாற்றிவிட முடியாது. அமெரிக்காவில் ஏன் ஒரு மூன்றாவது, வலுவான கட்சி இல்லை ? ஏன் அமெரிக்காவில் தேர்தலில் ஒட்டளிப்போர் எண்ணிக்கை பல சமயங்களில் இந்தியாவில் தேர்தல்களில் ஒட்டளிப்போர் எண்ணிக்கையை விட,

சதவீத கணக்கின்படி பார்த்தால் குறைவாக உள்ளது ? இது போன்ற கேள்விகள் உள்ளன. நீண்ட காலப் போக்கில் ஒரு மூன்றாம் கட்சி உருவெடுக்கலாம்.ஆனால் அதற்கு இத்தேர்தலை பயன்படுத்த முடியாது.

இதெல்லாம் நாடெருக்குத் தெரியாதது அல்ல. ஜான் கேரியின் அரசியல் நிலைபாடுகள் விமர்சிக்கப்படலாம், ஆனால் இரண்டும் ஒன்று என்று வாதிட்டு ஒட்டுகளைப் பிரிப்பதால் என்ன பயன். மாறாக இன்று புஷ் பதவிக்கு வரக்கூடாது என்பதை முன்னிறுத்தி, ஜனநாயக் கட்சியிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கலாம். நாடெர் தன் முடிவினை மாற்றிக்கொள்ள காலம் கடந்து விட வில்லை.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்று முடிவு செய்துள்ள கான், குஜராத் கலவரங்களால் மிகவே பாதிக்கப்பட்டுள்ளார். சரணாகதி என்பதை இன்று ஏற்கலாம் பி.ஜே.பி.

அதனால் என்ன பயன் ?. இன்னும் காசி,மதுரா என்று பயமுறுத்துவதும், அவ்வப்போது பட்டியலை வெளியிட்டு இங்கெல்லாம் கோயில்கள் இருந்த இடத்தில் மசூதிகள் உள்ளன, எனவே … என்று சொல்லி மிரட்டுவதெல்லாம் இவர் சேருவதால் நின்றுவிடுமா ? இல்லை அத்வானி/ஆர்.எஸ்.எஸ் நரேந்திர மோதியை முன்னிறுத்துவதை கைவிடுவார்களா ? நிலைமை சரியில்லை என்பதை ஏற்கிறேன்.காங்கிரசின் கடந்த காலத்தவறுகள், மதசார்பற்ற கட்சிகளின் தவறான நிலைப்பாடுகள் இவற்றையும் கருத்தில் கொண்டு பி.ஜே.பிக்கு எதிரான ஒரு கூட்டணியின் தேவையை அவர் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஒரு தாரளவாத நிலைப்பாட்டினை எடுத்து சிறுபான்மை சமூகங்களில் எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதை முன்னிறுத்தி காங்கிரசும், பிறரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மாற்றங்களை சுட்டிக்காட்டி அவர் பேசியிருக்க வேண்டும்.

பி.ஜே.பி. யில் சேர்வதன் மூலம் எதை சாதிக்க முடியும். இரு கரங்களால் கும்பிட்டு எங்களை வாழவிடு என்று கேட்பதால் தொகாடியாக்களும்,சிங்கால்களும் மோடிக்களும் மனம் மாறுவார்கள் என்றா அவர் எதிர்பார்க்கிறார். குஜராத் இந்தியாவின் ஒரு பகுதி, இந்தியா அல்ல. மோடிக்களை உருவாக்கி வளர்த்தெடுத்து இந்தியாவை குஜராத் போல் மாற்றுவதே அவர்கள் லட்சியம்.இதை தடுக்க கான் போன்றவர்களால் முடியாது. உள்வாங்கப்பட்டு, பயன்படுத்திக் கொண்ட பின் உன் கதி இதுதான் என்று அவர்கள் கான் போன்றவர்களை ஒரு மூலையில் அல்லது ஒரு பதவியில் வைத்து விடுவார்கள். பிரிட்டிஷ்கார்களை விட மோசமானவர்கள் இவர்கள் என்பதை கான் உணரவில்லை.அதை அவர் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஒடையை நீ கலக்காவிட்டால் என்ன, உன் தாத்தா கலக்கினார் அன்று என்று வலுச்சண்டைக்குப் போகும் ஒநாய்களிடமா, ஆடுகள் கருணையை எதிர்பார்க்க முடியும் ?

வாஜ்பாய் முகமா இல்லை முகமுடியா- இரண்டும் இல்லை. ஒரு ஒப்பனை, கலைக்கமுடியாத ஒப்பனையல்ல,

மாறாக எப்போது தேவையில்லையோ அப்போது கலைக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடிய ஒப்பனை. இதன் மாற்று என்ன/யார் என்பது அவ்வப்போது நேரடியாகவும்/மறைமுகமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எப்போது தன் சுய பலத்தில் பா.ஜாவால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியுமோ அப்போது அந்த ஒப்பனை

கலைக்கப்படும்.

இதுதான் யதார்த்தம். கான் ஒரு மனம் குழம்பிய நிலையில் எதையாவது செய்தால் அவர்கள் போக்கில் மாற்றம் வராதா என்று நினைத்து சரணடைகிறார். ஒரு அவலமான காட்சி இது.அன்று ஷா பானு வழக்கினைத் தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த முடிவினை மிகச் சரியாகக் கண்டித்த கான் இன்று இப்படி ஒரு நிலைப்பாட்டினை மேற்கொள்வது பொருத்தமற்றது.

நாடெரும், கானும் எடுத்த நிலைப்பாடுகள் ஒரு படிப்பினையாக் கொள்ளத்தக்கவை, பின்பற்ற்ப்பட வேண்டிய முன்னுதாரணங்களாக அல்ல.காலத்தின் தீர்ப்பு வரும் போது, இவர்கள் அதை எப்படி எதிர் கொள்வார்கள் ?

—-

ravisrinivas@rediffmail.com

Series Navigation