சிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

வாஸந்தி


கும்பகோணத்துப் பள்ளியில் நடந்த தீ விபத்துக்குப் பிறகு பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறதா ?

ஞாபகம் இருக்கவேண்டிய விஷயங்கள் எல்லாம் மனிதனுக்கு மறந்துவிடும் என்று ஐக்கிய நாடுகளின் சபைக்குத் தெரியும்.நாகரீக மனிதன் யார் யாரை நினைவு வைத்துக்கொள்ளவேண்டும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த எந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அல்லது நினைவுகூறவேண்டும் என்று பட்டியலிட்டு சில தேதிகளைப் பொறுக்கி இன்னார் பெயரில் அந்த தினம் உலக நாளாகக் கொண்டாடப் படவேண்டும் என்று அறிவித்திருக்கிறது. பெண்கள் தினம் உழைப்பாளிகள் தினம் என்பது போக , காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் என்பது கட்டாயக் கொண்டாட்ட தினங்களாகப் போய்விட்டன. நவம்பர் 19 என்பது ‘குழந்தைகளுக்கு இழைக்கப்படும்

அநீதிகளைத் தடுக்கும் உலக தினம் ‘ என்பது அன்று நான் கும்பகோணத்தில் இருக்க நேர்ந்ததால் தெரிந்தது.அதை முன்னிட்டு நான்கு மாதங்களுக்கு முன் அங்கு பள்ளிக் குழந்தைகள் 94 பேரைக் காவு கொண்ட தீ விபத்தின் நினைவூட்டல் நிகழ்ந்தது. பல் வேறு தன்னார்வ குழுக்களின் 5000 உறுப்பினர்கள் மகாமகக் குளத்தைச் சுற்றி மனிதச் சங்கிலியாக நின்றதை மக்கள் ஒரு விநோத நிகழ்வைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். கும்பகோணம் மக்களே அந்தக் கோரத் தீ விபத்தை மறந்துவிட்டார்கள், தீப் புண்ணினால் இன்னும் அவதி படும் குழந்தைகளைத் தவிர. ஒரு பள்ளிக் கட்டிடத்துக்கு வேண்டிய எந்த லட்சணமும் இல்லாத , மூன்று பள்ளிகள் இயங்கி வந்த அந்த மூன்றடுக்குக் கட்டிடம் பூட்டப்பட்டு நிற்கிறது, வீட்டின் சொந்தக்காரர்கள் வெளியூர் சென்றிருப்பது போன்ற தோற்றத்துடன். முகப்புச் சுவரில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்கள். அவற்றின் மேல் வாடிய பூக்கள்.அவர்கள் இப்போது தெய்வமாகிப் போனவர்கள். ஆராதிக்கப்படவேண்டியவர்கள்.ஒரு பூக்கார அம்மாள் அரை முழம் பூவை கிள்ளி படத்தில் சார்த்தி கண்ணில் ஒற்றிக்கொண்டு போகிறார்.

பெற்ற தாயையும், பெற்ற மகவையும் மறப்பவர்கள் நாம்.நமது மறதிக்குக் காரணம் நமக்கு ஈசனின் மேல் இருக்கும் பக்தியோ மெஞ்ஞானத்தை நாம் எட்டி விட்டதாலோ அல்ல. ‘நான் ‘ என்ற சிந்தையில் வேறு எதற்கும் இடமில்லை. நாம் முழுக்க சுயநல வாதிகள் இல்லை; கனிவற்றவர்கள் என்றும் அர்த்தமில்லை.உணர்ச்சிபூர்வமானவர்கள் தான். தொலைக் காட்சி ஸீரியலில் வரும் கஷ்டங்களைக்கூட சகிக்க முடியாமல் கண்ணீர் வடிப்பவர்கள். நிஜ வாழ்வில் நடக்கும் விபத்துகள் நம்மை பாதிக்காதா ?கும்பகோணத்தில் அன்று நடந்த தீ விபத்தைக் கண்டு பதறாதவரும் இருந்திருக்க முடியுமா ? குழந்தைகள் பள்ளி அறைக்குள் தீயின் பிடியில் இருப்பதை அறிந்த பொது மக்கள் உடனே மீட்பு பணிகளின் உதவிக்காக தீயணைக்கும் படை பிரிவுக்கு தகவல் அளித்ததுடன் , இருந்த ஒரே ஒரு குறுகிய வழியிலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் சுவரை உடைத்து குழந்தைகளைக்காப்பாற்றும் முயற்சியில் ஈடு பட்டதை கும்பகோணம் மறக்குமா ?

மறந்து தான் போய்விட்டது எல்லோருக்கும். சம்பவத்தின் உக்ர சோகம் ஏற்படுத்திய பரிதவிப்பும் , விதிகள் மீறப்பட்டதாலேயே நிகழ்ந்த விபத்து என்ற பிரக்ஞை கிளப்பிய கோபமும் நீடித்து இயங்கவைக்கும் உணர்வு நிலைகள் அல்ல.இயங்கவேண்டிய அரசு இயந்திரங்கள் கூட , விபத்து தெளிவுபடுத்திய பாடங்களிலிருந்து கற்கவேண்டிய கல்வி இலாக்காகூட ,ஓலைக்கூரையைப் பிடுங்கி எறிந்த கையுடன் இனி வேறு ஏதும் செய்வதற்கில்லை என்பதுபோல மறதி மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டன. விபத்து நடைபெற்றதற்கான பின்னணியை விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்கும் ஒரு விசாரணை ஆணயத்தை அமைத்ததுடன் அரசின் கடமை முடிந்துபோனது. எல்லா பள்ளிகளும் கட்டட மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுகினறனவா என்று தீவிரமாக கண்காணிக்கும் செயல் திட்டம் வகுக்கப் பட்டதா ? யாருக்கும் தெரியாது. ஆசிரியர்களுக்கு தீ விபத்தை சமாளிக்கும் பயிற்ச்சி அளிக்கப்படுகிறதா ? அப்படி ஒரு பயிற்சியை யாரும் இதுவரைக் கேள்விபடவில்லை. சகட்டு மேனிக்கு பள்ளிகள் துவங்கும் போக்கிற்குக் கடிவாளம் எப்படிப் போடுவார்கள் ?விதிமுறைகளை

மீறுபவர்களிடம் பணம் வாங்கி அநியாயத்தை அனுமதிக்கும் ஊழல் அதிகாரிகளை யார் கண்காணிப்பார்கள் ? மனித உரிமை காத்தல், மனித நேயம், உயிர் பாதுகாப்பு ஆகியவையே நிர்வாகத்தின் ஆதார தத்துவமாக அல்லவா இருக்கவேண்டும் ? ஆ, இது இந்தியா. கர்ம பூமி. ஊழ்வினை என்று கேள்விப்பட்டிருக்கிறீகளோ ? மக்கள் அதை நம்பும்வரை உணர்வு நிலைகளை வைத்தே சொக்கட்டான் ஆடிவிடலாம்.

ஆறுதல் ஒன்றே நமக்குப் போதுமானது. இந்தியாவின் அத்தனை அரசியல் கட்சித்தலைவர்களும், மதிய மாநில அமைச்சர்களும் சினிமா நடிகர்களும் கும்பகோணம் வந்து இறந்த குழந்தைகளுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.ஜனாதிபதியும், முதலமைச்சரும் , எதிர்கட்சித் தலைவர்களும் ஓடோடிவந்து ஆறுதல் சொன்னார்கள். ஆளுக்கு ஆள் இறந்த குழந்தைகளுக்கும் தீப்புண்ணில் தவிக்கும் குழந்தைகளுக்கும் லட்ச லட்சமாகப் பணத்தை அள்ளிக்கொடுத்தார்கள். திடாரென்று சோகமும் இழப்பும் பணம் பண்ணும் விசயமாயிற்று.தீயில் ஒரு மகனை இழந்த தந்தை கையில் கிடைத்த காசில் குடித்துவிட்டு, அன்று பள்ளிக்குப் போகாததால் உயிர் தப்பியிருந்த இளைய மகனைப் போட்டு அடித்த அவலம்- ‘ நீயும் போயிருந்தா இன்னொறு லட்சம் கிடைச்சிருக்குமேடா! ‘

நம்பத்தான் முடியவில்லை. ஆனால் இந்த பயணத்தில் என் கண்ணெதிரில் நடந்த காட்சி-ஒரு தனியார் நிறுவனம் தீப்புண் பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்காக தலா ஒரு லட்சத்தி சொச்சம் ரூபாய் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. தெருவை மறித்து குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் ஆர்பாட்டம் செய்கிறார்கள். ‘ எங்களுக்கும் பணம் கொடு ‘ என்கிறார்கள். ‘ எங்களுக்கு இல்லை என்றால் அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. ‘

பிரச்னையின் அடிவேரைத் தொட்டு தீர்வுகாணாமல் பணத்தால் மக்களின் சோகங்களை விலை பேசினால் இதுதான் நடக்கும். பணம் பண்பை விரட்டும்.

—-

,

Series Navigation