சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

கற்பக விநாயகம்



மண்டைக்காட்டில் கலவரம் போது, சுந்தர ராம சாமி வீட்டில் தான் தங்கியதை மலர்மன்னன் சொல்லியிருந்தார்.
சுந்தர ராமசாமியின் வாசகனான நான் அவரை மிகவும் ‘முற்போக்கான எழுத்தாளராக’க் கருதியதன் காரணமாய், அதனை என்னால் நம்ப முடியாததால் அது ‘பொய்’ எனச் சொன்னதையும், அதன் விளைவாக மலர்மன்னன், திண்ணையில் எழுதுவதை நிறுத்துவதாகவும் அறிவித்ததையும் அனைவரும் அறிவர்.

மலர்மன்னன், தாம் சொல்வது பொய்யல்ல என்பதைப் பல சாட்சியங்களுடன் விளக்கியும், அவரே “நாகர் கோவிலில் எனக்கு என்ன தங்குவதற்கு இடமா இல்லை? சந்தேகம் வராத இடத்தில் தங்க வேண்டும் என்பதால் அல்லவா நண்பர் சு.ரா. வீட்டைத் தேர்ந்தேன்?” என்றும் “நான் மறைந்திருந்து வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு நட்புரீதியில் எனக்கு இடமளித்தாரேயன்றி வேறு காரணம் ஏதும் இல்லை” என்றும் விளக்கி இருக்கிறார்.

சு.ரா.வின் நண்பரான பவுத்த அய்யனார், தாம் எழுதி இருக்கும் காலச்சுவடு கட்டுரையில் (“என் வாழ்வின் பெருந்துக்கம்” – பவுத்த அய்யனார் – மார்ச் 2006 காலச்சுவடு)

“நான் எழுதிய கடிதங்களை வைத்து என் இலக்கிய ஆர்வத்தைத் தெரிந்து கொண்டார். “உங்கள் மனோபாவத்திற்குக் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் பணிபுரிவது நல்லது என்று சொல்லி என்னை அங்கு சேர்த்து விட்டார். வ.உ.சி. மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பணி. அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் சிகிச்சை முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். முகமறியாத மனிதர்களுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இன்றிப் பணிபுரிந்து சேவைப்பணியின் ருசியை அறிய முடிந்தது. போகாத ஊர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளடங்கிய கிராமங்களுக்கெல்லாம் போயிருக்கிறேன். 1989லிருந்து 1991 ஆண்டின் பாதி வரை என் வாழ்வின் மறக்க முடியாத ஆண்டுகள். விவேகானந்த கேந்திரத்தில் நான் பணிபுரிந்தது என் வாழ்க்கையின் திசையையே மாற்றி அமைத்தது.” என்று சொல்லி இருக்கிறார்.

இந்துத்துவ அமைப்பான விவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நபருக்கு வேலைக்கு சிபாரிசு செய்யும் அளவிற்கு செல்வாக்குடைய சுந்தர ராமசாமி, மலர்மன்னன் போன்ற நண்பர்களுக்கு உதவி இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை இந்த ஆதாரங்கள் எல்லாம் நிரூபிக்கும்போது, நான் ‘பொய்’ எனச் சொன்னது தவறு எனத் தெளிவாகி விட்டது.

தவறு எனத் தெரிந்தும் அதனை மறைப்பது வஞ்சகமானது என்பதை நான் அறிவேன். எனவேதான் நான் ‘பொய்’ எனச் சொன்னதைத் திரும்பப் பெற்றேன்.

இதனைத் திரித்து, ‘மன்னிப்பு நாடகம்’ ஆடுகிறார் என்று விஸ்வாமித்ரா சொல்வது சிறுபிள்ளைத்தனமாய் இருக்கின்றது. திரும்பப் பெறுவதை ‘மன்னிப்பு நாடகம்’ என்பவர், மவுனம் சாதித்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்?

திட்டுவதென்று முடிவு செய்து விட்டால் எந்தக் காரணமும் அதற்குப் போதும்தானே!

திண்ணையில் இந்துத்துவ ஆட்கள் எழுதிச் செல்லும் பல உண்மைக்கு மாறான தகவல்களையும், முன்னுக்குப் பின் முரணான விசயங்களையும் அம்பலப்படுத்தி எழுதியபோதெல்லாம், உண்மையை ஒத்துக் கொள்ளத் திராணியின்றி கள்ளத்தனமாய் மவுனம் சாதிப்பவர்களை விஸ்வாமித்ரா என்ன செய்யப் போகிறார்? இம்மாதிரியான ஆட்களின் நேர்மையற்ற செயலைக் குறிப்பிட, வார்த்தைகளை நிகண்டுகளில் தேடினாலும் அகப்படாதே!

உலகமயமாக்கல் குறித்து நான் எழுப்பிய எத்தனையோ கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அந்தராத்மா பக்கம் நகர்ந்து விட்டவர்களையும் இவ்விடத்தில் நினைவு கூர்தல் அவசியம்.

உண்மையை அம்பலப்படுத்துவதற்குப் பெயர், விசம் கக்குவது என்று எந்த ஊரில் சொல்லுகிறார்கள்?

நான் எழுதிய நூல் விமர்சனத்தில், வெங்கடேசன் எழுதிய தர்க்க ஒழுங்கற்ற, முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும், பிழையான தகவல்களையும், அற்பத்தனமான காரணங்களை வைத்துப் பிதற்றுவதையும் (உதாரணமாக ‘பெரியார் முன்னுக்குப் பின் முரணானவர் என்பதற்கு ஆதாரமாய் அந்நூலை எழுதிய மேதாவி குறிப்பிடும் ‘ நாகம்மையார் இறந்தபோது அழக்கூடாது என்ற பெரியார், ராஜாஜி இறந்தபோது அழுதார்’ எனும் சான்றாதாரம்) அந்நூலில் இருந்து எண்ணற்ற ஆதாரத்துடனும் குறிப்பிட்டிருந்தேன்.

பெரியார் மீது அந்தப் பேரறிஞர் திரித்துக் கூறியிருந்த செய்திகள் பலவற்றையும், (‘ஜாதி வெறிச்செயலைப் பெரியார் கண்டித்தாரா?’ போன்ற உதாரணங்கள்) ஆண்டுக்கணக்கை முன்னுக்குப் பின் குழப்பிப்போட்டும், சில இடங்களில் மறைத்தும் அவதூறு செய்ய முயன்ற செயலை நான் அம்பலப்படுத்தி இருந்தேன்.

இவற்றில் ஒன்றுக்கும் கூடப் பதில் சொல்ல முடியாத / இயலாத ‘சிந்திக்கும் திறன் கொண்ட (??)’ சிந்தனையாளர் திலகம் விஸ்வாமித்ரா, தமது சிந்தனையைத் தட்டி விட்டு நான் எழுதியிருந்த விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தவைகளுக்குப் பதில் சொல்லி விட்டுப் பிறகு எனது தராதரத்தைப் பற்றிப் பேசலாம்!

வெங்கடேசன் அதே நூலில், ‘ஈ வே ரா, ஏன் தனது பெயருக்குப் பின்னால் நாயக்கர் எனும் பட்டத்தைத் தூக்கிக் கொண்டு திரிந்தார்?’ என மொட்டையாகக் கேட்டிருந்தார். பெரியார், சுயமரியாதை இயக்கம் கண்ட பிறகு ‘சாதிப்பட்டங்களை நீக்கச் சொல்லி’த் தீர்மானம் போட்டதையும், அதன் பிறகு அவர் உட்பட அனைத்து சுயமரியாதை இயக்கக் காரர்களும் சாதிப்பட்ட வாலை நறுக்கி விட்டதையும் மறைத்திருந்தார். இத்தகைய அரைவேக்காட்டுத் தனத்திற்கு என்ன பெயரை சூட்டலாம்?

வெங்கடேசன், தனது அடுத்த பதிப்பில், ‘ஈ வே ரா வின் அசிங்கங்கள்’ எனும் தலைப்பு ஒன்றைச் சேர்த்து, அதில் 1882 ஆம் ஆண்டு வரை ஈ வே ராமசாமி நாயக்கர், உறங்குகையில் போர்வையில் சிறு நீர் கழித்து அசிங்கம் செய்தார் என்று எழுத வேண்டும். கண்டிப்பாக அவரின் பிறந்த வருடமான 1879 ஐக் குறிப்பிடாமல் இருக்க வேண்டும். இதனை அவர் செய்தால், விஸ்வாமித்ரா எனும் ரசிகர், இன்னும் மகிழ்வார். பிறரை மகிழ்விப்பது எவ்வளவு கோடி புண்ணியம் தெரியுமா?

······················································

பிராமணர்களுக்கு குலதெய்வமாக சுடலை மாடன் உண்டு என்பதை ஆதாரமாய் நிரூபித்தார்கள் என்று விஸ்வாமித்ரா எழுதியுள்ளார்.

ஆனந்த் சுப்பிரமணியம் என்பவர் “நீலமேகம்” எனும் தமது குல (பிராமண குலத்தவருக்கு) தெய்வம் பற்றி எழுதி விட்டு, அக்குல தெய்வக் கோவிலுக்கு கு.ப.கிருஷ்ணன் தான் பொறுப்பில் இருப்பதாய் எழுதி இருந்தார்.

இதற்கு,

“தங்களது குல சாமி நீல மேகம் என்கிறீர்! அப்புறமாய் அக்கோவிலின் பொறுப்பில் கு.ப.கிருஷ்ணன் எனும் முத்தரையரையும் சேர்க்கிறீர். ஆக அந்த சாமி ஒன்றும் பிராமணாளுக்குரிய குல தெய்வம் இல்லை என்பது நிச்சயமாய்த் தெரிகின்றது.
குல தெய்வம் என்பது ஒரே கொடி வழியில் தந்தை வழியிலோ / தாய் வழியிலோ மட்டும் வணங்கப்படும் சாமி. அதற்கு உரிமையுள்ளவர்கள் பங்காளிகளாகவே இருப்பர். சில சமயங்களில் ஆண் வாரிசே இல்லாது பெண் மட்டும் பிறக்கையில் அக்கோவிலின் உரிமை அப்பெண் வழியாக சம்பந்திகளுக்கும் சென்று விடுவது வழமை.” என்றும்,

பார்ப்பனரல்லாதாரான கு.ப.கிருஷ்ணன் பொறுப்பு வகிக்கும் குல தெய்வம், பிராமணருக்கும் எவ்வகையில் குல தெய்வமாக முடியும் என்றும் கேட்டு ஒரு மெயில் அனுப்பியதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை.

நிறைய வாசகர்களுக்கு ‘குல தெய்வம்’ என்பதும் ‘நாட்டார் தெய்வம்’ என்பதும் பற்றிய தெளிவு இல்லாததால்தான், ‘சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்’ எனும் கட்டுரையை எழுதினேன்.

விஸ்வாமித்ரா http://www.thinnai.com/?module=displaystory&story_id=20603316&edition_id=20060331&format=html எனும் முகவரியில் அதைப் படித்து முதலில் பித்தம் தெளியட்டும்.

······················································

“90 சதமானத்திற்கும் மேலே அவ்வாறு தேசத்தை மாற்றிக்கொள்பவர்கள் வைதீகர்களாகவே இருக்கின்றனரே!” என நான் குறிப்பிட்டதை “பிராமணர்கள் மட்டுமே குடியுரிமை வாங்குகிறார்கள் என்று கூசாமல் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவர்” என விஸ்வாமித்ரா தோசையைத் திருப்பிப் போடும்போதே, யார் மூட்டையின் முடிச்சை அவிழ்ப்பவர் என்பது புலனாகி விடுகிறது.

அமெரிக்கா சென்று செட்டில் ஆனவர்களில் 90 சதம் பேர் பிராமணாள் எனச் சொல்லியதை ‘பிராமணாள் மட்டுமே’ எனப் புரட்டிப்போட்டு அவதூறு செய்யும் இந்த ஜீவாத்மா, இதே குணம் படைத்த வெங்கடேசன் எனும் அறிவுஜீவிக்கு ஆதரவாய் சிண்டை முடிந்து கொண்டு ஆடுவதில் ஒன்றும் வியப்பில்லைதான்.

அமெரிக்கா செல்ல அண்ணாசாலையில் வரிசையில் அதிகாலையில் கால் கடுக்க நின்று ‘சொர்க்க வாசல்’ அருகில் காத்து நிற்பவர்களை விரல் விட்டு எண்ணிப் பார்த்தாலே போதும். இதற்கு சென்சஸ் வரை போகத் தேவையில்லை.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி அவசியமா என்ன?

அமெரிக்காவில் குடி பெயர்ந்துள்ள பிராமணக் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் மேலும் பெருகுவதால், அக்குடும்பங்களில் நடைபெறும் உபநயனம், விவாஹம், சீமந்தம் போன்ற சடங்குகளைச் செய்ய புரோகிதர்கள், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் தொழில் செழிப்பாக நடக்கின்றது.

உலகமயமாக்கம் தீவிரம் பெற்று வரும் இக்காலகட்டத்தில், புரோகிதத் தொழில் கூட வீடியோ கான்பெரன்ஸ், வாய்ஸ் ஓவர் ஐ பி மூலமாய், அவுட்சோர்சிங் ஆகி விட வாய்ப்பு இருக்கின்றது என்பது தனிக்கதை.

அமெரிக்க தூதரகத்து வாசலுக்குள் நுழைவது தாங்கள் மட்டுமே அதிகமாய் இருக்க வேண்டும் எனும் சுய சாதி அபிமானமே, ‘ஐ ஐ டி’, ‘ஐ ஐ எம்’ இல் வரப்போகும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து ‘இப்படில்லாம் வந்தா தரம் குறஞ்சிடும்; ஊழல் பேர்வழிகளாக அடுத்த தலைமுறை உருவாகி விடும்’ என்றும் சொல்ல வைக்கிறது.

இவ்வாறு பிரச்சாரம் செய்யும் ஒரு மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“பிற்பட்டோர், தலித்கள் இட ஒதுக்கீட்டில் நுழைந்ததால்தான் ஊழல் மலிந்தது என்கிறீர்களே!

சுதந்திர இந்தியாவில் முதல் முதலில் ஊழல் குற்றச்சாட்டினால் பதவி விலகிய ஆள் யார் தெரியுமா? டி.டி.கிருஷ்ணமாச்சாரி.

பல்லாயிரம் கோடி ரூபாயை விழுங்கிய பங்குச் சந்தை ஊழல் நாயகன் ஹர்ஷத் மேத்தா, இட ஒதுக்கீட்டை அனுபவித்த சாதியா?

இட ஒதுக்கீட்டில் படித்து வந்த டாக்டர் செய்த ஆப்பரேசனில் செத்துப்போன நோயாளியின் முகவரியைத் தாருங்கள்” என்றேன்.
பதில் கூறிட ஆளைக் காணோம்.

······················································

உபகதை:
······

கடல் தாண்டிப் பயணிப்பதை சனாதன தர்மம் தடை செய்துள்ளது என்பதால் 19ஆம் நூற்றாண்டு இறுதி வரை வடக்கத்திய இந்துக்கள், கடல் கடந்து பயணம் செய்யாமல் இருந்தனர். அது பாவச்செயலாகக் கருதப் பட்டது. ஆனால் நம் கலாச்சாரமோ ‘திரைகடலோடியும் திரவியம் தேடி’ இருக்கிறது.

சனாதனத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த பண்டித மதன்மோகன் மாளவியா, தனது வெளி நாட்டுப் பயணத்தினால் ஏற்பட இருக்கும் பாவத்தைப் போக்க கையோடு கங்கை நீரையும், ஒரு துணியில் கங்கைக் கரை மண்ணையும் கொண்டு சென்றிருக்கிறார்.

கடல் தாண்டினால் ஆதாயம் இருக்கிறது எனத் தெரிந்த உடனே முதலில் துணிந்து மேலை நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தவர்களே பார்ப்பனர்கள் தான்.

இதைத்தான் பெரியார் ‘பலித்தவரைக்கும் பார்ப்பனீயம்’ என்றிருக்கிறார்.

சனாதனத்தில் மிகவும் தீவிரப் பற்றாளரான சங்கர் ராமன் என்பவர், காஞ்சி சங்கராச்சாரியார் ‘கடல் தாண்டி சீனாவுக்கு செல்லக் கூடாது’ என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது, தனியாகப் பேசப்பட வேண்டியது.

······················································

vellaram@yahoo.com

Series Navigation