சிக்கன விமானம் – உரைவெண்பா

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பரிபாஷையே தனி.

லண்டன் – நியூயார்க் டைரக்ட் ஃபிளைட் என்று டிக்கட் கிழித்துக் கொடுப்பார்கள். லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலோ, கேட்விக் விமான நிலையத்திலோ வண்டி ஏறி அக்கடா என்று உட்காருவீர்கள். காலேஜ் படிக்கும்போது வ்ிட்ட காகித ராக்கெட் போல் அலுங்காமல் குலுங்காமல் நேராகப் பறந்து நியூயார்க்கில் போய் இறங்க வேண்டியது தான் இனிமேல் பாக்கி என்று நீங்கள் நினைத்தால் மகா தப்பு. வழியில் குட்டி, பெரிய விமான நிலையம் ஒன்று கூட விடாமல் இறங்கி ஏறி சேவித்துக் கொண்டு கடைசியில் நியூயார்க் போய்ச் சேரும்போது பிரயாண நேரத்தை விட இப்படி இடையில் புகுந்து புறப்பட்டதில் நேரம் ஏகத்துக்குப் பாழாகி, சுட்ட கத்தரிக்காய் போல் விமானத்தில் இருந்து வெளியே வருவீர்கள்.

டைரக்ட் ஃபிளைட் என்றால் நடுவில் எங்கும் நிற்காது விர்ரென்று பறந்து இலக்கை அடையும் பயணம் என்று நினைத்தது தான் தப்பு. விமானக் கம்பெனி பரிபாஷையில் ஒரே விமானத்தில் இருந்தபடிக்கே (நடுவில் வேறு விமானம் மாறாமல்) பறப்பது தான் டைரக்ட் ப்ளைட். நான்-ஸ்டாப் ஃப்ளைட் என்றால்தான் நடுவில் எங்கேயும் இறங்கி எழவெடுக்காத சமாச்சாரம்.

அதே போல் இன்னொரு விஷயம் கோட் ஷேரிங். பிரிட்டாஷ் ஏர்வேஸ் விமானத்துக்கு டிக்கெட் விற்பார்கள். நீங்கள் ஏறிய விமானம் ஏர் பிரான்ஸுக்குச் சொந்தமாக இருக்கும். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஏர் பிரான்ஸ் விமானத்துக்கான டிக்கெட்டை பிரிட்டாஷ் ஏர்வேஸ் பேரில் விற்பது தான் கோட் ஷேரிங். ஒவ்வொரு விமான நிறுவனத்துக்கும் ஒரு சர்வதேசக் குறியீடு (கோட்) உண்டு – BA என்றால் பிரிட்டாஷ் ஏர்வேஸ் என்பது போல்.

அடுத்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்துக்கு தன்னுடைய குறியீட்டோடு டிக்கட் விற்கும் போது, பயணிகள் ஏமாந்து போக வாய்ப்பு உண்டு. அட, நம்ம பிரிட்டாஷ் ஏர்வேஸ் ஆச்சே, லட்சணமான ஏர் ஹோஸ்ட்ஸ் பொண்ணு அழகாகச் சிரித்து பக்கார்டி ரம் எவ்வளவு கேட்டாலும் குடிடா ராஜா குடி என்று கிண்ணத்தில் ஊற்றித் தருவாளே, நல்ல சேவை கிடைக்குமே (லண்டன் – சென்னை ப்ளைட்டில் சேவை – இடியாப்பம் எல்லாம் உண்டு. மெனுகார்ட் தமிழில்) என்று டிக்கெட் வாங்கி விமானத்துக்குள் குஷியாக நுழைந்தால் அது ரஷ்ய ஏரோஃப்ளோட் ஆக இருக்கும்! நடுவயசு ரஷ்ய மாமி ஹோஸ்டஸாக வந்து ஹெட்மிஸ்ட்ரஸ் பார்வை பார்த்து, கொஞ்சம் ஓட்கா கிடைக்குமா மாமி என்று கேட்டால் உதைப்பேன் படுவா .. பேசாமப் பச்சை வெள்ளம் குடிச்சுட்டு சீட்டுலே தாச்சுக்கறியா இல்லே வெளியே தள்ளிவிடட்டுமா என்பது போல் கடுகடுப்பாள்.

இது இப்படி இருக்க, மேற்கில் பிரபலமான சிக்கன விமான சேவை இந்தியாவுக்கும் வருகிறதாம். அங்கே ஈஸிஜெட் போன்ற இப்படியான பட்ஜெட் ஏர்லைன்ஸ்கள் மும்முரமாகத் தொழிலில் இருப்பதைப் பார்க்கலாம். இந்தியாவில், ஜப்பானிய உதவியோடு, டெக்கான் ஏர்லைன்ஸ் என்ற சிக்கன விமான சேவை அறிமுகப்படுத்தப்படுமாம்.

இப்படிப்பட்ட சிக்கன சேவை விமானங்களில் டிக்கட் விற்கும்போதே, நல்லா மூக்கு முட்ட வூட்டுலேயே வயறு நிறையக் கொட்டிக்கினு வந்துடு நைனா என்று சொல்லி விடுகிற வழக்கம் உண்டு.

இந்தியாவில் சிக்கன விமானப் போக்குவரத்து, அதுவும் மத்திய அரசு நடத்தப் போகிற சேவை என்றால் மாய்ந்து மாய்ந்து கக்கூசிலிருந்து கடலை மிட்டாய் வரை எல்லாவற்றிலும் இந்தியில் எழுதி வைப்பார்கள்.

என்னதான் சிக்கனம் என்றாலும் இந்தியாவில் விமானப் பயணக் கட்டணம் சாமானிய மக்களும் விமானம் ஏறக்கூடிய விதத்தில் குறையப் போவதில்லை. நடுத்தர வர்க்கம் வேண்டுமானால் இனிக் கொஞ்சம் கூடுதலாக விமானம் ஏறலாம்.

குண்டூரில் மிளகாய் வற்றல் சரக்குப் பிடிக்க ஆந்திரா போகும் விருதுநகர் அண்ணாச்சியும், திருநெல்வேலி வெல்ல மண்டிக்காரரும், லீவ் டிராவல் கன்சஷனில் பறக்கும் வங்கி ஊழியர் குடும்பமும், சுமாராகப் போன முதல் படத்தில் க்ரூப் டான்ஸ் ஆடி, அடுத்த லோ பட்ஜெட் படத்தில் இரண்டாம் கதாநாயகியாகத் தேர்வாகிப் பொள்ளாச்சிக்குப் பறக்கும் நடிகையும் தவிர வேறு கூட்டத்தை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

நமக்கு வேண்டியதெல்லாம் முத்தநேந்தலில் இருந்து சிவகங்கை போக வர இன்னும் நிறைய குட்டிபஸ்கள், கூட்டம் குறைந்த த்ரீ டயரில் காலை நீட்டிப் படுக்க வசதியான ரயில் வண்டிகள், மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூடக் கேட்காத ஆட்டோ ரிக்ஷாக்கள் ..

தக்காண ஏர்லைன்ஸ் இதற்கெல்லாம் பிரயோஜனப்படாது.

சீட்டுக் கிழித்தபின் சிக்கனமாய் இந்தியில்
கூட்டம் தலையெண்ணிக் குர்னாம்சிங்க் – ஓட்டச்
சமொசாவும் கெட்டிலில் சாயுமாய் நாயர்
விமானம் பறக்குது பார்.

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

பின்குறிப்பு

முன்னால் இட்ட இரு வெண்பாக்களில் தளைதட்டுதல் குறித்து எனக்குத் தனிமடல் எழுதிய கனடா திரு.ஜெயபாரதனுக்கு நன்றி.

மாமுன் நிரை, விளமுன் நேர், காய் முன் நேர், விளங்காய் வரலாம் – விளாங்காய் வரக்கூடாது, பொழிப்பு மோனை, இறுதிச் சீரில் நாள், மலர், காசு, பிறப்பு என்றெல்லாம் நினைவில் வைத்திருப்பது, உரைநடையில் தொடங்கி மேலே போய்ச் சட்டென்று வெண்பாவுக்கு டிராக் மாறும்போது சில தடவை காணாமல் போய்விடுகிறது.

இதோ, திருத்தப்பட்ட வெண்பாக்கள்.

‘பாவத்தின் சம்பளம் ‘ பாதியில் வ்ிட்டவர்
‘மீதத்தை நாளைக்கே ஓதலாம் – வேகமாப்
போகணும் போராட்டம் போதலை ஊதியம் ‘
வாகனம் ஏறிடும்ஃபா தர்.

ஆயிரம்பொன் செல்லுமோ ஆவிநின்ற பின்னரே
காயிதக் குப்பையாய்ப் போகுமோ – வாயோயத்
தின்னும் நிலையில் திடுமென்றே ஓவியன்
என்னை வரைந்த படம்.

Series Navigation