சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!
மட்டுவில் ஞானக்குமாரன்

தூக்குத் தண்டனைக் கைதிக்கு
தீர்த்து வைக்கப்படும்
இறுதி விருப்பங்கள் போலவே
இங்குள்ள எல்லாமே.
விரிசல் விழுந்த
சுவரை
மூடி மெழுகிய சாந்து போலவே
வாக்குறுதிகள்.
கடினமான
ஒவ்வொரு எத்தனிப்புக்கும் பலன்
புச்சியம் ஆகிறபோது
விதிப் பயனைச் சொல்லியே
வினைப் பயனில் இருந்து
பெரும்பாலானவை
விலகிக் கொள்கின்றன.
பக்ரித் பண்டிகைக்காக
மாலையோடு காத்திருக்கும்
ஆடுகள் போலவே
இங்கே மனிதர்கள்?
சாவு
அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்
வருவதில்லை
குறைந்த பட்சம்
துப்பாக்கியோ
குத்தியோ
காத்தே இருக்கும்!
maduvilan@hotmail.com