சாய்ந்த மரம்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

புதியமாதவி.


என் மரம்
ஆயிரமாயிரம் இலைகளுடன்
என்னுடன் உறவாடிய என் மரம்
நேற்று பெய்த மழையில்
இன்று வீழ்ந்துகிடக்கிறது.

கைகளை மடக்கி
கால்களை விரித்து
வேர்களின் ரத்த நாளங்கள் நசுங்கி
எப்போதும் நான் அமரும்
என் சிமெண்ட் பெஞ்சில்
இப்போது தலைசாய்த்து
குப்புறவீழ்ந்து குற்றுயிராய்க் கிடக்கிறது.
அருகில் சென்று தொட்டுப்பார்த்தேன்.
வாடாத இலைகள்
என்னை-
என் கண்களை வருடுகின்றன.
எத்தனை நாட்கள்
இதன் மடியில்
எத்தனைக் கவிதைகள்
இதன் அடியில்
புதைந்து கிடக்கின்றன.
எனக்கே தெரியாத
என் மனக்குகையின் ஓவியங்கள்
இந்தக் கிளைகளின் அடியில்தான்
வெளிச்சத்திற்கு வந்தன.

இலைகள் வாடாத என் மரத்தை
எடுத்து நிமிர்த்தி
மீண்டும் மண்ணில் வளர்க்க
மறுக்கின்றான் தோட்டக்காரன்.
மழையுடனும் காற்றுடனும் போராடி
காயப்பட்ட என் மரத்தை
மண்ணின் மனிதர்கள்
கோடாரியால் வெட்டுகிறார்கள்.
சிதறி விழுகிறது
என் கவிதைக்கிளைகள்.
கண்ணீர் மழையில்
காற்றுடன் கிழிந்துக்கிடக்கிறது
என் கவிதைமொழிகள்.
வாடாத இலைகள்
கை அசைத்துச் செல்கிறது
மவுனத்தின் கடைசி மூச்சு
சத்தமாகச் சொல்கிறது
எங்காவது மரத்தின் கிளைகள்
மண்ணில் வேர்விடலாம் என்று.

—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை