சர்தார் சிங்கின் நாய்குட்டி

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

என் எஸ் நடேசன்


வைத்தியசாலையை மூடிவிடும் நேரம் ஆனதால் அவசரம் அவசரமாக இணையத்தளத்தில் ஏதாவது புதிய விடயங்கள் உண்டா என வேமாக பார்த்துக் கொண்டிருந்தேன். இலங்கையில் இருந்து வரும் செய்திகளை மாலையில் அறிந்து கொள்வது விரும்பத்தக்கது. காலையில் துன்பமான புதினங்கள் சில முழுநாளும் மனத்தை சஞ்சலப்படுத்தும்.

நேர்ஸ் பிலின்டா தன்தலையை எனது அறைக்குள் செலுத்தி கண்களால் என்னை வெளியே வரும்படி அழைத்தாள்.

இலங்கையரோ அல்லது இந்தியரோ வந்தால் மட்டும் இப்படி செய்வாள். அவுஸ்திரேலியரோ அல்லது வேறு நாட்டவரோ வந்தால் அவர்களிடம் பலகேள்விகளை கேட்டு நாய், பூனைகளின் உடல்நிறையை நிறுத்து அறிந்தபின் தான் என்னை அழைப்பாள்.

தோலின் நிறத்தை பார்த்து செய்கிறாள் என குறைகூறாத அளவு தொலைபேசியில் இலங்கை, இந்தியரின் தொனிகள் அடையாளம் கண்டு நேரடியாக என்னிடம் தொலைபேசியை தருவாள். இது அவள் தானாக ஏற்படுத்திய பழக்கம். மேலும் இது எனக்கு வசதியாக இருப்பதால் நான் இதை கண்டு கொள்வதில்லை.

வெளியே வந்து பார்த்தபோது தலுச்சிங்கும் அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார்கள். தலுச்சின் கண்களில் இருந்து கண்ணீர் தொடர்ச்சியாக கொட்டிக் கொண்டிருந்தது. திருமதி சிங்கின் முகத்தில் சோகம் இழையோடி இருந்தது,

‘ ‘என்ன நடந்தது தலுச் ‘ ‘ ? என்றேன்

‘ ‘டொக், எனது கொக்கோவை கொன்றுவிட்டார்கள். ‘ ‘ என கூறிவிட்டு விம்மி விம்மி அழுதான்.

கண்ணீரைத் துடைப்பதற்கு காகித ரிசூவை கொடுத்துவிட்டு திருமதி சிங்கை ஏறிட்டுப் பார்த்தேன்.

‘ ‘எங்கள் கொக்கோவை பக்கத்துவீட்டாரின் ரொட்வீலர் நாய் கொன்றுவிட்டது என்றார்.

‘ ‘உங்கள் வீட்டுவளவுக்குள் நடந்ததா ? ‘ ‘

‘ ‘ஆமாம் எங்கள் வீட்டின் முன்னுக்கு நடந்தது ‘ ‘.

ஏதோ சட்ட விடயமாக என்னை ஆலோசனை கேட்கிறார்கள், என நினைத்து ‘ ‘கவுன்சிலுக்கு முறையிட்டார்களா ? உங்கள் பக்கத்துவீட்டார் மேல்தான் தப்பு உள்ளது ‘ ‘.

‘ ‘எங்கள் கொக்கோவை கொன்ற நாய் ஏற்கனவே கவுன்சிலின் கட்டளைக்கு ஏற்ப யுத்தனேசியா செய்யப்பட்டது ‘ ‘. இந்த நேரத்தில் தலுச்சின் அழுகை குறைந்துவிட்டது. பிலின்டாவிடம் ‘ ‘கிளாசில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும்படி கூறினேன். தண்ணீரைக் குடித்த தலுச்சிடம், ‘ ‘நான் என்ன உதவி செய்ய முடியும் ? என வினவினேன்.

‘ ‘கொக்கோவை அடக்கம் செய்வதற்கு உதவவேண்டும் ‘ ‘ என்றான் தலுச்.

‘ ‘அதற்கென்ன நான் செய்கிறேன். எங்கே கொக்கோவின் உடல் ‘ ‘ ?

அதுவரையும் தனது உள்சேட்டின் உள்ளே வைத்திருந்த சிறு நாய்குட்டியை வெளியே எடுத்தான்.

7அல்லது 8 கிழமை வயதுள்ள சிறிய பொமரேனியன் இனத்தைச் சேர்ந்த நாய்குட்டி. பல மணித்தியாலத்திற்கு முன்பே இறந்திருந்ததால் குளிர்ந்திருக்க வேண்டிய அதன் சிறிய உடல் தலுச்சின் உடல் சூட்டில் வெம்மையாக இருந்தது.

அசையாத சிறுஉடல் மனத்தில் உறுத்தியது. சிறுமொட்டு இதழ் விரித்து, காயாகி, கனியாகி, விதையாக உலர்வது இயற்கையின் நியதி. இந்த தொடர்ச்சியை இடையில் நிறுத்திய பக்கத்துவீட்டு ரோட்விலரை நானும் மனதுக்குள் சபித்தேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்ரோல் செட்டில் எனது காருக்கு பெட்ரோல் அடித்துக் கொண்டிருந்தேன். ‘ ‘ஏய் டொக் ‘ ‘ என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

சிரித்தமுகத்தோடு லொறியின் மேல்தளத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தான் தலுச். ‘ ‘எங்கே பலகாலமாக காணவில்லை ? ‘ ‘ நான் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். அது முடிந்தவுடன் இருக்கும் வீட்டை விற்றுப்போட்டு அந்தக் காசை வங்கியில் போடப்போகிறேன். ‘ ‘

‘ ‘நல்ல விடயம். ரிட்டயர் பண்ண உத்தேசமா ? ‘ ‘

‘ ‘ஐம்பது வயதாகிவிட்டது. அதுசரி டொக் எனக்கு ஐம்பது வயதானபோது எனது மகன் சிறிய நாய் குட்டியைப் பரிசளித்துள்ளான். அதைப் பரிசோதிக்க உங்களிடம் கொண்டு வரவேண்டும். ‘ ‘ என்றான்.

‘ ‘எப்பவும் வரலாம் ‘ ‘ எனக் கூறி விடைபெற்றேன்.

தலுச் சீக்கிய மதத்தை சேர்ந்த பஞ்சாபி. இரண்டு தலைமுறைக்கு முன்பு இந்தியாவில் இருந்து தென் ஆபிரிக்காவில் போன்வர்கள். பலவருடங்களுக்கு முன்பு மெல்போணில் தலோச் குடும்பத்துடன் குடியேறினார்கள். ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். தலோச் வீடுகள் கட்டி விற்கும் தொழிலை செய்பவர். அத்துடன் குறிப்பிடத்தக்க அளவு செல்வம் சேர்ந்தவர். மேலும் தலுச்சுடன் பேசும்போது, அவுஸ்திரேலிய வீடுகள் விலைகள் எப்படி இருக்கும் ? மற்றும் பல பொருளாதார விவரங்கள் தெரியவரும். மேலும் தலுச் ஒளிவுமறைவில்லாமல் தனது பொருளாதார நிலையைப்பற்றி கூறிவிட்டு என்னையும் தன்னுடன் வீடுகட்டும் வியாபாரத்தில் ஈடுபடும்படி வற்புறுத்துவான்.

‘ ‘ஏய் டொக்! ஐந்துவருடத்தில், நீ இருபது வருடத்தில் சம்பாதிக்கும் பணம் பெறலாம் ‘ ‘. என கூறிமுடிப்பான். நீ மில்லியன் டொலர் தந்தாலும் தொழிலை மாற்றமாட்டேன் எனக் கூறியபின் என்னைக் கேட்பதில்லை.

தலுச்சை ஐந்து வருடத்துக்கு முன்பு சந்தித்தேன். ஒருமாலை நேரத்தில் சிறிய பொபரேனியன் நாயை எனது பரிசோதனை மேசையில் வைத்துவிட்டு.

‘ ‘எனது கொக்கோவை பெரிய நாய் கடித்துவிட்டது ‘ ‘ என்றான்.

செம்பட்டை நிறமான சிறிய நாய் மயிர்களை சிலுப்பிக்கொண்டு கம்பீரமாக நின்றது. முகத்தருகே கையை வைத்தேன். கொக்கோ எனது கையை நக்கிக்கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தது,

நம்பிக்கையுடன் எல்லா உடலின் எல்லாப் பகுதியையும் பார்த்தேன். முதுகுப்பகுதி ஈரமாக இருந்தது. அந்த இடத்தில் கிளிப்பரால் சேவ் செய்தேன்.

முதுகில் இரண்டு துளைகள் தெரிந்தன.

‘ ‘பெரிய காயம் இல்லை போலிருக்கு ‘ ‘ என கூறி அன்ரிபயரிக் கொடுத்து அனுப்பினேன்.

மூன்று நாட்களின் பின் பதற்றத்துடன் தலுச் கொக்கோவை தூக்கியபடி வந்தான்.

‘ ‘டொக் முதுகைப் பாருங்கள். எல்லா இடமும் கறுப்பாகிவிட்டது ‘ ‘

அப்பொழுது தான் எனக்குப் புரிந்தது. மற்ற நாய் முதுகில் கவ்வி இழுத்தபடியால் முதுகுதோலின் கீழ் உள்ள இரத்த குழாய்கள் அறுந்துவிட்டதால் இரத்த ஓட்டம் நின்றுவிட்டது. இதனால் தோல் மாம்பழத்தின் தோல் போல் அழுகத் தொடங்கிவிட்டது.

தலுச்சிடம் புரியும்படி கூறிவிட்டு ‘ ‘தோல்விழுந்து புண்ஆறுவதற்கு மாற பல மாதங்களாகும். இதற்குப் பணம் செலாவகும். ‘ ‘ என்றேன்.

‘ ‘காசைப்பற்றி கவலை இல்லை. வைத்தியம் செய்யுங்கள். ‘ ‘ என்றான்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் பின்னர் நான்கு நாட்களுக்கு ஒருமுறையும் பான்டேஜ் மாற்றி அழுகிய தோலை வெட்டி எடுத்து ‘ ‘சேலையின் ‘ ‘ போட்டு பல நாட்கள் கழுவினேன்.

மூன்று மாதத்தின் பின் புண்மாறியது. ஆனால் ஆறுமாதம் சென்ற பின்தான் கொக்கோவின் செம்பட்டை மயிர் திரும்பவும் வளர்ந்திருந்தது.

இதன்பின் மூன்றுவருடங்களிற்கு பிறகு சிறுநீரக கோளாறு காராணமாக கொக்கே என்னால் கருணை கொலை செய்யப்பட்டது. அந்த கொக்கோவை மறக்க முடியாமல் இந்த குட்டிக்கும் அதே பெயரை தலுச் வைத்திருக்க வேண்டும்.

ஒருகாலத்தில், சீக்கியர்கள் இறந்த குழந்தையையும் வாளால் வெட்டிவிட்டுத்தான் புதைப்பார்கள் எனச் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தலுச் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்ததால் மென்மையாகிவிட்டானோ ?.

—-

uthayam@ihug.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்