சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

பாலா


நான் பொதுவாக இது போன்ற பக்திப் பரவசமும், மாயமந்திரமும் நிறைந்த தொடர்களை பார்ப்பது கிடையாது! நேற்று (30-1-2005) இரவு பொழுது போகாமல், என் மகள்களுடன் அமர்ந்து ‘ராஜ ராஜேஸ்வரி ‘ தொடரைப் பார்த்தேன். இதை விட சிறப்பாய் மக்களை முட்டாளாக்க முடியாது என தோன்றுமளவுக்கு, பக்தி உணர்வை காமெடி ஆக்கும் வகையில், பல ‘திடுக் ‘ காட்சிகள் கொண்ட சூப்பரான ஒரு தொடர் இது! பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உதயமானவர்கள்(!), இது போன்ற மூட நம்பிக்கைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுவது தான், கேலிக்கூத்தின் உச்சக்கட்டம்! வியாபார நோக்கு அவசியம் தான். ஆனால், நம்பத்தகாத வகைக் காட்சிகளை, உலகம் முழுதும் பார்க்கும் டிவியில், வரையறை இல்லாமல் வாராவாரம் ஒளிபரப்பி இலாபம் ஈட்ட வேண்டுமா என்பதே கேள்வி!

இத்தொடரை பார்ப்பதன் விளைவாக என் மகள்கள் பக்தி நிறைந்தவர்களாக ஆகிறார்களோ இல்லையோ, சீக்கிரமே ‘Missile Technology ‘ பற்றி சந்தேகங்களை கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! நேற்று இத்தொடரில், நீலி என்ற நல்ல ஆவிக்கும், மாயச்சாமி மற்றும் வள்ளி என்ற இரண்டு தீயவர்களுக்கும் (கெட்டவரில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் — இதிலெல்லாம் நன்றாக சமத்துவம் காட்டுவார்கள்!) இடையே நடக்கும் மந்திர, தந்திர போராட்டத்தை விலாவாரியாக காண்பித்தார்கள். இப்போராட்டமே, ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோயிலில் இருந்து ராஜியை (தொடரின் கதாநாயகி) மண்ணெடுக்க விடாமல் (எதற்கு என்று எனக்குப் புரியவில்லை ? வீடு கட்டுவதற்காக இருக்கலாம்! ) தடுப்பதற்காகத் தான்!

வில்லன்கள் இருவரும் அக்னி வளர்த்து, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி, தங்கள் கைகளால் இடமும் வலமுமாக தலையைச் சுற்றி கோணங்கித்தனம் செய்தவுடன், ஒரு லேசர் வகை ஆயுதம் அக்னியிலிருந்து புறப்பட்டு, வானை நோக்கி சீறிப் பாய்கிறது!!! சாதாரணமாக வாய் ஓயாமல் பேசும் என் இரண்டாவது மகளிடமிருந்து (வயது 3) அடுத்த 20 நிமிடங்கள் பேச்சே இல்லை! அந்த ஏவுகணை கிளம்பிய மறுகணமே அதை உணர்ந்து விடும் நீலி ஆவி (நடிகை கீர்த்தனா!) குழந்தைகள் அலறும் வண்ணம் பயங்கரமாக ‘பேய் ‘ முழி முழித்து, தனது உள்ளங்கையிலிருந்து வெளிப்படும் ஓளியினால் கோயிலுக்கு (கோபுரத்தையும் சேர்த்து!) ஒரு Electromagnetic தடுப்பு வலையை உண்டாக்குகிறது. ‘கொடியவர்களின் கூடாரத்தில் ‘ உதித்த ஏவுகணை அத்தடுப்பு வலையில் மோதிப் பார்த்து சலித்து திரும்பி எங்கோ போய்விடுகிறது!

தீயவர்கள் இன்னொரு ஆயுதம் நெருப்பிலிருந்து தயாரித்து ஏவுகிறார்கள்! நீலி ஆவி பதில் ஆயுதம் உருவாக்கி அதை பஸ்பம் ஆக்குகிறது. அடுத்து, இருவரது சக்தியையும் ஒருங்கிணைத்து ஒரு கொடிய மிருக வடிவ லேசர் பொம்மையை உருவாக்கி, இம்முறை நீலியையே அழிக்க அனுப்புகிறார்கள்! என் மகள்கள் ‘அப்பா, நீலி செத்துடுவாளா ? ‘ எனக் கேட்டனர், நீலி ஏற்கனவே செத்த ஓர் ஆவி என்பதை உணராமல்! நானும் ‘நீலி காலி ‘ என்று தான் நினைத்தேன்! ஆனால் நீண்ட கூந்தல் கொண்ட நீலி ஆவியோ ‘உனக்கும் பெப்பே, உன் பாட்டனுக்கும் பெப்பே! ‘ என்ற வகையில், அந்த தாக்குதலையும் முறியடித்து ஒரு இடிச்சிரிப்பு சிரித்தது பாருங்கள், எனக்கே கதி கலங்கி விட்டது!! என் மகள்களோ பயமின்றி ரசித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் தான் வாராவாரம் பிசாசையும், பூதத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!!!

அதற்கடுத்து, நீலி ஆவி நேராக கொடியவர்கள் முன் அகாலமாகத் தோன்றி, தாக்குதலை நிறுத்துமாறு அவர்களை எச்சரிக்க, அதை மதிக்காமல் திமிராகப் பேசும் இருவரையும், ‘டொய்ங் ‘ என்ற சத்தத்துடன், காணாமல் போக வைக்கிறது! அடுத்த வாரம் மாயச்சாமியும், வள்ளியும் மறுபடியும் உயிர் பெற்று விடுவார்கள் என்று என் மூத்த மகள் அடித்துக் கூறினாள்! இது போன்று பல சீரியல்கள் அவள் பார்த்ததால் விளைந்த ஞானத்தின் பயன்!!! அதே சமயம் கோயிலில், நான் மேலே குறிப்பிட்ட தொடரின் கதாநாயகி ராஜி, பக்திப் பரவசத்துடன், கண்ணில் நீர் மல்க, கோயிலில் எந்த இடத்தில் மண் எடுத்தால் நல்லது என்றுரைக்குமாறு கருப்புசாமியிடம் கோரிக்கை விடுக்கிறாள். இத்தொடரில் முணுக்கென்றால் கேட்டவரின் முன் பிரத்யட்சம் ஆகும் தெய்வம், இம்முறை (for a change) ராஜி முன் தோன்றாமல், கருப்புசாமியின் அருவாள் பதித்த இடத்தைச் சுற்றி ஒரு லேசர் ஒளி வட்டம் இட்டு, அவ்விடத்திலிருந்து மண் எடுக்குமாறு ஸிம்பாலிக்காக உணர்த்துகிறது!!! ராஜி மண்ணை எடுத்து ஒரு குடத்தில் இட, இதற்கு மேல் சீரியலைப் பார்த்தால் எனக்குள்ள தெய்வ பக்தியும் போய், புத்தியும் பேதலிக்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்த நான், வீட்டை விட்டு ‘எஸ்கேப் ‘ ஆனேன்!!!!

இத்தொடரின் காட்சிகளில் தெரியும் தொழில்நுட்பம், அந்தக் காலத்து மகாபாரதத் தொடரில் வருவது போல் இல்லாமல் (ஒரு டிவித்தொடர் லெவலுக்கு) much better எனத் தோன்றியது. ஆனாலும், ஸ்டாவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள், கற்கால டைனாசர்களை நம் முன் கொணர்ந்து நிறுத்த தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நாம் என்ன செய்கிறோம் பாருங்கள்! தொழில்நுட்பத்தை கேலிக்கூத்துக்கு துணையழைக்கிறோம்! ராஜ ராஜேஸ்வரியே துணை!

என்றென்றும் அன்புடன்,

பாலா

Series Navigation

பாலா

பாலா