சந்தேகத்துக்கு மருந்தில்லை (எனக்குப் பிடித்த கதைகள்- 37 -லா.ச.ராமாமிருதத்தின் ‘ஸர்ப்பம் ‘)

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

பாவண்ணன்


ஊரிலிருந்து வந்திருந்த பெண் நண்பரொருவர் மாலை நடையின்போது ‘சந்தேகம் என்றால் என்ன ? ‘ என்று ஒரு கேள்வியைக் கேட்டார். ‘தெரியாத ஒன்றைத்தான் சந்தேகம் என்று சொல்கிறோம் ‘ என்று சொன்னேன். நான் அதைப்பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்று ஆவலுற்றவராக என் முகத்தைப் பார்த்தார் நண்பர்.

‘இதோ வானம் . வானத்தைப் பற்றி ஆயிரம் தகவல்கள் உள்ளன. அதைப் பற்றி ஏதோ கொஞ்சம் நமக்குத் தெரியும். கொஞ்சம் தெரியாது. தெரியாத தகவல்கள் எல்லாமே நம்மைப் பொறுத்த வரையில் சந்தேகம்தான். சந்தேகத்துக்கு எல்லையில்லை. தகவல்களுக்கும் முடிவில்லை. ‘

‘அப்படியென்றால் வானத்தைப் பற்றி முழுக்கத் தெரிந்து கொள்ளவே முடியாதா ? ‘

‘முழுக்க என்கிற சொல் தீர்மானமான ஒன்றல்ல. வளர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றல்லவா ?. நமக்குத் திருப்தியுண்டாகிற வரை ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் ‘

நண்பர் சிறிது நேரம் கழித்து ‘நான் வானத்தைப் பற்றிப் பேசவில்லை. ஓர் ஆணைப் பற்றிப் பேசுகிறேன். பல ஆண்டுகள் பழகிய பிறகும் ஆணைப் பற்றிய தகவல்கள் தெரியாதவையாக எஞ்சியிருக்கக் கூடுமா ? ‘ என்று கேட்டார். ‘நிச்சயம் இருக்கலாம். ஆணைப் பற்றி மட்டுமல்ல, பெண்னைப் பற்றிய அறியாப் புதிர்களும் தெரியாதவையாக இருக்கலாம் ‘ என்றேன் நான்.

‘முழுக்க முழுக்கத் தெரிந்து கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கும் ? ‘ ஆவலுடன் என்னைப் பார்த்தார் அவர். ‘அது காலத்துக்கு அப்பாற்பட்டது. கூடுமானவரை தெரிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் ஒருவரைப் பற்றிய சித்திரத்தை இன்னொருவர் மனத்தளவில் வரைந்து வைத்துக் கொள்கிறோம். அது ஒரு பிடிமானம். ஒருவித நம்பிக்கை. இருவர் கூடி வாழ்வது இப்படிப்பட்ட நம்பிக்கையன் அடிப்படையில்தான் ‘

‘அப்படியென்றால் ஒருவரைப் பற்றிய சந்தேகத்துக்குத் தெளிவே இல்லையா ? ‘

‘ஏற்கனவே ஒருவரைப் பற்றித் தெரிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்ட கருத்துகளின் பின்புலத்தில் இச்சந்தேகத்துக்கான தெளிவைத் தேடலாம். ஆனால் இத்தெளிவை ஒருபோதும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. மாறுதலுக்குட்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம் ‘

‘ஏன் அப்படிக் குழப்புகிறீர்கள் ? ‘

‘மனம்தான் காரணம். முடுக்கி விட்டால் ஓடுகிற எந்திரமல்ல மனம். அது சுதந்தரமான இயக்கமுள்ளது. எந்த வரம்புக்கும் கட்டுப்படாதது. விதிக்கும் உட்படாதது. விலங்கைப் பழக்குவது போல மனத்தைப் பழக்கலாம். ஆனால் அது ஒருகட்டம் வரைக்கும்தான் சாத்தியமாகும். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் சுதந்தரம் வெளிப்பட்டே தீரும். அதனால்தான் ஆணையோ பெண்ணையோ ஒரு கட்டம் வரைக்கும்தான் தெரிந்து வைத்துக் கொள்ள முடியும். அவரவர்கள் மனங்களும் பழகிய செயல்பாடுகளை உதறிச் சுதந்தரமாக எம்பும் போது அந்தத் திசை புரிபடாமல் போகிறது. ‘

வெகுநேரம் பேசாமல் இருந்த நண்பர் பிறகு மெதுவான குரலில் ‘என் கணவர் அப்படித்தான் சுதந்தரமான வெளியை நோக்கிப் பறக்க விரும்புகிறார் போலத் தெரிகிறது. என்னைவிட தன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஓர் இளம்பெண்ணிடம் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் ‘ என்று குனிந்தவாக்கில் சொன்னார். அவரைக் காயப்படுத்திவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு ‘எதையும் உங்கள் ஊகத்தின் அடிப்படையில் சொல்லக் கூடாது ‘ என்றேன். ‘ஊரே சொல்லியாகி விட்டது. நான்தான் கடைசியாகச் சொல்கிறேன் ‘ என்றார் கசப்புடன் நண்பர். ‘பல சந்தர்ப்பங்களில் ஊகங்களின் அடிப்படையில் இல்லாததை இருப்பதாகச் சொல்லிச் சொல்லி, ஈடுபாடே தோன்றாதவர்கள் மனத்தில் கூட ஈடுபாட்டை விதைக்கிறவர்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி இருக்குமோ என்று நினைத்தேன் ‘ என்றேன். நண்பர் பேசவில்லை. மெளனமாகவே நடந்து வந்தார்.

இரண்டாண்டுகளில் அவர் விவாகரத்து பெற்றுக் கொண்டார் என்று கேள்விப்பட்டேன். ‘அவராவது சந்தோஷமாக இருக்கட்டும் ‘ என்று சொல்லி வடே¢டுச் சென்றாராம். ஆனால் அவர் நினைத்தபடி கணவர் இல்லை. தனிக்கட்டையாகவே காலம் கடத்தினார். நேரில் பார்த்த சந்தர்ப்பத்தில் கேட்ட போது ‘அப்பெண்ணோடு உண்மையிலேயே எந்த உறவும் இல்லை. வியாதிக்கு மருந்தளிக்கலாம். சந்தேகத்துக்கு எந்த மருந்தை அளிப்பது ? ‘ என்று விரக்தியாகச் சிரித்தார்.

ஒன்றுமில்லாததைக் கூட ஊதிப் பெருக்கிக் கசப்புடன் பிரிந்து போகிறவர்களும் உண்டு. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு ஈடு கொடுக்கிறவர்களும் உண்டு. எந்த ஒன்றையும் சரி, தப்பு என்று ஒற்றை வார்த்தையில் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. தள்ளவும் முடியாது. எல்லாவற்றுக்கும் அவரவர்கள் மன அமைப்புதான் காரணம். கடந்த இரண்டாண்டுகளில் என் மூன்று நண்பர்கள் தம் திருமண உறவை விவாகரத்துடன் முடித்துக் கொண்டு தனிமையில் வாழ்கிறார்கள். விரிசலுறும் இத்தகு உறவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. அது லா.ச.ராமாமிருதத்தின் ‘ஸர்ப்பம் ‘.

கதையில் அக்கா தங்கை இருவர் இடம்பெறுகிறார்கள். அக்கா மணம் புரிந்து கொண்டு எங்கோ தொலைவில் வசிக்கிறாள். பல ஆண்டுகளுக்கும் மேலாக எந்தத் தகவலும் இல்லை. அக்காவின் திருமணத்தில் தன் சுட்டித்தனத்தால் எல்லாரையும் கவர்ந்தவள் தங்கைக்காரி. மாப்பிள்ளைக்கு என்று எடுத்துச் சென்ற காப்பித் தம்ளர் கீழே விழுந்து சிதறியதும் குறுகுறுப்பே இல்லாமல் குனிந்து நக்கிக் குடித்தவள். சாந்திமுகூர்த்தத்துக்கு என்று ஏற்பாடாகியிருந்த அறையில் யாருக்கும் தெரியாமல் புகுந்து பலகாரங்களைத் தின்றுவிட்டுப் படுக்கையில் துாங்கி விட்டவள். அவள் வளர்ந்து பெரிசாகி, தன்னந்தனியாகத் தைரியமாக ரயிலேறி அக்கா ஊருக்குச் செல்கிறாள்.

அக்கா வீட்டில் விடுப்பு நன்றாகத்தான் கழிகிறது. ஆனால் கணவர் இல்லாத வேளையில் அம்மாவுக்கு விபத்து என்று தந்தி வந்திருப்பதாகச் சொல்லி அழுது புரண்டு தங்கைக்காரியை வண்டியேற்றி அனுப்பி விடுகிறாள் அக்கா. பயந்து கொண்டே வந்த தங்கைக்காரி ஊரில் சுகமாக இருக்கிற அம்மாவைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

அக்காவின் சந்தேகம் பூடகமாகவே இருக்கிறது. அது நிஜமா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் அப்படி ஒரு சந்தேகம் என்னும் முள் மனத்தைத் தீண்டியதும் எப்படிப்பட்ட நடவடிக்கைகளையெல்லாம் அது துணிந்து எடுக்கிறது என்பது விசித்திரமாக இருக்கிறது.

காடாய்ப் படர்ந்திருக்கிற மல்லிக்கொடி, மல்லிப் பூவில் ஆர்வம் காட்டும் தங்கை, அதை அலர்ஜி என்று ஒதுக்கும் அக்கா, கொழுந்திக்காக பூக்கட்டும் அத்திம்பேர், சமையலறையில் பாம்பு என்று சத்தமிட்டுப் பூக்கட்டிக் கொண்டிருப்பவர்களை அழைக்கும் அக்கா, அறுந்து கிடக்கும் தாம்புக்கயிறு என்று கதைநெடுக நிறையச் சூசகக் குறிப்புகள் விரவிக் கதையின் ஆழத்தை அதிகப்படுத்துகிறது. தாம்புக் கயிற்றைப் பாம்பு என்று நினைத்தவள் தங்கையின் உறவையும் பாம்பாக நினைத்திருக்கலாம். சாந்தி முகூர்த்தக் கட்டிலில் குழந்தைத் தனமாகப் படுத்துத் துாங்கியவள் உண்மையாகவே தனக்குப் போட்டியாக வந்து விடுவாளோ என்கிற அச்சம் அவள் மனத்தில் உருவாகியிருக்கலாம்.

எந்தச் சந்தேகத்தையும் ஒதுக்க முடியாது. அதே சமயத்தில் எந்தச் சந்தேகத்தையும் நிரூபித்து நிறுவி அழித்து விடவும் முடியாது. மனத்தின் அமைப்பு அப்படி.

‘இடும்பைகூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது ‘ என்று ஒளவையின் பாடல் வரி உண்டு. வயிற்றை விட மனமே இடும்பை மிகுந்தது என்று தோன்றுகிறது.

*

இசையின் ஏற்ற இறக்கங்களையும் நெகிழ்ச்சியையும் மொழியால் உணர வைத்தவர் லா.ச.ராமாமிருதம். ஜனனி, புத்ர, அபிதா ஆகியவை இவரது முக்கியமான படைப்புகள். மொழியைக் கையாளும் விதத்தில் இவரது நடை மிகவும் தனித்துவமானது. தமிழ்ச் சிறுகதைச் சாதனையாளர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். 1981 ஆம் ஆண்டில் மீனாட்சி புத்தக நிலையத்தின் வெளியீடாக வந்த ‘உத்தராயணம் ‘ என்னும் சிறுகதைத் தொகுதியில் ‘ஸர்ப்பம் ‘ இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்