சத்தியின் கவிக்கட்டு-24

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

சத்தி சக்திதாசன்


பாரதப் பார் கவி பாரதி

அடிமை விலங்கை
அறுத்தெறியச் சொன்னாய்
அழகான மொழி எம்மொழியென
ஆனந்தம் கொள்ளச் சொன்னாய்

பாரதம் தந்த
பாரதியே நீ
பார் வாழ் தமிழர்களின்
பா மொழியே !

நீ தந்த கவித் தமிழிலே
நீளமான இலக்கிய நதியிலே
நீச்சல் பழகும் குழந்தை நான்

பெண்களை விழிக்கச் சொன்னாய்
பேதையர் எனும் நாமம்
போக்கச் சொன்னாய்
புதுமைப் பெண்ணாய்
பூக்கச் சொன்னாய்

பாரதி நீ பார் கவி

சமுதாய மடமைகள் தனை
சாய்த்தவனே
சாதிக் கொடுமைகளை
சுட்டெரிக்கச் சொன்னவனே
சரித்திரத்தில்
சகாப்தம் படைத்தவனே

பாரதி நீ தமிழ்த்தேர்ச் சாரதி

பாப்பாப் பாட்டு
பாசமாய்ப் பாடியவனே
பாரத மாதாவின்
பாரதிப் புதல்வனே

தமிழாய் நீ பூத்தாய்
தரணியில் எம்மொழி காத்தாய்
தாய்மொழி இன்று
செம்மொழி
தனயன் நீ போற்றிய
தமிழ்மொழி

வறுமையில் உழன்றாய்
வாழ்க்கையை ரசித்தாய்
வறியவர் அவர்தம் இரக்க சிந்தையில்
வருத்தம் எதுவுமின்றி
விலையாய்க் கொடுத்தாய் சேவையை

சிந்திக்காத சமுதாயத்திற்காய்
சிறையினில் வாடினாய்

பாரதி நீ ஒரு பார் கவி

உயிரோடு நீ வலம் வரும்போது
உன்னை நினைத்திலார்
உலகம் முழுவதும் இன்று
உயர்த்திப் பிடிக்குது உன் புகழ்

நினவு தினமதில் மட்டும்
நினைத்திலேன் உன்னை
நீங்க மறுக்குது உன்
நினைவுகள் என் நெஞ்சத்தை

பரதி என் சிரம் உன்
பாதத்தில்
பாரினில் என்னுயிர் நிலைக்கும் வரை
பாட வேண்டும் நான் நின் புகழ்

0000

சிவந்த மண்ணும் சிவக்குமோ

சத்தி சக்திதாசன்

புரட்சி செய்தே சிவந்த மண் – இன்று
புல்லர்கள் புரிந்த கொடுமையால் மீண்டும் சிவப்பாகியதே
அரசியல் அறியா குழந்தைகள் அவர்கள், எப்படி
அழித்தாய் மூடா அவர்களின் வாழ்க்கையை ?
சோவியத் மண்ணில் இன்று இசைப்பது ஓர்
சோக ராகமே !
குடும்பத்தை இழந்து தவிக்கும் தாய் தந்தைகள்
குல விளக்குகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள்
கூட்டுறவின் வரைவிலக்கணம் வகுத்த ரஷ்யா
கூக்குரலிட்டு அழும் குரல் அதிர்க்குது உலகை
மனிதம் அழிந்ததோ அன்றி
மானுடம் தோற்றதோ;எங்கும் தேம்பல்கள்
மாலையின் சிவப்பு அந்த
மனிதரின் கண்களில் மறையாக் கோலம்
அவலம் கண்ட அந்த
ஆதவன்
ஆழியில் விழுந்தான்
மழலைகளின் பெருமையறியா உலகில் இனி
மறந்தும் உலா வரமாட்டேன் இது
மாலை நிலாவின் மனத்தினுள் சபதம்
உழைக்கும் உலகில் மறையா விளக்காய்
உதாரணமாய்த் திகழ்ந்த
உன்னத நாட்டின் மக்களோடு என் கண்களில்
உருளும் கண்ணீரும் காணிக்கையாகட்டும்

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation