சஞ்சிவினி மலைகள்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

ஆகேஷ்


கையில், நர்ஸ் எடுத்துக் கொடுத்த உறையை மாட்டிக்கொண்டு, தயாராகி வைக்கப்பட்டிருந்த கட்டிலுக்கு அருகே சென்றான்.

‘டாக்டர் ! என் குழந்தைக்கு ஏதும் ஆகிடாதில்ல ? ? ‘ கண்களில் மிரட்சியுடன், ஆஸ்பத்திரி துணிக்கு வெளியே தலை மட்டும் தெரிய, தன் நிலையையும் யோசிக்காமல் பிறக்காத தன் குழந்தையை பற்றி கேட்டாள் அந்தப் பெண்மணி.

‘உனக்கும், உன் குழந்தைக்கும் ஒண்ணும் ஆகாதும்மா. உனக்கு முழுசா மயக்க மருந்து கொடுக்கப் படல்லை. ஆகவே, இங்கே என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டே இருக்கப் போற ! ‘ என்று அவளிடம் பேசியபடி, அவள் அடி வயிற்றை நர்ஸ் எடுத்துக் கொடுத்த கத்தியால் நீளமாக ஒரு துளை போட்டான் டாக்டர் சிவா.

வெளியே வடியும் ரத்தத்தை ஒரு நர்ஸ் துடைத்துக் கொண்டு இருக்க, அடுத்த நர்ஸின் உதவியோடு சிவா அந்தப் பெண்ணின் பனிக்குடத்தில் இன்னொரு கத்தியால் ஒரு நீள துளையிட்டான். உடனே வெளியே பாய்ந்து வரும் பனிக்குட நீரை ஒரு சிறிய பாத்திரத்தில் பிடித்து ஒரு நர்ஸ் எடுத்துச் செல்ல, கர்ப்பப்பையை நோட்டம் விட்டபடி,

‘ஸ்கால்பல் ‘ என்று கை நீட்டினான் டாக்டர் சிவா.

மெதுவாக அவள் கர்ப்பப்பையின் மெல்லிய சதையை வெட்டி, உள்ளேயிருந்து வெளியே வரத் துடித்துக் கொண்டு இருக்கும் அந்தப் பிஞ்சு உயிரின் தலையை மெதுவாக பிடித்து வெளியே இழுக்க, கூடவே வந்த ரத்த்தையும் கசடையும் துடைத்துக் கொண்டு இருந்தாள் அருகில் இருந்த நர்ஸ். தொப்பிள் கொடியின் கடைசி தொடர்பை வெட்டி, ரத்தத்தால் குளிக்கப்பட்டிருந்த அந்த குழந்தையை தூக்கி, ‘பாரும்மா!!!, உன் பெண் குழந்தையை ‘ என்று லேசாக காண்பித்து விட்டு, அந்த பிஞ்சை நர்ஸிடம் ஒப்படைத்தான் டாக்டர் சிவா.

அதுவரை, கட்டிலின் கீழ் பாகத்தில் நடப்பது தெரியாமல் மறைக்கப் பட்டிருந்த அந்தப் பெண், தன் குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினாள்.

தையல்லை போட்டு விட்டு, கையுறையை களையத் தொடங்கிய போது, லேசான மயக்க நிலையிலும் அந்தப் பெண் மெதுவாக கையெடுத்து கும்பிட பிரயாத்தனப்படுவது தெரிந்தது.

‘ஹே ! ஹே ! இருக்கட்டும்மா. எப்படியோ, உன் இதய நிலைமையை கவனத்தில் கொண்டு குழந்தை வேணாம்னு சொல்லியும் கேட்காம ஒரு அழகு தேவதையை பெற்றெடுத்துத்த. அது போதும்மா! ‘ என்றபடி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து தன் அறைக்கு நடக்கத் தொடங்கினான் சிவா.

அந்தப் புது உயிரை எடுத்து நர்ஸின் கையில் கொடுக்கும் போது தனக்கு லேசாக உடம்பு நடுங்கியது போல் பட்டது சிவாவுக்கு. இது ஒண்றும் புதிதல்ல, ஒரு புது உயிரை இவ்வுலகுக்கு கொண்டு வரும் போதோ, இல்லை ஊசாலிடிக் கொண்டு இருக்கும் ஒரு உயிரை இவ்வுலகுக்கு மீண்டும் இழுத்துக் கொண்டு வரும் போதோ இந்த புல்லரிப்பு தோன்றத்தான் செய்கிறது இன்னும். தானே கடவுள் என்பதை அறிய வைப்பது யோகம் என்று பெரியோர் சொல்வது உண்மையெனில், தான் தினமும் செய்வது யோகம் என்றே பட்டது சிவாவுக்கு. பலரின் உயிரை தான் கையாளுவதால் தானும் ஆண்டவந்தானே என்று தோன்றியது சிவாவுக்கு.

தன் அறைக்குள் நுழைந்து சில விநாடிகளுக்குள் நர்ஸ், ‘டாக்டர் ! டாக்டர் ‘ என்று கத்தியபடி ஓடி வந்தாள். ‘டாக்டர்! பிரசவம் பார்த்த அந்தப் பெண்ணுக்கு இழுப்பு வந்த மாதிரி இருக்கு டாக்டர் ‘.

தன் கனவுலகுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, நடப்புலகுக்கு திரும்பிய சிவா நர்ஸ் பின்னாடி ஓடினான். இரண்டு நர்ஸ் அந்தப் பெண் துள்ளாமல் இருக்க, தையல்கள் பிரியாமல் இருக்க பிடித்துக் கொண்டு இருக்க, சிவாவின் அனுபவம் வாய்ந்த கண்கள் மேலே இருந்த மானிட்டரை நோக்கின. அவள் இதயத் துடிப்பு படு வேகமாக குறைந்து வருவது துல்லியமாக தெரிந்தது.

‘சே ! உன் உடம்புக்கு இன்னொரு உயிரை ஜனிக்கும் சக்தி இல்லைன்னு சொல்லியும், என்ன வைராக்கியம், என்ன நம்பிக்கை இந்த தாய்மைக்கு. என்ன ஆனாலும் நான் ஒரு குழந்தையை பெற்றெடுத்தே தீருவேன்னு பிடிவாதாம். இப்ப இவ உயிருக்கே ஆபத்து ! ‘ என்று எண்ணியபடி,

அவள் இதய வால்வுகளை பெரிதாக்கி, இதயத் துடிப்பை அதிகரிக்கும் மருந்தை ஊசியில் ஏற்றினான் சிவா.

எல்லோர் கண்களும் மானிட்டரை நோக்கி இருக்க, எல்லோரையும் ஏமாற்றி விட்டு அந்தப் பெண் இவ்வுலகை விட்டு சென்று இருப்பதை அந்த மானிட்டர் காட்டியது. உடனே, மின்சார ஷாக் கொடுக்கும் இயந்திரத்தை அந்தப் பெண்ணின் இதயத்தின் மேல் வைத்தான்.

‘எல்லோரும் தள்ளிக்கோங்க ‘ என்றபடி மின்சார சக்தியை அதிகரித்தபடி மூன்று ஷாக்குகள் கொடுத்தான் சிவா. அந்தப் பெண்ணின் உடம்பு தூக்கி தூக்கி போட்டதே ஒழிய அவள் இதயத்தில் எந்த வித அதிர்வுகளும் இல்லை.

ஆண்டவா, இது என்ன கொடுமை. நீ தான் எல்லாவற்றையும் உண்மையிலேயே இயக்குபவன் என்பதை எனக்கு வலியுருத்திகிறாயா ? என் விநாடி நேர அகம்பாவத்தை அழிக்க இப்படியொரு காட்சியை அரங்கேற்றாதே தயவுசெய்து. சிவாவின் மனம் அழுதது. காலுக்கு கீழே தரை நழுவது போல் பட்டது சிவாவுக்கு.

இல்லை, இல்லை, ஒரு உயிரை அவ்வளவு எளிதாக நீ எடுத்துச் செல்ல நான் அனுமதிக்க மாட்டேன். அதற்காக நான் படிக்க வில்லை, அதற்காக இந்த கடமையை நான் ஏற்கவில்லை.

‘இவள் இதயத்தை திறக்க தயார் செய்யுங்கள் ‘. அவன் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு ரோபோக்கள் போல் இயங்கினார்கள் நர்ஸ்கள். சில நிமிடங்களில், அவள் இதயத்தின் மேல் துளையிட்டு, இதயத்தை பாதுகாத்து கொண்டிருக்கும் எலும்புகளை ஜாக்கிரதையாக நகர்த்தி, அவள் இதயத்தை அடைந்து இருந்தான் டாக்டர் சிவா.

தன் வேலை முடிந்தது போல் தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறிய சதைப் பிண்டத்தை, தன் கையால் பிடித்து அவகாசம் விட்டு விட்டு அழுத்தத் தொடங்கினான் சிவா. சில நேரங்களில், இதயம் இப்படித்தான் நின்று போகும். இந்த மாதிரி நேராக அதற்கு அழுத்தம் கொடுக்கும் போது தன் நிலை உணர்ந்து, உயிர் வந்து இதயம் துடிக்கத் தொடங்கலாம்.

‘துடி ! துடி! ‘ என்று தன் உதடுகள் முணுமுணுக்க தன் முயற்சியில் மூழ்கி இருந்தான் சிவா. சுற்றியிருந்தவர்களின் கண்களில் நம்பிக்கை விடை பெற்றிருந்தது துல்லியமாக தெரிந்தது. இல்லை, இவர்கள் கண்களை பார்க்கக் கூடாது, அந்தப் பிஞ்சுக் குழந்தை தாயில்லாமல் வளரும் அவலத்தை நான் அனுமதிக்க மாட்டேன் என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் சிவா.

நான்காவது முறை அழுத்திய போது, ‘ப்ளக் ‘ என்ற சப்தத்துடன் ரத்தம் தத்தம் குழாய்களில் பாய்ந்து ஓட, இதயம் அந்த சுகமான ‘லப் டப் ‘ ஓசையுடன் துடிக்கத் தொடங்கியது.

‘ஹுர்ரேய்ய்ய்ய்ய் ! ‘ என்ற சந்தோஷ கரகோஷத்துடன் சுற்றியுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். ஒரு உயிரை காப்பாற்றிய சந்தொஷம் எவ்வளவு உயர்வானது.

திறக்கப்பட்ட பாகங்களை மெதுவாக தைத்து சரி செய்து விட்டு, வெளியே வந்தான் சிவா. வெளியே இருந்த அவள் உறவினர்கள், ‘டாக்டர் ? ? ‘ என்று ஆர்வமாக, ஒரு வித பயத்துடன் அவன் முகத்தை நோக்கினார்கள்.

‘நான் தான் ஒண்ணும் ஆகாதுன்னு சொன்னேன் இல்ல ? தாயும் சேயும் நலம். குழந்தையை இப்ப நீங்க பார்க்கலாம். அந்தப் பெண்ணை கொஞ்ச நேரம் கழித்து பார்க்கலாம் ‘ என்றபடி நடக்கத் தொடங்கினான், அவர்களின் நன்றியை கண்ணீர் குவியலாக ஏற்றபடி.

இதுதான் இந்த வேலையின் அதீத சந்தோஷம். பலரின் வியாதியை நிவர்த்தி செய்வதும், இந்த மாதிரி பல உயிரை மரணத்தின் வாயிலில் இருந்து இழுத்து வருவதும் தெய்வம் தந்த வரம். இதோ இவர்கள் சந்தோஷத்திற்கு முன் அந்த ஆறு மணி நேர ஆபரேஷன் போராட்டம் எம்மாத்திரம் என்று தோன்றியது சிவாவுக்கு.

தன் அறையில் வந்து அமர்ந்த சிவாவுக்கு, ஒரு நாள் அவன் இன்ஜினியர் நண்பன் ராஜேஷ் கேட்டது இப்பொழுது நியாபகத்துக்கு வந்தது.

‘ஏண்டா சிவா. எல்லா பேஷண்ட் கிட்டேயும் இவ்வளவு நம்பிக்கையா பேசற. பெரிய ஆபரேஷன், சீரியஸ் கேஸ்னாலும் ஒண்ணும் ஆகாதுன்னு பொய் சொல்ற, எப்படிடா ? ? ‘

சிரித்தபடி பதிலளித்தான் சிவா, ‘ இது பொய்யில்லை சிவா. காரணம் வைத்தியம் செய்யறது நாங்க தான்னாலும், எங்களுக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கு. நாங்க இது தேறாதுன்னு விட்ட பல கேஸ்கள், சில மணி நேரத்தில் எழுந்து உட்கார்ந்து எப்போ டாக்டர் வீட்டுக்கு போலாம்னு கேட்டிருக்கு. இதுக்கு என்ன சொல்ற ? ‘

தன் ட்தஸ்கோப்போடு விளையாடிக் கொண்டிருந்த ராஜேஷை பார்த்தான் சிவா.

‘ அது மட்டுமில்லை ராஜேஷ். உன் வேலையில்ல, ஒரு ப்ராஜக்டை முடிக்க முடியாதுன்னு தெரிஞ்சுதுன்னா நேரா உடனே சொல்லிடலாம். அதே மாதிரி, நீங்க தேற மாட்டாங்கன்னு நாங்களே சொல்லிட்டா, அந்த பேஷண்ட்டோட நிலைமையை அதுக்கு அப்புறம் யோசிச்சு பாரு. நாங்க கொடுக்கற மருந்தை விட, எங்க வார்த்தைக்கு சக்தி அதிகம்டா. எங்க கடைசி நம்பிக்கை எங்களை விட்டு போகற வரைக்கும் ஒரு பேஷண்ட்டை கை விட மாட்டோம்டா.

ஊம்ம்.. என்னைப் பொருத்த வரை உலகத்தில்அதீத பாசிடிவ் மக்கள்னா, அது நாங்க டாக்டர்ஸ் தான்டா ! ‘

மெதுவாக தன் கோட்டை கழட்டி கதவில் மாட்ட எழுந்து சென்ற சிவாவின் கண்களில் அந்தப் பெண்ணின் அப்பாவும், அவரது ஒரு உறவினரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவரது கையில் ஒரு பத்திரிகை இருந்தது. சிவா அருகில் இருக்கும் அறையில் நிற்பது தெரியாமலேயே பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘பார்த்தீங்களா சார் இந்த அநியாயத்தை. நாம நம்பி நம்ப உயிரையே ஒப்படைக்கும் டாக்டர்களே இப்படி அநியாயம் செய்ய ஆரம்பிச்சா, என்ன சார் ஆகப் போகிறது இந்த உலகத்துக்கு ? ? ஊம், எல்லாம் கலி காலம். செக்ஸ் டாக்டராம். பெரிய தீவு வைத்து இருக்கானாம் இந்த அக்கிரமத்துக்கு. யாரை நம்புறதுன்னே தெரிய சார் உலகத்துலே ! எந்த புத்தில பாம்போன்னு இருக்கு. இப்ப பாருங்களேன், நம்ம வீட்டு பெண்களை நம்பி டாக்டரை பார்க்க உள்ளே அனுப்பிட்டு, மனசு திக்குன்னு திக்குன்னு வெளியே உட்கார வேண்டி இருக்குன்ன பார்த்துக்கங்களேன். உலகத்திலேயே புனிதமான தொழிலுன்னு சொல்லுவாங்க, இப்ப யாரு இந்த தொழில்ல உண்மையா இருக்கான்னு சொல்லுங்க !!! ‘

லேசாக நெஞ்சு வலிப்பது போல் இருந்தது சிவாவுக்கு. இது போல் வசனத்தை, குற்றச்சாட்டை சில நாளாக கேட்டுத்தான் வருகிறான். ஆனால், இன்று தான் இருந்த களைப்பான நிலையில், காதில் விழுந்த இந்த வார்த்தைகள் நெஞ்சில் நேரே ஈட்டி பாய்ந்தது போல் உணர்ந்தான் சிவா. உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தான். சே ! ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதை எப்படி உபயோகித்து கொள்கிறார்கள். ஒவ்வொரு பேஷண்ட்டையும் தன் உறவினர் போல், தன் மகள் மகன் அப்பா அம்மா போல், ஏன் சில நேரம் தன் உயிரையே காப்பாற்றுவது போல். போராடி வைத்தியம் பார்த்து, ஆபரேஷன் செய்யும் தன் போல் டாக்டர்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம். இந்த வேலை ஒரு யாகம் போல் அல்லவா செய்து வருகிறோம், ஒரு நிமிடத்தில் சந்தேகித்து நன்றியில்லாமல் அசிங்கமாக பேசி விடுகிறார்களே என்று ஆயாசமாக வந்தது சிவாவுக்கு. தன் வலியை போக்குபவன் இவனே, தன் உயிரை காக்கப் போகிறவன் இவனே , தான் நினைவில்லாமல் இருந்தாலும் தன் கவனித்து வைத்தியம் செய்யப் போகிறவன் இவனே என்று கடவுளிடம் நம்பிக்கையோடு தன்னை ஒப்படைப்பது போல் வருகிறவர்கள், எப்படி தன் ஆரோக்கியம் கைக்கு வந்த உடனே எப்படி நாக்கி நரம்பில்லாமல் பேச முடிகிறது இவர்களால்.

எங்கோ ஏதோ பதர்கள் இருப்பதால், இந்த வேலைக்கே அவப்பெயரா. சே ! இவர்கள் பேச்சுக்காக ஆண்டவனால் ஒப்படைக்கப்பட்ட இந்த புனித தொழிலின் மேல் இருக்கு தனது நேசிப்பை குறைத்துக் கொள்வதா !

தன் தலையை லேசாக உலுக்கிக் கொண்டு தன் எண்ணங்களை சீர்படுத்திக் கொண்டான் டாக்டர் சிவா. வீட்டுக்கு கிளம்பலாம் என்ற எத்தனித்த நேரத்தில், ‘டாக்டர் ! டாக்டர் ‘ என்று ஓடி வந்தாள் ஒரு நர்ஸ்.

‘டாக்டர் ! அந்த ஏழாம் நம்பர் பெட்டில் இருக்கும் பைபாஸ் பேஷண்ட்டுக்கு திடிரென்று கார்டியாக் அரெஸ்ட் மாதிரி இருக்கு டாக்டர். வேற யாரும் இப்ப ட்யூட்டியில் இல்லை. அதான்……. ‘என்று இழுத்தாள்.

‘ஓ! பரவாயில்லை . நீங்க ஆபரேஷனுக்கு தியேட்டரை ரெடி பண்ணுங்க. ‘

தன் கோட்டை எடுக்கும் போது அநாவசிய சந்தேகங்களை களைந்து விட்டு, உயிர் காக்கும் தன் கடமைக்கு கிளம்பினான் டாக்டர் சிவா.

***

venkateshan.r@philips.com

Series Navigation