சங்கச் சுரங்கம் – 11: எழு கலத்து ஏந்தி . .

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

சு. பசுபதி, கனடா


நண்பர் நாதன் புதிதாகத் தொடங்கியுள்ள உணவகத்திற்குப் போன வாரம் நான் சென்றிருந்தேன். என்னை உற்சாகத்துடன் வரவேற்ற நாதன் உணவகத்தின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். பிறகு, “ குழிகளுள்ள ‘எவர்சில்வர்’ உணவுத்தட்டுகளுக்கு ‘ஆர்டர்’ கொடுத்துள்ளேன்; இன்னும் வரவில்லை. அதுவரை இப்படித்தான் சாப்பிட வேண்டும். ” என்று சொல்லி, என் கையில் ஒரு வட்டத் தட்டைக் கொடுத்தார்; அதில் சில சின்னக் கிண்ணங்களை வைத்து, அங்கே ஒரு சுயசேவை ( self-service ) மேஜையில் தயாராக இருந்த பல மதிய உணவு வகைகளை ‘ஒரு கை’ பார்க்கச் சொன்னார். நான் தட்டிலிருந்த கிண்ணங்களை எண்ணிவிட்டு, முகத்தைச் சுளித்தேன்; “ நாதன், முதலில் எனக்கு ஏழு கிண்ணங்கள் கொடும். பிறகுதான் சாப்பிடுவேன் ” என்றேன்.

நண்பர் முதலில் அதிர்ந்தவர் போல் இருந்தார்; பின்னர் சிறிது யோசித்துவிட்டுக் கலகலவென்று சிரித்தார். “சரி, சரி, புரிகிறது. சரியான தமாஷ் பேர்வழி , ஐயா, நீர். இன்று உணவில் கறி, கூட்டு, பச்சடி, பாயசம், ரசம், சாம்பார், தயிர் … ஆக மொத்தம் ஏழு முக்கிய ‘ஐடெம்’; தட்டின் நடுவில் சோறு. அதனால் தானே அப்படிக் கேட்டீர்?” என்றார். “ அதெல்லாம் ஒன்றுமில்லை. சங்க காலத்தில் ஒருவர் என் ஜாதியினர் ஒருவருக்கு ஏழு கிண்ணங்களில் தான் உணவு கொடுத்தார். அதனால் தான் . ” என்றேன். நண்பர் புருவங்களை உயர்த்தினார். “ அது என்ன, ஜாதிப் பிரச்சினை? இங்கேயும் ஜாதியா? அட, கண்றாவியே?” என்று அங்கலாய்த்தார். நான் “ சரி, அந்த நிகழ்வைப் பற்றி விளக்கும் பாடலைச் சொல்கிறேன், கேட்கிறீர்களா? “ என்று சொல்லி, நண்பரின் பதிலுக்குக் காத்திராமல், அவசரம், அவசரமாக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து, அவரையும் கூடவே பக்கத்தில் உட்கார வைத்து, குறுந்தொகைப் பாடல் ஒன்றையும் அதன் விளக்கத்தையும் விவரித்தேன். நீங்களும் கேளுங்களேன்!

பொருள் ஈட்டச் சென்றிருந்த தலைவன் மீண்டும் ஊருக்கு வந்தபின் தலைவியைப் பார்த்ததும், மிகவும் ஆச்சரியப் படுகிறான். வழக்கமாக, தன் பிரிவால் வருத்தத்தில் மூழ்கி இருக்கும் தலைவி இந்த முறை அப்படி ஒரு குறியும் இல்லாமல் அவனை வரவேற்றது அவனுக்கு பெருவியப்பைக் கொடுத்தது. ( உண்மையில், அவனுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் கூட என்றே சொல்லவேண்டும்! ) உடனே, தலைவியின் தோழியைக் கூப்பிடுகிறான். தன் பிரிவுக் காலத்தில், தலைவியை நன்கு ஆற்றுவித்து, துயரப் படாமல் இருக்கப் பல பரிந்துரைகள் செய்து, அதில் வெற்றியும் கண்டதற்குத் தோழிக்குத் தன் நன்றியைச் சொல்லி, அவளை மனதாரப் பாராட்டினான். ஆனால் தோழியோ, ‘ இதில் தன் பங்கு ஒன்றுமே இல்லை’ என்றாள். தான் எவ்வளவு முயன்றும் தலைவியின் துயர் சிறிதும் குறையாமல் இருந்ததாகவும், சில நாள்களாகக் காகம் ஒன்று வீட்டில் கரைந்த காரணத்தால், அவள் துயர் குறைந்தது என்றாள். ‘ காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளி ஒருவர் வருவார் என்று சொல்வது நம் வழக்கம் தானே? அதைச் சுட்டிக் காட்டி, தலைவியை சமாதானப் படுத்தினேன். அதனால், தலைவியும் அந்த விருந்தாளி தன் தலைவனாக இருக்கக் கூடும் என்று நம்பித் துயரம் தணிந்தவளாக இருந்தாள் ’, என்று தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.

“ பலம் மிகுந்த தேரை உடைய நள்ளியின் காட்டில், இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யுடன், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லின் சூடான சோற்றைக் கலந்து, காக்கைக்கு ஏழு கிண்ணங்களில் கொடுத்தாலும் அது சிறிய கைம்மாறே. ஏனென்றால், என் தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்திற்கு ஒரு நல்ல மாற்றாக, விருந்தாளி வருவான் என்று அறிவித்துக் கரைந்த காக்கைக்கு இந்த உணவாகிய பலி மிகச் சிறிய கைம்மாறே ஆகும் ” என்கிறாள் தோழி.

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே. ( குறுந்தொகை , 210 )

[ நள்ளி – கண்டீரக் கோப்பெரு நள்ளி; ஏழு வள்ளல்களில் ஒருவன், கானம் – காடு ( முல்லை நிலம்), அண்டர் – ஆயர்கள், தொண்டி – ஒரு துறைமுகப் பட்டினம், செல்லல் – துன்பம், பலி – காக்கைக்கு இடும் சோறு முதலியவற்றைப் பலி என்று குறித்தல் மரபு. ]

இந்தப் பாடலைப் பாடிய பெண்புலவரின் இயற்பெயர் ‘செள்ளை’. காக்கையைப் பற்றிச் சிறப்பாகப் பாடியதால், ‘காக்கை பாடினியார் நச்செள்ளையார்’ என்றே அவர் அழைக்கப் பட்டார்.

“ சுவையான பாடல்தான் . அது சரி, . . ஆனால் உங்கள் ஜாதி என்று ஏதோ சொன்னீர்களே? பாட்டில் அப்படி ஜாதியைப் பற்றி ஒன்றும் வரவில்லையே” என்றார் நாதன். “ காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடினதைக் கேட்டதில்லையா? அவர் வார்த்தையைப் பொய்யாக்கலாமா? ” என்றேன்.

( ஒரு குறிப்பு: ஏழு என்று இங்கே சொல்வது ஒரு மரபு என்கிறார் உ. வே. சாமிநாதய்யர். இந்த வழக்கிற்கு இன்னொரு எடுத்துக் காட்டு:

செருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளே மேனி பசந்து . ( திருக்குறள், 1278 )

“என் காதலர் என்னைப் பிரிந்து சென்றது நேற்றுத்தான் ; நானோ மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாள்களாகி விட்ட நிலையில் இருக்கின்றேன் ” என்கிறாள் தலைவி இந்தக் குறளில்.

நாலடியாரிலிருந்து இன்னொரு காட்டு:

. . . . கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீ தாயின்
எழுநூறும் தீதாய் விடும். )

“ இங்கே ஏழு என்றது மரபு என்றாலும், அந்த மரபை நாம் ஏன் துண்டிக்க வேண்டும்? அதனால் தான் , இங்கே சாப்பிட ஏழு கிண்ணங்கள் கேட்டேன். ஆமாம், நினைவிருக்கட்டும். இப்போதே எச்சரிக்கிறேன்! உங்கள் உணவகத்தில் விரைவில் ‘எவர்சில்வர்’ குழித்தட்டுகள் வந்தாலும், அவற்றில் ஏழு குழிகள் இருக்கிறதா என்று பார்த்துத் தான் இங்கே உணவருந்துவேன் !” என்று சொல்லி, ‘எழு கலம் எந்தி ‘, ஆவி பறக்கும் ‘வெஞ் சோறு’ , மற்ற உணவு வகைகள் இருந்த மேஜையை நெருங்கினேன்.

~*~o0O0o~*~

pas_jaya at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா