சக்தி சுரபி : உயிரி – சமையல் எரிவாயு கலன் அறிமுகம் – சமையலறைக் கழிவிலிருந்தே சமையல் எரிவாயு

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இன்று பரவலாக காணப்படுகிறது. ஒவ்வொரு தொழிற்துறையைச் சேர்ந்தவர்களும் தத்தம் தொழில்களால் சுற்றுச்சூழல் மாசடையக் கூடாது என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இது சமையலறைக் கழிவுகளுக்கும் பொருந்தும். சமையலறைக் கழிவுகளால் சுகாதாரக்கேடும் சுற்றுசூழல் மாசும் ஏற்படுகிறது. தொற்று நோய் கிருமிகள், அவற்றை பரப்பும் பூச்சிகள் அவற்றில் உற்பத்தியாகின்றன. சுற்றுப்புறங்களில் அசுத்த நாற்றம் பரவுவதுடன் நீர்நிலைகளும் மாசடைகின்றன. குறிப்பாக உணவுவிடுதிகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் இருக்கும் பெரிய சமையல் கூடங்களிலிருந்து பெருமளவு சமையல் கழிவுகளும், உண்ட உணவு மீதியாவதால் ஏற்படும் கழிவுகளும் சுகாதாரக்கேட்டினை விளைவிக்கின்றன. சுற்றுச்சூழலிலும் மாசினை ஏற்படுத்துகின்றன. கன்னியாகுமரி போன்றத் சுற்றுலா தலங்களிலும் பெரும் நகரங்களிலும் இவை பெரிய பிரச்சனையாகும்.

ஆனால் இந்தக் கழிவுப் பிரச்சனையை ஒரு ஆற்றல் அளிக்கும் மூலதனமாக மாற்றும் தொழில்நுட்பத்தினை விவேகானந்த கேந்திரத்தின் நார்டெப் (இயற்கை வள அபிவிருத்தித் திட்டம்) அறிமுகப்படுத்தியுள்ளது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலமாக சாண எரிவாயுக்கலன்களை நிறுவி பராமரிப்பதில் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள நிறுவனம் விவேகானந்த கேந்திரம். கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், தம் தொழில்நுட்ப ஆய்வுக்கூட ஆராய்ச்சி மூலமும் களப்பணி அனுபவங்கள் மூலமும் கழிவினை வளமாக மாற்றிட உருவாக்கியுள்ள வளங்குன்றா வளர்ச்சி தொழில்நுட்பமே- ‘சக்தி சுரபி’ ஆகும்.
‘சக்தி சுரபி’ எளிதில் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட ‘உயிரி-வாயு கலன்’ (Biogas Plant) ஆகும். இக்கலன் சமையலறைக் கழிவுகள் மற்றும் உணவு மீதிக் கழிவுகளை சமையல் வாயுவாக மாற்றுகிறது. அது மட்டுமல்லாமல் இக்கழிவுகளிலிருந்து எரிவாயு நீக்கப்பட்டப் பின்னர் கிடைக்கும் கழிவுத்திரவம் செறிவான ஊட்டச்சத்து மிக்க உரத்தன்மை கொண்டதாகும். குறிப்பாக காய்கறித்தோட்டங்களுக்கு அதனை நேரடியாகவோ அல்லது மண்புழு உரத்துடன் இணைத்தோ பயன்படுத்தலாம். இந்தச் சக்தி சுரபியின் மற்றொரு முக்கியத்தன்மை என்னவென்றால் இது ஒவ்வொரு நாளும் கால்நடை சாணத்தினை நம்பியிருக்கும் உயிரிவாயு கலனல்ல.
இந்த கலனில் சமையலறைக்கழிவைத்தான் என்றல்ல, ஸ்டார்ச் அதிகமாக இருக்கும் எந்த ஒரு உயிரிக்கழிவையும் (bio-waste) பயன்படுத்தலாம். எளிதில் கிடைக்கும் எண்ணெய் விதைகளைக் (புங்கம், வேம்பு போன்றவை) கூட பயன்படுத்தலாம். மாவு மில்களின் கழிவாக போகும் சோளம், மைதா போன்றவற்றைக் கூட இதற்கு இடலாம். இவை அனைத்திலிருந்தும் ‘சக்தி சுரபி’ உங்களுக்கு சமையலறை எரிவாயுவை சுரந்து அளிக்கும். ‘மிதவை டிரம் சாண எரிவாயுகலனின்’ வடிவமைப்பினை மாற்றி பல்வேறு பொருட்களிலிருந்தும் எரிசக்தியை அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள சக்தி சுரபி நகர-கிராம வேறுபாடின்றி பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
‘உள்ளே கழிவைச் செலுத்துங்கள்-கவலையை மறந்து எரிவாயுவை பயன்படுத்துங்கள்’ என்னும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கலன் நகரத்தின் வேக வாழ்க்கையினருக்கும் பயன்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இக்கலனை வீட்டுக்கூரையிலிருந்து சமையலறைக் கொல்லை வரை எந்த இடத்திலும் மிக எளிதாக நிறுவிட இயலும். மேலும் பயன்படுத்துவோரின் தேவைக்கேற்ப பல கொள்ளளவுகளிலும் (1/2 க்யூபிக் மீட்டர் முதல் 6 க்யூபிக் மீட்டர் வரை – அதாவது 500 லிட்டர் முதல் 6000 லிட்டர் வரை) கண்ணைக் கவரும் பல வண்ணங்களிலும் ‘சக்தி சுரபி’ கிடைக்கிறது. பாரதத்தின் 60-ஆவது சுதந்திரத் திருநாள் அன்று பாரதத்தின் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் செய்கிற ஒரு சேவையாக ‘சக்தி சுரபியை’ அறிமுகப்படுத்துவதில் விவேகானந்த கேந்திரம் பெருமகிழ்ச்சி அடைகிறது.

அதிக விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:


aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்