சக்தி

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

கவிநயா


மழை பெய்து கொண்டிருக்கிறது…
புதுமணப் பெண்ணின் நாணத்துடன்
மிருதுவாய்ப் பாதம் பதிக்கும் நீர்த் துளிகள்
கை விலகாமல் வரைந்த நேர் கோடாய்
சப்தமில்லாமல் முத்தம் திருடும் காதலராய்
யாருடைய கவனத்தையும் கவராமல் ரகசியமாய்…
நீரோடு நீர் சேர
நுரை ததும்பக் குதூகலிக்கும்
ஓடைகள்…
பொங்கிப் பெருகி
புவி தழுவும் ஆசையுடன்
புது வெள்ளம்…
கருவம் வளர
தலை உயர்த்தி ஆர்ப்பரிக்கும்
கடலலைகள்…
ஈரந் துவட்ட
நேர மின்றி நீர் அருந்தும்
பூமி மாதா…
அனைத்துக்கும் காரணமான மழை
இன்னும் பெய்து கொண்டே இருக்கிறது…
அமைதியாக…

–கவிநயா
—-
meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா