கோபிகிருஷ்ணனை முன்வைத்து எழுத்தாளர்களுக்கான இயக்கம்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

வெளி ரெங்கராஜன்.


(23.08.03) சென்னையில் நடந்த கோபிகிருஷ்ணன் நினைவு கூட்டத்தில் பேசியதிலிருந்து)

மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்காக இன்று நடத்தப்படும் இக்கூட்டம் முக்கியம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று நினைக்கிறேன். எந்த நிறுவன ஆதரவும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்கள் ஒரு எழுத்தாளர்மேல் தாங்கள் கொண்ட உணர்வுகளுக்காக நிதி திரட்டி தருவது என்பது தமிழ்ச்சூழலில் அதிகம் நடந்தது இல்லை. குறைந்த கால அவகாசத்தில் இலக்கிய ஆதரவாளர்களின் பலத்தில் கிட்டத்தட்ட ரூ 1,10,000/- வரை நிதி திரட்ட முடிந்திருக்கிறது என்றால் அது நம்பிக்கையைத் தரக்கூடிய ஒரு அசாதாரணமான நிகழ்வு என்றே தோன்றுகிறது. ஆனால் இதற்கான பெருமை எல்லாம் கோபிகிருஷ்ணனைத்தான் போய்ச்சேர வேண்டும். நான், அமர்ந்தா, லதா ராமகிருஷ்ணன் எல்லோரும் ஒரு கருவியாகத்தான் செயல்பட்டோம். கோபிகிருஷ்ணன் உருவாக்கிய நல்லெண்ணமும் அவர்மேல் உள்ள பரிவும் தான் தன்னிச்சையாக இவ்வளவு தொகை திரளுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.

கோபிகிருஷ்ணனின் மறைவில் நமக்கு அதிர்ச்சியும், துக்கமும் இருந்தாலும் இதை ஒரு தற்செயலான நிகழ்வாக நாம் பார்க்க முடியாது பொதுவாக தீவிரமான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எதிர்கொள்ளக்கூடிய எல்லா சிக்கல்களையும் கோபிகிருஷ்ணனும் எதிர்கொண்டிருக்கிறார். கொஞ்சம் கூடுதலாகவே எதிர்கொண்டிருக்கிறார். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கோபிகிருஷ்ணன் எதிர்கொண்ட சிக்கல்கள் அவருடைய மூச்சையும், இருப்பையும் திணற அடித்திருக்கின்றன. He died of suffocation of all kinds. வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக நேசித்த ஒருவருக்கு, தன்னுடைய கடைசி தொகுப்பை மானிட வாழ்வு தரும் ஆனந்தம் என்ற பெயரில் வெளியிட்ட ஒருவருக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கோபிகிருஷ்ணன் மனரீதியாக எதிர்கொண்ட பல சிக்கல்கள் அவருக்கு மட்டுமே உரியவை அல்ல. சமகால எழுத்தாளர்கள் பெரும்பாலான தருணங்களில் எதிர்கொள்ள நேரும் sensitivity சார்ந்த பிர்ச்னைகளாகவே அவை உள்ளன. அந்தப் பிரச்னைகள் குறித்த தீவிர கவனத்தையும், செயல்பாட்டையும் நோக்கியே இன்று நாம் எல்லோரும் உந்தப்பட்டிருக்கிறோம்.

எழுத்துக்குரிய அங்கீகாரத்தையும், எழுத்துக்கான வெகுமதியையும் வேண்டி தமிழ் எழுத்தாளன் நீண்ட பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த முயற்சியில் அவனுடைய உணர்ச்சிகள் சுலபத்தில் வறண்டு விடுகின்றன. உண்மையில் இன்றுள்ள தகவல் பெருக்க சூழ்நிலையில் எல்லா தமிழ் ஊடகங்களும் தங்களை விரிவுபடுத்திக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதால் ஒரு creative writerக்கான space அதிகரித்திருப்பது போன்ற ஒரு தோற்றம் உள்ளது. ஆனால் ஒரு தரமான எழுத்துக்கு உரிய மரியாதையோ, வெகுமதியோ தமிழ் ஊடகங்களில் கிடைப்பது இல்லை. ஒரு intellectual outputஐ ஒரு மூளை உழைப்பை அடிமாட்டு விலைக்கு வாங்கக்கூடிய மனநிலையே தமிழ் ஊடகங்களில் உள்ளது. கோபிகிருஷ்ணன் போன்ற தேர்ந்த படிப்பும் எளிய நுட்பமான நடையும் கொண்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு உரிய வெகுமதி கிடைத்திருந்தால் தன்னுடைய எழுத்தின் பலத்தில் அவர் ஒருவேளை இன்னும் அதிக காலம் வாழ்ந்திருக்க முடியும். அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருக்கும் என்னுடைய எழுத்தாள நண்பர் ஒருவர் அங்கு சராசரிக்கும் மேலான ஒரு எழுத்தாளர் கூட மாதம் இரண்டு கதை எழுதி ரூ 10,000/- வரை சம்பாதித்து அதில் வாழ்க்கை நடத்தக்கூடிய சூழல் உள்ளதாக ஒருமுறை குறிப்பிட்டார்.

அதைவிட மேலான ஒரு தமிழ் எழுத்தாளர் இன்று எழுத்தை நம்பி வாழ முடியவில்லை. பத்திரிக்கைகளில் மட்டுமல்ல சினிமா, தொலைக்காட்சி போன்ற எல்லா தமிழ் ஊடகங்களிலும் தரமான எழுத்துக்கு ஒரு மதிப்பற்ற சூழலே உள்ளது. இந்த ஊடகங்களில் வெகுமதியையும் மதிப்பையும் தேடி பயணத்தை கோட்டை விட்டவர்களுடைய எண்ணிக்கை புதுமைபித்தனிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் கொண்டாடப்பட வேண்டும். ஒரு முறை கவிஞர் வைத்தீஸ்வரன் அவர் கேரளாவில் உள்ள திருச்சூருக்கு ஒரு கவிச்சம்மேளனத்துக்காக சென்றிருந்த போது கவிசம்மேளனத்துக்கு போக வேண்டும் என்று ஆட்டோ டிரைவரிடம் கூறியபோது அவனுடைய மதிப்பில் தான் வெகுவாக உயர்ந்துவிட்டதை குறிப்பிட்டார். எழுத்தாளன் கொண்டாடப்பட்டு நல்ல எழுத்துக்கு ஒரு மரியாதையையும், கெளரவமும் கிடைக்கிற சூழ்நிலையில் தான் கோபிகிருஷ்ணன் போன்றோரது மரணங்கள் ஏதாவது விதத்தில் தடுக்கப்படும்.

ஆனால் கோபிகிருஷ்ணன் தன் வாழ்நாளில் அரிதாகக் கிடந்த ஆதரவும் அரவணைப்பும் இறந்த பின் அவரை நோக்கி குவிந்துள்ளது. எழுத்தாளரை நோக்கி குவிந்துள்ள இந்த நெகிழ்ச்சியை ஆரோக்கியமாக முன் எடுத்துச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது. அதற்கான வழிவகைகள் ஆராயவும் எழுத்தாளர்களுக்கான ஒரு இயக்கமாக இதை முன்னெடுத்துச் செல்லவும் தொடர்ந்த செயல்பாடுகளுக்கான ஒரு தளம் உருவாகவேண்டும். இந்த உணர்வுகளை மேலெடுத்துச் செல்ல உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை.

rangarajan_bob@hotmail.com

Series Navigation