கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

புருஷ்



புகழ்பெற்ற நிர்வாகியும், வரலாற்று அறிஞருமான கே.எம்.பணிக்கர் (1895-1963),  ஆசியக் கண்டம் முழுவதும் காலனியாதிக்கமும்,  நிறுவன கிறித்துவ மதமும் இணைந்து நிகழ்த்திய அக்கிரமங்களையும், அறமீறல்களையும் உலகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்.  ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று  பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட  இந்திய அரசுகளின் நிர்வாக பிரதிநிதியாகவும்,  ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தார். சுதந்திரத்திற்குப் பின்னர் எகிப்து, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவின் வெளிநாட்டுத் தூதராகவும்,  மாநிலங்கள் அமைப்பு கமிட்டி உறுப்பினராகவும், பின்னர்  மைசூர்  பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
  
இவரது வரலாற்று ஆய்வுகளின் முதன்மையான நோக்கம் கி.பி. 1500 முதல் 1945 வரை ஆசியாவில் மேற்கத்திய நாடுகளின் அதிகார பரவலாக்கம் குறித்ததாக இருந்தது. காலப்போக்கில், அவரது விரிவுபட்ட ஆராய்ச்சிகளின் ஊடாக, மேற்கத்திய நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளில் கிறித்துவ மிஷனரிகளின் தொடர்ந்த பங்களிப்பு குறித்த பரந்த சித்திரம் அவருக்கு தெளிவாகப் புரியத் தொடங்கியத1.ுேலும், கிறித்துவ மிஷனரிகள் தங்கள் மதத்தை பரப்ப மேற்கத்திய காலனியாதிக்க சக்திகளுடன் எல்லா விதத்திலும் கைகோர்த்து நின்ற வரலாறும் தெளிவாக ஆவணப்படுத்தப் பட்டிருப்பது தெரிந்தது.  

“தங்கள் அதிகாரத்தைச் செலுத்த மேற்கத்திய காலனியாதிக்க அரசுகள் கைக்கொண்ட அனைத்து வழிமுறைகளிலும் கிறுத்தவ மிஷனரிகள் அவர்களுடன் ஓரணியில் நின்றன. மிஷனரி தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான பிரான்ஸிஸ் சேவியர் (Francis Xavier) மற்றும் மத்தியோ ரிச்சி (Matteo Ricci) ஆகியோரின் நடவடிக்கைகள், ஐரோப்பிய மன்னரின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் ஒரு  கடைநிலை ஏவலாளுடையது போலத்தான் இருந்தன. கீழை நாடுகளில் ஒரு பிரதேசத்தைத் தனது அதிகாரத்திற்குள் கொண்டுவரத் திட்டமிடும் ஒரு ஐரோப்பிய மன்னன், தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ள உபயோகிக்கும் முக்கிய தளவாடங்களாக  மிஷனரிகளை பயன்படுத்தியதாகக்  கூறுவது தான் சரியாக இருக்கும்” என்று பணிக்கர் குறிப்பிடுகிறார்.  “ஆசியாவின் மன்னர்களையும் பொதுமக்களையும் மதம் மாற்ற மிஷநரிகள் கடைபிடித்த வழிமுறைகள் அனைத்தும், மிரட்டியோ, ஏமாற்றியோ அல்லது அறத்தை கேள்விகுட்படுத்தும் செயலாகவோ தான் இருந்தது. ஐரோப்பாவுடனான ஆசியாவின் உறவுகளில், மிஷனரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது, ஆனால் அவற்றின்  நோக்கம் கிழக்குலகத்தின் மீதான் மேற்குலகத்தின் அதிகார இச்சையே” என்றும் பணிக்கர் கூறுகிறார். மேலும், “இந்தியாவிலும் சீனாவிலும், ஏற்கனவே ஐரோப்பிய அரசுகள் கொண்டிருந்த அரசியல் ரீதியான ஆதிக்கம் மட்டுமல்லாமல், கலாச்சார மற்றும் மத ரீதியான ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கும் மிஷனரிகளின் பயன்பட்டனர்.  எதிர்பார்த்தபடி ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தை முழுமையாக சிதைக்க முடியாவிட்டாலும், மிஷனரிகளால் விளைவிக்கபட்ட குழப்பம் காரணமாக, இந்த நாடுகளில் வாழும் பல சமுதாயங்களின் வாழ்க்கை, மதம், கலாசாரம் மற்றும் சிந்தனைப் போக்குகளில் பல மாற்றங்களும்  சீரழிவுகளும் ஏற்பட்டன” என்கிறார் அவர்2.

தனது ஆய்வு முடிவுகள் அனைத்தையும் தொகுத்து Asia and Western Dominance (ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்) என்ற பெரிய வரலாற்று நூலை 1953ல் கே.எம்.பணிக்கர் எழுதினார்.  இன்றும் காலனியாதிக்கம் பற்றிய முக்கிய நூல்களில் ஒன்றாக இது கருதப் படுகிறது. பணிக்கரின் ஆய்வுநூல் இந்தியா, சீனா, ஜப்பான், கம்போடியா, லாவோஸ், தாய்லாநது, பர்மா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய  மற்றும்  தூரக்கிழக்கு நாடுகளிலும் மிஷனரிகளின் செயல்பாடுகளை ஆவணபடுத்தும் வரலாற்றுக் களஞ்சியமாக இருப்பது அதன் சிறப்பம்சம். இந்த நூல் கூறும் வரலாற்று நிகழ்வுகள்  மற்றும்  முக்கிய  விவரணங்களை  சுருக்கமாக இக்கட்டுரையில் காண்போம். 
  
“ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டால், கிறித்துவ மிஷனரிகளின் கடும் முயற்சிகளின் பலன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே இருந்தது” என்று கூறுகிறார் பணிக்கர். இதற்கு முக்கியக் காரணம் மிஷனரிகள் போதித்த “சத்தியமான ஒரே தேவன்” என்ற, ஆக்கிரமிப்பை அடித்தளமாகக்  கொண்ட மதக் கொள்கையேயாகும்.  இந்து, பெளத்த மதங்களின் தத்துவப் பின்னணியில் தங்கள் வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்த ஆசிய மக்கள், அந்த மதங்களின் அடிப்படைக் கூறான “பன்முகத்தன்மை”யைப் போற்றும் மரபினர்.  அதனால், “ஒரே சத்திய வழி” குறித்தும், “இறுதி உண்மை” குறித்தும் பேசிய, பன்முகத்தன்மையை நிராகரிக்கும், கிறித்துவ மதத்தை அவர்களில் பெரும்பான்மையினர் புறக்கணித்தனர்3.

மிஷனரிகளின் அரசியல் ரீதியான செயல்பாடுகளைக் குறித்து பேசுகையில், மதமாற்ற முயற்சிகளுக்காக ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட மிஷனரிகள் தங்கள் நாடுகளின் உளவாளிகளாகவே பெருமளவில் பணியாற்றினர் என்றும் இந்த நூல் குறிப்பிடுகிறது.  கி.பி 1245லேயே, நான்காம் போப் இன்னசென்ட்டின் (Pope Innocent IV) தலைமையில் நடைபெற்ற  லயோன்ஸ் பேரவை (Council of Lyons), ஆசியாவில் கிறித்துவ மதத்தை பரப்பவும், அங்குள்ள நாடுகளை அடிமைப் படுத்தவும் பெருந்தடையாக இருந்த மங்கோலிய அரசர்கள் பற்றிய பல்வேறு தகவல்களைத் திரட்ட ஒரு ரகசிய மிஷனரி உளவுக் குழுவை  மங்கோலியாவிற்கு அனுப்பியது. மங்கோலிய அரசன் குப்லாய் கான் (Kublai Khan) பற்றி அறிவதற்காகவும் இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு மிஷனரி குழு அனுப்பபட்டது. இந்தக் குழுவின் பணியும் உளவு பார்ப்பதன்றி வேறேதுமில்லை. ஆனால், இந்த முறை இந்த குழுவின் தலைவரான ஜான் டிமோன்டே கார்வினோ (John De Monte Carvino) அவர் சென்ற நகரங்களில் ரகசியமாக மதப்பரப்பல் மற்றும் மதமாற்றங்களை மேற்கொண்டார். நகர அடிமைச் சந்தைகளில் விற்கப்படும் நபர்களை விலைக்கு வாங்கி அவர்களை மதம் மாற்றவும்,  நகரங்களில் அங்கங்கே கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டவும் தொடங்கினார்.  ஆனால்  கார்வினோவின் பணியினால் சீனாவில்  நற்செய்தி  பரவுவது குறித்து மகிழ்ச்சியில் திளைத்த  ரோமாபுரி போப் அரசரின் வசந்த காலக் கனவுகள் நெடுநாள் நீடிக்கவில்லை. கிபி 1328-ல் கார்வினோவின் மறைவுக்கு பிறகு, அவரால் கட்டி அமைக்கபட்ட, “இறுதி உண்மை”க்குத் திரும்பியிருந்த சமூகம் மொத்தமாக வீழ்ச்சியடைந்தது.  அவரது இருப்பின் சுவடுகளும் முற்றிலுமாக அழிந்துபோயின, போப்பின் கடிதங்களில் தவிர்த்து4.

ஆசியாவில் சுவிசேஷ நற்செய்தியைப் பரப்பும் பணி கார்வினோவின் மறைவுக்குப் பிறகு பெரிதும் தொய்வடைந்திருந்தது. பின்னர்  போர்ச்சுகல் மன்னன் முதலாம் ஜானின் மகன் டான் ஹென்ரி (Don Henry) என்பவர் அதற்குப் புத்துயிரூட்டினார்.  இவர் கடல் பயணங்களில் மிகுந்த ஆர்வமுள்ளவராகவும்,  கிறித்துவத்தை மறுப்போர் மீது கடும் வெறுப்பை உமிழும்   தீவிரவாத கிறிஸ்தவராகவும்  இருந்தார்.  இந்தியாவில் கிறித்துவ மதத்தைப் பரப்பும்  பணியும், ஆசியாவில் இன்னும் செய்து முடிக்கவேண்டிய  தேவ  ஊழியங்கள்   எல்லாமும் கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவால் தனக்கே விதிக்கபட்டிருப்பதாக நம்பினார்5.  இதற்குத் தூபம் போடுவது போல, கிபி 1458-ல் ஐந்தாம் போப் நிக்கலஸ், பாகன் மதத்தோர், இஸ்லாமியர்  ஆகிய   கிறித்துவத்தின் எதிரிகளால் ஆளப்படும் நாடுகளை ஆக்கிரமித்து,  அவற்றின் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஏகபோக “உரிமையை”,  போர்ச்சுகல் மன்னர் ஹென்றிக்கு அளிக்கும் சாசனத்தை வெளியிட்டார்!6  போர்ச்சுகீஸிய மன்னர்கள் இந்தியாவின் மீது பல்வேறு படையெடுப்புகளை நிகழ்த்தினர். தன்னை “கடற்பயணங்களின் பிதாமகர்” என்று கருதிய அரசர் டோம் மானுவேல்(Dom Manoel) எத்தியோப்பியா, பெர்சியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை கைப்பற்றி, அவற்றுடன் வர்த்தகம் மேற்கொண்டார்7. மற்ற நாடுகளின் இறையாண்மையையும்,  வாழ்வுரிமையையும்  துச்சமாக மதித்து, தனது மதப் பரவலாக்கம் ஒன்றை மட்டுமே காரணம் காட்டி அந்த நாடுகளைத் தாக்கி அழிக்க முற்படும் நிறுவன கிறித்துவ அமைப்பின் அதிகார வேட்கையை  இதில் தெளிவாகக் கண்டறிய முடியும்.
 
ஆரம்பகால ஆசிய மிஷனரிகள், போர்ச்சுகல் நாட்டையே தங்களின் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டனர். உதாரணமாக, “கிறுத்துவின் சமூகம்” (Society of Jesus) எனும் அமைப்பு ஒரு ஸ்பெயின் நாட்டவரால் துவங்கபட்ட போதிலும், அதற்கான பலவித உதவிகளும் போர்ச்சுகீசிய அரசிலிருந்தே கிடைத்தது.  இன்றும் கிறித்துவ மிஷனரிகளால்  மகா புருஷர்களாகப் போற்றப் படும் “புனிதர்கள்” பலர், தாங்கள் எந்த ஐரோப்பிய நாட்டவராக இருந்தாலும்,  தங்களின் இரண்டாம் தாய் நாடாக போர்ச்சுகலையே தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ப்ரொட்ஸ்டென்ட் பிரிவு உருவாகி பிரபலமாகி வந்த காலத்தில், கத்தோலிக்க அமைப்புகளில் காணப்பட்ட மத ரீதியான உத்வேகம் மிகுந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் இவர்கள்.  அந்தக் காலகட்டத்தில், போர்ச்சுகலின் மிஷனரிகளை கண்காணிக்கும் பணியிலேயே ஸ்பானியர்கள் இருந்தனர்.  போர்ச்சுகல்  தலைநகரான  லிஸ்பன் நகரின் ஒரு பெரும் மத நிறுவனத்தில் இருந்த மொத்தம் 42 மிஷநரிகளில் 6 பேர் மட்டுமே போர்ச்சுகல் நாட்டவர். அதில் முக்கிய இடம் வகித்தவரும் போர்ச்சுகீசியர் அல்ல, வாக்லியனோ (Father Vagliano) என்னும் இத்தாலியப் பாதிரியார்.  கோவாவில் ஊழியம் செய்துவந்த இத்தாலிய மிஷநரி ரிச்சியும் (Ricci)  போர்ச்சுகலையே தனது தலைமையிடமாக ஏற்றுக் கொண்டார்8.  ஒரு சிறிய ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் மன்னர்கள்  பல்வேறு ஆசிய நாடுகளில் சர்ச்சுகள் அமைக்கும் பணிக்கும், மிஷன்களை உருவாக்கும் பணிக்கும் எப்படி மிகப்பெரும் பண உதவி செய்தனர் என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம்9.

இந்தியா

கி.பி.1498-ல் வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டடைந்த பின்பு, போர்ச்சுகீசியர்களால் மேற்கொள்ளப்பட்ட கடல் வழி படையெடுப்புகள் அனைத்திலும் கிறித்துவ மிஷனரிகள் உடனிருந்தனர்.
கி.பி.1534-ல், போர்ச்சுகீஸியரால் முழுவதும் ஆக்கிரமிக்கபட்ட கோவா உள்ளிட்ட கீழைநாட்டுப் பகுதிகள் அனைத்தும் பிஷப்பின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளை ஆண்ட போர்ச்சுகீஸிய கவர்னர்கள் இந்து மதத்தை முழுவதுமாக வேரறுப்பதையே தங்களின் முழு முதல் லட்சியமாகக் கொண்டனர்.
கி.பி.1540ல் கோவாவின் பல இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டு,  கோவில் சொத்துக்கள் அனைத்தும் மிஷனரிகள் வசம் வந்தன.
கி.பி 1542ல் கோவாவில் பிரான்சிஸ் சேவியரால் செயின்ட் பால் கல்லூரி தொடங்கபட்டது.  உலகமெங்கும்  கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பிட மிஷனரிகளை பயிற்றுவிக்கும் முக்கிய மையமாகவும்,  அடுத்து வரும் நூறு வருடங்களுக்கு, தூரக் கிழக்கு நாடுகளில் மிஷனரிகளின் களத்தையும், அவர்கள் செயல்பாடுகளையும் நிர்ணயிக்கும் முக்கிய கேந்திரமாகவும் கோவா இருந்தது.
கி.பி.1561-ல் பிரான்சிஸ் சேவியரின் கட்டளைப்படி, கோவாவில் கிறித்துவ கோட்பாடுகளை மீறுவோரை கண்டுபிடித்து தண்டிக்கவும், அவர்களை ஒடுக்கவும் குழுக்கள் அமைக்கபட்டன.  சகிப்புதன்மை என்பதை முற்றிலும் மறுதலிக்கும் இந்த மிஷனரிகளின் செயல்பாடுகளில் இன்குசிஷன்(Inquistion in Goa) என்று அழைக்கப்படும் கொடூரங்களும் அடங்கும்10.  மதம் மாறிய கிறித்துவர்கள் பசு மாமிசம் உண்பது மதக்கடமை என்பதாக வலியுறுத்தபட்டு, அவர்கள் இந்து கலாசாரக் கூறுகளின் எச்சங்களுடன் கூட வாழ்வதைத் தவிர்க்கும் முயற்சிகளும், அவர்களை தாய் மதத்தின் நிழலில் இருந்து முற்றிலும் விலக்கும் முயற்சிகளும் வலிந்து மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் 17-ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஐப்பது வருடங்களில் போர்ச்சுகீசிய அதிகாரம் தொய்வடைந்த போது,  அதன் மிஷனரி அரவணைப்பும் சரிந்தது. இந்து மற்றும் முகமதியரின் எதிர்ப்பை ஒரு சேர சம்பாதித்துக்கொண்ட, சகிப்புதன்மையற்ற கிறித்துவ அமைப்பு வீழ்ச்சியை சந்தித்தது11. இத்தகைய தீவிர கிறிஸ்தவமயமாக்கத்திற்குப் பின்னரும் கோவாவில் கிறுத்துவரல்லாதோர்  கணிசமான அளவில் எஞ்சியிருந்ததால்,  மீதமிருப்பவர்களை வஞ்சக, ஏமாற்று வழிகளில் மதமாற்றும் முயற்சிகளும் தோல்வியையே சந்தித்தன12.

கத்தோலிக்க அமைப்பினரைத் தொடர்ந்து, புரொட்ஸ்டென்ட் அமைப்பினர் களமிறங்கினர். இவர்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் வன்முறையை சாராமல் இருந்தது என்றே கூறவேண்டும். கிபி. 1660களில் சிறிய புரொட்ஸ்டென்ட் மிஷனரி அமைப்புகள் தென் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தின் கடற்பகுதிகளில் அமைக்கப்பட்டன.  ஆங்கலிக்கன் சர்ச் 1799-ல் துவக்கிய ஒரு மிஷனரி அமைப்பும், 1803-ல் வில்லியம் கேரி என்பவரால் கொல்கத்தாவின் செரம்போரில் (Serampore) துவக்கப் பட்ட பாப்டிஸ்ட் மிஷனரியும் குறிப்பிடத் தக்கவை. கேரியும் அவர்களது சகாக்களும் இந்து மதத்தின் மீது தீவிரமான வெறுப்பை உமிழும் பிராச்சரத்தை மேற்கொண்டனர். இந்த பிரச்சாரம் ஆரம்பத்தில் பலனளிப்பது போல் இருந்தாலும், இந்துக்களின் தீவிர எதிர்ப்பின் காரணமாக கொல்கத்தா அதிகாரியான அட்மிரல் மில்டன் இந்த பிராச்சாரத்தை தடை செய்ய நேர்ந்தது.  மேலும், மத உணர்வுகளை புண்படுத்தியதால் வேலூரில் நடைபெற்ற சிப்பாய்களின் கலகமும் அவர் நினைவில் இருந்தது13.

1813-ல் இந்தியாவின் கதவுகள் அனைத்தும் மிஷனரிகளுக்காக திறந்துவிடபட்டன. கட்டற்ற சுதந்ததிரத்தினால், வங்காளத்தில் கிறித்துவ மிஷனரிகள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடிந்தது. ஆனால், மீண்டும் ஒரு முறை அவர்கள்  பின்னடைவையும் சந்திக்க வேண்டி வந்தது. இந்த முறை இந்துக்களின் பதில், வெறும் போராட்டமாக மட்டும் இல்லாமல், சீர்திருத்த அமைப்புகளை அமைத்து அதன் மூலம் மிஷனரிகளின் பணிகளுக்கு பதிலடி தருவதாக் இருந்தது.  கேரளத்தின் திருவிதாங்கூர் மாகாணத்தில், அப்போதைய மன்னரின் முடியாட்சியையே கலைக்க கூடிய அளவுக்கு அதிகாரம் மிஷனரிகள் வசம் இருந்ததால், அவர்கள் மன்னரைப் பணிய வைத்து தங்கள் கைப்பாவையாக ஆக்கியிருந்தனர். மிஷனரிகளின் இந்த நடவடிக்கை மற்ற பல இந்திய மன்னர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால், சுதேசிய மன்னர்களின் ஆளுகையில் இருந்த பல மாகாண அரசுகள், எந்தவிதமான மிஷனரி பணிகளையும் 1947 வரை தங்கள் மண்ணில் அனுமதிக்கவில்லை14.

1857-ல் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை தொடர்ந்து, இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு, கிறித்துவ மிஷனரிகளுக்கு எந்தவித சலுகையும் தரப்படாதது போல் நடந்து கொண்டாலும், பலவகையில் அவர்களுக்கு உதவி செய்தபடி இருந்தது. மதம் மாறிய பின்பும் ஒருவருக்கு “இந்து கூட்டு குடும்பத்தின்” சொத்துக்களின் மீதான உரிமையை வலியுறுத்தும் படியாக சட்டங்கள் இருந்தாலும்,  இது போன்ற வழக்குகளில் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மதம் மாறியவர்களுக்கே சாதகமாக இருந்தது. அதனால், ஒரு குடும்பத் தலைவன் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் ஒட்டுமொத்தமாக மதம் மாற்ற இது ஏதுவாக இருந்தது. மேலும், அரசாங்கமே மிஷநரிகள் பழங்குடி இனத்தோரை பெருமளவில் மதம் மாற்றும்படி ஊக்குவித்தது15.

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான மதமாற்ற முயற்சிகளோடு கூட, இந்திய பண்பாட்டின் வேரைக் குறிவைத்து, இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த கல்விமுறையை ஒழித்து, கிறித்துவ பைபிளை கட்டாயப் பாடமாக வலியுறுத்தும் ஆங்கிலக் கல்விமுறையை நடைமுறைபடுத்த பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. 1835-ல் மெக்காலே என்பவரால் “ஒரு நீண்ட தூர பயணத்தின் முதல் கட்டமாக” இந்தக் கல்வி அமைப்பு அறிமுகபடுத்தபட்டது. ஆங்கிலக் கல்வி முறையை இந்திய மேல் தட்டு மக்களிடம் அறிமுகபடுத்துவதன் மூலம், அவர்களின் இந்து மத நம்பிக்கைகளும், அதை ஒட்டிய வாழ்க்கை முறையும் மாற்றமடைந்து, நாளடைவில் கிறித்துவ மதத்தின் பால் ஈர்க்கப் பட்டு, பிரிட்டிஷ் அரசின் விசுவாசிகளாகவும் அவர்கள் ஆகிவிடுவார்கள் என்ற மெக்காலேயின் திட்டத்தை பிரிட்டிஷ்  அரசு வரவேற்று,  முழுமனதுடன் செயல்படுத்தியது. இதன் மூலம், கிறித்துவ மிஷனரிகளால் அமைக்கபட்ட பல்வேறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்,  அனைத்து மாணவர்களும் பைபிளை படிப்பது கட்டாயமாக்கபட்டது. இந்திய நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சமூக, பொருளாதார முன்னேற்றத்தைக் கருதி, மேற்கத்தியக் கல்வியைப் பெருமளவு வரவேற்றனர்; கிறித்துவ மத நூல்களைப் படிக்கவும் செய்தனர்.  ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஒட்டுமொத்தமான கிறித்துவ சமய ஈர்ப்பும், ஐரோப்பிய விசுவாசமும் படித்த இந்தியர்களிடம் உண்டாகவில்லை.  மாறாக, இதன் பக்கவிளைவாக,  இந்திய தேசியம்,  இந்து சமூக சீர்திருத்தங்கள் குறித்த பெரும் கருத்து அலை அரவிந்தர், திலகர், லாலா லஜ்பத் ராய் போன்றோரின் தாக்கத்தால் எழுந்தது. அந்தச் சூழலில் இந்துமதம் மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கி, வேதாந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு உலகளாவிய மதமாக தன்னை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தது16. இந்த எதிர்பாராத விளைவினால் மிஷனரிகளின் பணபலமும், செல்வாக்கும் அவர்கள் நோக்கத்தை நிறைவேற்றாமல் தோல்வியையே அளித்தன17.  மக்களின் எண்ணப் போக்கு ஏகமனதாக இந்திய கலாச்சாரத்தை நோக்கியும், இந்திய தேசியத்தை முன்னிலைப் படுத்தியும் வந்த  இது போன்ற ஒரு சூழ்நிலையில், கிறுத்துவ தலைமை பீடங்களும் தங்களை நாட்டு மக்களின் சிந்தனை போக்கிற்க்கு எதிரானதாக காட்டி கொள்ள விரும்பவில்லை18.

பணிக்கரின் நூல் இந்தக் காலகட்டத்தை விவரிப்பதுடன் நின்று விடுகிறது.  ஆனால் சுதந்திர இந்தியாவில், ஜவஹர்லால் நேரு மற்றும் அவருக்குப் பின்வந்த ஆட்சியாளர்களின் காலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு மற்றுமொரு நல்ல காலம் தொடங்கியது, அவர்களது பணிகள் தங்குதடையின்றி ஊக்கம் பெற்றன. இது பற்றி புகழ்பெற்ற அரசியல் அறிஞர் அருண் ஷோரி  தனது “Missionaries in India” என்கிற நூலில் விரிவாக  எழுதியிருக்கிறார்.    

ஜப்பான்

பிரான்சிஸ் சேவியரின் குறிக்கோள் இந்தியா மட்டுமன்றி, மொத்த தென் கிழக்கு ஆசிய மற்றும் கிழக்காசிய நாடுகளிலும் (குறிப்பாக ஜப்பான் மற்றும் சீனா) கிறித்துவ மதத்தை பரப்புவதாக இருந்தது. கி.பி 1545-ல் மலேசியாவில் உள்ள மலக்கா (Malacca)  வழியாக அவர் இந்தோனேஷியா வரை பயணம் செய்தார்.   அப்போது அஞ்சிரோ என்ற ஜப்பானிய நாட்டு அரசாங்கத்தால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளியை அவர் மலேசியாவில் சந்திக்க நேர்ந்தது.  அஞ்சிரோ ஆசிய மதங்கள் மற்றும் அவற்றின் ஆன்மீக மேன்மை குறித்தும் எதுவும் அறிந்திருக்கவில்லை.   புத்தரது போதனைகள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத அஞ்சிரோ, அவரை  வழிபடும் ஜப்பானிய மக்கள் முட்டாள்கள் என்று கருதினான்.  ஜப்பானிய மக்கள் கிறித்துவின் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடும் என்றும் சேவியரிடம் அவன் தெரிவித்தான்.  அகமகிழ்ந்த சேவியர்,  அஞ்சிரோவைத் தன்னுடனேயே கோவாவுக்கு அழைத்து வந்தார். அங்குள்ள புனித பால் கல்லூரியில் கிறித்துவ மதபோதனைப் பயிற்சியளித்து, அவ்னையும் ஒரு மிஷநரியாக்கி, அவனுடன் 1549-ல் ஜப்பானுக்குப்  பயணமானார்.
 
அன்றைய ஜப்பானின் தலைநகரமான மியாகோவை (Miyako) அடைந்த அவர்கள்,  மன்னரை சந்தித்து  எப்படியாவது அவரைக் கிறிஸ்தவராக்கி விடலாம் என்று திட்டமிட்டனர். ஆனால்,  மன்னர் அவர்களைச் சந்திக்க விரும்பாதது மட்டுமல்ல,  அங்கிருந்த புத்தமத துறவியரும் இவர்களின் முயற்சியைப் பற்றி அறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் கி.பி 1551-ல் கோவா திரும்பினர். இருப்பினும், ஜப்பானில் மதமாற்ற நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள அதிக எண்ணிக்கையிலான மிஷனரிகளை அனுப்புமாறு தனது தலைமைக்குக் கடிதம் எழுதினார் சேவியர்!19

மிஷனரிகள் தங்கள் மதமாற்றப் பணிகளை ஜப்பானில் துவக்கிய காலகட்டம், அந்நாட்டின் வரலாற்றில் அரசியல் குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது.  நிலப்பிரபுக்களிடையே நிலவிய பேதங்களால் அந்நாடு பல்வேறு கூறுகளாகப் பிரிந்திருந்தது.  மற்ற நிலபிரபுக்களிடமிருந்து தங்களை காத்து கொள்ளும் முயற்சிகளின் அங்கமாக, மேற்கு ஜப்பானின் நிலபிரபுக்கள் போர்ச்சுகீசியர்களுடன் நட்புறவு கொள்ளத் தொடங்கினர். போர்ச்சுகீசியக் கப்பல்கள் தங்கள் துறைமுகங்களில்  நங்கூரமிட அனுமதித்தனர். போர்ச்சுகீசிய அரசின் முதுகில் சவாரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மிஷனரிகள், இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் இயங்க ஆரம்பித்தனர்.  அரசியல் குழப்பம் நிலவிய இந்தச் சூழலில் தான் ஜப்பானின் மாபெரும் தலைவரான ஓடா நொபுங்கா (Oda Nobunga) ஜப்பானிய அரசாட்சியை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.  இயல்பாகவே கலாசாரப் பன்முகத்தன்மையில் ஊறியிருந்த அந்நாட்டு புத்த மடாலயங்கள்  இதனைக் கடுமையாக எதிர்த்தன.  ஆனால் அரசியல் தந்திரம் அறிந்த மிஷநரிகள், நொபுங்காவின் குறிக்கோளைத் தாங்கள் ஆதரிப்பதாக அறிவித்தனர்.  ஐரோப்பிய கலாச்சாரத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்த நொபுங்காவும் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுகொண்டார்.  கி.பி 1568ல் கத்தோலிக்க மிஷனரிகளை க்யோடோ (Kyoto) நகரத்திற்குத் தாமாகவே வரவேற்று, அவர்களது மதப்பிரசாரப் பணிகளுக்கும்  பெரும் ஊக்கம் அளித்தார்.  இதனால் ஜப்பானில் கிறீஸ்தவ மிஷனரிகள் அசுர வளர்ச்சி அடைந்தனர்.20 கிறித்துவ மிஷனரிகளுக்கு வெளிநாடுகளுடனான தொடர்பை குறித்தான உள்ளுணர்வு அவருக்கு இருந்தது.21

நொபுங்காவை அடுத்து ஆட்சி பொறுப்பை ஏற்ற ஹிடியோஷி (Hideyoshi) முதலில் மிஷனரிகளுக்கு சாதகமாகவே நடந்து கொண்டாலும், ஜப்பானில் வாழும் கிறுத்துவர்களைத் தனிப்படப் பாதுகாக்க போர்ச்சுகீசிய அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் அந்த  ஜப்பானியர்கள்  போர்ச்சுகீசிய  விசுவாசிகளாக இருப்பதையும் கவனித்து வந்தார்.  போர்ச்சுகீசிய அரசு, ஜப்பானில் கிறுத்துவர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் ஆயுதம் தாங்கிய பெரும்படைகளை நிறுத்தியிருந்தது. ஒரு முறை,  கோயெல்ஹோ பாதிரியாரை (Father Coelho) சந்திக்க ஒரு போர்ச்சுகீசியக் கப்பலுக்கு ஹிடியோஷி சென்றிருந்த போது, அச்சிறிய கப்பலிலும் பெருமளவில் ஆயதங்கள் நிரப்பி வைக்கபட்டிருந்ததைக் கண்டார்.  மேலும் மேற்கு ஜப்பானில் இருந்த டைம்யோ (Daimyo) நிலப்பிரபுக்கள்  வெளிநாட்டவர்களான போர்ச்சுகீசியருடன் உறவு கொண்டு அதன் மூலம் தங்களைப் பலப்படுத்தி கொண்டுவருவதையும் ஹிடியோஷி அறிந்திருந்தார். நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கப் போகும் இந்த சமிக்ஞைகளை புரிந்து கொண்ட அவர், உறுதியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். கி.பி 1587ல் ஜப்பான் முழுவதும் நாட்டின் எந்தப் பகுதியிலும் மிஷனரிகள் இயங்கக் கூடாது என்று தடை பிறப்பித்தார். அவரது இந்த நடவடிக்கையின் பின்புலத்தில் வேறு ஒரு காரணமும் இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டை சமீபத்தில் கைப்பற்றியிருந்த ஸ்பெயின், ஜப்பானுடனும்  வணிக உறவை ஏற்படுத்திக் கொள்ள மிகுந்த முனைப்பு காட்டியபடியிருந்தது.  ஜப்பானிய கடற்பகுதிகளில் வந்துபோகும் ஸ்பானிஷ் நாட்டு கப்பல்கள், அங்கிருந்த டைம்யோக்களிடம் (Daimyo) தங்கள் நாட்டின் புகழையும்,  அதிகாரப்  பரவலையும் எடுத்துரைத்த வண்ணம் இருந்தன. இதையும் கவனித்து வந்த ஹிடியோஷி,  மிஷநரிகளுக்குத் தடை என்ற ஆயுதம் மூலம், ஜப்பானில்  ஒதுங்கியிருந்த ஸ்பானிஷ் நாட்டவரையும் கைது செய்து, அவர்களை “உளவாளிகள்” என அறிவித்து அவர்கள் அனைவரையும் தூக்கிலிட்டார்.22

ஜப்பானிய அரசு, பசிபிக் தீவுகளில் போர்ச்சுகல், டச்சு, ஸ்பெயின் மற்றும் பிரிட்டீஷ் அரசுகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து உளவு பார்த்துவந்தது.  ஜப்பானில் கிறிஸ்தவர்களாக மதமாறியவர்களின்  செயல்பாடுகள் தொடர்ந்து இந்த வெளிநாட்டு அரசுகளுக்கு சாதகமாகவே  இருந்ததையும் அது கண்டறிந்தது. ஆகவே, மேற்கொண்டு ஜப்பானின் எந்த ஒரு பகுதியிலும் மதமாற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் முயற்சிகள் அரசால் முடுக்கிவிடப்பட்டன. ஜப்பானில் சிறுபான்மை சமூகமாக இருந்த கிறித்துவர்கள்,  மதக்காரணங்களுக்காக அல்லாமல் வெளிநாட்டவர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட குற்றங்களுக்காக, சட்ட ரீதியான நடவடிக்கைகளையும்,  தண்டனைகளையும்  எதிர்கொள்ள நேரிட்டது.  ஆனால் கி.பி 1614-ல் ஜப்பானிய மன்னர் டோகுவாகா ஷோகன் (Iyeasu, the Tokugawa Shogun)  தனது அரசாணைகள் மூலம், சட்டப் படி கிறிஸ்தவ மதத்தை ஜப்பானில் முழுமையாகத் தடை செய்தார்.23 கி.பி 1622-ல், ஜப்பானின் தென்பகுதியில் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்துவந்த ஒற்றர்கள் மூலம் ஸ்பானிஷ் படைகள் தங்கள் மீது போர் தொடுக்கத் தீட்டிவந்த திட்டம் குறித்து அறிந்த ஜப்பானிய அரசு, கிறிஸ்தவர்கள் மீதான பிடியை இன்னும் இறுக்கியது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் இருந்த கிறுத்துவர்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்தக் கிளர்ச்சியில் போர்ச்சுகலின் பங்கும் முக்கியமாக இருந்ததாக கூறப்படுகிறது.  உறுதியான அரசுத் தலைமையின் கீழ், ஜப்பானிய ஷோகன் படையினர் (Shogunate) தீரத்துடன் செயல்பட்டு அந்தக் கிளர்ச்சியை அடக்கினர். இதைத் தொடர்ந்து வந்த காலங்களில் ஜப்பான்  எந்த மேற்கத்திய நாட்டவரும் உட்புக முடியாதபடி தனது கதவுகளைச் சாத்தியே வைத்திருந்தது.24

1889 வரை ஜப்பான் எந்த வெளிநாட்டவருக்கும் தனது மண்ணில் இடம் கொடுக்கவில்லை. மெய்ஜி இசின் (Meiji Ishin) என வருணிக்கப்படும் ஜப்பானின் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த காலத்தில் இந்நிலை மாறியது. கிறித்துவ மிஷனரிகளைக் குறித்த ஐயமும், அச்சமும் அப்படியே இருந்தபோதும், அரசியல் சாசனத்தில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகள் அளிக்கபட்டன.  ஆயினும், ஜப்பானிய ஷிண்டோ சமயமும், புத்தமதமும் பல மாறுதல்களுக்கு உட்பட்டு  எழுச்சியடைந்து விட்டிருந்த அந்தக் காலகட்டத்திலும், கிறித்துவ மதம் ஒரு வித “தீய சக்தி”யாகவே கருதப்பட்டது.  கிறித்துவ மத அடிப்படையிலான ஐரோப்பியக் கல்வி முறை,  ஷிண்டோ மத அடிப்படையில் அமைந்த தாய் மண்ணின் கலாசாரத்திற்கு எதிரானது என்பதால், கல்வி அமைப்புகள் அனைத்தும் தேசியமயமாக்கப் பட்டு ஜப்பானிய அரசின் முழுக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டன.25
 
சீனா
கி.பி 1511ல் மலாக்கா பகுதியை போர்ச்சுகீஸியர்கள் கைப்பற்றியபோது, அப்பகுதியில் வாழந்து வந்த சீனர்கள் மூலமாக சீன நாட்டின் அபரிமிதமான இயற்கை வளங்கள் பற்றிக் கேள்விப் பட்டனர்.   பல்வேறு வியாபார குழுக்கள் வடிவில்  சீனாவிற்கு  உளவாளிகளை அனுப்பி, சீன அரசியல் நிலவரம் பற்றிய செய்திகளைச் சேகரித்தனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் சீனாவின் மேல் படையெடுக்க வியூகம் வகுத்தனர்.  இது  பற்றி ஒன்றும் அறியாத சீன அரசர், தாமஸ் பிரைஸ் (Thomas Pires) என்பவரின் தலைமையிலான ஒரு வர்த்தகக் குழுவை முழுமனதுடன் தனது நாட்டில் செயல்பட அனுமதித்தார்.  திட்டமிட்டபடி, இந்த குழுவில் இருந்த சைமன் டி ஆண்ட்ரேட் சீன மண்ணில் ஒரு  போர்ச்சுகீசியக் கோட்டையை எழுப்ப தொடங்கினார். இதை அறிந்த சீன அரசு தனது கப்பல் படையைக் கொண்டு அந்தக் கோட்டையைத் தாக்கி அழித்து, சைமனை நாட்டை விட்டுத் துரத்தியது.   சில ஆண்டுகளில் மீண்டும் சீனாவுக்குள் நுழைந்த சைமனை, சீன அரசு கைதுசெய்து சிறையில் அடைத்தது. 1523-ல் அவர் சிறையிலேயே உயிரிழந்தார்.26  இந்தச் சூழலில், ஜப்பானில் கிறுத்துவத்தை பரப்ப முயன்று தோல்வி அடைந்திருந்த பிரான்சிஸ் சேவியரின் குறி சீனா பக்கம் திரும்பியது. சீனாவை நோக்கிப் பயணபட்ட சேவியர்,  இந்தப் பயணத்தின் நடுவிலேயே க்வாடுங் (Kwantung) கடற்கரை பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவில் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார்.27

மற்றொரு புறம், போர்ச்சுகீஸியர்களுக்கும் கடலோர சீனர்களுக்கும் இடையே,  இரு தரப்பினருக்கும் லாபகரமான, ஆனால் சீன அரசால் அங்கீகரிக்கபடாத வர்த்தக உறவு ஏற்பட்டது. கடற்கொள்ளையர்களைப் பிடிக்க சீன கப்பற்படை அதிகாரிகளுக்கு போர்ச்சுகீசிய கப்பல்கள் மூலம் உதவியும், உள்ளூர் அதிகாரிகளுக்கு பெருமதிப்புள்ள பரிசுகளை அளித்தும், கிபி. 1557-ல் தென் சீனாவில்  மகாவ் (Macao) எனும் இடத்தில் தங்கள் பொருட்களை விற்பதற்காக ஒரு  பெரிய  வர்த்தகக் கிடங்கியை  போர்ச்சுகீசியர்கள்  நிறுவினர்.28 இதைத் தொடர்ந்து, உடனடியாக 1565-ல் கிறிஸ்தவ மிஷனரிகள்  குடியிருப்பும் உருவாகியது.  மற்ற நாடுகளிலிருந்தும் பல்வேறு மிஷனரிகள் சீனாவிற்குள் புகுந்தனர். இந்தக் காலகட்டத்தில் மிஷனரிகள் கையாண்ட யுக்தி, சீன அதிகாரவர்க்கத்துடன் தங்களை மிகவும் நெருக்கமானவர்களாகக் காட்டி கொண்டு, அந்தச் செல்வாக்கின் மூலம் கிறித்துவ மதமாற்றத்தைப் பரவலாக்குவது. மதபோதகர் மத்தியோ ரிச்சி (Matteo Ricci)  1582-ல் மகாவ் வந்து, அங்கிருந்து 1595-ல் தலைநகர் பெய்ஜிங்  சென்றடைந்தார். விலை உயர்ந்த கடிகாரங்களையும், அப்போதைய நவீன சாதனங்களையும் மன்னர் மற்றும் அதிகாரிகளுக்குப் பரிசளித்து, அரசாங்கத்தின் நன்மதிப்பைப் “பெற்றார்”.    சீனாவில் கன்புயூசியஸ் மதத்திற்கும், புத்த மதத்திற்க்கும் இடையேயான  சமயப் பூசல்கள்  நிகழ்ந்து  வந்த போதெல்லாம்,  அரசு பெரும்பாலும் கன்பியூசியஸ் மதத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தது. இதைக் கவனித்து வந்த ரிச்சி, கிறிஸ்தவத்திற்குச் சாதகமாக  இந்தப் பூசலைப் பயன்படுத்த விரும்பினார்.  கன்புயூசிய மதம் அடிப்படையில் கிறித்துவ மத கருத்துக்களையே வலியுறுத்துவதாகவும், அது கிறித்துவ மதத்தை ஒருபோதும் விரோதியாக பார்க்கவில்லை எனவும் தடாலடியாக சமயக் கோட்பாடுகளை எடுத்து விட்டார்! 29
ரிச்சிக்குப் பின்னர் வந்த ஏசுசபை மிஷனரிகள், மிங் சாம்ராஜ்யத்தின் ஜோதிடர்களாகவும், துப்பாக்கி தயாரிப்பாளர்களாவும்  ஆகி தங்கள் தேவ ஊழியத்தை செய்ய முயன்றனர். இந்தப் பணிகளும், பதவிகளும் அவர்களுக்கு அரசர்களின் நெருக்கத்தைப் பெற்றுத் தந்த போதும்,  பெருமளவில் கிறுத்துவ மதப்பரப்பலை நிகழ்த்த  இடம் தரவில்லை.  குறிப்பாக, 1630ல்  ஒரு கிறிஸ்தவ மதபோதகருக்கு எந்த வித பாத்யதையும் இல்லாத பதவிகளான  அரசாங்க தலைமை சோதிடர்,  ராஜகுரு,  தலைமை சீன புரோகிதர்  ஆகிய மதிப்புக்குரிய பதவிகளை, ஆடம் ஷால் (Adam Schall) என்கிற  மிஷநரி அலங்கரித்தார்.30     ஆனால்  மிங் சாம்ராஜ்யம் மஞ்சு (Manchu) அரசர்களால் தூக்கி எறியபட்டபின், ஆடம் ஷால் சிறையில் அடைக்கபட்டு,  1666ல் அங்கேயே இறந்தார். அத்துடன் மிங் அரசில் மிஷனரிகளின் பணி தாற்கலிகமாக முடிவுக்கு வந்தது.
ஆனால் ஃபெர்டினாண்ட் வெர்பிஸ்ட் (Ferdinand Verbiest) என்ற இன்னொரு ஏசுசபை பாதிரியார், கிளர்ச்சியாளர்களை அடக்க போர் எந்திரங்கள் தயாரிக்கும் பணியில் உதவியதன் மூலம், காங் ஸி (Kang Hsi) என்ற மஞ்சு அரசரின் அன்புக்கு பாத்திரமாகியிருந்தார்.  ஆகையால் அவரால் எந்த தடையுமின்றி கிறித்துவ மதத்தை பரப்ப முடிந்தது.  இதனால் உற்சாகமடைந்த வெர்பிஸ்ட், மதமாற்றப் பணிகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள, 1664-ல் தொடங்கபட்ட மிஷன்ஸ் எஸ்ட்ரேஞ்சர்ஸ் (Congregation de Missions Estrangers) என்னும் அமைப்பிலிருந்து  ஒரு மிஷனரி குழுவை சீனாவுக்கு அனுப்புமாறு பிரெஞ்சு அரசரிடம் வேண்டினார்.  ஆறு பாதிரிகள்  அடங்கிய இந்தக் குழுவில் இருந்த கெர்பில்லியன் (Gerbillion) ஒரு மொழி வல்லுனர். அதனைக் காரணம் காட்டி,  ரஷ்யாவுடனான எல்லைப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சீன அரசாங்கத்தின் சார்பாகப் பேச முன்வந்த  அவருக்கு, சீன அரசும் அனுமதி அளித்தது.  இந்தப் பணியைத் திறம்படச் செய்து,  சீன, ரஷ்ய நாடுகளுக்கிடையே 1689ல்  நெர்ட்சின்ஸ்க் உடன்படிக்கை (Treaty of Nertchinsk)  ஏற்படவும் அவர் முக்கிய காரணமானார்.  இந்த நன்மதிப்பின் காரணமாக,  அதுவரை  ஐரோப்பியர்களுக்காக மூடப் பட்டிருந்த சீன ஜோதிடம், கணிதம், சீனக் கலைகள் ஆகிய  துறைகள் அவர்களுக்குத் திறந்துவிடப் பட்ட்ன. ஐரோப்பியர்கள், சீன மக்களிடையே மிகப் பிரபலமாக இருந்த இந்தப் புராதனக் கலைகளைப் பயிலவும்,  பயிற்றுவிக்கவும் எந்தத் தடையுமில்லை என சீன அரசு அறிவித்தது.31  மேலும், சீன மண்ணில் சர்ச்சுகள் தோன்றவும், மக்கள் சர்ச்சுகளில் வழிபடவும் முழு சுதந்திரம் அளிக்கபட்டது.

ஏசுசபையினர் ஜோதிடம், சீனக் கலைகள் போன்றவற்றிலேயே முழுமையாக ஈடுபட்டு,   கிறிஸ்தவ  மதக்  கொள்கைகளையும்,   மதக் கட்டுபாடுகளையும் காற்றில் பறக்க விட்டனர்.  ஏசுசபையின் தலைமைப் பாதிரி அரசவையில் எல்லா சீன சடங்குகளையும் பக்தியுடன் நடத்திவைக்கும் புரோகிதராகி இருந்தார்! இத்தகைய செயல்கள் அவர்களது எஜமானர்களாக இருந்த கிறித்துவ அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின.32 வாத்திகன் மன்னரான அப்போதைய போப்பால் நியமிக்கபட்ட ஒரு கிறிஸ்தவ தணிக்கைக் குழு சீனா சென்று அங்கு ஏசுசபை மிஷநரிகள் நடந்து கொள்ளும் விதம் கிறிஸ்தவ மதத்திற்கு முற்றிலும் எதிரானது என்று  கண்டறிந்து அறிவித்தது.  ஏசுசபையினர் மன்னரிடம் முறையிட,  சீனாவில் உள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறைமைகள் எந்த விதத்திலும் கிறித்துவ மதத்திற்கு எதிரானவை அல்ல என்று சீன அரசர் அறிவித்தார் ! இதுபற்றி மேலும் ஆய்வு மேற்கொள்ள வாடிகன் போப்பால் அனுப்பபட்ட இன்னொரு மதக் கண்காணிப்பாளர் (Legate) சீன  கிறித்துவர்கள்  மேற்கொள்ளும்  வழிப்பாட்டு  முறைகள்   அனைத்தையும் நிராகரித்தார். இதனால்  கோபம் கொண்ட சீன அரசர் அவரை சிறையில் அடைத்தார். 1710-ல் சிறையிலேயே அவர் உயிர்நீத்தார்.  தொடர்ந்து, சீனாவில் நடைபெறும் கிறித்துவ வழிபாடுகளை கண்டித்து போப் தானே ஒரு அதிகாரபூர்வ அறிக்கையை (Papal Bull) வெளியிட்டார். இதைக் கண்டு வெகுண்ட சீன அரசு, 1724-ல் அரசு அதிகாரத்தில் இருந்த கிறித்துவர்களை தவிர்த்து ஏனைய கிறித்துவர்கள் அனைவரையும் கேண்டன் (Canton) என்ற துறைமுக நகரத்திற்கு அப்பால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தியது.  கிறிஸ்தவ மதப் பிராச்சாரத்தையும் நாடெங்கும் தடை செய்தது.33 

சீனாவில் அடுத்தகட்ட மிஷனரிகளின் வருகை 1875க்குப் பின் தான் நிகழ்ந்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சீனாவை ஆக்கிரமித்ததை அடுத்து மிஷனரி செயல்பாடுகள் அந்நாட்டில் அசுர வளர்ச்சி அடைந்தன.  இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவுடன் போதைப் பொருள் வர்த்தகம் சீனாவில் தங்குதடையின்றி நடைபெற்றது. இந்த சீர்கேட்டால் விளைந்த “அபின் போர்களில்” (Opium war)  சீனா சந்தித்த தோல்விகள், பல்வேறு மேற்கத்திய நாடுகளும் சீனாவில் காலூன்றக் காரணமாயின. மிஷனரிகள் தங்கள் பணிகளை, ஆக்கிரமிக்கபட்ட சீன பகுதிகளில் மட்டுமல்லாமல்,  பரந்து விரிந்த சீன நாடெங்கும் மேற்கொண்டனர்.  இந்தக் காலகட்டத்தில் சீனாவில் நடைபெற்ற பல்வேறு போர்களுக்குப் பிறகு கைப்பற்ற பட்ட  கொள்ளைப் பொருட்களில்  மிஷநரிகளுக்கான பங்கு தவறாமல் அவர்களை வந்தடைந்தது. போரின் போது ராஜ்ஜிய விரோத குற்றம் சாட்டப்பட்டவர்களும், போர்க் கைதிகளும், சந்தேகத்திற்குரிய பேர்வழிகளும் கிறிஸ்தவர்களாக மதம் மாறி, மேற்கத்திய  சக்திகளின் நிழலில் தஞ்சம் புகுந்தனர்.  இப்படி மதம் மாறியவர்கள்  மற்ற சீனர்களை இழிவாகப் பார்க்கத் தொடங்கி, அவர்களுடன் மோதல்களில் ஈடுபட்டனர். இந்த மோதல்களே  மிஷனரிகளின் முழு ஆசிர்வாதத்துடன் பின்னர் தாய்பிங் கிளர்ச்சி (Taiping rebellion) எனப்படும் உள்நாட்டுக் கலவரமாக வெடித்தது. 34

அபின் போர்களைத் தொடர்ந்து க்விங் (Qing) வம்சத்தரோல் ஆளப்பட்ட சீனாவில் அரசியல் ஸ்திரத்ன்மை முழுமையாக அற்றுப்போய், நாடு பொருளாதார சிக்கல்களிலும், கொடிய வியாதிகளாலும் பீடிக்கபட்டிருந்தது.  அப்போது நாட்டில் அங்கங்கே சிதறிகிடந்த மஞ்சு வம்ச ஆதரவாளர்கள்  அரசாங்கத்திற்க்கு எதிராக நடத்திய கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தவர் ஹாங் சிகுவான் (Hong Xiuquan) என்ற மதம் மாறிய கிறித்துவர்.  தங்களுக்கு சாதகமான இந்தக் கிளர்ச்சியில், மிஷனரிகளும், மேற்கத்திய அரசுகளும் தங்களை மறைமுகமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.  

இந்தக் கலவரத்தில் மிஷனரிகளின் பங்கு பற்றிய சந்தேகம் மக்களிடையே இழையோடிக் கொண்டேயிருந்தது. அதனால்  அங்கங்கே  மிஷனரிகளுக்கு எதிரான வன்முறை வெடித்தது.   இது தனது உச்சத்தை அடைந்தது. பாக்ஸர் புரட்சி  (Boxer rebellion, 1899-1901) எனப்படும் சீனாவில் நடந்த  குறிப்பிடத்தக்க உள்நாட்டுக் கலவரத்தின் போது. இந்தக் கலவரம் சீனாவை வெளிநாட்டு ஆதிக்கத்தில் இருந்த மீட்கவும், அங்கங்கே  காலனிய ஆதிக்க ஆதரவாளர்கள் புரிந்த அட்டூழியங்களையும் எதிர்த்து நடந்தது. கலவரக்காரர்களின் கோபத்திற்கு மதம் மாறிய சீன கிறித்துவர்களும் தப்பவில்லை.35 மேற்கத்திய நாடுகளின் ஆதாரவாளர்கள் எனும் காரணத்தால் அவர்களும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாயினர். 

இந்தக் காலகட்டத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று இங்கு கவனிக்கப் படவேண்டியது.  டியன்ஸ்டின் (Tientsin) நகரத்தில் இருந்த ஒரு சீன மடாலயத்தை இடித்து விட்டு அங்கு ஒரு கிறித்துவ தேவாலயத்தை  பிரெஞ்சுக் காரர்கள் கட்டியிருந்தனர்,  பிரெஞ்சு கத்தோலிக்க  கன்யாஸ்திரீகள் ஒரு அனாதை இல்லத்தையும் தொடங்கினர், . அந்த அனாதை இல்லத்தில் அதிகமான குழந்தைகளைக் கொண்டு வந்து சேர்க்க ஒரு வழிமுறையைக் கையாண்டனர். அங்கு வந்துசேரும் ஒவ்வொரு குழந்தைகக்கும்,   ஒரு நிர்ணயிக்கப்ப்பட்ட தொகை  குழந்தையைக்  கொண்டுவருபவரிடம்   வழங்கப் பட்டது. இது, மறைமுகமாகக் குழந்தைகள் கடத்தப்படுவதை ஊக்குவித்தது.  இதனை  அறிய வந்த அந்த நகரத்தின் குடிமக்கள் மிகப்பெரும் அளவில் ஆர்பாட்டம் நடத்தினர்.36 உள்ளூர் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவிக்கபட்ட போதும், அவர்கள் கிறித்துவ மிஷனரிகளின் அராஜகத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், குடிமக்களின் போராட்டத்தை அடக்குவதிலேயே தீவிரமாக இருந்தனர். இதனால் கோபம் கொண்ட மக்கள், உள்ளூர் அதிகாரியைக் கொலை செய்து,  தேவாலத்தையும், அனாதை இல்லத்தையும் தீ வைத்து அழித்தனர். இதைக் காரணம் காட்டி, பல்வேறு மேற்கத்திய நாடுகளின் துணையோடு சீனா மீது படையெடுக்க போவதாக மிரட்டத் தொடங்கிய பிரெஞ்சு அரசு, பிரஷ்யா (Prussia) உடனான போரில் தோல்வியுற்றதால், பின்வாங்க வேண்டியதாயிற்று.37
 
பாக்ஸர் புரட்சி முடிவுற்றதும், சீனக் கல்விமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பாரம்பரியக் கல்விமுறை சிதைக்கப் பட்டு, மேற்கத்தியக் கல்விமுறை முழுமையாக அறிமுகபடுத்தபட்டது.  அரசாங்க பணியிடங்களில் , சீனப் பாரம்பரியக் கல்வி பயன்றவர்களுக்கு உதவுவதாக இருந்த தேர்வு முறைகள் மாற்றப்பட்டு,  மிஷனரி கல்வி பயன்றவர்களுக்கு, அந்த வாய்ப்புகள்  வலிந்து  வழங்கப்பட்டன.38 சீனக் கல்வித்துறை முழுக்க மிஷனரிகள் வசம் சென்றது. இதனால் பல கலாச்சாரக் குழப்பங்களும், பிரச்சனைகளும் தோன்றின. பாரம்பரியத்தின் மீதுள்ள பிடிப்பு அறுபட்டதால்,சீன சமூகம் அதன் தார்மீக, ஆன்மீக விழுமியங்களை இழந்து நின்றது.  எங்கும் நிலவிய மோதல் மற்றும்  கருத்துப் போராட்டங்களால் விளைந்த தெளிவின்மையால், மத எதிர்ப்பு அமைப்புகள் பரவலாக தோன்றின.  இது  மார்க்ஸிய அலை நோக்கி சீனாவை இட்டுச் சென்றது. “சீனப் புத்தெழுச்சி”, அதன் வேர்கள் சார்ந்த கன்பூஸிய மதத்தையோ, புத்த மதத்தையோ சாராமல், சென் டுக்சு (Chen Duxiu)   உருவாக்கிய கம்யூனிசக் கொள்கையை  அப்படியே உள்வாங்கி,  கம்யூனிச அரசாட்சி முறையில் வந்து முடிந்தது.39
 
1911-ல் சீனக்குடியரசை சன்யாட் சென் (Sun Yat-sen) என்ற கிறுத்தவர் ஆட்சி செய்தபோது, மிஷனரிகள் சீனாவில் தங்கள் மதமாற்றப் பணிகள் ஏகபோகமாக நடைபெறூம் என்று எதிர்பார்த்தனர்.  ஆனால் சன்யாட் சென் மதமாற்றத்தை விடவும், சீனாவின் வளர்ச்சியிலும், அரசை உறுதியாக்குவதிலுமே அக்கறை காட்டி வந்தார். ரஷ்யாவில் நடந்து முடிந்திருந்த அக்டோபர் புரட்சியின் தாக்கத்தாலும், கிறுத்துவ மதம் சார்ந்த மேற்கத்திய நாடுகள் மீது கொண்ட வெறுப்பாலும், அவர் மிஷனரிகளிடமிருந்து தன்னை முழுதும் தனிமைப் படுத்திக் கொண்டார். மேலும், சீனாவில் அப்போதிருந்த தேசியவாத அலை கிறித்துவத்திற்கு எதிராக இருந்ததாலும்,  கிறிஸ்தவ மதம் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் கையாளாக  அடையாளம் காணப்பட்டதும், மிஷனரிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.40
 
மொத்தத்தில், சீனாவில் பல காலங்களாக  நடந்திருந்த  கிறிஸ்தவ மதமாற்றங்களால்,  சீன  சமூகத்திலும் அதன் கலாச்சாரத்திலும் பெரும் சிதைவு ஏற்பட்டது.  உறுதிக்குப் பெயர் போன சீன ராஜ்யங்களின் அரசியல் அமைப்பு சந்தித்த மிகப்பெரும் வீழ்ச்சியிலும் மிஷனரிகளின் பங்கு பெருமளவு இருந்தது.  இத்தகைய அரசியல் குழப்பங்கள் தங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என மிஷனரிகள் கருதிச் செயல்பட்ட போதும்,  இறுதியில் அது மத எதிர்ப்பாளர்களான  கம்யூனிஸ்டுகளுக்கே சாதகமாக அமைந்தது.41

இந்தோ-சீனப் பகுதிகள்
 
இந்திய-சீன எல்லை பகுதிகளில் மிஷனரிகளின் ஊடுருவல் அலெக்ஸாண்டர் டி ரோட்ஸ் என்பவரால் தொடங்கிவைக்கப் பட்டது.  ஜப்பானில் இருந்து அகதிகளாக வெளியேறி  வந்த  கிறுத்துவர்களிடையே அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். போப்பிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு வராத நிலையில், பிரான்ஸின்  மிஷன் எஸ்ட்ரேஞ்சர்ஸ் (Mission Estrangers – 1659) என்னும் அமைப்பு அவருக்கு  அவ்வப்போது உதவி வந்தது. பிரெஞ்சு வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்தையும், மதத்தையும் பரவலாக்க இது போன்ற பல அமைப்புகளைத் தொடங்கியிருந்தனர்.  இந்த அமைப்புகளில் ஒன்றைச் சேர்ந்த பிஷப்.லாம்பார்ட் மிஷனரியாக அல்லாமல், ஒரு வியாபாரியாக வடக்கு வியட்நாம் நகரமான டாங்-கிங் (Tongking)  வந்தடைந்தார். ஏனெனில், அப்பகுதியை ஆண்டிவந்த ட்ரின் (Trinh) மன்னர், மிஷனரி பணிகளுக்கு எந்த வித ஒத்துழைப்பையும் தர முன்வரவில்லை. ஆனால், குறிப்பிடும்படியாக எந்தவொரு மிஷனரி பணிகளும் அங்கு நடைபெறும் முன்பே, காலனியப் போட்டியாளர்களான டச்சுக்காரர்கள் வியட்நாமில் பிரெஞ்சுக்காரர்கள் நிறுவியிருந்த அனைத்து அமைப்புகளையும் அழித்தொழித்தனர்.
 
1765-ல் கோசின் சீனா (Cochinchina) என்றழைக்கப்படும் வியட்நாமின் தெற்கு பகுதிக்கு மிஷன் எஸ்ட்ரேஞ்சர்ஸ் அமைப்பைச் சேர்ந்த பிக்னியு டி பெஹெய்ன் (Pigneau de Behaine) என்ற மிஷனரி வந்துசேர்ந்தார்.  ஹ்யு (Hue) பிரதேச மன்னர் நிகுயின் (Nguen) அப்போது நாடு கடத்தப் பட்டிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட பெஹெய்ன், உடனடியாக அந்தப் பிரதேசத்தின் மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றி ஆட்சியைத் தன் வசமாக்கி கொண்டார்.  பதவியில் வெகுநாள் நீடிக்காமல், 1779-ல் பெஹெய்ன் மரணமடைந்தார். இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக, ஆசியாவில் இருந்த பிரெஞ்சு மிஷனரிகளுக்கு எந்த உதவியும் கிட்டவில்லை. பிரான்சில் புரட்சி நடந்து முடிந்த சமயம் (Bourbon restoration), வியட்நாமின் வடபகுதியில் இருந்த அன்னாம் (Annam) பிரதேச மன்னர் டு-டக் (Tu-Duc), கிறித்துவத்தின் பால் மிகுந்த வெறுப்பு உள்ளவராகி இருந்தார். 1848-ல் மன்னர் டு-டக் “கிறித்துவம் ஒரு ஒழிக்கபட வேண்டிய மதம்” என்று அறிவித்து, தனது அமைச்சரவையின் கிறித்துவ மந்திரிகள் உட்பட அனைத்து மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் கடலில் எறிந்து சொல்ல ஆணையிட்டார். 42
 
டு-டக்கின் இந்த கிறித்துவ எதிர்ப்பு நடவடிக்கையைக் காரணம் காட்டி  அப்போதைய பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன்,  அன்னாம்  பிரதேசத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுத்தார். கிறித்துவ மதத்தை அவமதித்தற்குக் பழிவாங்கும் இப்போரில் தாங்களும் இணைவதாக,  பிலிப்பைன்ஸில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்பானியர்கள்  அறிவித்தனர்.43  டு-டக்  மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கு இடையேயான இந்தப் போராட்டம் பதினைந்து வருடங்கள் நீடித்தது.  டு-டக் சீன ஆதரவைக் கோரினார்.  போரில் பிரான்ஸ் தற்காலிகத் தோல்வி அடைந்தது.  1874-ல் டு-டக் பிரெஞ்சு நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி, கோசின் சீனா பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டதாகவும்,  பிரெஞ்சுக் காரர்களின்  வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தன் நாட்டில் முழு  சுதந்திரம் அளிப்பதாகவும் ஒப்புகொண்டார். இந்த ஒப்பந்தமே பின்னாளில் கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளின் தோற்றத்திற்கான அரசியல் காரணி எனலாம்.44
 
நெகிழ்வான புத்த மதத்தையும், கன்பியூஸிய தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்ட கம்போடியா, லாவோஸ், அன்னாம் போன்ற நாடுகளில் கிறித்துவத்திற்கு எதிரான கலாச்சார  எதிர்ப்பு அவ்வளவு பலமாக இருக்கவில்லை.  தேசியத்தை வலியுறுத்தும் இயக்கங்கள் எதுவும் முதலாம் உலக போருக்கு முன்னதாக தோன்றியிருக்கவில்லை. அதனால் சமூக அமைப்புகளிலும் ஸ்திரத்தன்மை இருக்கவில்லை. பின்னாளில் ஒரு சில இயக்கங்கள் தோன்றியபோதும், அது ரஷ்யாவில் கம்யூனிசப் புரட்சி தோன்றிய காலகட்டமாக இருந்ததால், இந்தோ-சீன நாடுகளின் தேசியம் என்பது இந்த நாடுகளின் பாரம்பரிய, கலாசார வேர்களைச் சாராமல், பெரும்பாலும் கம்யூனிஸத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்தது.45
 
தாய்லாந்து
 
கி.பி.1855 வரை மேற்கத்திய நாடுகளின் எந்தவிதமான அச்சுறத்துலுக்கும் அஞ்சாதிருந்த  தாய்லாந்து,  சீனாவில்  ஏற்பட்ட  மாறுதலினாலும்,  பர்மாவின் ஒரு பகுதியைப் கைபற்றியிருந்த பிரிட்டிஷ் அரசின் மிரட்டலினாலும் பிரிட்டனுடனான ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டது.  1855-ல், சர் ஜான் பவுரிங் (Sir John Bowring) என்ற பிரிட்டிஷ் ஆட்சியாளரால் உறுதி செய்யபட்ட இந்த ஒப்பந்தம், தாய்லாந்தில் போதைப் பொருள் வர்த்தகம் தடங்கல் இல்லாமல் நடைபெறவும், நாடெங்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் சர்ச்சுகளை கட்டிக் கொள்ளவும் வழி செய்தது. 46 இதே சமயத்தில், ஆசிய நாடுகளில்  தன் ஆக்கிரமிப்பை பெருமளவு நடத்தி வந்த பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ நாடுகளுக்கு இடையே இருந்த பகையின் காரணமாக, தாய்லாந்து இரு நாடடுகளுக்கும் ஒருவிதமான தரகரைப் போல செயல்பட நேர்ந்தது.  இருப்பினும் தீரம்மிக்க, உறுதியான நடவடிக்கைகளில் துணிவுடன் ஈடுபடக்கூடிய அரசர்களை பெறும் பாக்கியம் தாய்லாந்திற்க்கு இருந்ததால், அது தனக்கு ஏற்பட்டிருந்த தற்காலிக வீழ்ச்சியிலிருந்து மீண்டது.47  புத்த மதத்தின் வேர்கள் பலமாகப் பரவியிருந்த காரணத்தால், மிஷனரிகளின் பணி பெருமளவு எடுபடாமல் போனது. தாய்லாந்து அரசர்கள் புத்த மத அபிமானிகளாக இருந்ததனால், ஒரேயடியான மேற்கத்திய மயமாக்கலில் ஈடுபடாமல், மிதவாத சமூக சீர்திருத்தப் போக்கைக் கடைபிடித்தனர். இதனால் 1870-ல் இருந்து 1920 வரையிலான சிக்கலான காலகட்டத்தை தாய்லாந்து எளிதாகக் கடந்தது. தாய்லாந்தின் இந்த சமூக மாறுதல் எந்தவிதமான வன்முரையும், சமூக சீர்குலைவும் இல்லாமல் அமைதியான முறையில் நடந்தது.  இதனால், முதலாம் உலகப் போரை தொடர்ந்த காலகட்டத்தில், எந்தவித சிக்கலுமில்லாமல் தாய்லாந்து தன்னை கொஞ்ச நஞ்சமிருந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுவித்துக் கொண்டது.48
 
மியன்மார் (பர்மா)

1937 வரை மியன்மார் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த காரணத்தால், இந்திய தேசியத்தின் தாக்கமே பெருமளவில் பர்மாவிலும் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் புத்த மதம் அந்நாட்டின் தேசிய மதமாக இல்லாமல் ஆக்கபட்டபோதும், தாக்கம் மக்கள் மத்தியில் பௌத்ததின் செல்வாக்கு குறையவில்லை.  தேசிய தலைவர்கள் அனைவரும் தங்களை புத்த மதத்துடன்அடையாளபடுத்திக் கொள்வதிலேயே பெருமிதம் கொண்டனர். உதாரணமாக, டாக்டர் பா மா (Dr.Ba Maw) என்ர அரசியல் தலைவர், சிறு வயதிலேயே கிறித்துவ மதத்திற்கு மாறியிருந்த போதும், புத்த மதத்திற்குத் திரும்பி விட்டதாகப் பின்னர் அறிவித்துக் கொண்டார்.49 மிஷனரிகள் பர்மிய சமூக அமைப்பையோ, புத்த மதத்தையோ எந்தவிதத்திலும் சிதைக்க முடியவில்லை. அவர்களால் பெருமளவு ஊடுருவ முடிந்தது கரேன் (Karen) எனப்படும் பழங்குடி சமூகத்தை மட்டுமே. பர்மாவின் தேசிய விடுதலைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய கரேன் மக்களின் பிரிவினைவாதத்தை வளர்த்ததில், மிஷனரிகளின்  முழுமையான பங்கு இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.50

பணிக்கருக்கு மிஷனரிகளின் பதில்

கிறிஸ்துவ மதக் கொள்கையின் ஒரு அங்கமாக உறைந்து கிடக்கும் ஏதேச்சதிகாரம், அதன் விளைவாக ஆசியாவின் காலனிய வரலாற்றில் காணக் கிடைக்ககூடிய அறமீறல்கள் இவை பற்றிய தெளிவான சித்திரத்தையே பணிக்கர் தம் நூலில் மையமாகக் கூற விழைந்தார். ஆனால், காலனிய ஆட்சி முடிவுக்கு வந்து, அதன் தொடர்ச்சியாக இந்திய ஆட்சியாளர்களின் காலத்திலும், இந்த வரலாற்று உண்மைகள் உணரப் படவில்லை என்பது கசப்பான உண்மை.  இந்திய ஆட்சியாளர்களும், அறிவுஜீவிகளும்  பணிக்கரின் இந்த முக்கியமான வரலாற்று ஆய்வுகளைக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.
 
மேலும் பணிக்கர், தான் வாழ்ந்த காலத்தில், இந்திய மிஷனரிகளுடன் தனது ஆய்வுகள் குறித்து நேரடி விவாதங்களிலும் ஈடுபட்டார். பணிக்கர் ஒரு தலைப்பட்சமாக வரலாற்றைத் திரிக்கிறார் என்று  குற்றம்சாட்டி வந்தபோதும், அவர் எடுத்துவைக்கும் வரலாற்று உண்மைகள் தவறு என்று நிருப்பிக்கும்படியான எந்தவொரு ஆதாரங்களையும் மிஷனரிகளால் தரமுடியவில்லை. பாதிரியார் ஜெரோம் டிசோசா, “அருமையான வர்ணனைகள் பணிக்கர் அவர்களே, ஆனால் இதை வரலாறு என்று சொல்ல முடியாது” என்று  மல்லுக் கட்டினார்.51 ஆனால், அவரும் சரி, அவரது பிற மிஷனரி சகாக்களும் சரி, பணிக்கரின் ஆய்வுகளில் எது தவறு என்று சுட்டிக்காட்டக் கூடிய “உண்மைளை”ப் பிறகு சொல்லவே இல்லை.
 
பிந்தைய காலங்களில் மிஷனரிகள் தங்கள் வரலாற்றுத் தவறுகளை மறைக்கும் விதமாகப் பல வழிகளிலும் முனைந்து செயல்பட்டதிலிருந்தே, பணிக்கரின் ஆய்வுகளின் தாக்கத்தை உணரலாம்.  கிறிஸ்தவ மதக்கொள்கை, அதுவே உருவாக்கிய  கொடும் வரலாறுகளில் இருந்து பழுதுபார்க்கப்பட்டு மீட்டெடுக்கப் படவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். “தாங்கள் என்றுமே பிற மத தெய்வங்களை பழித்ததில்லை, பிற மதங்களை அவமதித்ததில்லை” என்று மிஷநரிகள் கூசாமல் இப்பொழுதும்  பொய்ப்பிரசாரம் மேற்கொண்டு  வருகின்றனர். ஆசிய வரலாற்றின் பல கொடும் நிகழ்வுகளுக்கும் நேரடிக் காரணமாக இருந்த மிஷனரிகள், அதிலிருந்து தங்கள் கிறுத்துவை “காப்பாற்ற” செய்யும் முயற்சிகளும் ஏராளம்.  சமீபத்திய கிறிஸ்தவ மதப்பிரசார அலசல்களில்,  இந்த “காலனிய ஊனம்”  (colonial handicap) என்கிற விஷயம் தான் ஏசு கிறிஸ்து தனது போட்டியாளர்களான சிவன், ராமர், கிருஷ்ணர், புத்தர் ஆகியவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேற விடாமல் இடைஞ்சலாக இருக்கிறது என்று புலம்புவதைக் காண முடியும்.   ஸ்டான்லி ஜோன்ஸின் வார்த்தைகளில்,  “சிடுக்கவிழ்க்கப் பட்ட, ஞானஸ்நானம் செய்யபட்ட கிறிஸ்து”வை இந்திய மக்கள் முன்வைக்க, சளைக்காத முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.  


 
am.purush@gmail.com
 
http://ipurush.blogspot.com/
 
இக்கட்டுரை எழுதத் துணைபுரிந்த நூல்கள்:
 
1) K.M. Panikkar,  “Asia and Western Dominance: A survey of Vasco Da Gama Epoch of Asian History (London, 1953.  Reprint Kula Lumpur: The Other Press, 1993)

2) “Expressions of Christianity, with a fous on India”, (Vivekananda Kendra Patrika, Vol-35.1, 6th Issue), Vivekananda Kendra, Chennai

குறிப்புகள்

1K.M. Panikkar, Asia and Western Dominance, London (1953), Seventh Impression, 1967, p. 15.
2Ibid., p. 314.
3Ibid., p. 297.
4Ibid., pp. 279-80.
5Ibid., p. 25.
6Ibid., p. 27.
7Ibid., p. 34.
8Ibid., p. 45.
9Ibid., p. 280.
10Ibid., p. 280.
11Ibid., p. 28 1.
12Ibid., p. 283.
13Ibid., p. 290.
14Ibid., pp. 290-91.
15Ibid., p. 291.
16Ibid., p. 242.
17Ibid., p. 249.
18Ibid., p. 295.
19Ibid., p. 282.
20Ibid., p. 289.
21Ibid., p. 288.
22Ibid., p. 242.
23Ibid., pp. 67 and 289.
24Ibid., pp. 66-67.
25Ibid., p. 293.
26Ibid., pp. 56-57.
27Ibid., pp. 282-83.
28Ibid., p. 58.
29Ibid., P. 283.
30Ibid., p. 286.
31Ibid., pp. 286-87.
32Ibid., p. 287.
33Ibid., pp. 287-88.
34Ibid., pp. 291-92.
35Ibid., pp. 292-93.
36Ibid., p. 13 8.
37Ibid., pp. 138-39.
38Ibid., p. 149.
39Ibid., pp. 150-51, 254, 259, 267.
40Ibid., p. 296.
41Ibid., pp. 296-97.
42Ibid., p. 294.
43Ibid., p. 163.
44Ibid., p. 164.
45Ibid., pp. 273-74.
46Ibid., p. 171. Emphasis in source..
47Ibid., pp. 172-73.
48Ibid., pp. 272-73.
49Ibid., p. 27 1.
50Ibid., pp. 294-95.
51Felix Alfred Planner, The Catholic Church in India: Yesterday and Today, Allahabad, 1964, p. 14.

Series Navigation

புருஷ்

புருஷ்