This entry is in the series 20101205_Issue

ஹெச்.ஜி.ரசூல்


உதிரமும் ரோமமும்
தசையும் நரம்புகளும்
தனித்தனியே தமது அடையாளத்தை
உடம்பின்மீது எழுதிச் செல்கின்றன.
கால்பெருவிரல் தொட்டு மேலேறி
உச்சிக்குழியைப் பற்றிப்பிடிக்கும்
உயிர்க்காற்றின் அலைத்துளிகள்
வனமெங்கும் வருடிச் செல்ல
பேரானந்தத்தின்
நுனியைப் பற்றிப் பிடித்தவாறு
வெளிவாசலினூடே
குழிகள்சிறைபிடிக்கும் ஓசையாகும்
மூடிய அறைதிறந்து
குழிகள் உள்வாங்கும் பிம்பம்
சரத்தின் மீதேறி சஞ்சாரம் செய்கிறது.
இருவாசல் வழிபுகுந்து
காற்றை உறிஞ்சும் குழிகள்
நிசப்தமும் மெளனமும் சூழந்ததொரு
விசித்திர பள்ளத்தாக்கில்
சீறிப்பாய்ந்து செல்லும்
ஓராயிரம் தோல்வி சுமந்து
சந்திரக்கலை
பிங்கலை கோட்டைகளிலிருந்து
நொடிகளைக் கடந்த
மூச்சுக் குதிரைகள் ஒவ்வொன்றும்
புணர்வின் உச்சத் துளிகளில் உருவான
கருவின் நுண்துகளில்
உயிரூட்டும் குழியின் காற்று
கிளைவிட்டு பரப்புகிறது
தன் சுவாசத்தை திசுவெங்கும்
குழியில் பிறந்த உயிர்க்கொடி
சென்றுசேரும் குழியில்
புதையும் அல்லது எரியும்
பிறிதொரு நாளில்

Series Navigation