குமரிஉலா 5

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

ஜெயமோகன்


டிலனாய் [De Lennoy ] கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரிக்கோட்டை. தன் வாழ்நாளில்பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின் காமிராவை சரிபார்த்தோம். மின்னேற்றம் குறைவுபட்டிருந்தது. அதை சரிசெய்தோம்.

உதயகிரிக்கோட்டைக்குள் நான்கு சுற்றுத்தெருக்கள் உண்டு. அவை இன்று நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளாக உள்ளன. கோட்டைக்குள்ளேயே கிழக்குப்பக்கம் இப்போதும் காடாகவே உள்ளது. வனத்துறை பாதுகாப்பில் இருக்கும் அப்பகுதியில் அவர்கள் சிறு வனப்பூங்கா ஒன்று அமைத்து சில மான்களை வளர்த்து வருகிறார்கள். நிறைய தேக்கங்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவ்வழியாக செல்லும்போது ஒரு விசித்திரமான தனிமை உணர்வு ஏற்படுவதை தடுக்கமுடியாது.

உதயகிரி முற்காலத்தில் ராணுவக்கேந்திரமாகவே இருந்திருக்கிறது . நிரந்தர ராணுவத்தை திருவிதாங்கூர் உருவாக்கிக் கொண்டபோது அதை தங்கவைப்பதற்கான முகாமாக இது விரிவாக்கம் செய்யப்பட்ட்து. இப்பகுதி கோட்டையாக தெரிவுசெய்யப்படக் காரணமே இதற்குள் உள்ள பெரிய குன்றுதான். இதற்குள் பெரிய கோயிலோ அரண்மனையோ இல்லை . டிலனாய் மர்மங்களால் சூழப்பட்ட சரித்திர புருஷர். மன்னரின் விசுவாசமான நண்பராக இருந்தவர். படைகளுக்கு நெருக்கமானவர். ஆனால் அவருக்கும் தளவாய் ராமய்யனுக்கும் இடையே பனிப்போர் இருந்தது. டிலனாய் இறந்ததுமே அவரது இடம் வரலாற்றில் குறுக்கப்பட்டது .

பழைய ஒரு மாதாகோவில் போன்ற அமைப்பு இடிந்து கூரையில்லாமல் குட்டிச்சுவராக நிற்கிறது. அதற்குள்தான் டிலனாய் அவரது தம்பி ஆகியோரின் சமாதிகள் உள்ளன. பிற்பாடு அது ஒரு முக்கியமான சமதியிடமாக ஆகி திருவிதாங்கூரில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனி ரெசிடெண்ட் ஆட்சியைச்சேர்ந்த சில அதிகாரிகளின் சமாதிகளும் அங்கே உள்ளன. அவர்கள் யார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை.

‘அனாதைமாதிரி கிடக்கிறார் ‘என்றேன். ‘இந்த மண்ணுக்கு டிலனாயின் கொடை வேறு எவரது கொடையைவிடவும் சிறியது அல்ல. இங்கே வலுவான மைய ஆட்சியை, சட்டம் ஒழுங்கை அவர் நிலைநாட்டவில்லை என்றால் இந்தியாவின் வளம்மிக்க மாவட்டங்களில் ஒன்றாக கன்யாகுமரி ஆகியிருக்காது. கோட்டைகள்சூழ அமைதி உருவான பிறகுதான் பொன்மனை அணையும் கால்வாயும் உருவாக்கப்பட்டன. நாஞ்சில்நாட்டு விளைநிலங்கள் உருவாயின.ஆனால் வரலாறு அப்படியே அவரை மறந்துவிட்டது. ஒரு சாலைக்காவது நாம் அவரது பேரைபோடவேண்டும். ‘என்றேன்

‘அப்படிப்பார்த்தால் கன்யாகுமரிக்கு மிகப்பெரிய சேவைகள் செய்த பலரை நாம் மறந்துவிட்டோம். பேச்சிப்பாறை அணையைகட்டிய மிஞ்சின் [ Mr. Minchin ] துரையை நாம் இன்று வாய்மொழிக்கதைகளில் மட்டுமே நினைவுகூர்கிறோம். சாமர்வெல் டாக்டருக்குக் கூட ஒரு நினைவுச்சின்னம் இல்லை. ‘ என்றார் அ.கா.பெருமாள்.

1897-1906 காலகட்டத்தில் திருவிதாங்கூர் அரசால் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை தென்மாவட்டங்களுக்கு நீர்வளத்தையும் மின்சாரத்தையும் அளிக்கும் முக்கியமான அமைப்பாகும். மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக பெரிய அணை இது . அதைக் கட்டியவர் பிரிட்டிஷ் பொறியியலாளரான மிஞ்சின். அவரைப்பற்றி மேலதிக தகவல்கள் ஏதும் எழுதப்பட்டது இல்லை. உளைசேற்றுப்பகுதியான பேச்சிப்பாறை பகுதியில் அடர்காட்டுக்குள் அப்படி ஓர் அணையை அவர்எழுப்பியது நாட்டுப்புற மனங்களில் பெரிய இதிகாசம் போல உள்ளது.

நெய்யூர் லண்டன்மிஷன் ஆஸ்பத்திரியில் டாக்டராக இருந்த டாக்டர் சாமர்வெல் விசித்திரமான மனிதர். மலையேறும் பயிற்சி பெற்று இமயமலை ஏறி முதல்முறையாக அடித்தளதங்குமிடம் வரை சென்றவர் அவர்தான். அங்கிருந்து மேலே செல்லும்போது தோழர்கள் பனிப்பிளவில் மாட்டி உயிரிழக்க தனியாக பலநாள்பயணம் செய்துமீண்டார். தீவிர மதநம்பிக்கையாளர் ஆகி குமரிமாவட்டம் வந்து இறுதிவரை மருத்துவ சேவை ஆற்றினார். அவரை வாய்மொழிக்கதைகள் கடவுளுக்கு சமானமாக சொல்கின்றன. பல இந்து குடும்பங்களில் அவர் படம் பூஜை அறையில் இருக்கிறது. அவரைப்பற்றி வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் முதலிய பல மலையாள கவிஞர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். வைலோப்பிள்ளியின் கவிதை முக்கியமானமலையாள ஆக்கங்களில் ஒன்று. அறுவைசிகிழ்ச்சை செய்த பிறகு வலியில் அழும் நோயாளியை ஆறுதல்படுத்த டாக்டர் புல்லாங்குழல் வாசித்துக் காட்டுகிறார் [ கத்தியும் குழலும்]

‘நான் என் கதைகளில் இருவரையும் ஒருவகையில் நினைவுகூர்ந்திருக்கிறேன் சார் ‘என்றேன். ‘மிஞ்சின் துரை படுகை கதையில் செம்பன் துரையாக வருகிறார். காடு நாவலில் சாமர்வெல் ஒரு கோணத்தில் வருகிறார். அசோகவனம் நாவலில் சாமர்வெல் முக்கியமான கதாபாத்திரமாகவருவார் ‘ என்றேன்

‘நமது வரலாற்றில் இருப்பதிலேயே புகைமூட்டமாக உள்ள இடம் பிரிட்டாஷ் ஆட்சிக்காலம்தான் என்றுகூட சொல்லலாம். இத்தனைக்கும் முறையான ஆவணப்பதிவுகள் நிறைய உள்ளன. சென்னை ஆவணக்காப்பகத்தில் அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆய்வுக்கு யாரும் இல்லை. நமது கவனம் பழந்தமிழ் பொற்காலங்களில் குவிந்திருக்கிறது. சமீபகாலமாக சாதிசார்ந்த வரலாறுகளில். வெள்ளையர்கள் எல்லாருமே சுரண்டல்வாதிகள் என்று ஒற்றைப்படையாக முடிவு செய்து விட்டோம். அவர்கள் பெயர்களை அழித்து விடுகிறோம். சில இடங்களில் அவர்கள் கட்டிய அணைகளிலும் கட்டுமானங்களிலும்கூட அவர்கள்பெயர்களை அழித்துவிட்டு சமீபகால அரசியல்வாதிகளின் பெயர்களை சேர்த்திருக்கிறோம். சுதந்திரம்கிடைத்தபிறகு பேச்சிப்பாறை அணை காமராஜ் காலத்தில் ஒரே முறைதான் தூர்வாரப்பட்டிருக்கிறது. ஆனால் யாராவது அரசியல்வாதி வந்துபோனால்கூட அங்கே பெயர்பலகை வந்துவிடும்….. ‘என்றார் பெருமாள்

‘மதுரை அணை இல்லாவிடால் தேனிபகுதியே இன்றைய நிலையில் இருந்திருக்காது. அதைக் கட்டிய துரையின் பெயர் ஆய்வாளர்களுக்கு மட்டும்தான் தெரியும். ‘ என்றார் வசந்தகுமார்.

‘ அப்படிப்பார்த்தால் சர்.சி.பி.ராமசாமி அய்யரின் சேவை குமரிமாவட்டத்துக்கு எவ்வளவு முக்கியமானது. இப்பகுதிமீது உண்மையான அக்கறைகொண்டிருந்த கடைசிஆட்சியாளர் அவர்தான் . அவர்போட்ட கான்கிரீட் சாலை இன்றும் தேசியநெடுஞ்சாலையக உள்ளது. அவர் உருவாக்கிய குடிநீர் ,சாக்கடை அமைப்புகள், அவர் விரிவாக்கிய சந்தைகள் துறைமுகங்கள் , கட்டிய அணைகள் எல்லாம் நம்மை வளமான ஊராக மாற்றின. நாம் அவரை மறந்துவிட்டோம். புதியகேரளத்தின் அடிப்படைகளை உருவாக்கிய மேதை அவர். கர்நாடகத்துக்கு விஸ்வேஸ்வரய்யா போல . விஸ்வேஸ்வரய்யா அங்கே எவ்வளவு போற்றப்படுகிறார். சி.பி.ராமசாமி அய்யரை கேரளம் மறந்து விட்டது. ‘

‘அவர் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இரு கட்சிக்குமே எதிராக இருந்தார் ‘ அதுதான் என்றார் பெருமாள்

‘வரலாறு என்பது சமகால அரசியல் தேவைக்காக உருவாக்கப்படுவதுதான் என்றைக்குமே ‘என்றேன்.

டிலனாயின் கல்லறை அருகே ஒரு பழைய தண்ணீர்தொட்டிக் கட்டிடம் இருந்தது . இரவில் அது பலவகையான கேளிக்கைகளுக்கு உரிய இடமாக இருக்கலாம். சுவர் முழுக்க பலவிதமான கரி எழுத்துக்கள். சமகால வரலாற்றுக் குறிப்புகள்.

‘அப்பா நாம் மலை ஏறலாமா ? ‘ என்றான் அஜிதன்

சென்ற ஓணத்துக்கு வந்து நானும் அவனும் உதயகிரி மலைமீது ஏறினோம். அங்கிருந்துபார்த்தால் ஆரல்வாய்மொழி கண்காணிப்பு மலையுச்சி தெரியும்.அங்கே பந்தம்காட்டினால் இங்கே தெரியும் .

உதயகிரி அக்காலத்தில் பீரங்கிவார்க்கும் உலையாக செயல்பட்டிருக்கிறது. டிலனாய் பீரங்கிவார்ப்புக்கலையை சில டச்சு நிபுணர் உதவியுடன் இங்கே செய்து திருவிதாங்கூர் அரசை வலிமைப்படுத்தினார்.

மீண்டும் ஒருமுறை டிலனாய் நினைவைப்பார்த்துவிட்டு கிளம்பினோம். இருட்டிவிட்டிருந்தது.

[தொடரும் ]

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்