குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அண்மையில் மேன்மைதங்கிய பாரத குடியரசு தலைவர். டாக்டர் அ.ப.ஜ. அப்துல் கலாம் அவர்கள் ஏசுசபையினரின் கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டினை தொடங்கி வைத்ததுடன் அவர்களது கல்விசேவைகளையும் பாராட்டியுள்ளார். ‘அவர்கள் புனிதமானதோர் பணியினை செய்கின்றனர்…கல்வி குறுகிய சமய எல்லைகளுக்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். ‘ எனக் கூறியுள்ளார். ஏறக்குறைய அனைத்து பத்திரிகைகளிலும் இச்செய்தி ஏறக்குறைய பினவரும் விதத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்.எஸ்.எஸ் கோரிக்கையை கலாம் புறக்கணித்தார். ஏசு சபையினரின் சேவைக்கு கலாம் பாராட்டு. ‘ (இந்தியன் எக்ஸ்பிரஸ், இணைய செய்தி 23-1-2003) ‘ஏசு சபையினரின் தொடக்கவிழாவில் கலாம் கலந்து கொள்வார். ஆர்.எஸ்.எஸ் கோபம். ‘ (ரிடிஃப் மற்றும் சைபி [sify] இணையச்செய்திகள்)

நம் செய்தி நிறுவனங்கள் பிரச்சார மாய பிம்பங்களை விற்பதில் காட்டும் தீவிரத்தை உண்மைகளை தெரிவிப்பதில் காட்டினால் நல்லது எனத் தோன்றுகிறது. இந்நிலையில் சில ஹிந்த்துத்வ வாதிகள் ‘ஏசுசபையினரின் இரகசிய உறுதிமொழி ‘ எனும் ஓர் ஆவணத்தின் அடிப்படையில் ஏசுசபையினரின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

முதலாவதாக நம் குடியரசு தலைவர் ஏசுசபை கல்விநிறுவனங்களின் முன்னாள் மாணவர். அங்கு அவர் அனுபவித்த சமயப் பொறுமையின் மேன்மையை அவர் தன் சுய சரிதையில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் கல்கத்தா ஏசுசபையினரின் கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டிற்கு வருகை தராதிருந்திருந்தால் தன் முன்னாள் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அம்மாநாட்டினை தொடக்காதிருந்திருந்தால் அது நிச்சயமாக அவருக்கு பெருமை சேர்ப்பதல்ல என்பதுடன் பாரத மரபிற்கு உகந்ததல்ல. இது ஒருபுறமிருக்க, ‘ஏசுசபையினரின் இரகசிய உறுதி மொழி ‘யின் அடிப்படையில் சில ஹிந்துத்வவாதிகள் ஏசுசபையினரை குற்றம் சாட்டியிருப்பதால் அதன் உண்மைத்தன்மையை காணலாம்.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் புராட்டஸ்டண்ட் கத்தோலிக்க பரஸ்பர வெறுப்புகள் உச்ச கட்டத்தை அடைந்த போது, கத்தோலிக்க சமயம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அச்சமயம் இக்னோசியஸ் லயோலா தூய்மையான சேவையின் மூலம் கத்தோலிக்க சமயம் இழந்த நன்மதிப்பை பெற முடியும் என உணர்ந்து ஆரம்பித்த அமைப்பு ஏசுசபை. கத்தோலிக்க பெரும் அமைப்பில் ஏசுசபையினரே ஓரளவு சுதந்திரத்துடன் பணியாற்றுகின்றனர். அவர்களது தந்நலமற்ற சேவையினால் கத்தோலிக்கம் இழந்த மதிப்பினை மீண்டும் அடைவதை கண்ட புராட்டஸ்டண்ட் பிரிவு மதவாதிகளும் அரசியல்வாதிகளும், கத்தோலிக்க மத உட்பிரிவினரும் ஏசுசபையினர் மீது பல பழிகளையும் அபாண்டங்களையும், மோசடி ஆவணங்கள் மூலம் மக்களுக்கு சந்தேகங்களையும் எழுப்பினர். பிரான்ஸ் போன்ற கத்தோலிக்க தேசங்களில் கூட ஏசுசபையினர் மீது பலவித பழிகள் சுமத்தப்பட்டன. அத்தகைய வெறுப்பியல் மோசடிகளின் விளைவாக எழுந்ததே ‘ஏசுசபையினரின் இரகசிய உறுதிமொழி ‘ என்பது. ஆனால் 1972 வரையில் புராட்டஸ்டண்ட் அரசுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு உறுதிமொழி இருந்ததென்பதாகவும் அது தற்போது நீக்கி தடைபடுத்தப்பட்டு விட்டதாகவும் பிரான்ஸ் வரலாற்றாசிரியர் ஜீன் லகோந்தே தெரிவிக்கிறார்.

வெறுப்புக்குள்ளாக்கப்பட ‘மற்றவர் ‘ மீது இத்தகைய மனிதாபிமானமற்ற சித்தரிப்பினை வழங்கும் போலி ஆவணங்கள், அல்லது தம் மதிப்பினை உயர்த்தும் போலி ஆவணங்களை கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் திருச்சபைகள் உருவாக்கி பயன்படுத்தியுள்ளன. ஐரோப்பாவின் அரசதிகாரத்தை கான்ஸ்டண்டை பேரரசன் பாப்பரசருக்கு அளித்ததாக கூறும் போலி ஆவணம் கத்தோலிக்க திருச்சபையால் அது போலி என ஐயம் திரிபற நிரூபிக்கப்படும் வரையில் பயன்படுத்தப்பட்டது. ‘தெ பிரோட்டாகால்ஸ் ஆஃப் தெ லேர்ன்ட் எல்டர்ஸ் ஆஃப் சியான் ‘ கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் மதவாதிகளால் யூதருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. இன்றும் அரபுநாடுகளில் இது உண்மையென நம்பப்படுகிறது. ‘ஏசுசபையினரின் இரகசிய உறுதி மொழி ‘யும் இத்தகையதோர் ஆவணமே. எனவே இத்தகைய மேற்கத்திய வெறுப்பியல் விளைவுகள் இந்திய சூழலில் விலக்கப்படுவது நம் அனைவருக்குமே நல்லது.

ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் பல நடவடிக்கைகள் நம் குடியரசுத்தலைவருக்கே அதிர்ச்சி அளிப்பவையாகும். கத்தோலிக்க அமைப்பினை சார்ந்த ஜான் தயாலின் காஷ்மிர் குறித்த நிலைபாடு, பாரத அரசின் அணுக்கொள்கை குறித்த நிலைபாடு ஆகியவை இந்திய எதிர்ப்புத் தன்மைகொண்டவை. இந்நிலையில் ஏசுசபையினரின் நிலைபாடென்ன என்பது குறித்து நம் குடியர்சுதலைவர் அறிய இது ஒரு வாய்ப்பாக அமையும். கத்தோலிக்க திருச்சபை ஒரு ஒற்றைப்பரிமாண ஒற்றைக்கல் சிற்பமல்ல. ஏசுசபையினரின் 300 ஆண்டுகள் வரலாற்றில் பாப்பரசரின் தலைமையுடன் ஏசுசபையினருக்கு இருந்த உறவு மிகவும் சுமுகமானது என்று கூறமுடியாது. இரண்டாம் வத்திகான் மாநாட்டிற்கு பின் அவ்வுறவு சீர்பட்டது. அந்தோனி டி மெல்லா போன்ற ஆன்மிக பங்களிப்பாளர்கள் ஏசு சபையிலிருந்து உருவானவர்கள். மதமாற்ற நோக்குடனான சேவைகளை எதிர்க்கும் பல தந்நலமற்ற திருச்சபை ஊழியர்களை ஏசுசபையில் நாம் சந்திக்கலாம். ஆனால் இன்று மீண்டும் வத்திகான் தன்னை இறுக்கிக் கொள்கிறது. கார்டினல் ராட்சிங்கர் போன்றவர்கள் மேலதிகாரத்தில் இருக்கையில் ஏசுசபை எவ்விதம் தன்னை தகவமைக்கும் என்பது ‘ஆன்ம அறுவடைக்குகந்த புலமாக ‘ இன்றைய வத்திகான் தலைமை பீடம் அறிவித்திருக்கும் ஆசியர்களாகிய நமக்கு மிகவும் சுவாரசியமான விஷயம்.

இந்நிலையில் ‘கல்வி மதங்களை தாண்டி மனிதனை உயர்த்த வேண்டும். ‘ என நம் குடியரசுத்தலைவர் கூறியிருப்பது ‘கல்விசேவையே ஆன்மாவின் அறுவடைக்குத்தான் ‘ என கருதும் கருத்தியலுக்கு எவ்வித மாற்றத்தை அளிக்கிறது என்பதையும் நாம் பொறுத்திருந்து காணலாம்.

இனி நம் ஊடகங்களுக்கு வருவோம். ஆர்.எஸ்.எஸ் கலாமை கண்டித்ததா ? கோபம் கொண்டதா ? உண்மை என்ன ? ஏசுசபையினரை ஒரு தனித்துவ கருத்தியலுக்கு துணை போகும் இயக்கத்தினர் என கூறியது ஆர்.எஸ்.எஸ். அதே சமயம் ஆர்.எஸ்.எஸ்ஸின் செய்தி மிகத் தெளிவானது,சங்கத்தின் அகில பாரதிய அமைப்பாளர் டாக்டர் அப்துல்கலாம் கத்தோலிக்க அமைப்பின் விழாவினை தொடக்கி வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்து கூறுகிறார், ‘நாங்கள் நம் குடியரசு தலைவரின் ஞானத்திலும் உயர்நோக்க பார்வையிலும் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்…. பாரத தேசிய மரபில் வேர் கொண்டுள்ள ஒரு மகா மனிதர் என்னும் முறையிலும், சர்வ தர்ம சம பாவனையை வலியுறுத்தும் ஒரு தேசத்தின் தலைவர் என்னும் முறையிலும், மேன்மைதங்கிய நம் குடியரசு தலைவர் எந்த சமய விழாவில் பங்கெடுத்துக் கொள்வது அவ்விழாவிற்கு தேசியத்தன்மையினை சேர்க்கும். நம் தேசிய மதிப்பீடுகளை அவ்விழாவிற்கு அளிக்கும். ‘ (பார்க்க பிடிஐ செய்தி 1.ஜனவரி 2003)

ஆனால் நம் ஊடகங்களின் சித்தரிப்போ எவ்விதத்திலும் உண்மையை அளிப்பதாக இல்லை. மாறாக ‘ப்ரோடோகால்ஸ் ஆஃப் எல்டர்ஸ் ஆஃப் சியான் ‘ தன்மையுடன் செய்திகளையும்

செய்தி விமர்சனங்களையும் தம் சொந்த அரசியல் விருப்பு வெறுப்புக்களுடன் கொடுப்பதாகவே அமைகின்றன.

hindoo_humanist@lycos.com

Series Navigation