கீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.


அத்தமன மாகி
இன்றைய பொழுது சாய்ந்து விட்டால்,
கானம் பாடாது
நிரந்தரமாய்,
பறவையினம் மெளன மாகி விட்டால்,
கால்கள் ஓய்வாகி
காற்று
களைத்துக் கொடி காட்டி விட்டால்,
காரிருள் முகத் துகிலைத் திரையிட்டு
என்மீது
கனமாகப் போர்த்திவிடு!
அண்ட கோளத்தை நீ
மெத்தையில்
மேவி
நித்திரையில்
ஆழ்த்தி விடுவது போல! ….
அந்தி
சாயும் வேளையில்
தலைசாயும்
செந்தாமரையின் செவ்விதழ்கள்
மென்மையாக
மூடுவது போல! ….

யாத்திரை முடிவதற்கு முன்பே
சாக்குப் பையில்
பயணியின்
சரக்குப் பண்டங்கள்
முழுதும் தீர்ந்து போயின!
வழிப்போக்கனின்
புழுதிகள் அப்பிய
உடைத் துணிகள் கந்தலாய்ப் போயின!
நடைப்பயணி
வலுவற்று
சோர்வடைந் துள்ளான்!
வறுமையை நீக்கி
வழிப்போக்கனின்
மானத்தைக் காத்திடு!
மீண்டும்,
வாழ்வளித்திடு வழிப்பயணிக்கு!
உந்தன்
கனிவு மிகும்
இரவின்
காரிருள் வெளிக்குள்ளே,
வேர்விடும்
பூவைப் போல!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan]

Series Navigation