காவல் பூனைகள்

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

பத்ரிநாத்


‘ ‘பூஜ்ஜீ.. இக்கட ரா.. ரா.. ‘ ‘, புஸீ புஸீவென்று விஸ்தாரமாக பாதி சோபாவை ஆக்கிரமித்துக் கொண்டு இந்த அம்மாள் வாசலில் யாரை பார்த்து பூஜ்ஜீ என்கிறார் என்று பார்த்தேன்.

வாசல் கதவை ஒட்டினாற்போல் பூஜ்ஜீ என்கிற அந்த வெள்ளையும் வெளிர் நீலமும் கொண்ட பூனை, சோம்பல் முறித்த படி உடலை வில்லைப் போல வளைத்து ஜிலு ஜிலு என்று துடித்தது. எனக்கோ இருப்பு கொள்ளவில்லை.. எத்தனை முறை பிரச்சனையை ஆரம்பித்தாலும், அதிலிருந்து நழுவிக் கொண்டு வேறு ஏதோ பேசி திசை திருப்பிக் கொண்டிருந்தாள், இந்த அம்மாள்.. ச்சே.. சவிதாவை நினைத்தால் பாவமாக இருந்தது…. சரியான பாசிஸ்ட் மாமியார், மாமனார்தான் இவர்கள் இருவரும்..

‘ ‘இங்கப் பாருங்க.. இங்கப் பாருங்க.. ‘ ‘, அந்த அம்மாள் கண்ணாடிச் சில்லுகளைப் போட்டு உடைப்பதைப் போல தன் கணவனைப் பார்த்துச் சிரித்தாள்.. அப்பா.. என்ன ஒரு சிரிப்பு.. எனக்கு என்னவோ , அவள் சிரிப்பை இப்படித்தான் உவமையாகக் கூறத் தோன்றுகிறது.. ‘ ‘நேனு லோப்புல பிளுஸ்துந்தி காதா.. ‘ ‘, என்று தன் கணவனிடம் ஏதோ கூறினாள். நான் விழிப்பதைக் கண்ட பின்பு, ‘ ‘இல்ல.. நா அத உள்ள கூப்புடறேன்ல.. அதுக்கு வர்ற புடிக்கல.. அதான் என்ன அப்படி அவசரம் உடனே என்னைய கூப்புடற.. கொஞ்சம் களிச்சுத்தான் வருவேன்னு சொல்லுது.. ‘ ‘, என்று கூறினாள்.. முகத்தில்தான் என்ன ஒரு பூரிப்பு..

அந்தப் பூனை உடலை வளைத்தால் அதற்கு இத்தனை அர்த்தமா.. இது என்ன மிருக பாஷையோ… புரியவில்லை.. ..எனக்கு இவர்கள் பேசும் தெலுங்கும் புரியவில்லை. என்ன பெயரோ பூஜ்ஜீ…. என்னைப் பொருத்தவரை எந்த மிருகத்திற்கும் பெயர் ராமு.. காரணம் தேவர் பிலிம்ஸ் படங்கள் பார்ப்பதால்..

‘ ‘இந்தப் பூனயோட பெயர்தான் பூஜ்ஜா.. ‘ ‘, என்றேன் சிரித்துக் கொண்டே..

‘ ‘என்ன அப்படிக் கேட்டுட்டிங்க.. என்ன புத்திசாலி தெரியுமா.. மனுஷாளக் காட்டிலும் ரொம்ப இன்டலிஜெண்ட்.. ‘ ‘, என்றார்.. முகத்தில் கோபம்.., ‘ ‘நாங்க லண்டன் போயிருந்த போதுகூட இத விட்டுப் போக மனசில்லை.. இதையும் அளச்சிக்கிட்டுப் போவலாம்னு சொன்னேன்.. இவர்தான் வேண்டாம்னிட்டார்.. பாவம்.. ரெண்டு மாசம் இதப் பார்க்காம எனக்கு அளுகையே வந்துருச்சு.. நாங்க இதுகளுக்கு ஒளுங்கா சாப்பாடு கொடுத்துப் பாத்துக்கிட ஒரு பேமிலிய ஆயிரம் ரூவா சம்பளம் கொடுத்து எங்க வூட்ல தங்க வச்சுட்டுத்தான் ஊருக்கே போனோம்.. இதுங்க அத்தன உயிரா கெடக்குங்க.. ‘ ‘, என்று சொன்ன அந்த அம்மாளை விநோதமாகப் பார்த்தேன்.. நான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று வித்தியாசமாகப் பார்த்தது, அந்த அம்மாளுக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டிருக்கும்.. மீண்டும் தன் புஜ்ஜீவுடன் பேசத் தொடங்கினாள்.. ‘ ‘கிட்டி எங்கடா.. எங்கப் போச்சு சொல்லு.. ‘ ‘, என்றாள், அந்தப் பூனையிடம் கேட்டாள்.

‘ ‘கிட்டியா.. அப்பிடின்னா கிருஷ்ணமூர்த்தியா.. ‘ ‘,

‘ ‘இல்ல.. கிருஷ்ணவேணி.. அய்யய்யோ.. ஏங்க சீக்கிரம் வாங்க.. கிட்டி கம்பி வேலியில மாட்டிகினா போலருக்கு.. ‘ ‘, என்று படபடத்தாள் அந்த அம்மாள்.. இந்தக் கிழவியால் எழுந்து நடக்கவே முடியவில்லை.. இருந்தாலும் என்னமாய் ஆர்ப்பாட்டம் செய்கிறாள் என்று நினைத்தேன்.. நான் உடனே எழுந்து வெளியே வந்தேன். அவள் கணவரும் அவசரமாக பின் தொடர்ந்தார்..

‘ ‘சேச்சே.. கம்பியில மாட்டிகில.. அங்க ஒரு பூச்சி ஓடுது.. அதப் பாத்து கத்துது.. ‘ ‘, என்று அதை மெதுவாய்த் தூக்கி உள்ளே எடுத்து வந்தேன்.. என் பின்னால் கிழவியின் கணவர் மூச்சிரைக்க வந்தார்..

‘ ‘ஏங்க.. அவரு அளச்சிட்டு வருவாரு.. நீங்க ஏன் மாடிப்படியில எறங்கி வர்றிங்க.. ஏற்கனவே பி.பீ.. ‘ ‘, என்றாள் கிழவி..

‘ ‘சார்.. நீங்க போங்க.. நா எடுத்துட்டு வர்றேன்.. ‘ ‘, கிட்டி சற்று ஈரமாக இருந்தது..

ஓருவழியாக கிட்டியையும் பூஜ்ஜீயையும் ஒர் அறையில் விட்டுக் கதவைச் சாத்தினாள்… உள்ளே இரண்டும் கீச் கீச்சென்று ஒரே சத்தம்..

நான் மெதுவாக இந்தப் பூனைகளிடம் ஆரம்பித்தேன்..

‘ ‘அம்மா.. சவிதா எங்க வீட்டல வளர்ந்த பொண்ணு.. அஞ்சு வயலேர்ந்து பாத்துட்டு வர்றேன்.. என் மகள் மாதிரிதான் நாங்க நெனக்கிறோம்.. அதனாலத்தான்.. அவர் அப்பாவுக்கு பதிலா நா வந்து உங்ககிட்ட பேசறேன்.. ‘ ‘ என்று தொடங்கினேன்.

‘ ‘சார்.. நானும் ஒரு மரியாதைக்குத்தான் நானும் ஒங்ககிட்டப் பேசறேன்.. அவளப் பத்தி பரிஞ்சு பேச இங்க வர வேண்டாம்.. என்ன தெரியும் உங்களுக்கு.. அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மரியாத மட்டு இருக்கா.. மாமியார் மாமனார்ங்கற மரியாத வேண்டா.. ஒங்களுக்கு இப்படியொரு மருமவ செஞ்சா சும்மா இருப்பிங்களா… ‘ ‘, கிழவியின் முகம் என்னமாய்ச் சிவக்கிறது..

( ‘ ‘மாமா.. .. ஒரே பொய் சொல்வாங்க.. நம்பாதிங்க.. தொட்டத்துக்கெல்லாம் குத்தம்னா நா என்னதான் செய்யறதுன்னு கேட்டா.. என்ன மரியாத கொறச்சலா பேசறன்னு சொல்றாங்க..)

‘ ‘.. இவரக் கேட்டுப் பாருங்க.. இவர் வயசு என்ன அவ வயசு என்ன.. இவர்கிட்ட எடக்கா பேசறா.. ‘ ‘, என்றார் தன் கணவனைக் காட்டி..

சோடாபுட்டிக் கண்ணாடி போட்டுக் கொண்டு தலையாட்டிய அவரைப் பார்ப்பதற்கும் பூனை மூஞ்சியைப் போல இருந்தது.. சன்னமாக ஏதோ சொன்னார்.. ஒன்றும் புரியவில்லை.. ‘ ‘பாத்திங்களா.. ‘ ‘, என்றார் அந்த அம்மாள் என்னப் பார்த்து.. என்னத்தைப் பார்ப்பது..

( ‘ ‘.. எங்க மாமனார் எதப் பத்தியும் கவலப் படமாட்டார்.. அவரு பாட்டுக்குப் போயிட்டு இருப்பார்.. ஆனா, மாமியார் காக்காய் நிறம் சிவப்புன்னாலும் உடனே ஆமாம் என்பார்.. ‘ ‘)

‘ ‘சரி.. எங்கள விடுங்க.. எம் பையன் இப்போ லண்டன் ஓடிப் போயிட்டான்.. இவ சங்காத்தமே வேணாம்னு.. அதுக்கு என்னச் சொல்றிங்க.. ‘ ‘,

( ‘ ‘மாமா.. அவரு ஒண்ணும் எங்கிட்டக் கோச்சிக்கிட்டு லண்டன் போவல.. இவங்கதான் அனாவசியமா நாலு லட்ச ரூபா செலவு பண்ணி அனுப்பிட்டாங்க.. அவரே போன்ல சொன்னார்.. ‘ ‘,)

‘ ‘இவள திரும்பியே பாக்க மாட்டேன்னு சொல்லிட்டான்… ‘ ‘,

( ‘ ‘.. வாரம் ஒரு தடவையாவது எங்கிட்ட பேசிட்டுத்தான் இருக்காரு.. ‘ ‘,)

‘ ‘சரிம்மா.. இதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படின்னுதான் நடக்குது.. அதப் பெருசாக்க வேண்டாமே.. ‘ ‘, என்றேன்..

‘ ‘என்ன சார் பேசறிங்க.. நீங்க மூணாவது மனஷாள்னு பேசாம இருக்கேன்.. இவ நேத்து வந்தவ.. ஏதோ இவ பெத்து வளர்த்துப் படிக்க வச்சதப் போல நடந்துகிறா ..நாங்க எம் புள்ள படிப்புக்கு எத்தன செலவு பண்ணோம் தெரியுமா.. ? யு.எஸ் போறதுக்கு.. இன்ஜினியரிங் படிப்புன்னு எங்க சொத்தயே கரச்சோம்… அம்பது லட்ச ரூவா சொத்து பாதியா ஆயிடுச்சு..தெரியுமா.. ? ‘ ‘,

( ‘ ‘ஆமா மாமா.. அதுக்குப் பதிலாதான் எங்கப்பாகிட்டேர்ந்து முடிஞ்ச வரைக்கும் கறந்தாச்சே.. எங்கப்பா பாதிக்கு மேலேயே இழந்துட்டாங்களே.. அத சொல்ல மாட்டேங்கறாங்க.. ‘ ‘,)

‘ ‘இப்போ முடிவா என்ன சொல்றிங்கம்மா.. ‘ ‘,

‘ ‘முடிவு என்ன முடிவு.. எங்க புள்ள என் பேச்சத்தான் கேப்பான்.. இந்தப் பொண்ண டைவர்ஸ் பண்ணச் சொல்லிட்டோம்.. நாங்க அவனுக்கு வேற கலியாணம் பண்ணலாம்னு இருக்கோம்.. ‘ ‘,

நான் எத்தனையோ முறை மன்றாடியும் அந்த அம்மாள் தான் சொல்வதையே சொல்லிக் கொண்டு வந்தாள்.. பேசிப் பயனில்லை என்று விடைபெற்று வந்தேன்..

நான் வீடு திரும்புவதற்குள்ளாகவே, என்னைத் தேடி சவிதாவும் அவர் தந்தையும் என் வீட்டில் எனக்காகக் காத்திருந்தார்கள்.. பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.. இவர்களிடம் என்ன சொல்வது.. சவிதாவின் முகத்தைப் பார்த்தேன்.. சே.. இவன் இன்னமும் குழந்தைதான்.. அவளிடன் உன்னை விலக்கிவிட்டு வேறு ஒரு திருமண ஏற்பாட்டிற்கு அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள் என்று சொல்லத் தோன்றவில்லை..

‘ ‘என்ன ஆச்சு சார்.. என்னதான் சொல்றாங்க.. ‘ ‘, சவிதாவின் தந்தை.. இந்தச் சில மாதங்களில் அவர் மிகவும் ஒடுங்கிப் போனதைப் போல இருந்தது..

சவிதா இறுக்கமாக அமர்ந்திருந்தாள்..

‘ ‘ம்ம்.. பாக்கலாம்.. இன்னமும் கொஞ்சம் பேசித்தான் பாக்கணும்.. சவிதா.. என்னம்மா.. ரொம்ப டல்லாயிருக்கே.. ‘ ‘, என்றேன்.

‘ ‘ம்.. சொல்லுங்க அங்கிள்.. ‘ ‘,

‘ ‘இதப் பாரும்மா.. நீ மனந்தளரக்கூடாது.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. உன் புருசன் அப்பப்ப பேசறதா சொல்ற.. தொடர்ந்து பேசிப் பாரு.. அவர் மனசு மாறுவார்னுதான் எனக்குத் தோணுது.. முழு நம்பிக்கையோட இரு.. ‘ ‘,

சவிதாவின் தந்தை பெருமூச்செறிந்தார்.. ‘ ‘எல்லாம்.. விதியோட விளையாட்டுன்னு நெனச்சிக்கிறேன்.. வேற என்ன பண்றது.. அவங்க அந்தப் பூனைகளுக்கு தர்ற மரியாதகூட, மனுஷங்களுக்குத் தர்றதில்லை… பேசாம அந்தப் பூனைகளாப் பொறந்திருக்கலாம்.. ‘ ‘, என்றார் விரக்தியாக சிரித்துக் கொண்டே..

‘ ‘நீங்க வேற.. அவங்க அப்படி ஒண்ணும் மிருகாபிமானி இல்ல.. அந்தப் பூனைகளுக்குப் பேசும் திறன் இல்லை.. ஒரு வேள அதுங்க பேச ஆரம்பிச்சா, அந்த அம்மாள் விரட்டிவிட்ருவாங்க.. ‘ ‘, என்றேன் ..

—-

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்