புதியமாதவி, மும்பை
தமிழ்ச் சமூக அரசியல் சமுதாய தளத்தில் ஊடகங்களின் சாம்ராஜ்யத்தில் ஒற்றை இதழுடன் களத்தில் நிற்பவர் கவிதாசரண். சாதியற்றவன் என்பதை ஓர் அடையாளமாகக் கொண்டு சாதியப் படிநிலை தமிழ்ச் சமூகத்தின் முகத்தை அவர் காட்டும் கண்ணாடியில் காணும்போது தலைவர்களின் சுயமும் தொண்டர்களின் கனவும் செம்மொழி பேசும் தமிழ்ச் சமூகத்தை ஆடைகளைந்து நிர்வாணமாக்கி நடுத்தெருவில் நாய்கள் விரட்ட துரத்துகிறது.. சாதியப்படிநிலையைத் தக்க வைத்துக் கொண்டதில் தன்னிகரற்று திகழும் செந்தமிழனின் 2500 ஆண்டு கால வரலாற்றில் பெருமைப் பட்டுக்கொள்ள அப்படி என்ன தான் இருக்கிறது என்ற தந்தை பெரியாரின் கேள்வி கவிதாசரணின் ஒவ்வொரு கட்டுரையின் அடிநாதமாக இருப்பதாக தொடர்ந்து 15 ஆண்டுகாலத்திற்கும் மேலான அவர் எழுத்துகளின் வாசிப்பில் நான் உணர்ந்ததுண்டு.
தமிழ்ச் சமூகமும் தலித்தியக் கருத்தாடலும் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் அவர் கட்டுரைகளின் தொகுப்பு கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை மறுபதிப்பு செய்திருக்கும் பதிப்பாசிரியரின் குறிப்புகள் என்று சொல்லவும் அச்சமாக இருக்கிறது. கால்டுவெல் எழுதிய குறிப்புகளும் விளக்கங்களும் தமிழ்ச் சமூகத்தால் திட்டமிடப்பட்டு இருட்டடிப்பு செய்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வதில் எவ்விதக் குற்ற உணர்வும் தமிழ்ச் சமூகத்திற்கு இல்லை. இந்தக் கட்டுரைகளின் தொகுப்புக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான் என்பதை தின்று செரிக்க முடியாமல் தொண்டையில் சிக்கிய முள்ளாக ஏற்பட்ட தவிப்பு தான் என்னை அதிகமாகப் பாதித்தது. தமிழனைப் புதைத்த தாழியைத் தோண்டி எடுத்து அதிலிருக்கும் எழுத்துகளை வாசித்திருந்தால் தமிழன்பர்கள் கொண்டாடி இருக்க கூடும். சைவ வைணவத்தை திருக்குறளை திருமறையை இப்படியாக தமிழ் இலக்கிய தொன்மத்தை படி எடுத்திருந்தாலோ ஏன் மறு வாசிப்பு செய்திருந்தாலோ கூட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பாராட்டி இருப்பார்கள். இதை எல்லாம் விட்டுவிட்டு கால்டுவெல் எழுதிய பறையர்களும் தமிழர்கள் தான் என்ற ஒற்றை கருத்தை தமிழ்ச் சமூக விண்வெளியில் மின்னலாய் படரவிட்ட நிலையில் மின்னலைத் தொடர்ந்து வரும் இடி மழை புயல் காற்று ஏதுமின்றி தமிழ்ச் சமூகம் குளத்தில் விட்டெறிந்தக் கல்லாய் இருப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. எனினும் தலித்தியக் அரங்கில் தலித்திய அறிவுஜீவிகளுக்கு நடுவில் இக்கட்டுரைகளின் கருத்துருவாக்கம் எவ்விதமான சலனத்தையும் ஏற்படுத்தாதது அச்சம் தரும் அதிசயமாக இருக்கிறது.
கால்டுவெல்லின் ஒப்பிலக்கண மறுபதிப்புக்கான அறிமுகங்கள், கருத்தரங்குகளின் மையப்புள்ளியாக இருந்திருக்க வேண்டிய தலித்தியக் கருத்தாடல் மீண்டும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற போர்வைக்குள் மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் இந்நூலின் மறுபதிப்புக்கான நோக்கத்தை கேள்விக்குறியாக்கி தமிழ்ச் சமூகத்தின் சாதிய முகத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
நூலின் கருத்துருவாக்கங்களின் மீதான சில பதிவுகள்:
1) திராவிட சிசு என்று சம்பந்தனை ஆதிசங்கரன் முத்திரைக்குத்துவது அவன் மலையாளம் ஆகாத மொழிக்குரியவன் என்பதால் மட்டுமா? (பக் 17) இன்றைக்கும் எந்தப் பார்ப்பானாவது திராவிட, தமிழ் அடையாளத்தை தங்களுக்கான அடையாளமாக /புனைபெயராக காட்டியதுண்டா? செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துப் பாய்வதாக பரவசமடைந்த மகாகவி பாரதி கூட தன்னை தமிழன் என்றோ திராவிடன் என்றொ அடையாளப்படுத்தவில்லையே! ஏன்? இந்தப் பின்புலத்தைக் கருத்தில் நிறுத்தி உங்கள் வரிகளை வாசிக்கும் போது நீங்கள் சொல்லும் திராவிட சிசு, அதாவது தமிழ்க்குழந்தை என்று பிறனாய் அடையாளம் காட்டியதன் நோக்கம் ஆதிசங்கரன் பேசிய மொழி தமிழ் அன்று .. மலையாளம் ஆகாத ஒரு மொழிக்குரியவன் என்ற கருத்தை நிலைநிறுத்துவதை விடவும் அவன் தமிழனல்லன் என்ற ஒற்றைக் கருத்தை/ இன அடையாளத்தை நிலைநிறுத்துவதாகவே கருத இடம் உள்ளது.
2) சிப்பாய்க்கலகமும் பறையர்களும்
1857ல் தெற்கு ஏன் வெடிதெழவில்லை? என்று பி.ஏ.கிருஷ்ணன் காலச்சுவடில் எழுதிய கட்டுரையைப் பற்றி பேச வரும் போது அதற்கு காரணம் பறையர்கள் தான் என்று கிருஷ்ணன் எழுதியதையும் தன் சமூக அரசியல் பார்வையையும் பதிவு செய்துள்ளார் கவிதாசரண். (பக் 60).
ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனை இந்திய சுதந்திரவரலாறு ஒரு போராளியாக, நாட்டுவிடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவனாகவே எழுதி வைத்துள்ளது. அதுபோலவே இந்திய சிப்பாய்க்கலகமும் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட எழுச்சியாக எழுதப்பட்டுவிட்டது. வரலாறு எப்போதுமே வெற்றி பெற்றவர் பார்வையிலே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் சாளரம் வழியாகவே பார்க்கப்பட்டு எழுதப்படுகிறது. இரண்டு சம்பவங்களைக் குறித்தும் பண்டிதர் அயோத்திதாசர் முதல் தந்தை பெரியார் வரை எழுதிய மாற்றுக் கருத்துகள் தலித்திய , திராவிட வட்டத்தில் உரக்கப் பேசப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
Indian Mutiny was war of Religion என்ற கருத்தையும் அது குறித்த உண்மைகளைப் பேசுபவர்களுக்கு தேசத்துரோகி என்று முத்திரைக் குத்தப்படுவதும் இன்றும் தொடரத்தான் செய்கிறது. கணினிக்குள் உலகப் புத்தகச் சந்தை அடைப்பட்டுவிட்ட இக்காலத்திலும் ஒரு சார்பு கருத்தை நிலைநிறுத்துவதில் சில இதழ்களும் அதில் எழுதிகொண்டிருக்கும் பிரபலங்களும் ரொம்பவும் மெனக்கெடத்தான் செய்கிறார்கள். (காலச்சுவடில் வெளிவந்த முழுக்கட்டுரையை வாசிக்கவில்லை!) சிப்பாய்க்கலகத்தில் கிறித்தவனாக மதம் மாறிய இந்துக்களைத் தேடிப்பிடித்து கொலை செய்தார்கள் என்ற செய்தி பல்வேறு இடங்களில் பதிவாகி உள்ளது.
Do you have any idea of how many Hindus who converted to Christianity or Christians were cut down during the mutiny?
Yes. There are specific references to the sepoys hunting down and killing all the Christian converts they could find on the day they first took Delhi. The first to be killed was a very high-profile convert called Chiman Lal who used to run a hospital in Daryaganj and was an official of Bahadur Shah Zafar. His conversion to Christianity had been a huge scandal in 1852, and he was immediately pointed out to the rebel troops on the morning of 11 May. (William Dalrymple was speaking to the BBC News website’s Soutik Biswas. His new book, The Last Mughal,)
நேரடியாக மன்னராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சிப்பாய்க்கலகம் வெடித்தது என்ற கருத்தும் அது குறித்த அரசு ஆவணங்களும் நிரம்ப உண்டு. மேலும் தமிழ்நாட்டில் பறையர்கள் போலவே மராட்டிய மாநிலத்தில் மகர்களும் இராணுவத்தில் அக்காலக்கட்டத்தில் சேர்ந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் பறையர்களை விட மிகவும் பிந்தங்கிய நிலையில் மகர்களின் வாழ்க்கைத்தரம் இருந்தது. 150 வருடங்கள் கடந்தும் வரலாறு பொய்யான ஒரு பிம்பத்தில் எழுந்து நிற்கும் தன் கோடுகளை விட்டு விலகாமல் தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதிலும் தன் அதிகாரத்தை ஆளுமையை தக்க வைத்துக் கொள்வதிலும் சாதிப்படிநிலையைத் தாண்டாத நந்தியாக காவல் காத்துக்கொண்டிருக்கிறது.
3) தமிழ்த் தேசிய தளத்தில் ஈழ விடுதலையில் புலிகளின் ஆதரவாளர்கள், புலிகளை விமர்சிப்பவர்கள் என்ற இரு தரப்பாருடனும் எனக்கு ஓரளவு தொடர்புகளுண்டு. அந்த தொடர்புகளின் ஊடாக பாரிஸீல் நான் சந்தித்த நண்பர் அசுரா ஒரு கேள்வியை முன்வைத்தார்.
“தமிழ் தமிழ் என்று கதைக்கிறீர்களே.. உங்க தமிழ் எங்களுக்கு என்ன செய்தது? ஒரு சிங்களச்சி ஜனாதிபதியாக அரசு பள்ளிகளில் சிங்களத்தைக் கட்டாயபபாடமாக்கியதைக் குறையாக சொல்லும் உங்கள் வரலாறு.. அதுவரை எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட மரநிழலில் ஒதுங்கும் உரிமையைக் கூட மறுத்ததைச் சொன்னதுண்டா? சிங்களம் படிக்கறதுக்குத் தான் எங்க பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குள் அனுமதிக்கப்ட்டார்கள் என்றால் எங்களுக்கு உங்க செந்தமிழ் வேண்டாம்:” என்று சொன்ன போது குளிர்வீசும் அந்த இரவிலும் எனக்கு வேர்வை வழிந்த அனுபவம் இப்போதும் அதே சூட்டுடன் என்னில் அணையாமல் இருக்கிறது. கவிதாசரண் கட்டுரைகளின் ஊடாக அதே வரிகளை வாசித்தப் போது அசுராவின் குரல் மட்டுமல்ல புதையுண்டு கிடக்கும் மூங்கையர்களின் ரத்தம் தோய்ந்த காயத்தின் வலியாக தமிழ்த் தேசியத்தை தமிழ்ச் சமூகத்தைப் பிடித்து அசைத்துப் பார்க்கும் ஆவேசத்துடன் வீசும் புயலாக நம்மைச் சரிக்கிறது. ” சாதி இழிவு உதிர்ந்துவிடும் எனில் தமிழைவிடச் சிறந்த மொழியையும் அதற்கு விலையாகக் கொடுக்கலாம் என்பது இழிவின் வலியால் வெந்து துடித்தவர்களுக்குத்தான் தெரியும் ” (பக் 58)
4) ஜின்னா > அம்பேத்கர் > பெரியார்
“அம்பேத்கரும் பெரியாரும் – ஜின்னாவைப் போல் களமிறங்கியிருந்தால் – அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல, ஜின்னாவுக்கிருந்த வெற்றியம்சம் அவர் இந்துவல்ல என்பதுதான்” (பக் 65 )
ஜின்னா ஓர் இந்துவல்ல என்பது மட்டுமல்ல அவர் இசுலாமியர் என்பதும்தான் அவருடைய வெற்றிக்கான அடிப்படைக் காரணம். இந்துமதம் இந்தியாவில் தோன்றிய பிற மதங்களான சைனம் பவுத்ததை தின்று செரித்து தன் ஆதிக்கத்தை சீக்கிய கிறித்தவ மதங்களின் நம்பிக்கைகளின் ஊடாக விதைத்து வெற்றி பெற்ற அளவுக்கு இசுலாமிய மதக்கதவுகளைத் தீண்ட முடியவில்லை. அதுவே இந்து இந்தியர்களுக்கு எதிராக இசுலாமியர்களை நிறுத்திய மூலக்காரணம். இந்த எதிரணி ஆட்டத்தில் மொழி வட்டார இன அடையாளங்கள் புறந்தள்ளப்பட்டு மறைந்து போனது இந்துத்துவம் எதிர்க்கொள்ளும் எதிரணியின் நிலை என்றாலும் அதுவே அந்த எதிரணிக்கான எதிர்காலமாக அமைந்து இசுலாமியர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிக்கவும் பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையாக வெடிக்கவும் காரணமாக அமைந்தது. இம்மாதிரியான ஒரு இணைக்கும் கோடு /சரடு இந்திய தலித்துகளுக்கு இல்லாமல் போனதுதான் இன்றுவரை இந்திய தலித்துகளின் பின்னடைவுக்கான பெருங்காரணம்.
இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக இறக்க மாட்டேன் என்று பவுத்தம் தழுவிய பாபாசாகிப் அம்பேத்கரின் பவுத்தம் தழுவல் மராத்திய மாநில எல்லையைத் தாண்டவில்லை என்பதும் பிற பகுதிகளில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது. இதற்கான காரணங்கள், புறவெளியிலும் அகவெளியிலும் ஆய்வுக்குரியவை.
5) ரவிக்குமார் > பெரியார்
தலித் எழுத்தாளர் ரவிக்குமார் தந்தை பெரியாரை விமர்சித்ததும் அயோத்திதாசரை தலித்துகளின் தலைவராக அடையாளம் காட்டியதும் அன்றும் இன்றும் அதிகமாக பேசப்பட்ட கருத்துதான். தந்தை பெரியாரை அவர் விமர்சித்தது தவறு என்று சொன்னால் அதைவிட தவறு ஒரு தலித் தந்தை பெரியாரை விமர்சிப்பது நன்றி கெட்ட செயல் என்று சொன்ன ஆதிக்க திராவிட அரசியல்/ இடைநிலைச் சாதியின் ஆதிக்க மனோபாவம். இங்கே தான் தலித்தும் தலித் ஆதரவாளர்களும் இரண்டு சாதிகாளாகிப் போனதன் அகவெளி அரசியல் வெளிச்சமாகிறது. ரவிக்குமார் சொன்னதும் எழுதியதும் தவறா சரியா என்பதை விட அப்படிச் சொன்னவர் ஒரு தலித் என்பதால் மட்டுமே விமர்சிக்கப்பட்டதின் உள் அரசியலை ஒவ்வொரு தலித்தும் உணர்ந்தப்போது தான் இயல்பாகவே தலித்துக்கும் தலித் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கோடு. விழுந்தது. எவரும் எளிதில் . தாண்டி கடந்து வந்துவிட முடியாதக் கோடு வரையப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“பண்ணையாரும் பண்ணை அடிமையும் கால வகைக்கேற்ப புதிய பரிமாணங்களில் வெளிப்படும் விஷயம்தான் இது ” (பக் 149) என்று சிலாகிக்கும் கவிதாசரண் அதுபற்றிய உரையாடல்கள் ஏதும் நிகழாமலேயே தலித்துகளுக்கும் தலித் ஆதராவளர்களுக்கும் இடையே வசதிக்காக ஒரு கோடு இழுத்துவிடப்பட்டது ” என்று சொல்கிறார். தலித் விடுதலை என்ற பெயரில் தலித்துகளைக் கரையேற விடாதபடி திட்டமிட்டு செயல்பட்ட தமிழ்ச் சமூகத்தின் சாதியக்கோடு தான் அது என்பதை ஒவ்வொரு தலித்தும் புரிந்து கொள்வதற்கு ரவிக்குமாரின் பெரியார் பற்றிய விமர்சனம் உறுதுணையாக இருந்தது என்பதுதான் என் போன்றவர்களின் கருத்து. அதுமட்டுமல்ல ரவிக்குமாரின் கருத்துகளுடன் முழுக்கவும் உடன்படாத என் போன்ற திராவிட அரசியல் பின்னணியில் பெரியாரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டகளுக்கும் திராவிட அரசியலின் தலித்திய ஆதரவு சாயம் வெளுத்துப் போனது ஒரு திருப்புமுனைதான்.
கேள்விகள், சந்தேகங்கள், மறுவாசிப்பு எதுவுமின்றி தலித் ஆதரவாளர்களைத் தலித்துகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தலித் ஆதரவாளர்கள் அனைவரும் எதிர்பார்த்ததும் ஓர் ஆதிக்க மனோபாவமன்றி வேறு என்ன?’
ஆதிக்கச்சாதியின் நுண் அரசியலை உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு அடுத்தக்கட்ட நகர்வுக்கு தங்களைத் தயார் செய்து கொள்வது தலித்துகளுக்கு மட்டுமல்ல தலித் ஆதரவாளர்களுக்கும் சமூகக்கடமை. ஆனால் இந்தச் சமூககடமையை உணர்வதற்கு தலித் ஆதரவாளர்களும் தவறிவிட்டது தலித்தியக் கருத்தாடலின் பெரும் பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும்.
6) அவைதிகம் > பறையர்
“நாடார்களும் வன்னியர்களும் தங்களை சத்திரியர்களாக முற்படுத்தி உரிமைக்கோரி கடுமையாகப் போராடி இன்று மேல்நிலையை எட்டியுள்ளனர். ஒரு காலத்தில் தலித்துகளைவிடச் சற்று மேம்பட்ட நிலையிலிருந்த தாழ்த்தப்படவர்களாகவே க்ருதப்பட்டவர்கள் அவர்கள். இது போன்ற முயற்சி ஒரு நூற்றாண்டு காலமாகப் பள்ளர்களிடமும் தொழிற்பட்டு வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான் என்றாலும் அதையே சொல்லிச்சொல்லித் தங்களை மலினப்படுத்திக்கொள்ளத் தயாராயில்லை. தங்களைத் தேவேந்திரகுல வேளாளர்களாக மீள்கட்டமைப்புச் செய்து பழந்தமிழ் மன்னர்களின் வழிவந்தவர்களாக தங்களுக்கான வரலாற்றை மீட்டுருவாக்குகிறார்கள்..” (பக் 152)
நாடார்களும் வன்னியர்களும் எட்டி இருக்கும் சத்திரியர் என்ற பிரிவுகளுக்குள் அடங்க மறுப்பவர்கள் பறையர். படிநிலை கட்டுமான பிரிவுகளுக்கு எதிராக குரல் கொடுத்த பவுத்தத்தை தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள் பறையர். தேவேந்திர குலம், வேளாளர் என்ற அடையாளம் மூலம் சொல்லப்படும் மேட்டிமைத் தனத்தை எதிர்த்தவர்கள் பறையர். தேவேந்திர குலம் என்ற ஒரு குலத்தை ஏற்றுக்கொண்டால் அரக்கர் குலம் என்ற ஒரு குலத்தையும் ஏற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தம். யார் இந்த அரக்கர்கள்? யார் தேவேந்திரர்கள்? தேவேந்திரர்களை உயர்ந்தவர்கள் என்று மேலே தூக்கி வைத்திருக்கும் சாரம் எது? சாதியப்படிநிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஏணிகளில் ஏறித்தான் சாதிய இழிவை அகற்ற முடியும் என்பது ஒரு கேலிக்கூத்து. சாதிய சமூக அமைப்பில் இந்த கேலிக்கூத்தை தோலுரித்துக்காட்டும் அறிவுத்திறனும் கலகக்குரலும் தலைமுறை தலைமுறையாக பறையர் சமூகத்தில் தொடர்வது பாரட்டுதலுக்குரியதாகவே நினைக்கிறேன்.
“பசித்திருக்கிறாய்…. சாகாவரம் தரும் அமுதத்தை உனக்குப் பருகத் தருகிறேன்..அதற்கு கைமாறாக ஏற்றுக்கொள் சாதியப்படிநிலையில் எட்ட முடியாத என் உயரத்தை” என்று சாதிய சமூகம் காலம் தோறும் பறையர்களை நோக்கி பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. பறையர்களின் வாழ்வும் பெருமையும் ஆதிக்கச் சாதியின் இந்தப் பேரங்களில் விலைபோகாத மாட்சிமைப் படைத்த வரலாற்றில்தான் பொதிந்துக்கிடக்கிறது.
பறையர்களை ஆகக்குறைந்தவர்களாக இழிவின் ஓர் அடையாளமாக இன்றுவரை ஆதிக்கச்சாதியும் அதைக் கட்டிக்காக்கும் பார்ப்பனியமும் அடையாளப்படுத்துவது இந்தக் காரணத்தால் மட்டுமே.
“பறையர்கள் தங்கள் சாதி தாழ்ந்ததாயிருப்பினும் அதன் பால் பெருமித உணர்வும் பற்றும் கொண்டவர்கள்.இது மற்றவர்கள் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட உணர்வு:” என்று கால்டுவெல் சொல்வதும் இதைத்தான். (பக் 200)
பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன் என்ற வழக்கில் இருக்கும் கதை வெறும் கதை மட்டுமல்ல ஒரு காலத்தின் வரலாற்று பதிவு. செவிவழியாக நானறிந்த ஒரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. பார்ப்பனர் வீட்டு திருமணத்தின் போது மணவீட்டார் கொல்லைப் புறத்தில் பறையரை அழைத்து புத்தாடைக் கொடுத்து அவர் வாழ்த்தைப் பெறும் வழக்கம் இருந்ததாகச் சொல்வார்கள். அண்மையில் திராவிய இயக்கத்தைச் சார்ந்த நான் மதிக்கும் தோழர் ஒருவர் மணமக்கள் பதிவு நிலையத்திற்கு ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதை வாசித்துப் பிறகுதான் அவர் வன்னியர் என்பதே எனக்குத் தெரிய வந்தது. அவருடைய சாதிய அடையாளம் எனக்கோ என் தோழமைக்கோ ஒரு பொருட்டல்ல. ஆனால் ஷத்திரயகுல வன்னியர் என்று அவர் தன் சாதிய அடையாளத்தைக் குறிப்பிட்டிருந்தது ஒரு கேலிக்கூத்தாகவே எனக்குப்பட்டது. அது என்ன ஷத்திரிய குல வன்னியர்..> எந்த அரசனின் படைப்பிரிவில் இவர்கள் போரிட்டார்கள்? இந்த ஷத்திர்ய அடையாளம் சூத்திரப்பட்டத்தை வேண்டுமானாலும் கிழித்திருக்கலாம். ஆனால் கூடவே பார்ப்பான மேல்நிலை ஆதிக்க அடையாளத்தையும் அல்லவா உறுதிப்படுத்துகிறது!! இந்த இடத்தில் தான் இம்மாதிரியான அனைத்து அடையாளங்களையும் புறந்தள்ளி தனித்து நிற்கும் பறையர்களின் வரலாறு போற்றுதலுக்குரியதாகிறது. இந்த வரலாற்று பேருண்மை தான் மிகவும் தாழ்ந்த தாழ்த்தப்பட்ட இழிவின் அடையாளமாக பறையர் என்ற சொல்லை உருவாக்கியதன் அறிவுப்பின்புலம்.
இயல்பாகவே பறையர்களிடம் இருக்கும் அவைதிகம் தான் ஒரு தனித்துவம் அந்த தனித்துவம் தான் இன்றுவரை சாதியப்படிநிலையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தலித்திய குரலாக தலித்திய கருத்தாடலாக உருமாற்றம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் சாபக்கேடு , அவர்களும் அருந்ததியர்களை தங்களுக்கும் கீழான சாதியாகக் கண்டு அவர்களை அடக்கி ஆள்வதன் மூலம் சாதியப்படிநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதுதான்.
7) தொல்காப்பியம் தொட்டு கவிதாசரண்வரை
தொல்காப்பியருக்குச் சிறப்பு அவர் வடமொழியின் ஐந்திரம் கற்றவர் என்பதுதான். ஐம்பெரும்காப்பியங்களில் சிலப்பதிகாரம் தனித்த பெருமையுடன் போற்றப்பட்டதன் காரணம் மாமூது பார்ப்பான் மறைவழியை ஏற்றுக்கொண்ட சமூகத்தை எவ்விதமான கேள்விக்கும் உட்படுத்தாமல் உறுத்தலின்றி பதிவு செய்தது தான். தமிழ் மொழியை சமஸ்கிருதச் சார்பின் கிளைச்செழுமையாகக் கருதித்தான் ஜி.யு.போப் போன்றவர்கள் போற்றியிருக்கிறார்கள் அதனால் தான் சமஸ்கிருத சார்பின்றி வழங்கும் தமிழ்மொழியை ஆய்வுகளுடன் மெய்ப்பித்த கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகளுக்கு ஜி.யு.போப் கடும் கண்டணம் தெரிவித்திருக்கிறார். தாய் தகப்பன் அடையாளமின்றி ஒரு மனித உயிரைப் படைத்து உலாவவிடும் அறிவியல் உலகம் வசப்பட்ட காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் ஒருவன் சாதியற்றவனாய் வாழ்வது என்பது சாத்தியப்படுவதில்லை. அதிலும் சாதியற்றவன் தலித்தியக் கருத்தாடல்களை முன்வைத்து பறையர் வரலாற்றை மீட்டுருவாக்கி தனித்து நின்று தொடர்ந்து செயல்படுவது.. கால்டுவெல்லின் கட்டுரையில் பறையர் வரலாற்றை இருட்டடிப்பு செய்ததும் கவிதாசரணின் தலித்தியக் கருத்தாடல்களுக்கு தமிழ்ச் சமூகம் இருட்டடிப்பு செய்வதும் கள்ள மவுனம் காப்பதும் … எல்லாவற்றுக்குமான காரணம் ஒன்றுதான்.
நூல்: தமிழ்ச்சமூகமும் தலித்தியக் கருத்தாடலும்
ஆசிரியர்: கவிதாசரண்
வெளியீடு: கவிதாசரண் பதிப்பகம், சென்னை 19 பக் : 212
விலை. ரூ 100/
puthiyamaadhavi@hotmail.com
- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்
- வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’
- புலம்பெயர் பறவைகளை இனி…
- சமாதானத் தூதுவர்கள்
- மியாவ் மியாவ் பூனை
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- screening of the film The Other Song
- NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
- மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
- ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்
- மனிதன் 2.0
- ஆசிரியருக்கு
- முதிர் இளைஞா..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)
- எச்சம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>
- வேதவனம்- விருட்சம் 48
- சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!
- அகம் அறி
- குறுங்கவிதைகள்
- கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்
- பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை
- தொலைத்தூர பயணம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9
- வாரத் தேவை
- ரோபோ
- மிச்சம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)
- வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்
- நினைக்கத் தெரிந்த மனம்…
- மாண்டு விட்ட கனவுகள்….
- அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…
- இறகுகள் தொலைத்த தேவதை
- விட்டுச்சென்ற…
- சித்திரக்காரனின் சித்திரம்
- குருவிகளின் சாபம்:
- தேடல் (ஒளிப்பட கவிதை)
- இடைத்தேர்தல்
- இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)
- மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை