காலை வாரி விடுதல் …..

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

கிருஷ்ண வெங்கட்ராமா


அடுத்தவன் காலை வாரிவிடுவது நம்மவர்களுக்கு கை வந்த கலை. இதை எப்போதும் கேட்கிறோமோ இல்லையோ, அடிக்கடி கீழே விழும்போது இதற்கு அடுத்தவனைக் காலை வாரி விழலாமே என்று நினைப்பதுண்டு. காலை வாரிவிடுவதற்கு கை தேவையா என்பதே என் பிரச்சினை. காலை வாரிவிடுவதற்கு இன்னொரு கால் போதுமே.

வாழைப்பழம் கூட கோயம்பேட்டிலோ, பக்கிம்ஹாம் அரண்மனையிலோ, வெள்ளை மாளிகையிலோ வழுக்கிவிடுமாம்.
மெட்டி ஒலி “மாணிக்கம்” சரோ காலை வாரிவிட்டு கோயம்பேட்டில் வேட்டியைத் தூக்கி ஓடும் காட்சி நினைவிருக்கிறதா ? அந்த “துபாய் வீட்டு” பெண் ஞாபகமிருக்கிறதா ? இல்லையா சன் டிவியில் மற்றுமொருமுறை வெட்டியாக பார்க்கவும். முதல் தடவையே அப்படி தான் பார்த்ததாக ஞாபகம். சரி ! நம்ம சென்னை பீட்டர் ரேஞ்சுக்கு, டயான சார்லஸ் பற்றி பேசலாம். டயானா பாட்டி இறந்தவுடன் முன்னாலேயே ரிகர்சல் பார்த்த “மாணிக்க” சார்லஸ் தாத்தா கெட்டி தான். மோனிக்காவினால் வழுக்க்க்க்க்க்க்கி விழ்ழ்ழ்ழ்ழ்ழுந்த நம்ம கிளிண்டன் ( குட்டிகளுடன் கூண்டில் கொஞ்சி விளையாடியதால் க்ளிண்டன் கிளிண்டன் ஆனார். தமிழ் வாழ்க !)வாரிவிட்டாரே ஹில்லாரி கிளிண்டனை.

பலே கில்லாடி !

காலைப் பொழுதில் காபி குடித்தவுடன் இன்றைக்கு யாரைக் காலை வாரி விடலாம் என்று நினைத்தேன். எதிர்வீட்டில் அழகான காலில் கொலுசு போட்ட இளந்தளிர் மனதில் வந்து போனாள். ( ரொம்ப பாரதிராஜா, மகேந்திரன் பார்த்ததினால் வந்த வினை ). காலை வாரி விடாலாம் என்று யோசித்தேன், அழகான இளந்தளிரின் அழகான அம்மா வரவே, அம்மா சேற்றை எடுத்து என் மீது வாரி விட்டால் ?…

தமிழ் பண்பு தடுத்ததால், மற்ற இளந்தளிர்களைக் காலை வாரிவிட்டு பிறகு திருமணம் ஆன பிறகு மனைவி இருக்கவே இருக்கிறாள். அப்புறம் சமயம் பார்த்துக் காலை வாரி விட்டு மனைவியார், துணைவியார் என்று பிரபுதாவாவிடலாமென்றிருந்தேன். சிலப்பதிகாரத்திலிருந்து இந்த மாதிரிக் காலைவாரிவிட்டு, கையைப் ….(பற்றி ஓடிவிடுவார்கள் என்று சொல்ல வந்தேன் !)நம்ம முருகப் பெருமானே வள்ளி, மற்றும் தேவானையோடு இருப்பதாகக் குன்று தோறும் குமரனிருக்குமிடம் என்று ஞாபகப் படுத்தினால் நம்மவர்கள் என்ன செய்வார்கள்! பாவம் !
குமரனா, ராமனா, கிருஷ்ணனா ?. எல்லோரைப் போன்றே எனக்கும் கிருஷ்ணரைப் பிடித்தது.

ஆனால் ராமராக இருந்தால் ராமர் மாதிரி மக்காக ஏகபத்தினி விரதம் இருக்க வேண்டி வரும்.

உ.பி. யானதால் ராமர் அப்படி இருக்கலாம். காலருகே உட்காரும் அனுமார் நல்லவர். காலை வாரி விட மாட்டார்.
நடராஜர் காலைத் தூக்கி ஆடும்போது காலை வாரிவிட்டால் எப்படி ஆடுவார் என்று யோசித்தேன். சிதம்பரம் தீக்ஷிதர்கள் என் மீது கேஸ் போட்டு அப்புறம் சென்னை ஹைகோர்ட் அலைய வேண்டி னேரிடும். எதற்கு வம்பு ?

இப்ப அம்புலிமாமா கதைக்குக் காலை விடுவோம்.
ஒரு கிராமம். சரி வேண்டாம் ….ஒரு ஊரில் ராமு சோமு என்ற நண்பர்கள் இருந்தார்கள். ராமுவிற்கு மரத்தடியில் காட்டில் தங்கப்பானை ஒன்று கிடைத்தது.( சுட்டி விகடன் கதை இல்லைங்க !)
ராமு தூங்கும்போது, சோமு தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டு, தங்கப் பானையைத் தூக்கிக்கொண்டு ஓடிப் போய்விட்டான். சே …என்னடா இது ? அம்புலிமாமா வேண்டாம். ஜூனியர் விகடனுக்கு வருவோம்.

கன்யாகுமரியில் பகீர் கொலை. ராமு நடக்கும்போது காலை வாரிவிட்டு புதைகுழியில் சோமு ராமுவைத் தள்ளினான்.
ஏதாவது விபரீத ஆசை ? போலீஸ் வலை போட்டு தேடுகிறது. சிபிசிஐடி பம்பரமாய் இறங்கினார்கள்.

காலை வாரிவிடுவதைக் கூட இவ்வளவு திகிலோடு திடுக்கென்று மனது படபடக்குமாற் செய்தி போடும் ஜுனியரை …..மனதில் …..
பாராட்ட வந்தேன் என்று சொல்ல வந்தேன் ……ஹி ! ஹி !.

இப்போது ராமு, சோமு என்ற இடத்தில் ராணி, சாணி என்று போடுங்கள். நக்கீரன் மேட்டர் ஒன்று தான். ஆண்களோ, பெண்களோ ஒருவருக்கு ஒருவர்ர காலை வாரிவிடுவது நாள்தோறும் உலகமெங்கும் நடந்து கொண்டு தானிருக்கிறது, சும்மா சீரியசாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

மதியம் தூக்கம் வராதலால், சன் டிவி சீரியல் பார்த்துக் காலை வாரிவிடும் மருமகள் மற்றும் மாமியார் மற்றும் கொழுந்தனார் மற்றும் நாத்தனார் மற்றும் மகள் மற்றும் ……பாட்டி….மற்றும் ..ஆயா மற்றும்…சீரியல் கோலங்கள் போன்று நீண்டுக்கொண்டே போவதால் ….முற்றும் போடமுடியவில்லை. எல்லாரும் அனைவரையும் காலை வாரிவிட்டுப் புன்னகை புரிய தூக்கம் கலைந்து பயந்தே போனேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே பயப்பட்டு காலைக் கட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.

“என்னப்பா, இப்படி இருக்கே ?” என்று மகள் கிண்டல் பண்ண ஆரம்பித்தவுடன் என் உடம்பைக் கண்ணாடியில் பார்த்தேன். சன் டிவி சீரியல் பார்த்தே வெயிட் பார்ட்டி ஆகிவிட்டிருக்கிறேன். வெளியே போனால் காலை வாரிவிடுவார்களோ என்று பயந்து சிவாஜி மாதிரி குண்டாகியிருக்கணும். அவரையும் பிரபுவையும் போன்று குதிரை ஓட்டினால் என்ன என்று போனால் முதன் நாளே குதிரை பிளிறிட்டு காலைத் தூக்க ….நான் ….பொத் !!!!

கட்டபொம்மன் ( சிவாஜி குண்டாக இருந்தாலும்) காலை எட்டப்பன் ( விகே ராமசாமி பலசாலி தான் !) எப்படி வாரிவிட்டான் ?. எட்டப்பக் குதிரையை எட்டித் தள்ளி விட்டேன்.

இலங்கையில் காலை வாரிவிட்டார்கள்.தலைவர் சீற்றம். அண்ணன். தலைவன் என்று காலருகே உட்கார்ந்துகொண்டு காலைவாரிவிடுவது சுலபம். இடுப்பு கூடச் சுளுக்கி கொள்ளாது. அரசியிலில் இதெல்லாம் சகஜமப்பா !

அம்புலிமாமா ராமு, சோமுக்கள் முன்னொரு காலத்தில் காலை வாரிவிடுவதோ, கல்லைத்தூக்கிப் போடுவதோ நடந்த மாதிரி இப்பவும் கோயம்பேட்டிலோ, பக்கிம்ஹாம் அரண்மனையிலோ, வெள்ளை மாளிகையிலோ, நம்ம வீட்டிலே நடக்கிறது.

தினமணியைப் புரட்டினேன். அமெரிக்காவில் நம்பி பணம் போட்ட வங்கிகள் பல திடீர் திவால். மக்கள் குய்யோ முய்யோ வென்று கதறல். காலை வாரிவிட்டார்களே என்று மண்ணைத் தூவி சபிப்பவர்களை வங்கிகள் எப்படிக் காலை வாரி விட்டன ? விளக்கக் கட்டுரை.

குமுதம் வாசித்தேன். அமைந்தகரையில் அம்மன் கூழுக்கு பணம் கலெக்ட் பண்ணிவிட்டு, தொட்டுக்க நம்மவர்களுக்கு மிளகாய் கொடுத்து விட்டுக் காலைவாரிவிடும் ஜெகன்மோகினி நடிகை யார் ? பார்க்க 122 பக்கம்.

சரி ! நம்ம வீட்டுக்கு வருவோம்.

திருமணம் ஆன முதலிரவில் “உன்னை மாதிரி …அழகை நான் ……” அப்புறம் வருவது ஏதோ ரீல் தான். அப்ப நாமெல்லாம் காலை வாரிவிடுவதில்லையா ?

உனக்குத் தெரியாமல் ஒரு உண்மையும் மறைக்கப் போவதில்லை ! என்று மனதில் நினைத்து, உன்னிடம் சத்தியமாகப் பொய் சொல்வதில்லை என்றறு புதைகுழியில் ராணியைத் தள்ளுவதில்லையா ?. பின்னால் ராணி சாணியானாலும் வீட்டுக்கு வந்து அமைதிப் புன்னகை பூத்து வீட்டை அமைதிப் பூங்காவாக ஆக்குவதில்லையா ?

தினத்தந்தி தான் மன் அமைதிக்கு லாயக்கு. தீபாவளி அன்று அது வாசிக்காமல் தலை கூட வாருவதில்லை.
“பிரபுதேவா வீட்டிற்குத் திரும்பினார். மீண்டும் குடும்பத்தில் அமைதி
ஜெமினி கணேசன் 70 வயதில் புரிந்தார் மணம். மண்டையப் போடும் வயதில் மணம். முதல் மனைவி அதிர்ச்சி”
இதெல்லாம் எனக்குப் பிடித்த தினத்தந்தி செய்திகள் !

காலை வாரிவிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதை அதனாலேயே கண்டு கொண்டேன்.
எண்ணிப் பார்த்தேன். எனக்குப் பயமிருந்தாலும் அடுத்தவனைக் காலை வாரும் சுகமிருக்கிறதே ?

பக்கத்தில் நன்கு கணக்குப் போடும் நண்பனின் பேப்பரைக் காப்பி அடித்து விட்டு, அவன் என்னைக் காப்பி அடித்தாகச் சொல்லிக் காலை வாரிவிட்டு வேடிக்கை பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது மாட்டாம இருந்தால் அதன் சுகமே தனி தான்.

என் காலை நேரில் பார்த்தால் உம் மூஞ்சியிலே என் சேற்றுகையை வைக்க ! என்று வசை மொழி பொழிவீர்கள் !
வடிவேலுவை கூட இருப்பவர்கள் காலை வாரிவிட்டால் அதைப் பார்த்து சிரித்து மகிழாதவரில்லை எனலாம்.

காலை வணக்கம் என்று யாராவது ( Are you stupid ? Any Tamilian says kAalai vanakkam )சாரி ! விகடன் சொல்லிக் கொடுத்த தங்கிலீஷில் குட் மார்னிங் சொன்னால், காலை வாருவதற்குத் தான் சொல்வார்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.

குட் மார்னிங்க் அப்பா ! என்று நம்ம குழந்தைகள் சொன்னால் எது பின்னால் காலை வாரிவிடுவோமோ ? யாரை இழுத்துக் கொண்டு ஓடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நண்பகல் சன் டிவி பார்ப்பதால் எனக்குத் துரோகம், ஓடுவது, காலை வாரிவிடுவதே சதா எண்ணமாக இருக்கிறது. அதை காலை வாரிவிட்டு கலைஞர் டிவி பார்க்கலாம் என்றிருகிறேன்.

ஒரு பிகரைப் பாத்தோமா, இரண்டாவதை செலக்ட் பண்ணி, மூன்றாவதற்கு யெஸ் சொல்லி, நான்காவதைக் காதலித்து , ஐந்தாவதைத் திருமணம் பண்ணிக்கொண்டு, ஆறாவதிடம் பிள்ளையைப் பெற்றக் கொண்டு, அனைவரையும் காலை வாரிவிட்டு ஏழரை நாட்டு சனி(சாணியுடன்) யுடன் வாழ்க்கை வாழ்வதால் விதியே நம்மைக் காலை வாரிவிடுகிறது.
என்னை மாதிரி ஜென்மம் உயிரோடு இருந்தால் என்ன என்று இயற்கையும் கை கழுவிடுகின்றது.

இந்த ஜெமினி கணேசன் எப்படி தான் சமாளித்து மண்ணுலகம் நீத்து மேலுலகம் சென்று அங்கேயும் ரம்பா, ஊர்வசி, மேனகாவுடன் விட்டலாச்சார்யாவுடன் டூயட் ஆடுவதாகக் கேள்வி ! சொல்லிக் கொடுத்திட்டு போயா ? ஒரு வீடியோ போட்டிருந்தால் திரையுலக வாழ்க்கை 50ஐக் கண்குளிரப் பார்த்திருக்கலாம். மேலே போஉ பார்த்துக்கிறேன்.

கொடுத்த வைத்தவண்டா சாமி ! அதை நினைத்தால் தூக்கில் தொங்கப் போட்டால் காலை வாரிவிடும் ஸ்டூலைத் தள்ளிவிட்டு மேலே போய் விடலாம் போலிருக்கிறது. கிளிண்ட் ஈஸ்ட்வுட் வந்தாலும் சுட்டுக் காப்பாத்த முடியாது.

சரி ! போகிற சம்யத்தில் கொஞ்சம் உலக நடப்புக்களைக் கவனிக்கலாம். பெரிசு ஆரம்பிச்சாச்சுடா !

நாடுகளைக் கண்காணியுங்கள். அமெரிக்கா இந்தியாவைக் காலை வாரிவிடுவதும், இலங்கை இந்தியாவை காலை வாரிவிடுவதாகத் தான் தெரிகின்றது. நாமும் நம்மப் பங்கிற்குத் இலங்கைத் தமிழர்களைக் காலை வாரிவிடுகிறோம்.

இலங்கையிலேயே தமிழர்களுக்குள்ளே காலை வாரிவிடும் பயிற்சி நிலையங்கள் இருப்பதாகக் கேள்வி. வேலையில்லாதோர் வாலிபர் சங்கத்தில் வடிவேலு அதைத் தான் சொல்லிக் கொடுக்கிறாராம்.

இந்தியப் பார்லிமெண்ட்டில் லல்லுவும், மம்தாவும், சோனியாவும் மற்றும் பல சதுரங்கக் கோமாளிகளும் காலை வாரும் காட்சி. பொது ஜனம் கவனிப்பு. ஆர் கே லக்ஷ்மண் கார்ட்டூன்.

ஷாருக்கான் தென்னிந்திய நடிகர்களைக் கிண்டல். மனோஜ்குமாரை காலை வார முடிவு. நாடே அதைக் கொண்டாடுகிறது. புவனேச்வரி நடிகைகளின் வாழ்க்கை பற்றி செய்தி. காலை வாரினார். சொந்தத் தொழிலையேக் காலை வாரினார்.

தினமலரின் காலை மலரைப் புரட்டினேன்.

பத்திரிக்கைகள் விவேக் காலை வார முடிவு. விவேக் பத்திரிக்கைகள் காலை வார முடிவு. அடுத்த படத்தின் ரிலீஸ் போது அது ஒரு “மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

காலை வாரினால் தான் பத்திரிக்கைகளே பிழைப்பைக் கவனிக்க முடியும். சன் டிவி கலைஞர் டிவியையும், புவனேச்வரி சினிமாக்காரர்களையும், சினிம்மாக்காரர்கள் பத்திரிக்கைக்காரர்களையும் ….மாப்பு ….ஆப்பு ……காலை வாரி ……சாரி ….

கேரளம் தமிழகத்தைக் காலைவாரிவிடுகின்றது. படகைக் காலைவாரிவிட்டு 30 பேரைக் கவிழ்த்தார்கள். படகோட்டி தப்பித்தார். விட்டான் சவாரி !

கார்ப்பரேட் ஏணியில் ஏறும் எவரும் தன் முயற்சியோடு மற்றவரை இழுத்துப் பிடித்து நண்டு போன்று மேலே வந்தால் முன்னேற முடியும். இன்போஸிஸ் நாராயணமூர்த்தி அட்வைஸ்.

மனித குலமே பிறப்பிலிருந்து இறக்கும் வரை காலை வாரிவிடுவதை வைத்து தான் நாள்தோறூம் பவனி வருகின்றனர்.
தாமின்பமுற்றிருக்க இவ்வையகத்தையே ஆப்பு வைங்க ! அமெரிக்காவே நீ வாழ்க !
இந்தியாவே நீ காலை வாரிவிட்டு தலைய வாரிக்கொண்டு வாழ எப்போது கற்றூக் கொள்ளப் போகபோறியோ !
கல்வாரி ( கால்வாரி ) மலையில் வைத்து அறைந்த யூதர்களைக் கேளுங்கள். மகான் யேசுவை காலைவாரிவிடவில்லையா ? தினந்தோறறும் கும்பிட்ட பாரதியை யானை காலை வாரிவிடலையா ?. மகாத்மா காந்தியைக் கோட்சே சட்டென்று குனிந்து காலை வருடி சட்டென்று சுடவில்லையா ?
கவனியுங்கள் !

ரொம்ப சீரியஸாகப், பிந்திய பத்தியில் எழுதுவதே படிக்கும் உங்களைக் காலை வாரிவிடுவது தான்.

ஒவ்வொரு பட்டிமன்றத்திலும் …ராஜாவையும், சாலமன் பாப்பையாவையும் பார்ப்பதால் அவுகளையும் இந்தப் பிள்ளை காலை வாரிவிட நினைக்கிறது.

சாலமான் பாப்பையா அவர்களே ! காலை வாரிவிடும் சாக்கில் அனைவரையும் நன்றாகக் கவிழ்த்து, கடைசியில் நாட்டாமை தீர்ப்பு தரும் சாக்கில் ஆண்களைக் காலைவாரிவிடும் உம் போக்கை மனைவியால் கால் வாரி விடப்பட்ட கணவர்கள் கழகத்தாராகிய ( ம.கா.க. க ) நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

நம்மாழ்வார்: களத்திலிறங்குங்க !

சத்குரு கால்வாரிதேவ்:

காலை நோக்கி கை குவியுங்க ! குழி தோண்டுங்க ! அட காலை வாருங்கப்பா !

ஜமாயுங்க ! !

நிம்மதியாக மக்களுக்கு அறிவுரைக் கட்டுரை எழுதிய களைப்பில் தூங்கப் போக ….

வடிவேலு என்னுடன் மாடிப்படி ஏறி வருகிறார். அறிவுரை சொல்லுகிறார் பதறும் குரலில். கனவிலும் ..

மாப்பு வையேண்டா ஆப்பு !

Series Navigation

கிருஷ்ண வெங்கட்ராமா

கிருஷ்ண வெங்கட்ராமா