காற்றில் உன் கைவிரல்கள்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

லாவண்யா


இது என் நண்பர் ஒருவரின் கவிதை.

அதிகாலை நேரம்
ஜன்னலோர பயணம்…
தலைகோதிச் செல்லும்
காற்றில் உன் கை விரல்கள்…
சிலிர்த்தது காது மடல்.

இந்தக் கட்டுரையை படிக்கும் முன் இந்தச் சூழலை உணருங்கள். ஜன்னலோரப் பயணம் அதுவும் அதிகாலை நேரத்தில் எத்துணை சுகந்தமாக இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? அதுவும் காவிரிக் கரையோரம் நிறையப் பூக்களை, பறவைகளை, காலை சூரியனை ரசித்த வண்ணம் குளிர்ந்த தென்றலோடு விரையும் அந்த பயணத்தை அனுபவித்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.

இந்த கவிதையைப் படித்த மாத்திரம் எனக்குத் தொன்றிய முதல் சிந்தனை இது. ஒரு பிள்ளை விடுதியில் தங்கிப் படிக்கிறான். வார இறுதி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் விடுதிக்குச் செல்கிறான். அப்போது அவன் நினைவில் வந்து போகும் அன்னையின் அன்பு, தந்தையின் பாசம், வீட்டில் உள்ள சுதந்திரம், சுவையான உணவு, சகோதர, சகோதரிகளின் பாசம் இப்படி பல்வேறு இன்ப நினைவுகளோடு தொடரும் பயணம்.

அடுத்து ஒரு காதலன் பணி நிமித்தமாக வேறு ஊருக்கு பயணமாகும் தன் காதலியை அவள் சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு தங்கள் ஊர் திரும்புவதாகக் கொள்வோம். அப்படி திரும்பும் தருணம் அப்படிப்பட்ட சிறு பிரிவு அவனுக்கு புதியதாக இருந்தாலும், சற்று பழகியதாக இருந்தாலும் மனம் முழுவதும் அவளோடு கழித்த தருணங்கள் வந்து போகும். மனக்கண்ணில் ஒரு ஒரங்க நாடகமே நடக்கும், நான் இது கூற அவள் அது கூறுவாள் என்று ஒரு ஒத்திகையே நடக்கும். ஏதாவது ஒரு நினைவு இதழொர புன்னகையாக மலரும். அந்த தனிமையான பயணம் கூட மிக இனிமையாக இருக்கும்.

அடுத்து என் சிந்தனையில் வந்து போனது ஒரு பெண். அவள் ஜன்னலோரம் அமர்ந்து பயணிக்கிறாள். அவள் கூந்தலை காற்றுக் கலைக்கின்றது. கலைந்த கூந்தலை அவள் சரி செய்கிறாள். அப்படி அவள் கை காற்றில் அசையும் போது எழுப்பும் மெல்லிய வளையோசை கேட்போர் உள்ளம் கொள்ளை கொள்ளும் அளவில் உள்ளது. அந்த வளையோசைக்கு தக்க நடனம் ஆடுகிறது அவள் காதணி. கூந்தலில் சூடிய மல்லிகையும் ரோஜாவும் காற்றோடு கலந்து வந்து மணம் பறப்புகின்றன. அவள் கைகளும் காற்றும் ஓயவே இல்லை பயணம் முடியும் வரை. இதை ஒரு ஆண்மகன் பார்க்கிறான். அவள் கூந்தலில் இருந்து காற்றோடு பறந்து வரும் ஒரு ரோஜா இதழ் அவன் கை சேர்கிறது.

சூழல் – 1
——-

இன்றுதான் முதல் முதலாக அவன் அவளைப் பார்க்கிறான், முதல் பார்வையிலேயே அவன் மனதை அவள் கவர்ந்து விடுகிறாள். அதிகாலை நேரம் சுகமான தென்றல் மனம் கவர்ந்த ஒரு பெண், அவளை சற்று தூரத்திலிருந்து கண்டுக்களித்தபடி மிக அழகாக செல்லும் அந்த பயணம்.

சூழல் – 2
——-

சில நாட்களாகவே அவளை அவன் கவனித்து வருகிறான். அவள் மேல் அவனுக்கு காதல், ஆனால் சொல்ல தயக்கம். அவளுக்கு அவனை தெரியாது. அப்படி இருக்க இப்படி ஒரு பேருந்து பயணம். அவளையும் அவள் கைகள் கூந்தலை சரி செய்யும் அழகையும் கவனிக்கிறான். இது அவளுக்கு தெரியக்கூடாது என்ற தவிப்போடு கவனிக்கிறான். இந்த பரவச நிலையில் இது அவனுக்கு ஒரு இனிமையான பயணம்.

சூழல் – 3
——-

அவனுக்கு அவளை தெரியும். அவளுக்கும் அவனை தெரியும். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும், ஆனால் காதலை வெளிபடுத்தாத தருணம். அந்த சுழலில் எதிர்பாராமல் ஒரே பேருந்தில் அதிகாலை நேரத்தில் பயணிக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்தபடி இனிமையாக கழியும் அந்த பயணம்.

சூழல் – 4
——-
அவர்கள் காதலர்கள். அப்பயணம் திட்டமிட்டு நிறைவேறியது. இருவரும் சாடைமாடையாக பேசியபடி, ரசித்தபடி, சிரித்தபடி செல்வார்கள். காற்றில் நடனம் ஆடும் அவள் கை விரல்களை பார்த்து மயங்கியபடி அவனும், அவனை ரசித்தப்படி அவளும் செல்லும் அந்த பயணம்.

lavanya.sundararajan@gmail.com

Series Navigation

லாவண்யா

லாவண்யா