கார்தும்பி

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

மாதங்கி மாலி


அப்பொழுதே பெய்ந்து ஓய்ந்த மழையின் ஈரம். அழகான காலை. சூரியனும் தன் வெட்பத்தை மறந்து, அந்த காலைத் தென்றலின் குளுமையை ரசித்துக் கொண்டிருந்தான் போலும். துரு பிடித்த அந்த சங்கிலியின் மீது தங்கியிருந்த நீர் துளிகள்- அதன் மீது என் விரல்கள் பட்டவுடன் அந்த நீருடன் கலந்த இரும்புத்துருக்களும் என் விரலில் ஒட்டிக்கொண்டன. அந்த ஊஞ்சலின் பலகை மிகவும் பழுதடைந்து விட்டது. பிள்ளைகளின் சுமையைத் தாங்கி ஓய்ந்த பெற்றோரைப்போல!

ஈரமான இரும்பை ருசித்த அனுபவம் இருக்கிறதா? அதன் குளுமைக்கு நிகரே கிடையாது. அதன் ருசி- உப்பை விட ருசி அதிகம். வேடிக்கையான உணர்வு. எப்பொழுதோ சுவைத்த நினைவு- இப்பொழுது என் நாவில் தோன்றி மறைந்தது! என் காலின் கீழ் ஊறிக்கொண்டிருக்கும் அந்த மண்ணின் ஈரம்- என் பாதங்களில் மென்மை கூட்டியது!

அந்த ஊஞ்சலின் சங்கிலிகள் வழியே- சற்று தொலைவில் உள்ள கட்டிடங்களைப் பார்த்தேன். அந்த கட்டிடங்களின் உயர்வில் அமைதி இல்லை. நிரந்தரம் இல்லை. அது இன்னும் உயரும். உயர்ந்து உயர்ந்து விண்வெளியின்எல்லையே தொட்டுவிடும். அதன் மீதிலிருந்து இந்த ஊஞ்சல் தெரியுமா? தெரியாது என்றுதான் நினைக்கிறேன். அதன் மீதிலிருந்து இந்த ஊஞ்சலைப் பார்க்க வேண்டிய அவசியம்? பார்க்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஊஞ்சலின் மீதிலிருந்து அந்த உயரத்தின் மேதுள்ளதைக் காணலாமோ? முடியும். ஊஞ்சலின் வேகத்தைப் பொறுத்து- அதன் உயர்வைப் பொறுத்து… ஆனால் அதன் சங்கிலிகளின் வலுவின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் ஆர்வம்.

அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி சிந்தித்துத்க்கொண்டிருன்தேன். அது வரையில் தனிமையின் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த என் அருகில் ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. எங்கிருந்துதான் அதன் மீது அத்தனை வண்ணங்களோ! அதன் இறகுகளின் படபடப்பினால் அந்த வண்ணங்கள் என் ஊஞ்சலின் மீது சிந்தத் தொடங்கியது. இந்த பிரபஞ்சத்தின் அத்தனை வண்ணங்களையும், தன் மெல்லிய இறகுகளில் சுமந்துகொண்டிருந்த அந்த பட்டாம்பூச்சி, அவ்வபோது தனது பாரத்தை, அங்கும் இங்கும் சிதற விடுகிறது போலும்…

அதன் படபடப்பில் எதோ ஒரு மொழி. எனக்கு மட்டுமே எதையோ சொல்லத்துடிக்கும் அந்த இறகுகளின் மொழியை அறிய முயன்றேன். ஆம். அதனால் முடியும். அந்தச் சிறகுகளால் அந்த வண்ணத்துப்பூச்சியை, கட்டிடங்களின் உச்சி வரை கொண்டுசெல்ல இயலும். அது கண்டு வரும்- விண்ணின் உச்சத்திலிருந்து இந்த ஊஞ்சல் தெரிகிறதா என்று. தன் சிறகுகளை அடித்துக்கொண்டு பறக்கத் தொடங்கியது. அதன் வண்ணங்களின் ஒருசில துளிகளை என் மீதும் தெளித்துக் கொண்டு- அதன் பயணத்தை துவங்கியது- அது! சிறிது நேரம் வரை என் கண்களுக்கு தெரிந்து கொண்டிருந்த அந்த வண்ணங்களின் படபடப்பு மறைந்தது. பிறகு சிறிது நேரத்தில், அதன் இறக்கைகளின் படபடப்பின் அதிர்வுகளும் ஓய்ந்தன. ஊஞ்சலில் அமர்ந்தபடி பட்டாம்பூச்சியின் வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஊஞ்சலின் அசைவின் ஒலி அதன் வயதை உணர்த்தியது. காலத்தின் வேகத்தை அதுவரை உணர்ந்திடாத எனக்கு- அங்கு காத்திருந்த ஒவ்வொரு வினாடியும் அவஸ்தையே! ஊஞ்சலின் ஒலியில் ஆறுதல் கண்டேன்.

ஒரு ஒலி. தொலைவிலிருந்து பட்டாம்பூச்சியின் சிறகுகளின் அதிர்வுகளை உணர்த்தியது. ஆர்வத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த எனக்கு, என் வேகத்தைத் தடுக்க இயலவில்லை. ஊஞ்சலின் பலகை கீழே விழுந்ததை கவனியாது, பட்டாம்பூச்சியின் வருகையின் களிப்பில் மூழ்கினேன்!

அந்த வண்ணத்துப்பூச்சி என் கைகளில் வந்து அமர்ந்தது. அதில் வண்ணங்கள் இல்லை. கருமையே உருவமாகவும், களைப்பாகவும் தோன்றியது. அதன் வண்ணங்கள் அனைத்தும், அந்த உயரத்தை அடையும்போது சிதரிப்போயிருந்தன. அதன் இப்பொழுதைய சிறகின் படபடப்பின் மொழி வேறானது!

“கட்டிடத்தின் சிகரத்திலிருந்து ஊஞ்சல் தெரிந்ததா”? என்று கேட்கவிழைன்தேன். கார்தும்பி, என் கையின் மீதிலிருந்து பறந்து, என்னை விலகிச் சென்றது. உடைந்துபோன ஊஞ்சலின் சங்கிலிகள் மட்டுமே, தாங்குவதற்கு ஏதுமில்லாமல் தொங்கிக்கொண்டிருந்தன. அதன் வழியே, பறந்து சென்றுகொண்டிருந்த என் கார்தும்பியை கண்டிருந்தேன்…

-மாதங்கி மாலி
சென்னை

Series Navigation

மாதங்கி மாலி

மாதங்கி மாலி