காத்திருப்பு: மனித லட்சணம்

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

தேவமைந்தன்


எங்கே போனாலும் எதற்காகப் போனாலும்
அங்கங்கே அன்றாடம் காத்திருப்பது தான்மனிதம்.
சொந்த வீட்டிலும்கூட
இக்கட்டான சமயங்களில்,
காபி,டா என்றாலும்
காத்திருக்க வேண்டும்தான்.
மாட்டேன்! வேண்டும் எனக்கு
துரித சேவை என்றால்–
காத்திருக்கிறார்கள் சிலர்
உடனடியாகத்தர–
உங்களுக்கு நீங்கள் கேட்டதை,
நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் துரிதமாக,
அட்டகாசமானதொரு நோய் இணைப்புடன்.
பதறாதீர்கள் சாலையில், நெடுஞ்சாலைகளில்.
‘பதறாத காரியம் சிதறாது ‘ — பழைய மொழி.
‘பதறியது சிதறும் ‘ — இது புதிய,
சாலை/நெடுஞ்சாலை புழங்கு மொழி.
கடவுள் சந்நிதானத்துக்கு முன்பும்
அதற்கு அந்நியமாக வளைந்து வளைந்து சென்று
அவ்வூரின் வேறொரு தெருமுனையிலும்
நம்மைச் சந்தொன்றில், முடுக்கில் நிற்கவைக்கக் கூடிய
நெடிய ‘க்யூ ‘ வரிசைகள் உருவாகலாம்–
‘சனி பெயர்வது ‘ என்று அதைச் சொல்வதும் உண்டு.
உடனே தரிசித்துச் செல்லும் உயரதிகாரிகள்,
ஆகப்பெரிய முதல்வர்கள் குறித்துக்
கவலையுற வேண்டாம். ஏனெனில்,
வந்த வேகத்தைவிடப் போகும் வேகம்
நமக்கு எதற்கு ?
இருந்து செல்வோம்.

வெகுவேகமாக உச்சிக்கோ
வேறு ஊருக்கோ
வேறு நாட்டுக்கோ
வேறு உலகுக்கோ
போக விரும்புபவர்களைவிடவும்
இருந்து செல்பவர்களே
மனிதம் காப்பவர்கள்.
மற்றவர்களுக்கு இருப்பவர்கள்.
காத்திருத்தல் மனிதம்.

அவசரமானவர்களை விடவும் நிதானமானவர்கள்
பாக்கியவான்கள். எனென்றால்
அவர்களால் மனிதம் இருக்கிறது.
—-
pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்