காதுள்ளோர் கேட்கட்டும்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

எஸ்ஸார்சிவேதங்கள் கோத்துவைத்தான் அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியிலில்லை
வேதங்கள் என்று புவியோர் சொல்லும்
வெறுங்கதைத்திரளிலவ்வேதமில்லை
வேதங்களென்றவற்றுள்ளே- அவன்
வேதத்திற் சில சில கலந்ததுண்டு
வேதங்களின்றி யொன்றில்லை இந்த
மேதினி மாந்தர்சொலும் வார்த்தைகளெல்லாம்- பாரதி

வேதங்களில் எத்தனையோ மறைந்து உறைவதாயும் அதனை எளிதில் அறிந்து கொள்ளுதல் இயலாது என்று நம்புவதும் பேசுவதும் வழமை ஆகியிருக்கிறது. அப்படி மறைந்துகிடக்கவேண்டிய விடயங்கள் ஏதுமில்லை எல்லோரும் அதன் பொருள் அறிதல் வேண்டும் என்று கொள்வதே நியதி..
மக்களைச்சாதிசாதியாய்ப்பிரித்து வேதம் ஒதுவதற்கென இன்னசாதி என்று வேதம் எவ்விடத்தும் சொல்லவேயில்லை.
அறிவு வயிற்றுப்பிழைப்பாய் உருமாறும்போது சின்னத்தனங்கள் நுழைந்துகொண்டன. சின்னத்தனங்கள் எப்போதும் ஆளும்கையோடு கள் உறவு பேணுவன.
உள்ளதை உள்ளபடி உரைத்தலும் ஔர்தலும் அறிவின் முதற்படி. வேதங்கள் மக்களின்
வாழ்க்கையை விழைவை வேண்டுதலை அவர்கட்குத்தெரிந்த அன்றைய நியாயத்தைச்
சொல்கின்றன.
பயிர்ப்பச்சைகள் செடிகொடிகள் ஆடுமாடுகள் பிற விலங்குகள் பறவைகள் மனிதர்கள் இனிதே வாழவேண்டும் என்கிற கோரிக்கையை வேதம் இயற்கையிடம் வைக்கிறது.
வேத காலங்களில் இந்திரன் சூரியன் உஷை காற்று தண்ணீர் பூமி தீ இவை வணக்கத்திற்குரியன ஆகின்றன. அக்கினியை முக்கியமாய் வழிபடுவதும் சோமபான விவரணையும் வாசகனுக்கு அங்கே சிறப்பாய் அனுபவமாகின்றது.
ஆண்குழந்தைகள் வீரமுடையவர்களாக இருத்தலை முன் நிறுத்துவதும், தச்யுக்கள் எனப்படுவோர்
எப்போதும் அவர்களின் எதிரிகளாகவும் அவர்களைப்போரில் வென்று கொன்று முடிப்பதே அவர்தம் தலையாய பணியாகவும் வேதம் இயம்புகிறது.
பயிர்த்தொழிலில் உழவை கலப்பையை நுகத்தடியை மண்வளத்தை வேதங்கள் பேசுகின்றன.
ஒடும் தண்ணீரை நிலைகளில் தேக்கி நிலங்களில் பாய்ச்சுவதைக்குறிப்பிடுகின்றது.
அளிக்கத்தெரியாதவன் அறிவிலி என்றும் பங்கிட்டு உண்ணாதோன் பாவி என்றும் வேதங்கள்
பேசுகின்றன. தீயவையினின்று நன்மை, இருளிலிருந்து ஒளி அழிவினின்று ஆக்கம் எனவே அவை வேண்டுகின்றன வேள்விகளில் விலங்குகள் பலியிடப்படுவது தெரியவருகிறது. பலியானதன் உடல் வேள்விநடாத்துவோரின் உணவுக்கும் அதன் ஆன்மா மேலுலகமும் பயணிக்கின்றன.
பிராம்ணர்கட்கும் வேதம் செய்தோருக்கும் ஒரு வித்தியாசக்கோடு இருந்ததையும் வேதங்களில் அறிய முடிகின்றது கணவனோடு வாழும் சுகத்தை குழந்தைகளோடு பெறும் இன்பத்தை, வதியும் வீடு வாழும் ஊர் இவைசளின் இலக்கணத்தை வேதம் பேசுகிறது.
ரிக் வேதம் மனிதச்சிந்தனைக்கும் கற்பனைக்கும் பிரதான இடம் கொடுக்கிறது. யஜுர் வேதமோ வேள்விச்சடங்குகளை மையப்படுய்த்துகிறது. சாமம் வேத விடயங்களை தானறிந்த இசை ஞானத்தோடு முன் நிறுத்துகிறது. அதர்வணம் மிகுதியும் மருத்துவக்குறிப்புக்களாயும் லொளகீக
வாழ்க்கை, அரசியல் அறிவு பற்றியதாயும் திகழ்கிறது. முற்றும் மாகவிதைகளான வேதங்கள் நிச்சயம்
வாசிப்புச்சுகம் அளிப்பன.
உபநிடதங்கள் எப்போதுமே முக்கியமாய் ஞான விடயங்கள் பேசுகின்றன. உலகத்து ஞான க்கருத்துக்கள் அனைத்தின் மொத்த க்கருவூலமாய் அவை விளங்குகின்றன. சிந்தனை அறிவின் உச்சத்தை எட்டிய மக்களினம் எப்படி காசுக்குமுன் தன்னை தண்டனிட கற்றுக்கொண்டது என்பது வேதனைக்குரிய ஆய்வுக்குரிய களமாகி வாசகனுக்கு அனுபவமாகிறது.
நிறைவினின்று எழும் நிறைவு. நிறைவு, பங்கிடப்பட நிறைவே எஞ்சும் ஆங்கே உபநிடத்தில் துல்லியமாய்த் தெரிவிக்கப்படுகிறது.
ஒற்றுமை பேணுதலை செயல்கள் நன்று செய்யப்படுதலை ஒன்றித்த சிந்தனையின் வெளிப்பாடாய் வேதம் எடுத்துப்பேசுகிறது.
வேதங்கள் மக்களின் பொதுச்சொத்து. எல்லார்க்கும் உரிமை உடைத்து. அவை புரியாத விடயங்கள் பல பற்றியதன் மொத்த உருவன்று. மக்கள் பேசிய வார்த்தைகளே வேதங்களாக கவி உருக்கொண்டன.
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் அங்கே மிகவும் உண்டு.
உழைப்பை வீரத்தை சோமரசத்தை போர்ச்செய்தலை பயிர்த்தொழிலைப்பற்றியெல்லாம் அது பேசுகிறது.
தச்யுக்கள் என்பவர்களோடு மோதி நிற்பதை விடாமல் பிரதானமாய் வேதம் முன்னிறுத்துகிறது.
தச்யுக்கள் இவர்களெடு ஒத்துப்போகா இந்நிலத்துப்புராதன மக்களாக நாம்கொள்ளமுடியும்
இயற்கைத்தெய்வத்தை மட்டுமே வழிபட்ட மக்கட்கு இன்றைக்கு பேராயிரம் பரவி ஏத்தும் பெம்மானாய் அவன் மாறிப்போனது காலத்தின் வினை, உடன் நம்முன் எழும் வினா என்பது இதுவே.
புரியாத மொழியில் எப்போதும் தள்ளியே நிற்பவர்களால் ஒதப்படும் அது எப்படி எங்குமிருப்போனை
எதிலுமிருப்போனை ப்பேசிட சாத்தியமாகும்.
மகோன்னதமான ஒரு மலையின் பல்வண்ணச்சிகரங்களின் மேலாகத்தன் போக்காக இனிய கீதம் பாடிப்பறந்த ஒரு கிளி திடீரென்று ஏதோ சாபமேற்று மலையடிவாரத்தில் ஒரு வளைப்பொந்தில் சுருண்டு நெளிந்து வாழும் ஒர் ஊர்வன வகை உயிரனமாக மாறினால் எப்படியோ அதைப்போன்ற இந்த ப்பண்பாட்டு பரிணாமம் இவண் நேர்ந்து விட்டிருக்கிறது. ஆதார வலிவு போய் அழுகல் எஞ்சி நிற்கிறது.
மாக்சுமுல்லரின் இக்கேள்வி ச்சிந்தனைய மலையாள சுகுமார் அழீக்கோடு தன் ‘தத்துவமசி’’ கட்டுரை நூலில் பதிவு செய்கிறார். ருத்ர துளசிதாசின் தகு தமிழாக்கம் வாசிப்போர்க்கு பிரத்தியட்ச ஆனந்தம் வழங்கி அறச்சீற்றத்தைப்பிரசவிக்கிறது. வேதக்கவிதைகள் ஆழ்ந்து பயில ஞானம் வசப்படலாம்.
——————————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி