கவிதை உருவான கதை-2

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

எஸ் பாபு


—-

கடந்த 2002ம் ஆண்டு ஒரு வருட ஆராய்ச்சிப்பணிக்காக பிரான்சு நாட்டில் இருந்தேன். ஒரு அமைதியான ஊர். பாரீசிலிருந்து 300 மைல் தெற்கில் உள்ள ஆஞ்சே என்னும் ஊர். குளிர் காரணமாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். எப்போதாவது கடந்து செல்லும் விரைவுக் கார்களின் சப்தம், யாரோ இளைஞர்கள் (பெரும்பாலும் வார விடுமுறைகளில்) பீர் குடித்துவிட்டு சப்தமாக பேசிச் செல்வது தவிர வேறு ஓசைகளற்றன இரவுகள். ஒரு நாள் நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர்புற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நள்ளிரவு கடந்த நேரம் ஒரு பெண்ணின் அலறல் கேட்டது. நள்ளிரவு கடந்தே தூங்கச் செல்லும் பழக்கமுடைய நான் அரை தூக்கத்திலிருந்து அலறல் ஒலி கேட்டு விழித்தேன். சன்னல் பக்கம் வந்து நின்று எதிர்புற குடியிருப்பை பார்த்தேன். எச்சலனமும் இல்லை. பக்கத்து குடியிருப்புகளிலும் சலனமில்லை. அது சாதாரண அலறல் அல்ல என்பதால் எனக்கு தூக்கம் போய்விட்டது. மனைவியோ ‘என்ன சப்தம் ‘ என்று கேட்டுவிட்டு உறக்கத்தைத் தொடர்ந்தாள். என்னால் முடியவில்லை. இரண்டு மூன்று சிகரெட்டுகளைத் தீர்த்து விட்டு முகந்தெரியா அப்பெண்ணின் அலறலையும் அதன் காரணத்தையும் யோசித்தபடி படுக்கப்போனேன், எனினும் விடியும் வரை தூக்கம் வரவில்லை. இவ்வனுபவத்தின் வெளிப்பாடே கீழ்க்காணும் கவிதை:

வலி

—-

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்

எதிர்புற அடுக்குமாடி

குடியிருப்பிலிருந்து

இரவின் அமைதியை

கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது

ஒரு பெண்ணின் அலறல்

ஒரு கணம் தான்

ஒரே கணம் தான் பொறுத்து

நிசப்தம் வந்து மூடிக்கொண்டது

ஒலியதிர்வுகளை

நெடுநேரமாகியும்

யாதொரு கொலையாளியும்

வெளியேறக் காணேன் நான்

விளக்கேதும் உயிர்கொள்ளாததால்

விபத்தென்றும் கொள்ளமுடியவில்லை

புதிய உயிரொன்று

பிறந்திருக்கலாமென்றால்

பிறந்த் உயிரின் அழுகுரல் தொடரவில்லை

ஏதொன்றும் நிகழாதது போல

தொடரும் இவ்விரவில்

எதற்காகவோ அலறிய

அப்பெண்ணின் துடிப்பினால்

தீர்ந்து கொண்டிருக்கிறது

என் இரவு.

–எஸ். பாபு.

(மேற்கண்ட கவிதை ‘பன்முகம் ‘ காலாண்டிதழில் சூலை-செப்டம்பர் 2002 இதழில் வெளியானது)

அன்புடன்

பாபு

Babu Subramanian

Postdoc

Department of Agriculture, Food and Nutritional Science,

410, Agriculture / Forestry Centre,

University of Alberta,

Edmonton T6G 2P5

Alberta, CANADA.

Office phone: 780-492-1778

Home phone: 780-432-6530

Series Navigation

எஸ். பாபு

எஸ். பாபு