களம் ஒண்ணு கதை பத்து – 8 குற்றம் காப்பார்

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

ம. காமுத்துரை



ஆட்டோ டிரைவர் கோபாலையும் கூப்பிட்டது பாண்டியனுக்கு பிடிக்கவில்லை. இது தருமன் அறியாதது. இயல்பாய் கோபாலிடம் இப்படிச் சொன்னான்.
“தேனி வரைக்கும் போய்ட்டு வருவம் கோவாலு… ஒரு சின்ன பிரச்ன…” காக்கி யூனிபார்மிலிருந்த கோபால் மறுப்பு சொல்லவில்லை. தருமனும் பிரச்சனையின் முக்கியத்துவம் பற்றிக் கூறினான்.
“தங்கச்சி ஒரு பிள்ள மருந்தடிச்சிருச்சாம்…” கானாவெலக்கு ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க…”
“நல்லாருக்கா…” – எதிர்மறையாய் கேள்வி மனசில் எழுந்தாலும், நாக்கு நல்லவிதமாய்க் கேட்டது.
“சீரியஸ்லாம் இல்ல போல… வரச்சொல்லி தாக்கல்…”
“போலீஸ் கீலீஸ் பிரச்சனையாயிருக்குமோ…” – பாண்டியன் வாய்திறந்தார். அவர் சாதிச்சங்கத்தின் இளைஞர் பேரவைச் செயலாளர்.
“அதேம் பாத்துட்டதும் வந்திர்லாம்…” – தருமன் இரண்டு பேரையும் பார்த்துச் சொன்னான்.
கோபாலுக்கு ஸ்கூல்பிள்ளைகளை அழைத்து வர வேண்டும். “மதியம் நாலுமணிக்குத்தான அதுக்குள்ள வந்திர்லாம்ல…” – தருமன் நம்பிக்கையாய் வாக்களித்தான். வி­ம் குடித்த விசயம் மனதில் பச்சாதாபத்தை உண்டு பண்ணி இருந்தது. “சரி…” – என்ற கோபால் முத்துராசுவிடம் செல்லில் அழைத்து, தான் வர தாமதமானால் ஸ்கூல் ட்ரிப்பை எடுக்கச் சொன்னான்.
பாண்டியன் தன்னளவில் ரொம்பவும் சலித்துக் கொண்டான். சமுதாயப் பொறுப்புக்களை எடுத்தாலே இப்படித்தான் நேரம் காலம் இல்லாமல் ஓட வேண்டி வருகிறது. “இப்ப… வீட்டுச் செலவுக்கு காசு வாங்க ஒரு பார்ட்டிய தேடிப் போய்க்கிட்டிருக்கேன். தேனிக்கு கூப்புடுற…” என்றவன் கோபாலைப் பார்த்தபடி – “சீக்கிரமா வர பாக்கணும்… கௌம்பு” என்றான்.
பஸ்ஸ்டாண்டு போவதற்குள் வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தான் தருமன் – பஸ்சில் ஏறியதும் பாண்டியனுக்கு சிகரட் பாக்கட்டும் தீப்பெட்டியும் வந்தது. கோபால் பீடி இருக்கிறது என்று சொல்லியபோது, “இருக்கட்டும் தருமா… இந்த பாக்கட்டயே ஷேர் பண்ணிக்கிறம்…” – என்று தெளிவாய்ப் பேசினான் பாண்டியன். பஸ்கிளம்ப ஆரம்பித்ததிலிருந்து தேனிக்கு வந்து சேரும்வரை தனது பேரவையின் செயல்பாடு, தன்னுடைய அதிபுத்தி சாதுர்யமான நிலைப்பாடு, அதன் மூலம் அதிர்ந்துபோன, மாநில மத்திய நிர்வாகஸ்தர்கள் என காது கொள்ளாத செய்திகளைச் சொல்லி தாவந்தீர்த்தான்.
கோபாலுக்கு பிரச்சனையின் தீவிரத்தைக் கேட்க விடாத கோபம் இருந்தது. நல்லவேளையாய் தேனியில் இறங்கி, மதுரை பஸ்சில் ஏறிய பொழுது, நின்றுகொண்டே பயணிக்க வேண்டி இருந்ததால் காது தப்பித்தது.
பெரியாஸ்பத்திரி உண்மையிலேயே பெரிய்ய ஆஸ்பத்திரியாகத்தான் இருந்தது. ஏகப்பட்ட விஸ்தீரணம். எக்கச்சக்கமான கட்டிடங்கள்… ஏற்பாடுகள் மதுரை ஆஸ்பத்திரியை விட விசாலமாக இருந்தது.
பிரம்மாண்டமான முன்புற தோரண வளைவுக்குள் நுழையும்பொழுது “எமர்ஜென்சியில இருக்காங்களா, ஆர்டினரி வார்டுல இருக்காங்களா…” பாண்டியன் விளக்கமாகக் கேட்க, தருமன் செல் போனில் யாரிடமோ சிரிச்சுப் பேசினான். “ஆர்டினரி வார்டு தானாம்…”
“அப்ப… பிரச்சன சாதாரணமானதுதேன்னு நெனைக்கிறேன்… வாங்க உள்ள போவம்…” – பாண்டியன் முன்னால் நடந்து வழிகாட்டினார்.
தோரண வாயிலின் இருபுறமும் இருந்த நடைமேடையில் சோப்பு, சீப்பு, துண்டு, வேட்டி, காலிமருந்து பாட்டில், எழுதுகிற நோட்டு என்று வாங்கி, வெள்ளிரிபிஞ்சு கொய்யாக்காய்… கம்மங்கூழ், கேப்பக்கூழ் என்று தொட்டுக்கொள்ள வத்தல் ஊறுகாய் வரை ஆஸ்பத்திரியின் உள்முகம் வரைக்கும் சுற்றுவட்டாரம் பெண்களால் கடைவிரிக்கப்பட்டிருந்து.
ஒவ்வொருவரும் தனது அடித்தொண்டையில் கத்தி அழைத்துக் கொண்டு வியாபாரம் செய்தனர். “யப்பே… கம்மங்கூலு,, கேப்பக்கூலு குடி… மாங்கா ஊறுகா இருக்கு நாலுவகை கடிப்பான் இருக்குப்பே… வெள்ரிப்பிஞ்சு… பூம்பிஞ்சு… தேன் கொய்யா…” திரும்பிப் பார்த்தால் எதையாவது தலையில் கட்டிவிடுவார்கள் என பயக்கும் வண்ணம் ரெம்ப உரிமையாய் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருந்தனர். அத்தனை கடுமையான வெயிலில் முந்தானையை மட்டும் தலையில் போட்டுக் கொண்டு கூவிக் கொண்டிருந்தனர்.
நடைமேடை, நாற்சந்தியில் பிரிந்தது. சந்தியின் மையத்தில் செயற்கை நீருற்று தண்ணீர் ஜாலம். பாதைகள் முழுவதும் தார்ரோடு போடப்பட்டு புதுசாய் இருந்தது. காலியிடங்கள் முழுவதும் பல்வேறு செடிகள் மரங்களால் நிரப்பப்பட்டு கண்ணுக்கு குளுமை தந்தன. அதையும் மீறி வெய்யில் உடம்பில் வியர்வையைக் கொட்டியது.
“மேல போகணும்…” – பிரம்மாண்டமான நுழைவாயிலுக்குள் நுழைந்து பளபளக்கும் தரையில் கால் வைத்ததும், அத்தனை வெக்கையும் மாறி உள்ளங்காலில் துவங்கி உடம்பு முழுக்க குளிர்ச்சி பரவியது. வெட்டவெளியின் வறண்ட காற்று குபுகுபுவென புரண்டடித்து வெக்கையை விரட்டி உடம்புக்கு சுகம் கொடுத்தது.
ஆஸ்பத்திரியின் தோற்றம் தருமனை தடுமாறச் செய்தது வழி கண்டுபிடிப்பதில் போதிய அனுபவமின்மை தெரிந்தது. பாண்டியன் அந்த வழுவழுத்த தரையில் கால்களைத் தேய்த்தபடி ஸ்டைலாக நடந்தான். தனக்கு இந்த ஆஸ்பத்திரி அத்துப்படி என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருவரையும் அழைத்துச்சென்றான்.
வீரபாண்டி திருவிழாக் கூட்டமாய் சனக்காடு ஆங்காங்கே குவிந்து கிடந்தது. எத்தனை இடத்தில் சேர் போட்டிருந்தாலும் அத்தனையும் நிரம்பி இருந்தது. அமர்ந்திருந்தவர்களைக் காட்டிலும் நின்றிருந்தவர்கள் நிறையப் பேர்.
கேரளா ஸ்டேட் பக்கமா இருக்கறதால அங்கிருந்தும் நோயாளிகள் வருவதாகச் சொல்லிக் கொண்டான் பாண்டியன்.
“காலேஜ் வேற இருக்குல்ல” – தெரியாத்தனமாய்க் கேட்டுவிட்டான் கோபால்.
“என்னா தோழர் தெரியாதா… ஜெ. பீரியட்ல செஞ்ச பெரிய காரியமில்லியா… மாவட்டத்துலயே எம்.பி.பி.எஸ் காலேஜ் – கவர்மெண்டு காலேஜ் இல்லியா…”
எவ்வளவு லஞ்சம் – யார் யார் சிபாரிசு என்று உள்விவகாரங்கள் வரைக்கும் சொல்லலானான். பேச்சோடு பேச்சாய் “பொம்பளை வார்டுல தான இருக்காங்க… தருமா..” – என்ற விசாரணையும் தப்பவில்லை.
மாடிக்கு படிவழி ஏறாமல் சக்கர நாற்காலி ஏறுகிற சரிவுபாதையில் கூட்டிச் சென்றான். எதிரே வருகிற ஸ்ட்ரெச்சர்களுக்கு வழிகாட்டும் பாதையில் அமர்ந்து கட்டுச்சோற்றை பிரித்து உண்பவர்களைத் தாண்டியும் மாடிக்குச் செல்லவேண்டி இருந்தது.
பெண்கள் வார்டை நெருங்கியதும் வெறுங்கையோடு போகிறோமே என உணர்ந்தான் கோபால். தருமனிடம் சொல்லியும் விடடான். “எதுனாச்சும்… ஒரு ரொட்டி – பிஸ்கட் பாக்கட்டாச்சும் வாங்கீர்க்கலாம்…”- என மருகிப் பேசினான்.
“கோவாலூ… நாம விருந்துக்குப் போகல, வில்லு வண்டில சீரு செணத்தி எடுத்துட்டுப் போக… வெவகாரத்துக்கு வந்துருக்கம் தோழரே…!” – என்று அவனது உணர்ச்சியை மட்டுப்படுத்திச் சொன்னான் பாண்டியன்.
“இருந்தாலும் சீக்காளியவும், சின்னப்புள்ளையவும் வீசுன கையோட பாக்கப் போகக்குடாது…”
“நீ சொன்னதவேதே சொல்லிக்கிட்டிருப்ப…”
வார்டின் நுழைவாசலில் விசம் குடித்த பெண்ணின் தாய் தகப்பன் இருந்தனர். தருமனைக் கண்டதும் அந்தப் பெண்ணின் அப்பா… வா என தலையசைத்துக் கூப்பிட்டார். அம்மா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சேலைதிருத்தி கும்பிட்டது.
தருமன் உடன் வந்த இருவரையும் அறிமுகப்படுத்தினான்.
“பிள்ள என்னா செய்தூ…” – பாண்டியன் கேட்டான்.
“குளுகோஸ் ஏறிட்டுருக்குங்யா…” – உட்புறம் கை காண்பித்தனர். வார்டின் உள்ளே சந்தைக் கூட்டம் தெரிந்தது. வரிசையாய் கண்ணெட்டும் தூரம் வரை படுக்கைகள் ஒவ்வொரு படுக்கையிலும் குவியல் குவியலாய் ஆட்கள்.
“சீரியஸ்லாம் இல்லீல்ல… ரெம்ப மாதிரியா இருந்தா… தெரிஞ்ச டாக்டர் இருக்காரு…” – மறுபடியும் பாண்டியன்.
“பரவால்லிங்யா… வாந்தி எடுத்துட்டா… அனேகமா இந்த பாட்லோட குளுகோசு நிறுத்திடுவாங்க…”
“அப்டியா…” – நின்ற இடத்திலிருந்தபடியே காலை நெம்பி உள்ளுக்குள் எ,ட்டிப் பார்த்தான். எந்த படுக்கை எனத் தெரியவில்லை.
“வாங்க…” – என்றபடி அவளது அப்பா வார்டுக்குள் அவர்களை அழைத்துப் போனார். கோபாலுக்கு அது கூடுதலாகப் பட்டது. பெண்கள் வார்டுக்குள் சொந்தபந்தங்கள் தவிர மற்றவர் நுழைவது அத்துமீறுவதாகப்பட்டது. வேறெந்த படுக்கையின் மீதும் தன் பார்வை விரியாமல் தலைகுனிந்தே நடந்தான். சீக்காளிப் பெண்கள் தங்கள் நோவின் காரணமாய் சற்று சுதந்திரமாய் உடைநெகிழ்ச்சியாய் இருக்கக் கூடும். தங்களின் பிரவேசத்தால் அது பாதிக்கப்படலாம்.
அந்தப் பெண்ணின் படுக்கையில் ஒரு சிறுபிள்ளையும், தங்கச்சியாக இருக்க வேண்டும். மற்றும் இரண்டு பெண்களும் ஒரு பெருத்த உடம்புக்கார அம்மாவும் இருந்தனர்.
தனது அப்பா வரக்கண்ட அவள் உடைகளைச் சீர்செய்து கொண்டாள். உடன் வந்தவர்களை முன்னெப்போதும் பார்த்த நினைவில்லை. எழுந்து உட்கார வேண்டாமா, படுக்கையிலேயே இருந்திடலாமா… குழம்பிய நிலை. முழித்திருந்தால் பேச வேண்டி வரும். கேள்விகளும் வரலாம். அவர்கள் தூரத்தில் தெரிகையிலேயே சடக்கென கண்களை மூடி லேசாக ஒருசாய்த்து படுத்துக் கொண்டாள். உடனிருந்த இரண்டு பெண்களும் சூழ்நிலை கண்டு பெருத்த உடம்பு கொண்டவரிடம்… “நாங்க கௌம்பறம் மலக்காரம்மா…” – என்றபடி கிளம்பாமல் விலகி நின்றனர். மலைக்காரம்மாவும் அவர்களோடு ஒதுங்கிநின்று அவளைப்பார்க்க வழிசெய்து கொடுத்தது.
மூன்று பேரும் அவளது படுக்கையருகே பட்டும் படாமலும் வந்து நின்றனர். அவர்கள் யூகித்ததைவிட அவள் சின்னப் பெண்ணாயிருந்தாள்.
“பேசுதா…” – பாண்டியன் மலக்காரம்மாளிடம் கேட்டாள்.
“ம்…” – முன்னால் வந்து “இப்பத்தா கண்ணுமூடுனா…” என தலையாட்டிச் சொன்னது.
தருமன், “செல்ல… (தங்கச்சீ..)” – என.. மெதுவாய்க் கூப்பிட்டான். கோபால் அவனைத் தடுத்து, “ஒறங்கட்டும் பே­ஷண்ட்டுக்கு ட்ரீட்மெண்ட் உறக்கந்தே” – என்றான். அவள் பதட்டமான நிலையில் படுத்திருந்தாள். விழிப்பதா வேண்டாமா என விளங்கவில்லை. அடுத்தொரு அழைப்பு வந்தால்… கண்திறக்க தயாராய் இருந்தாள்.
பாண்டியன் படுக்கையின் முன்புறம் தொங்கிக் கொண்டிருந்த ‘கேஸ் ஹிஸ்டரியை’த் தூக்கிப் பார்த்தான். என்ன விளங்கியது எனத் தெரியவில்லை.
கைகளை தலைக்குமேல் உயர்த்தி சோம்பல் முறிப்பது போல வார்டைச்சுற்றி நோட்டம் விட்டான் பாண்டியன்.
கோபாலுக்கு அந்தப் பெண்ணைப்பார்க்க பரிதாபம் மிகுந்தது. என்ன வயசிருக்கும்… அதுக்குள்ளாகவா உலகம் கசந்து விட்டது. பாவம் எத்தனை மனக்குழப்பமோ…
“கிறுக்குப் பிள்ளையா நீ… படிச்சிருக்க… பெத்தவங்களுக்கு நல்லபேர் எடுத்துக்குடுக்காட்டியும்… அவங்கள அலக்கழிக்காமயாச்சும் இருக்க வேண்டாமா… என்ன பிள்ள…” – தருமன் உரிமையாய் திட்டினான்.
அதற்குள் பாண்டியன் அவள் படுத்திருந்த படுக்கையைச் சுற்றிவந்து மலக்காரம்மாவிடம் செய்தி சேகரித்தான். மலக்காரம்மா சொன்ன தகவலில் ஏதோ ஒன்று அவனை தீவரமாய்த் தாக்கியிருக்க வேண்டும்.
தருமனையும் கோபாலையும் தனியே கூப்பிட்டான். அவளது அப்பாவும் உடன் வந்தார்.
“கலியாணம் முடிச்சிருச்சாம்ல…” – என்று கண்கள் விரியச் சொன்னான்.
உண்மையிலேயே தருமனுக்கும் கோபாலுக்கும் அதிர்ச்சியாய்த் தானிருந்தது.
“கொஞ்சம் ஓரமா நின்று பேசுங்க…” – ஸ்ட்ரெச்சரில் ஒரு நோயாளியை படுக்கச்செய்து தள்ளிவந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இவர்களை முறைத்தனர்.
தங்களுக்கே இதுவிபரம் காலையில், அவள் மருந்து குடித்த பிறகுதான் தெரியும் என அவளது அப்பா சொன்னார்.
“பய ஆரு…” – தருமன்
“அம்மபயதே…!”
“உள்ளூரா வெளியூரா…”
“அம்மூர்தே…”
“எவனாருக்கட்டும்… இருக்கானா ஓடிப் போய்ட்டானா”
“இருக்காம் போல…”
“பேசுனீகளா…”
“கண்ணுலயே பாக்கல…”
ஒவ்வொரு விசயமுமே ஆச்சரியத்துக்குரியதாய் இருந்தது. ஒரு வீட்டில் – சொந்தமகள் தாலிகட்டி வந்து – விசம் குடித்து இருக்கிறாள். அதுவரை ரகசியமாகவே நடந்திருக்கிறது.
“எல்லாம் டி.வி.யும் சினிமாவும் செய்ற வேல…” – என்ற பாண்டியன், “விடு… நா வந்துட்டேன்ல… அவெ எந்தக் கொம்பனா இருந்தாலுஞ்சரி… எங்க ஒளிஞ்சிருந்தாலுஞ் சரி… இழுத்து வந்துருவம்… என்னா தருமா…”
“அதுக்குத்தாண்ணே உங்கள கூட்டிவந்தது…”
“சரி அட்ரச மட்டும் வாங்கு… மாப்ளய கிட்டிபோட்டு தூக்கீருவம்…” என்றவன், “உள்ளூர்ங்கறீக… மொறமக்காரப்பயதான…” என சந்தேகம் தீர்த்துக் கொண்டான்.
அப்படி ஒரு கோணத்தை யோசிக்காத அவளது அப்பா… கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். அவரது அந்த சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு கோபால் அடுத்தொரு கேள்வியை வைத்தான்.
“அந்தப்பய, எந்த விதத்துலயாச்சும்… பங்காளியா வாரானா…”
“ரெம்ப யோசிக்க வேணாம்… சட்டுனு நௌவுக்கு வராதத விடுங்க…” – தருமனும் உதவினான்.
அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவன் எந்த சொந்தமும் இல்லாத அந்நியன் என முடிவுக்கு வந்தார்.
“ரைட்… அப்ப.. நேத்து தாலியக் கட்டிப்புட்டு… வீட்டுக்கு கூட்டிப் போகாம.. மாப்ள இங்கன விட்டுட்டு ஓடிட்டானாக்கும்… எம்புட்டு தெனாவெட்டுன்னு பாரு தருமா… ம்… எல்லா நம்மகிட்ட இருக்க ஒரு இதுதே… இதே இது… அந்த சாதியா இருந்தா இந்நேரம் ஊரக் கூட்டி ஊட்டியத் திருகீர்க்க மாட்டாகளா… ரைட்… ” இப்பிடித்தே என்று இதேமாதிரி நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் தனது பராக்கிரம சமயோசித புத்திசாலித்தனத்தை கதையாக்கிச் சொன்னான்.
“வேற எதும்… தப்பு தண்டா நடந்துறலியே..” – என முடித்தான்.
“வெக்கங்கெட்டுப் போய் அதயும் கேட்டாச்சு… பால்ல சத்தியம் பண்ணுது… இல்லவே இல்லண்ணு”.
“ரைட்… இருந்தா நல்லது. பேச வசதியா இருக்கும்…” – என்ற பாண்டியன். “சரி நீங்க தைரியமா இருங்க… ஒரு மணிநேரத்துல ஆளப்பிடிச்சு சேத்து வச்சு குடும்பமாக்கீருவம்…” “நம்ம இளைஞர் பேரவ இங்க ரெம்ப ஸ்ட்ராங் ஒரு அலசு அலசீரமாட்டேன்…” என்றதும் அவளது அப்பா முகத்தில் லேசாய் தெளிச்சி வந்தமாதிரி தெரிய, பாண்டியன் தருமனைக் கூப்பிட்டுக் காதைக் கடித்தான். “கோவால அனுப்பிச்சு விட்ரு… தோழரு ஏதாச்சும் நாயம்.. புழுத்தீன்னு கட்டயக் குடுத்துக்கிட்ருப்பான்… மொத ஒரு ‘கோட்ர’ வாங்கி எறக்கணும்… செலவுக்கு ஒரு அமவுண்ட் வாங்கிட்டுவா… வெளீல நிக்கிறேன்…” – என சொல்லிவிட்டு கைகளிரண்டையும் பரபரவெனத் தேய்த்து சூடேற்றி முகத்தில் பூசியபடி ஸ்டைலாக வெளியேறி ஆஸ்பத்திரியின் முகப்பிற்கு வந்தான் பாண்டியன்.
அவளது அப்பாவையும், அம்மாவையும் மறுபடி பார்த்துப் பேசிவிட்டு கோபாலும் தருமரும், ஆஸ்பத்திரி முகப்பிற்கு வந்தனர். புதிதாய்க் கட்டியிருக்கும் நிழல்குடையின் ஓரமாய் பாண்டியன் இளநீர் குடித்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் அதீத மேக்கப்புடன் ஒரு வளர்ந்த ஒடிசலான ஒரு பையன் கையில் ஒரு சின்ன கேரிபையுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான்.
சாலையைக கடந்து அவர்களைச் சென்றடைவதற்குள் இளநிக் கூடை கீழே எறிந்து விட்டு வாயைத் துடைத்துக் கொண்ட பாண்டியன் அந்தப்பையனுக்கு அவசரமாய் விடைகொடுத்து அனுப்பினான். இவர்களை எதிர்கொள்ள முகத்தைத் திருப்பினான். அந்தப் பையன் போகும்போது, கையிலிருந்த கேரிபையை பாண்டியனிடம் தந்தான். தனது பேண்ட் பாக்கட்டிலிருந்து எதையே எடுத்து பாண்டியனின் சட்டைப் பையில் திணித்து விட்டு, “வர்ரேன் தலைவா…” – என சலாம் வைத்தான்.
“ரைட்… இந்தநேரம் நீ போனா சரியிருக்காது… நாம் பாத்துக்கிறேன்…” – என டாட்டா காட்டி முடிக்க – இவர்கள் பாண்டியனை நெருங்கினார்கள்.
“கோவால அனுப்ச்சு விட்டிர்லாமா…” – தருமன்.
“ஆமா… எனக்கும் ஸ்கூல் ட்ரிப் இருக்கு…” – கிளம்பத் தயாரானான் கோபால்.
கேரிபையைத் திறந்து பார்த்த பாண்டியன். ஆப்பிளும் திராட்சையும் இருந்ததை உறுதி செய்தபின் அதனைப் பின்புறமாய் கையைக்கட்டி விரலில் தொங்கவிட்டுக் கொண்டான்.
“ஒரு சின்ன சிக்கலு வந்துச்சு தருமா… இப்ப மேட்ர விசாரித்துட்டேன்… இன்னவரைக்கும் எதப் பேசிட்டுருந்தம்னு நெனைக்கிற… புல் டீடெய்லும் வந்துருச்சுல்ல…”
“பையன கண்டுபிடிச்சாச்சா…”
“ம்…” என்றவன். “ஆனா அதுல என்னான்னா… இந்தப்பிள்ள பெரிய லூஸா இருக்கும் போல…” என்றான். “ரெண்டுபேரும் பழகீருக்காக… அதொண்ணும் இல்லீங்கள… இதுதே ஒடனே தாலியக்கட்டு தாலியக்கட்டூன்னு சொல்லீர்க்கு… டார்ச்சர் தாங்காம நேத்து கட்டீட்டான்… அவென் வீட்டுக்கு கூட்டீட்டுப் போயிருக்கான்… ஆனா வீட்ல… கொஞ்சம் சத்தம் போட்டுக்காங்க போல… இப்ப யாரா இருந்தாலும் ஒவ்வீட்லயே வையி… ஓந்தம்பியே திடுதிப்னு தாலியக்கட்டி கூட்டிவந்தா என்னா செய்வம், அதே ரெண்டுநாள் பொறுமா… ஏதாச்சும் ஏற்பாடு பண்ணிட்டு வந்து கூட்டிக்கிறேன்னுருக்கான்… லூசுக்கழுத அதுக்குள்ள மருந்தக்குடிச்சு… இப்பிடி அசிங்கப்படுத்திருச்சு…”
தருமருக்கும் கோபாலுக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்ல வருகிறான்…
“பாண்டியா… டக்குன்னு விசயத்த சொல்லு… ஔறாத… பொம்பளப்புள்ள காரியம்…” தருமன் பொறுக்க மாட்டாமல் சூடாய் வார்த்தையை விட்டான்.
“ரகளயா…” எகிறினான் பாண்டியன், “நா ஔர்றனாக்கும்… தேவயா எனக்கு… எனக்கு கெடக்குடா ஆயிரம் சோலி… போடா கேணப்பயலே…”
விசயம் திசைமாறிப் போவதை உணர்ந்த கோபால் நேர்ப்படுத்த முனைந்தான், “இல்ல தோழா… ஒடனே முடிச்சிரலாம் ஒருமணி நேரத்துல சேத்து வச்சிரலாம்னீங்க…” – என்று பவ்யமாய்ப் பேசினான்.
“சொன்னே கோவாலு… ஆனா இந்தப்பிள்ள மேலதே தப்பு இருக்கு, இது அவசரப்பட்டதனாலதே இம்புட்டு, அதுதே… கொஞ்சநாள் பொறுக்க சொல்லுங்கறான் மாப்ளகாரெ… அப்பா அம்மாவ சரிக்கட்டிட்டு கூட்டிக்கிறேங்கிறான்…”
லேசாய்ப் பொறி தட்டியது கோபாலுக்கு, “இப்ப வந்த பயலா…” – எனக் கேட்டான்.
“ம்… நல்லபய… இப்பக்கூட அந்தப்பிள்ளயப் பாக்கத்தே பழமெல்லாம் வாங்கீட்டு வந்தான், நாந்தான் டென்சனான நேரத்துல பிரச்சன வேணாம்னு அனுப்பிச்சிட்டேன்…” தருமனுக்கு ஆங்காரமாய் வந்தது.
“நல்லவனா…!” – தருமன் தான் கேட்டான்.
“ஆமாப்பா… நம்ம சங்கத்துக்காரெ…” – ஒரே வார்த்தையில் பாண்டியனின் மனமறிந்த தருமன், தானும் ஒரே வார்த்தையில் முடித்தான், “அப்ப நீ கௌம்பு பாண்டியா…” பஸ்செலவுக்கு பணம்வாங்கிக் கொண்டு பாண்டியன் பழப்பையோடு ஊருக்குப் பயணமானான்.
“வா தோழா…” – கோபாலை அழைத்துக் கொண்டு மறுபடி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான் தருமன்.
(வெளியாகவிருக்கிற ம.காமுத்துரையின் ‘முள்மழை‘ சிறுகதைத் தொகுதியிலிருந்து)

makamuthurai@gmail.com

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>