கல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


தாமோதரன் தன் மின்னஞ்சல்களை மேயும் நேரம் காலை 8.30. அன்று மின்னஞ்சல் திறந்ததும் ‘கல்விக்கண்’ அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சல் சுண்டி இழுத்தது. உடனே திறந்தார். கல்விக்கண் என்பது ஒரு தொண்டு நிருவனம். வசதியற்றோருக்கு கல்வி வழங்கும் நிருவனம். மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இந்த கல்விக்கண்ணுக்கு உண்டு. தாமோதரனும் அதில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றுகிறார். என்ன சொல்கிறது அந்த மின்னஞ்சல். இதோ அந்தச் செய்தி. ‘கல்விக்கண் நிதி ஈட்டும் திட்டமாக உண்டியல் வசூல் செய்ய ஆசைப்படுகிறது. உண்டியல் தூக்க விரும்பும் தொண்டூழியர்களை கல்விக்கண் வரவேற்கிறது.’ இதுதான் செய்தி. உடனே பதில் அனுப்பினார் தாமோதரன்.
‘சரி. வருகிறேன். நேரம் காலம் இடம் உடன் தெரிவிக்கவும்.’
இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் கல்விக்கண்ணின் மின்னஞ்சல்.
‘நன்றி திரு தாமோதரன். 29-11-10 அன்று காலை 9 மணிக்கு பிளாஸா சிங்கப்பூரின் தரைத் தளத்தின் முன் பகுதிக்கு வரவும். அங்கு உங்களுக்கு மற்ற தகவல்கள் காத்திருக்கிறது.’
29 நவம்பர் 2010 என்ற தேதி நேரம் இடம் மொத்தத்தையும் நாட்குறிப்பில், தினசரியில், மாதக் காலண்டரில் எல்லாம் குறித்துக் கொண்டார். எந்த ஒரு வேலையும் இந்த நாளைக் குறுக்கிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார். வந்தது அந்த நாள். காலை 8.30 மணிக்கே அந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தார் தாமோ. அடுத்தடுத்து வந்த எல்லாருமே உயர்நிலை மாணவ மாணவிகள். கோழிக் குஞ்சுகளுக்கு மத்தியில் உயரமான முதிர்ந்த சேவலாக அங்கே தாமோதரன் நின்று கொண்டிருந்தார். கல்விக் கண் நிர்வாகிகள் அவரவர்களுக்கான உண்டியல்களைக் கொடுத்தார்கள். தாமோவின் குழுவில் நான்கு மாணவர்கள். மூத்த அதிகாரி சில ஆலோசனைகளைச் சொன்னார். ‘உண்டியல் பிடித்தபடி நிற்கவும். எல்லாரையும் பார்த்து புன்னகையுங்கள். காசு போட்டாலும் புன்னகைதான். போடாவிட்டாலும் புன்னகைதான். கோப மூட்டலாம் சிலர். புன்னகையை மட்டுமே பதிலாக வீசுங்கள். யாரையும் காசு போட வற்புறுத்தாதீர். வார்த்தைகள் தடித்தால் உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்.
2
வாழ்த்துக்கள். இப்போது நீங்கள் செல்லலாம்.’ தாமோவுக்கு ராஃபிள்ஸ் பிளேஸ் எம்மார்டி பகுதி ஒதுக்கப்பட்டது.
9 மணிக்கு உண்டியலை ஏந்தியபடியே நின்றவர் 11 மணிவரை அசையவே இல்லை. விழுந்த காசுகளை எண்ணியும் விட்டார். 13 வெள்ளிதான் கிடைத்தது. வெட்கம் பிடிங்கித் தின்றது. நிச்சயமாக மாணவர்கள் நிறைய சேர்த்திருப்பார்கள். நூறு வெள்ளியாவது சேர்த்தால் மரியாதையைக் காப்பாற்றலாம். மணி 12. இன்னும் ஒரு மணி நேரத்தில் திரும்ப வேண்டும். நம் முகத்தை யாருக்குமே பிடிக்க வில்லையா? கல்விக்கண்ணுக்குத் தர மறுப்பவர்கள் வேறு எதற்குத் தரப் போகிறார்கள்? ஆத்திரமும் வந்தது. ஆழ்ந்த மூச்சால் அடக்கிக் கொண்டார்.
அப்போதுதான் அந்த மனிதர் தாமோவுக்கு அருகில் வந்தார். மூன்று நாள் தாடி. சும்மா இருந்தாலே சிரிப்பது போன்ற பொலிவு. தாமோவை நெருங்கினார். தன் காசுப் பையை எடுத்தார். பிரத்தியேகப் பகுதியில் நான்காக மடித்தபடி தூங்கிக் கொண்டிருந்த நூறு வெள்ளி நோட்டை உண்டியலில் போட்டுவிட்டு ஒரு தமிழ் வணக்கம் சொன்னார். நகர்ந்தார். தாமோ தொடர்ந்தார். ‘சார். சார்’ அழைத்தார்.
‘என்ன சார். ஏதும் சொல்லனுமா?’
‘ஆம் மூன்று மணி நேரமாக நிற்கிறேன். வெறும் 19 வெள்ளிதான் சேர்ந்திருக்கிறது. உங்களுடைய 100 வெள்ளி என் மரியாதையைக் காப்பாற்றி யிருக்கிறது. இது உங்களின் வேண்டுதலா இல்லை இயல்பா?’
‘இரண்டு மில்லை. கல்விக் கென்று மாதா மாதம் நான் கொடுக்கும் கொடை. இந்த மாதம் இந்த நூறு.’
‘ஏதேனும் காரண மிருந்தால் சொல்லுங்கள். சிங்கப்பூரில் மழை பொய்க்காததன் காரணம் நீங்கள் தானய்யா.’
அவர் சிரித்துக் கொண்டார். தாமோவுக்கு 62 வயது. அவர் பேச்சின் முதிர்ச்சி அவருக்குப் பிடித்திருந்தது. சொன்னார்.
‘நான் யாருக்குமே காரணம் சொல்வதில்லை. உங்களுக்குச் சொல்கிறேன். எனக்கு பிறவியிலேயே பேச முடியாத ஒரு மகள். வயது 12. நான் தினமும் பசியாறும் முகம். எந்தப் பள்ளியிலும் சேர்க்கப் பிடிக்கவில்லை. சைகை மொழியை என் மகளுக்காகவே கற்றுக் கொண்டு நானே ஆசிரியராக இருக்கிறேன். என் மகளை பள்ளியில் சேர்த்திருந்தால் மாதம் 100 செலவு செய்வேன். அந்தச் செலவை பேசக் கூடிய மாணவர்களுக்காக ஏன் செலவு
3
செய்யக் கூடாது? செய்யலாம். முடிவு செய்தேன். 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறேன்.
தாமோ இமைக்க மறந்தார். கண்ணீர் வழிந்தது. நெற்றி சுருங்கியதில் அந்தக் குங்குமமப் பொட்டும் சுருங்கியது.
‘உங்கள் பெயரென்ன அய்யா?’
‘செல்லப்பா’
‘தயவுசெய்து உங்களின் தொலை பேசி எண்ணைத் தருகிறீர்களா?’
‘தாராளமாக. 90016400’
செல்லப்பா கடந்து விட்டார்.
அவர் மறையும் வரை தாமோவின் பார்வை அவரையே மொய்த்தது.
சில நாட்கள் நழுவின. தாமோவுக்கு செல்லப்பாவின் எண் மனப்பாடமாகிவிட்டது. அழைத்தார்.
‘ஹலோ.’
‘யாரது?’
‘நான்தான் தாமோதரன். சுருக்கமாக தாமோ. உண்டியலில் நூறு வெள்ளி போட்டீர்களே.’
‘அட. நீங்களா? என்ன சேதி அய்யா?’
‘இன்று மாலை 6 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன். உங்கள் மகளைப் பார்க்க வேண்டும்.’
‘தாராளமாக. தயவுசெய்து ஏதும் வாங்கி வராதீர்கள். நீங்களும் உங்கள் அன்பும் மட்டும் வந்தால் நலம்.’
சரியாக 6 மணி. அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறந்தவர் செல்லப்பா. ‘வாருங்கள்’. உள்ளே சோபாவில் செல்லப்பாவின் மனைவி சுஜாதா, மகள் தேவதை. ஆம் தேவதை. தேவதை போல் இருக்கிறாள் என்று எல்லாரும் சொல்ல தேவதை என்ற பெயரே நிலைத்து விட்டது. எல்லாரும் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். தேவதையைப் பார்த்த தாமோ கண்களை அகல விரித்தார். ‘இவர் என்ன மோனலிசாவின் மறு பிறவியா? அட! இப்படி ஒரு அழகா? இந்த முகத்துக்கு இப்படி ஒரு ஊனமா? தனக்குள் பேசிக் கொண்டார். செல்லப்பா சொன்னார்.
‘இவர்தான் என் மனைவி சுஜாதா. தேசிய நூலகத்தில் வேலை. அவருக்கும் பேச முடியாதவர்கள் பேசும் மொழி தெரியும். நாங்கள் தேவதையின் ஆசிரியர்கள். பிறகுதான் பெற்றோர்கள்.’

4
எல்லாரும் அமர்ந்தார்கள். ஒரு தட்டில் சில ரொட்டிகள். பிறகு காபி வந்தது. அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தேவதை மௌனமாக அனைவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். தாமோ சொன்னார்.
‘நானும் அவர்கள் மொழியில் பட்டயம் வாங்கியவன்தான். நானும் தேவதைக்கு ஆசிரியராக இருக்கலாமா? திங்கள் வெள்ளி இரண்டு தினங்கள். மாலை 6 மணிக்கு வருகிறேன்.’
‘அப்படியா? மகிழ்ச்சி. எங்களையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கும் தேவதைக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டும். வாருங்கள்.’
நாட்கள். வாரங்கள். மாதங்கள். ஆண்டுகள். மூன்று ஆண்டுகளாக தாமோ ஒரு திங்கள் வெள்ளி கூட தேவதையைக் காணாமல் இருந்ததில்லை. ஒரு கோயிலுக்குப் போவது போல் பாடம் சொல்லிக் கொடுக்க வந்து விடுவார். செல்லப்பாவின் எல்லா முக்கிய நாட்களிலும் தாமோதான் முதல் விருந்தாளி. அவர் வருகையை தெய்வத்தின் தேர் உலாவாக அவர்கள் மதித்தனர். தாமோவுக்கு சைகை மொழியில் எவ்வளவு ஆழமாக வேண்டுமானாலும் பேச முடியும். தேவதைக்குள் ஒளிந்து கிடந்த கவித்துவத்தை தாமோதரன்தான் வெளியே இழுத்து வந்தார். ஒரு தடவை தாமோ கேட்டார்.
கை விரல்கள் ஐந்து. இந்த ஐந்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது தேவதை?’
அது விரல்களல்ல. பஞ்ச பூதங்கள். மனித ஆற்றலுக்குள் அவை அடக்கம்.’
இன்னொரு சமயம் தாமோ கேட்டார்.
‘எந்தக் கருத்தைச் சொன்னாலும் சரி- தவறு என்று இரு கட்சிகள் பிறப்பதேன் தேவதை?
‘விழிக்குள்ளே வெள்ளையும் கருப்பும் இறைவனே வைத்தது.’
ஓர் அறிவுக் குடம் அவ்வப்போது தளும்பியது. எல்லாமே சைகைதான். ஒரு மாபெரும் கவிதாயினியை இந்த உலகம் பெறப் போகிறது. அதற்கு தாமோ தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவதை சொல்வதையெல்லாம் கவிதை யாக்கினார் தாமோ. மோனலிசா என்ற புனைப் பெயரில் தமிழ் முரசில் வெளியிட்டார். மோனலிசாவுக் கென்று ரசிகர்கள் முளைத்தார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் பலர் மோனலிசாவைத் தேடுவார்கள். ஒரு கவிதை ஊற்று கொஞ்சம் கொஞ்சமாக தன் பாதையை விரித்துக் கொண்டே நகர்கிறது.
ஒரு நாள் அந்த விளம்பரம் தாமோவை ஈர்த்தது.
‘டாக்டர் வில்லியம்
5
பிறவியிலேயே பேச முடியாதவர்களும் பேச முடியும்.
மேல் விபரங்களுக்கு உடனே அழைக்கவும் 91086949’
ஒரு நொடி தாமதிக்கவில்லை அவர். உடனே அழைத்தார். பதில் வந்தது.
‘நாளை 9 மணிக்கு அழைத்து வாருங்கள். 3 மணி நேரமாகும் முழுச் சோதனைக்கு. காலையில் காப்பி மட்டும் அருந்தட்டும். சோதனைக்கு மட்டும் $1000 செலுத்த வேண்டும்’
அந்த எண்ணை அழித்த கையோடு செல்லப்பாவின் எண்களைப் பிதுக்கினார் தாமோ.
‘அய்யா. இன்று டாக்டர் வில்லியம் என்று ஒரு விள…’
சொல்லி முடிப்பதற்குள் செல்லப்பா குறுக்கிட்டார்.
‘பார்த்தேன். இவர் மட்டுமல்ல. இவர்போல் எத்தனையோ பேரைப் பார்த்துவிட்டேன் தாமோ. வரச் சொல்வார்கள். ஆயிரம் வெள்ளி சோதனைக்கு என்பார்கள். மூன்று மணி நேரம் கதவைத் திறக்க மாட்டார்கள். பழுக்க வைக்கும் மாங்காய் போல் நாம் புளுங்கிக் கிடக்க வேண்டும். பிறகு வந்து சாவகாசமாகச் சொல்வார்கள். இதற்கெல்லாம் சிகிச்சை இல்லையென்று’
தாமோதரனின் நெற்றிக் குங்குமத்தில் சில துகள்கள் வெள்ளைச் சட்டையில் விழுந்தது. அதை ஒட்டவிடாமல் சுண்டிவிட்டார். பிறகு சொன்னார்.
‘உங்களைக் கேட்காமலேயே வருவதாகச் சொல்லிவிட்டேன். நாளைக் காலை 9 மணிக்கு நான் அந்த முகவரியில் இருப்பேன். நீங்கள் தேவதையை அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள். எனக்காக நீங்கள் அவசியம் வரவேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த விளம்பரம் என் கண்ணில் பட்டபோது ஒரு மின்னல் வெட்டியது. அதை இறைவனின் சமிக்ஞையாக நான் உணர்கிறேன்.’
‘சரி உங்களுக்காக நான் வருகிறேன்.’
அடுத்த நாள் 8.30 மணிக்கெல்லாம் தாமோ அந்த முகவரிக்குச் சென்றுவிட்டார். செல்லப்பா வருவதற்கு முன்னமேயே டாக்டரைச் சந்தித்துப் பேசிவிட்டார். $1000 செலுத்தியும் விட்டார். சரியாக 9 மணிக்கு செல்லப்பாவும் சுஜாதாவும் தேவதையுடன் வந்தார்கள். சோதனைகள் தொடங்கின. செல்லப்பாவும் தாமோவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் இருவருமே அவரவர்களின் இறைவனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். கதவு திறந்தது. டாக்டர் வில்லியம் வெளியே வந்தார்.

6
‘உங்கள் மகள் கொஞ்சம் மயக்கமாக இருக்கிறார். சோதனைகள் முடிந்தது. காதுக்குள் அதிர்வுகள் செய்யும் மூன்று சுத்தியல் எலும்புகள் ஒன்றோடொன்று பாசி பிடித்ததுபோல் ஒட்டிக் கொண்டு இறுகிக் கிடக்கிறது. அதைச் செதுக்கிப் பிரிப்பது அவ்வளவு சுலபமல்ல. செதுக்கும்போதே எலும்புகள் உடைந்துவிடும். இப்போது அந்த எலும்பு போலவே உயர் ரக பிளாஸ்டிக்கில் செய்கிறோம். அதன் விலை $9000. அறுவை சிகிச்சைக்கு $9000. ஆனாலும் அறுவை சிகிச்சை என் அன்பளிப்பாக இருக்கட்டும். உங்களுக்கு முன்னேயே உங்களின் நண்பர் தாமோ உங்களிடம் ஒரு காசு கூட வாங்கக் கூடாதென்று சொல்லிவிட்டார். அந்த வார்த்தைகள் என்னை உடைத்துவிட்டது. உங்கள் மகளின் முகம் என்னை மேலும் மேலும் உடைக்கிறது. அந்தப் பெண் பேச வேண்டும். பேச வேண்டும்.’
மூன்று பேருமே கைகளைப் பின்னிக் கொண்டார்கள். மௌனமாக அழுதார் செல்லப்பா. வில்லியம் தன் பூனைக் கண்ணை அகல விரித்தார். அவர் புன்னகைத்த போது அந்த அறையின் விளக்கு அவரின் பற்களில் மின்னின. முகம் முழுவதும் குங்குமத்தைப் பூசியது போல் திட்டுத் திட்டாகச் சிவந்திருந்தார்.
அடுத்த நாள். தாமோ. செல்லப்பா. சுஜாதா. தேவதை. எல்லாரும் அந்த மருத்துவுமனையில். உள்ளே அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள். ஒரு அழகான டப்பாவில் சொகுசாகத் தூங்கிக் கொண்டிருந்த அந்த சுத்தியல் எலும்பை தாமோவுக்கு டாக்டர் வில்லியம் காட்டினார். அறுவை சிகிச்சை இதோ தொடங்கிவிட்டது. மூன்று மணி நேரம் நடந்தது. டாக்டர் வில்லியம் வெளியே வந்தார்.
‘உலகத்தை இனி தேவதை கேட்க முடியும். தேவதையை இனி உலகம் கேட்கும். வாழ்த்துக்கள்’
தேவதை வெளியே வந்த போது அந்த முகத்தில் கோடிக் குறிஞ்சிப் பூக்கள் சிரித்தன. கண்ணில் நட்சத்திரங்கள் மின்னின. நேராக வந்து தாமோதரன் கைகளைப் பிடித்தழுதார் தேவதை. செல்லப்பாவும் சுஜாதாவும் தேம்பினார்கள். தாமோ தேவதையின் நெற்றியில் முத்தமிட்டார்.
ஒரு கவிதை நதி புறப்பட்டுவிட்டது. இது ஜீவநதி. உலகத்தின் தாகம் தீரும்வரை இது தேங்கப் போவதில்லை.
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation

author

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts