கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா


‘உண்மை வாசல் படியைத் தாண்டுவதற்குள், பொய் ஊரைச் சுற்றி ஒருமுறை வந்துவிடும்! ‘ ‘மெளனம் கலகம் விலக்கும் ‘

தமிழ்ப் பொன்மொழிகள்

[முகவுரை: கல்பாக்கம் ஞாநி தீம்தரிகடதீம் மற்றும் திண்ணையில் அணுசக்தியைப் பற்றி எழுதும் புளுகுக் கட்டுரையை நூறு பேர் படித்து நம்புவதாக வைத்துக் கொண்டால், நான் எழுதிவரும் மெய்யான அணுவியல் கட்டுரையைப் பத்து நபர் மேலாக நுனிப்புல் மேயலாம்! முழுக் கட்டுரையைப் படித்து உண்மையை அறிபவர் ஒரு நபராகத்தான் இருக்க முடியும் என்பது என் அனுமானம்! ஆகவே உண்மை ஒரு படி இறங்குவதற்குள் புளுகு நூறுபடி தாண்டி விடுகிறது! மேலும் இரண்டு அல்லது மூன்று நபர் காது வழியாகத் நுழைந்து, வாய் வழியாக வரும் போது, தகவல் உப்பிப் பூத உருவம் அடைகிறது! அல்லது வடிகட்டப் பட்டு மெலிந்து

நீராக ஓடுகிறது! ஆகவே எழுத்துருவில் இல்லாது மூவர் கைமாற்றித் தந்த தகவலை நம்பியவர் உண்மையைக் கண்டு கொள்ள முடியாது! அதே சமயம் மதிப்புக்குரிய நண்பர் ஞாநியோ, ரோஸாவசந்த்தோ என் அணுவியல் கட்டுரைகளின் நுனிப் புல்லைக் கூட நுகர்ந்து செரித்தாக எந்த அறிகுறியும் தெரியவில்லை!

உலக மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், பெர்ட்ரெண்டு ரஸ்ஸல், லினஸ் பாலிங், ஜேம்ஸ் பிராங்க் போன்றவர் அணு ஆயுத உற்பத்திகளையும், அணுகுண்டு வெடிப்பு சோதனைகளையும் நிறுத்தப் போராடினாரே தவிர, ஆக்கவினை புரிந்து வரும் அணுமின் உலைகளைத் தாக்க வில்லை! கதிரியக்க வீச்சுக்குக் கவச மிட்டுப் பாதுகாப்பாக அணுசக்தி உலகெங்கும் மனித இனத்துக்குப் பணி செய்து வருகிறது என்பது விஞ்ஞான நெறிப்படி மெய்யான கூற்று. அணுசக்தியைப் பற்றிப் பயிற்சி இல்லாதவர், கதிரியக்கத்தைக் கேள்விப்பட்டு நடுங்குவதில் சிறிதேனும் வியப்பில்லை! ஆனால் பூரண விஞ்ஞான ஆதராமின்றி, அணுசக்தித் துறையில் அடித்தளக் கல்விப் பயிற்சி யில்லாத படிப்பாளிகள், கண்களை மூடி அணுமின் உலைகள் மீது கற்களை விட்டெறிந்து விட்டு ஒளிந்து கொள்வது, அநாகரீகம்!]

கல்பாக்க ஞாநி ஏன் மெளனியாக மாறி விட்டார் ? இந்தக் கேள்வியை நான் கேட்க வில்லை! ரோஸாவசந்த் சென்ற வாரக் கடிதத்தில் இந்த வினாவை எழுப்பி விட்டு, ஞாநிக்காகப் பரிந்து பதில் தருகிறார்! ‘மெளனம் கலகம் விலக்கும் ‘ என்னும் முதுமொழியைக் கடைப்பிடிப்பது நியாயமே! அதே சமயம் ஞாநியின் கேலிக் கூத்தான அணுவியல் கேள்விகளுக்குத் தமிழக அரசு பதில் அளிக்க வில்லை என்றும் ஞாநி ஒருபுறம் ஏனோ கவலைப்படுகிறார்! இந்த மெளன யுத்தம், மகாத்மா காந்தி அயிம்சா வழி வகுத்த காந்தீயமா ? அப்படித் தோன்றவில்லை! பிறகு இது என்ன ஈயம் ? ஒரு புது ஈயம்! ‘மெளனீயம் ‘ அல்லது ‘மோனீயம் ‘ என்று இதை நாம் அழைக்கலாம்!

கல்பாக்கம் ஞாநி மெளனியாகக் காதுகளை மூடி ஆசனத்தில் உள்ள போது, அவரது படையில் சிஷ்யர் சேர்ந்து வலுவாக்குவதையும், குருவுக்காகச் சிஷ்யர் பரிந்து பேசுவதையும் திண்ணையில் நாம் வரவேற்போம்! யார் பதில் தந்தால் என்ன ? ‘என்னவோ ஞாநி சரியான விவரங்களுடன் எழுதுவதாகவே எனக்குத் தோன்றுகிறது ‘ என்று ரோஸாவசந்த் நம்பி அவர் நிழலில் சாய்ந்து கொள்வதில் ஏதும் தவறில்லை! ‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ என்று வள்ளுவர் சொல்வதை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவசிய மில்லை!

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திண்ணையில் அணுசக்தியைப் பற்றியும், அண்ட வெளியைப் பற்றியும் 82 விஞ்ஞானக் கட்டுரைகளை எழுதி வந்திருக்கிறேன். அவற்றில் 36 கட்டுரைகள் அணுசக்தியைப் பற்றியவை! அறுபது ஆண்டுகளாக [1943-2003] பாரதம் உள்பட அகில நாடுகளில் அணுசக்தித் துறைகளில் நிகழ்ந்த ஆக்க வினைகளையும், அணு ஆயுத வீச்சுகளில் நேர்ந்த கோர விளைவுகளையும் பக்கம் பக்கமாக எழுதி விளைக்கி யிருக்கிறேன். ரோஜாவில் இருக்கும் முள் போல அணுசக்தியில் எழும் தீவிரக் கதிர்வீச்சைப் பற்றியும், அதன் கவசக் கட்டுப்பாடு, பாதுக்காப்பு பற்றியும், கழிவுகள் புதைப்பு பற்றியும் நான் கூகிளில் [Google Search Engine] தோண்டி வெளியிட்ட தகவல்களைப் படங்களோடு திண்ணை ஆசிரியர்கள் பொறுமையாகப் பதிப்பு செய்ததை, யாரும் பாராட்டாமல் இருக்க முடியுமா ? திண்ணை அகிலவலை முகப்பில் வெளிவந்த இத்துணை விபரமான அணுசக்தித் துறைக் கட்டுரைகள் போல வேறு எந்த இந்திய மொழிகளிலும் [ஆங்கிலம் தவிர] இதுவரை வந்ததாக யாராவது காட்ட முடியுமா ?

ரோஸாவசந்த் எனது கட்டுரைகளைப் படித்தபின் அணுசக்தித் துறையில் எந்தப் பகுதிகள் தவிர்க்கப் பட்டுள்ளன என்று எடுத்துக் காட்டினால், நான் அவற்றைத் திண்ணையில் எழுத விழைகிறேன். கனடா நாட்டுக் குடியினராய் மாறிய நான், இந்திய அணுத்துறைப் பிசகுத் தகவல்களில் எதையும் வெளிப்படையாக மறைக்கவோ, வேண்டுமென்றே தவிர்க்கவோ தேவை யில்லை! கதிரியக்கத் தீங்குகளைத் திண்ணையில் வெளியிட்டுப் பிறரிடம் பங்கு கொள்வதில், யாருக்கும் நான் அஞ்ச வேண்டியதில்லை! பாரத அணுமின் உலைகளில் நேர்ந்த குறிப்பிடத் தக்க பெரும் விபத்துகளையும், மனிதத் தவறுகளையும் விளக்கமாகத் திண்ணையில் எடுத்துக் காட்டியது போல், இந்தியாவில் எந்த பத்திரிக்கையும் வெளியிட்டிருந்தால், எனக்கு எழுதி அனுப்புங்கள்!

ஒருதுளி ஐயமின்றி இப்படி உறுதியாகக் கூறலாம்! அணுமின் உலை எதிர்ப்பாளர் ஞாநியோ, அல்லது ரோஸாவசந்த்தோ திண்ணையில் இதுவரை வெளிவந்த எனது கட்டுரைகளைப் படித்ததாக எந்த அறிகுறியும் தெரிய வில்லை! படித்திருந்தால் அவர்களது கருத்துக்கு முரண்பட்ட தகவலைப் பற்றி வினா எழுப்பி, இருவரும் என்னைத் துளைத்திருப்பார்! தமிழறிஞர்களில் சிலர் ஆங்கிலத்தில் வரும் தகவல்களை மட்டும் படிப்பதும், அவற்றை மட்டும் முழுமையாய் நம்புவதும் பரம்பரை வழக்கம். தமிழில் நம்பத்தகும் விஞ்ஞானத் தகவல்கள் இப்போது நவீன அகிலவலைப் பின்னல்களில் வருவதை அவர்கள் நம்புவதில்லை! கண்ணில் தென்பட்டாலும் அவற்றைப் பார்த்தும் பாராமல் அல்லது படித்தும் படிக்காமல் நழுவி விடுவார்! அல்லது ஆறடி தூரத்தில் நின்று அப்பால் எட்டிப் பார்த்து விட்டு எள்ளி நகையாடி விட்டுப் போவார்!

திண்ணையில் பங்கெடுக்கும் அநேக எழுத்தாள நண்பருடன் கருத்து வேற்றுமையில் மோதி நான் வாதிட்டிருக்கிறேன்! இப்போது ரோஸாவசந்த் வம்புக்கு வருகிறார்! இது ஒரு வேடிக்கையான சண்டை! வரும்போதே அவர் தன்னிடம் போரிட எந்த ஆயுதமும் இல்லை என்று கைகளை உதறிக் கொண்டு வருகிறார்! அணுசக்தி என் துறையில்லை என்பவருடன் எவ்விதம் அணுசக்தியைப் பற்றி வாதிடுவது ? [குருவாவது நுனிப்புல் மேய்ந்தவர் என்று நினைக்கிறேன்!]. பணியாற்றும் காலத்தின் முழுப்பங்கைப் பல அணு உலைகளில் மூழ்க்கிய ‘அனுபவம் ‘ என்னும் எனது ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு, அவருடன் நான் போரிட முடியுமா ? ஆனால் அந்த அனுபவம் என்னுடன் 45 ஆண்டுகள் கூட வளர்ந்த தாயிற்றே! அதை எப்படிக் கைநழுவ விடுவது ? ஆகவேதான் இதை ஓர் வேடிக்கைச் சண்டை என்று கூறுகிறேன்!

‘உன் எதிராளி யார் என்று முதலில் தெரிந்து கொண்டபின் அவரிடம் போரிடு ‘ என்று கீதையோ, ஏதோ ஒருநூல் எச்சரிக்கிறது! ரோஸாவசந்த் என்பவர் யாரென்று தெரிந்தும், தெரியாமல் இருக்கிறது. ‘பெண்களை நம்பாதே ‘ என்று திண்ணையில் நெறியற்ற கவிதை ஒன்றை எழுதிய கவிஞர் ஒருவருக்குச் சூடாகச் சன்மானம் கொடுத்தவர் ரோஸாவசந்த்! ஆகவே என்னுடன் சண்டைக்கு வந்தவர் மெய்யாகக் கையில் ஆயுதம் எதுவும் இல்லாமல் வரவில்லை! ஆனால் அவர் ஆணா, பெண்ணா என்பது தெரிய வில்லை! அதனால் அவரை ‘நண்பர் ‘ என்று அடைமொழி அளித்து எழுத எனக்கு ஏனோ தயக்கம்! திண்ணையில் தெரியாத எல்லோரையும் நண்பர் என்று விளிப்பது என் வழக்கம்!

முன்பு ஒருமுறைத் தெரியாமல் ‘பாலா ‘ என்பவரைப் பெண்ணென்று சொல்லி விட்டதில், அவருக்கு என்மீது தாங்க முடியாத கோபம்! ‘பரிமளா என்ற பெயரைக் கொண்ட நான் ஓர் ஆடவன் ‘ என்று முந்திக் கொண்டு தன் முகத்திரையை அகற்றினார்! ஞாநி என்பவர் நிச்சயம் [என்னுடன் சண்டைக்கு வராத] ஆண் என்று தெரிகிறது. அவர் கூட முன்பு ஒருசமயம் இவ்விதம் திண்ணை வாள்வீச்சில் கலந்து கொள்ளும் போது, மஞ்சுளா நவநீதனை ஆணா, பெண்ணா என்று கேட்டதுபோல் எனக்கு ஒரு நினைவு! ஞாநிக்கு மஞ்சுளா நவநீதனிட மிருந்து, அதற்குப் பதில் கிடைத்ததா என்றுதான் தெரியவில்லை!

இப்போது சண்டையைத் துவங்குவோமா ? ரோஸாவசந்த் நான்கு முரண்பட்ட கருத்துக்களை என்மீது வீசி யிருக்கிறார்! அவை யாவும் பின்வருமாறு:

1. ஜெயபாரதன் அரசாங்கம் புளுகாது என்ற நம்பிக்கையில் தந்த விவரத்தாலும், ஞாநியைப் புளுகுகிறார் என்று குற்றம் சாட்டியதாலும் ஒரு நம்பிக்கைத் துரோகமாய்ச் சொல்கிறேன்.

அரசாங்கத்தார் என்பவர் [அமைச்சர்கள், மற்றும் மாநில அரசு, மத்திய அரசின் உறுப்பினர்கள்] அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். மின்னல் காளான்கள் போல் முளைத்து, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நசுக்கப்பட்டு முடங்கிப் போய் விடுபவர் அவர்கள். அவர்களைப் பற்றி நான் குறிப்பிட வில்லை. அணுசக்தித் துறையகப் பிரிவுகள் அனைத்தும் பாரத அரசின் ஆதரவைப் பெற்றாலும் அவற்றை அமைத்தவர், நிர்வாகம் செய்பவர், இயக்குபவர், பராமரிப்பவர் யாவரும் உயர்ந்த விஞ்ஞான அறிவு, பொறியியல் கல்வி, சிறந்த பயிற்சி அளிக்கப் பட்டவர். நான் குறிப்பிட்ட அகிலவலை முகப்புகளில் அவர்கள் தரும் அணு உலை இயக்கப் புள்ளி விபரங்கள் நம்பத் தகுந்தவை. அவை புளுகு எண்ணிக்கை அல்ல! மேலும் அவர்கள் அனைவரும் பொறுப்புள்ள அதிகாரிகள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போகும் சில கல்வி வாசனை அற்ற அரசியல் வாதிகள் போன்றவர் அல்லர்!

25 ஆண்டுகளாக [1957-1982] நானும் அவர்களில் ஒருவனாய் இந்தியாவில் பணியாற்றி வந்ததால், இவ்வித அழுத்தமாக அவரது தகுதிக்கு என்னால் உறுதி அளிக்க முடிகிறது. விதி விலக்காய் எங்காவது ஒன்றிரண்டு கூமுட்டைகள் இருக்கலாம்! 50 ஆண்டுகளாகச் சீரும் சிறப்பாக வளர்ந்து நிலைநாட்டப்பட்டு, ஆலமரமாய் விரிந்து பெருகும் அணுசக்தித் துறையகம் பாரதத்தின் பொற்காலத் தொழிற்துறை அமைப்புகளில் ஒன்று என்று இந்தியர் பெருமைப்பட வேண்டும்.

2. கல்பாக்கத்தில் வேலை பார்க்கும் விஞ்ஞானி ஒருவர் ரோஸாவசந்த் நண்பருக்கு எழுதியது: ‘கடந்த சில ஆண்டுகளாகவே கல்பாக்கத்தில் மின்சாரம் என்று எதுவும் உற்பத்தி செய்யப்பட வில்லை. முழுக்க [அணு ஆயுதத்திற்குத் தேவைப்படும்] புளுடோனியம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ‘.

மின்சாரம் உற்பத்தி செய்யாத ஆண்டுகள் எத்தனை ? எதனால் அணுமின் உலை இயங்காமல் இருந்தது என்று அந்த விஞ்ஞானி எழுதி யிருந்தால், நான் அதற்குப் பதில் அளிக்க முடியும். விபரம், விளக்கம் எதுவும் இல்லாமல் மொட்டைக் கடிதமாக இருப்பதால், என் ஊகத்தில் பதில் அளிக்கிறேன். ஒருவேளைக் கல்பாக்க அணு உலையில் ‘306 அழுத்தக் குழல்கள் ‘ [306 Reactor Pressure Tubes ] புதுப்பிக்கப்பட வேண்டிய பராமரிப்புப் பணி நடந்திருக்கலாம். அவற்றை மாற்றி அணு உலையை இயக்க 18 முதல் 24 மாதங்கள் ஆகலாம். இப்படி ஒரு காரணம் இருக்கலாம் என்பது என் அனுமானம்.

புளுடோனியம் எப்படி உண்டாகிறது ? முதலில் அணுமின் உலைகள் அதிக அளவில் இயங்கி மின்சக்தி பரிமாற வேண்டும். புளுடோனியமே அணுமின் உலைகள் தொடர்ந்து இயங்கினால்தான் கழிவுப் பொருட்களாக வெளியேறும். பிறகு அவற்றை மீள் சுத்திகரிப்புக் கூடத்தில் [Spent Fuel Reprocessing Plant] பிரித்து எடுக்க வேண்டும். அணு உலைகள் நீண்ட காலம் நிறுத்தப் பட்டால், புளுடோனியத் தயாரிப்பும் நீண்ட காலம் தடைப்படும்! உதாரணமாகக் கல்பாக்க அணுமின் உலை 150 மெகாவாட் மின்சாரம் ஒரு நாள் பரிமாறினால் 150 கிராம் புளுடோனியம் கிடைக்கிறது. [1 gram Plutonium production for every 1 MWday Reactor Operation]. முதலில் இப்படி முரணாக எழுதியவர் ஒரு விஞ்ஞானியாக இருக்க முடியாது! இவ்விதம் எழுதும் அறிவற்ற விஞ்ஞானி கல்பாக்கத்தில் இருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை!

3. அணு ஆயுதத்திற்கு எதிராக கருத்துச் சொன்ன ஒருவருக்கு வேலை நீடிப்பு மறுக்கப்பட்டது! அணு ஆயுதத்திற்கு எதிராகக் கட்டுரை எழுதிய சென்னை விஞ்ஞானி ஒருவருக்கு வேலை நீக்கம் வரை போய்விட்டது!

ஊதியத்தை மாதா மாதம் வாங்கி வயிற்றை நிரப்பி வரும் ஐந்தாம்படைப் பணியாளர் ஒருவர், ரோஸாவசந்த் வைத்து நடத்தும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் பண்டத்தை எதிர்த்து எழுதினால் அவருக்கு வெகுமதி கொடுத்து, வேலை நீடிப்புக் கொடுப்பாரா ? அல்லது வேலையைப் பிடுங்கி அவர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவாரா ? அவரே அதற்குப் பதில் தரட்டும்! ரோஸாவசந்த் எந்த யுகத்தில் எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறார் ? அணு ஆயுதத்தை அறவே எதிர்ப்பவர் அதை ஆக்குவதற்கு முழு உடந்தையாகப் பணியாற்றி அந்த ஊதியத்தில் வயிறு வளர்த்து, ஐந்தாம்படை ஒற்றரராய் எழுதி வரவேற்பை எதிர்பார்ப்பது எந்த நியாயத்தைச் சேர்ந்தது ?

4. ஜெயபாரதன் முக்கியமாய் பதில் சொல்லத் தவிர்க்கும் விஷயம் கழிவுகள் பற்றியது. பூமியின் ஆழத்தில் புதைக்கப் பட்டாலும் கழிவுகள் ஆபத்தானவை என்பதுதான் பலர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது.

எனது 36 அணுசக்திக் கட்டுரைகளை முற்றிலும் படிக்காதவர், நுனிப்புல் மேய்ந்தவர்தான் இவ்விதம் தவறாக எழுதுவார்கள்! அணுவியல் கழிவுகளைப் பற்றித் தனியாக வந்த இரண்டு சிறப்புக் கட்டுரைகள் [திண்ணை ஜூலை 24 & 31, 2003] கழிவுகள் புதைப்பு பற்றியும், அவற்றின் நீண்ட காலக் கண்காணிப்பு பற்றியும் விளக்கமாக உள்ளன. பல ஆயிரம் அடிக்குக் கீழ் பாதுகாப்பான குகைகளில் புதைபடும் கழிவுகளால் எவ்வித ஆபத்தும் மனிதருக்கோ, வேறு உயிரினத்துக்கோ விளையவே விளையாது. ஏனென்றால் அந்த ஆழத்தில் நீரோட்ட மற்ற தளங்களே தேர்ந்தெடுக்கப் படுகின்றன. கழிவுகள் கசியா வண்ணம் கருவிகளும் மனிதக் கண்காணிப்பும் கதிர்வீச்சை எப்போதும் கவனித்து வருகின்றன. மேலும் ஆண்டுகள் போகப் போக கதிரியக்க வீரியமும் தேய்ந்து, தேய்ந்து குறைகிறது.

அணுமின் சக்தியைப் பாரதத்தில் வரவேற்காத எதிர்ப்பாளருக்கு முடிவாக ஓர் வேண்டுகோள். ஆணித்தரமான ஆதாரமின்றிப் பரவி வரும் பொய், புரளி, புரட்டுத் தகவல்களை நம்பாதீர். ஐம்பது ஆண்டுகள் சிறப்பாக வளர்ச்சி பெற்று வரும் அணுவியல் தொழிற் துறைப் பலமடங்கு விரிந்து, இன்னும் ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னும் இந்தியாவில் அணுமின் உலைகள் பெருகி இயங்கப் போவது உண்மை. கதிரியக்கத்துக்கு அஞ்சினாலும், அதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வது உங்களுக்கும் நல்லது. உங்களைச் சார்ந்தோருக்கும் நல்லது. தமிழன்பர்களே! அணுமின் நிலையங்களை வெறுத்தாலும், அவசியம் கதிரியக்க வீச்சைப் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளுங்கள்.

[பின்குறிப்பு: ரோஸாவசந்த் கடித்தத்தில் தவறாகக் கூறிய அணுசக்திக் கருத்துக்களை விட, என் நெஞ்சைக் குத்தி வலி தந்தவை அவர் எழுதிய சில தமிழ்ச் சொற்கள்: ஆயுதத்திற்க்கு, எழுதியதற்க்கு, அதற்க்கு, தரத்திற்க்கு, எழுத்திற்க்கு, நல்லதிற்க்கு, காலத்திற்க்கு, இளையராஜாவிற்க்கு என்பவை தெரியாமல் வந்த எழுத்துப் பிழைச் சொற்களா ? தமிழில் வல்லின ஒற்றுக்குப் பின் மற்றுமொரு வல்லின ஒற்று […ற்க்…] வராதே. அவை யாவும் இலக்கணப் பிழைச் சொற்கள்.

நல்ல வேளை, சீத்தலைச் சாத்தனார் இப்போது உயிரோடு இல்லை! அந்தச் சொற்களைச் சாத்தனார் பார்த்திருந்தால், எழுத்தாணியால் மண்டை ஓட்டைக் குத்திக் குத்தி, குருதி சிந்தி யிருப்பார்! தமிழ் மொழியைத் திண்ணையில் இப்படி இழிவு படுத்தலாமா என்பது இறுதியில் நான் அவரைக் கேட்கும் ஓர் அன்புக் கேள்வி!] (ரோஸாவசந்த்தைப் புண்படுத்தும் நோக்க மின்றி அன்புடன் சுட்டிக் காட்டப் பட்டவை இவை. ஆதலால் அவரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்)

**********************

jayabar@bmts.com

Series Navigation