கலைச்செல்வனின் மரணச்செய்தி. துயருறு பொழுதுடன் நாம்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

சுவிஸ் நண்பர்கள்.


மனதை உலுக்கும் மரணச் செய்தியாய் நண்பன் கலைச்செல்வன் எழுதப்பட்டவிட்டான். 45 வயதேயான, வாழ்வின் நடுப் பகுதியைத் தொட்டிருந்தபோது இவன் காவுகொள்ளப்பட்டு விட்டான். சிாித்த முகம், கலகலப்பான பேச்சு, அரவணைப்பு எல்லாம் அவனது குறும்தாடியை இழக்க மறுத்த முகத்தையும் தாண்டி வந்து அவனது தோற்றத்தை எம் நினைவில் எழுதிச்செல்லும்.

புலம்பெயர் வாழ்வின் ஆரம்பகாலங்களில் அதாவது 80 களின் ஆரம்பங்களிலிருந்தே இலக்கியம் அரசியல் என பணியாற்றத் தொடங்கியவர்களில் அவனும் ஒருவன். ஒரு கவிஞனாக நடிகனாக விமர்சகனாக செயற்பாட்டாளனாக அவன் பல முகங்களைக் காட்டியவன். எக்சில் சஞ்சிகையின் ஆரம்பகாலத் தோற்றத்துக்குக் காரணமானவர்களில் ஒருவனாக இருந்து பின் உயிர்நிழல் சஞ்சிகையின் ஆசிாியர்களில் ஒருவனாக தனது உழைப்பைத் தொடர்ந்துகொண்டேயிருந்தான். பரீசில் வெளிவந்த முழுநீளத்

திரைப்படமான ~முகம்~ படத்தில் முக்கிய பாத்திரத்தில் வந்து தன்னில் நடிப்பாற்றல் புதைந்திருப்பதை வெளிப்படுத்திக் காட்டினான். புகலிடத்தின் இலக்கியச் சந்திப்புகளில் ஆர்வமுடன் காணப்பட்ட அவன் பாிசில் சந்திப்புகளை நடத்துவதிலும் முன்னின்றான்.

தமது வலுவுக்கு எட்டியளவு தமது உழைப்பையெல்லாம் கரைத்து அவனும் அவன் துணைவி லக்சுமியும் உயிர்நிழல் சஞ்சிகையையும் சில வெளியீடுகளையும் வெளிக்கொணர்ந்தார்கள். புலம்பெயர் இலக்கியத்தின் தோற்றத்தில் பன்முகக் கருத்துகளுடன் எழுத்தின் வலிமையை நிலைநாட்டிவந்த சஞ்சிகைகளில் எக்சில் உயிர்நிழல் என்பவற்றுக்கும் முக்கிய பங்குண்டு. விடாமுயற்சியோடு சொந்த உழைப்பில் அண்மைக்காலம்வரை உயிர்நிழல் சஞ்சிகையைக் கொண்டுவந்து தனது பாதையைத் தொடர்ந்துவிட்டு இன்று எம்மைவிட்டு நிரந்தரமாய் விடைபெற்றுவிட்டான்.

நம்பமுடியவில்லை. எம் நினைவில் அவன் மரணத்தை இருத்தமுடியவில்லைத்தான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும் என்றானபோது எழுகிறதே வலி, இங்கு அவன் எம்முடனே வாழ்ந்துகொள்கிறான். திரட்சியான அனுபவங்களுடனும் பின்னணிபாடா அரசியலுடனும் அவன் எம்மில் இணைந்துகொண்டதால் மெல்ல நெளிகிறதே ஒரு கனம், இங்கு அவன் எம்முடனே வாழ்ந்துகொள்கிறான். அவன் வாழ்ந்துகொள்வான் எம்முடன். துணைவியாக

ஒரு நண்பியாக தோழியாக அவனுடன் வாழ்ந்த லக்சுமிக்கும் மகன் கபிலனுக்கும், அவனது சகோதரன் திருமாவளவனுக்கும் எமது கரங்களின் மெல்லப் பற்றுதலாய்… அவர்தம் துயருள் எம் இணைவாய்…

எமது கண்ணீர் அஞ்சலி!

– சுவிஸ் நண்பர்கள்

Series Navigation

சுவிஸ் நண்பர்கள்.

சுவிஸ் நண்பர்கள்.