கறுப்பு நிலா

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

புகாரி


முரண்களெனும் கவியரங்கில்
முன்னறியா அறிவிப்பில்
முடிவானதெனக்கிந்தத்
தலைப்பு – அந்த
முதற்கணமே மனதில்
ஓர் துளைப்பு

கறுப்பு நிலா !

அடடா…
துவக்கமே இப்படியோர்
முரணா என்றே
இமைப்பரண் ஏறிவிட்டன
என் விழிக் குஞ்சுகள்

0

அமாவாசைக்கும்
அப்துல் காதருக்கும்
என்ன சம்பந்தம் ?

0

இப்படி
மோனைத்தனமாய்க்
கேட்டவர்
யாரோ எவரோ யானறியேன்

ஆனால்…
இக்கேள்வியில்
அம்மி தின்னும்
சட்னி அளவுக்கும்
பொருளிருக்கக் காண்கிலேன்

0

கறுப்பு நிலா கண்டுதானே
மாதமொன்று நிறைந்துபோன
உண்மையறிகிறான்
அப்துல் காதர் ?

நாளை வரும்
முதற்பிறை என்றே
பூரிப்பைச் சுமக்கிறான்
இன்றே ?

புனித ரமதான்
கருணை நோன்பையும்
அவனுக்கோர்
உற்சாக மணியோசையாய்
ஓர்நாள் முன்பே
உணர்த்துவதுதான் எது ?

ஈராறு கறுப்பு நிலாக்கள்
இருள் நகர்த்தி ஊர்வலம் செல்ல
வயதொன்று கூடிவிடுவதைக்
குறித்துக்கொள்கிறானே
தன் ஞாபகத்தாள்களில் ?

0

சரி… சரி…
இம்முரண்களையே
மும்முரமாய் அலசி அலசி
நிறமுரண் காணாது
நிறமிழந்துபோக நான்
தயாரில்லை !

இனியெல்லாம்
நிறமுறண் உரைக்க
நர்த்தனமாடப் போகின்றன
தட்டச்சுப் பலகைவழி
தமிழ்பேசும் என் விரல்கள்

0

நிலா என்றாலே – அது
கறுப்புதானே கவியரங்கே ?

வெள்ளை நிலா
என்றொரு நிலா – நம்
வான மாளிகையில்தான்
ஏது ?

பூசிக்கொள்ளும் அரிதாரமே
தன் மெய்முகம் என்று
சத்தியம் செய்யும்
திரைக் கதாநாயகியா
நம் நிலா ?

சூரியன் பூசும்
ஒளிமுகப்பூச்சை
வெள்ளை நிலவெனக் காண்பது
வேடிக்கையில்லையா ?

அது நாம்
நிற்கும் நிலக்கோணத்தால்
நிசமழிந்துபோகும்
பார்வைப் பிழையல்லவா ?

0

வானத்தின் நிறம் நீலமென்றும்
நிலவின் நிறம் வெள்ளையென்றும்
இன்னும் நம்பித் தொலைக்க
இது என்ன ஹைதர் காலமா ?

0

அட…
வெள்ளைதான் நிலவென்றே – நம்
அசட்டுக் கண்களோடு கொஞ்சம்
உடன்பட்டுப் போனாலும்

பெளர்ணமி… பெளர்ணமி…
என்றே நாம்
பிதற்றும் வட்டநிலா
முழுமொத்தமாகவே
வெள்ளை நிலாதானா
கவியரங்கே ?

அதன் முதுகெங்கும்
பத்தை பத்தையாய்
அப்பிக்கிடப்பது
பரிசுத்தக் கறுப்பென்றும்…

வளைந்து நோக்க வக்கற்ற
வெட்டிப் பார்வையை
வைத்துக்கொண்டு
கறுப்பு நிலா என்றே
பழிக்கும் பொழுதுகளில்
அதன் நேர் பின்புறம்
பெளர்ணமி என்றும்
அறியமாட்டாரா ?

0

அட…
நீதான் சொல்லேன்
கவியரங்கே

முழுமொத்த
வெண்மை என்பது
நிலவின் வாழ்வில்
வாய்க்குமா நொடிப்பொழுதும் ?

பூமிக்குடை புகுந்து
சூரியச் சுடுவிழி தொடாத
அந்தக்
குருட்டுச் சிறைக்குள்
சிக்கிக்கொள்ளும்போது
நிலா என்ன நிறமாம் ?

எப்புறமிருந்து கண்டாலும்
அன்றது கறுப்பு நிலாதானே
கவியரங்கே ?

0

போகட்டும்…
நிலா கறுப்பென்றால் – இக்
கவியரங்கக் கண்களுக்குப்
பரிகசிப்பாகிப் போகுமா என்ன ?

உலகப் பேரழகி
கிளியோபாட்ரா மட்டுமல்ல
உலகின் முதல் மனிதனே
கறுப்பு நிலாதானே
கவியரங்கே !

கோபியர்களெல்லாம்
குழைந்து குழைந்து
கொஞ்சிக் கூத்தாடிய
கண்ணன் ஒரு
கறுப்பு நிலாதானே
கவியரங்கே !

அது மட்டுமா
இந்த அண்டமே ஓர்
அழகு கறுப்புதானே

அந்தச்
சத்தான கறுப்புக்குள்தானே
சகலமும் இருப்பு !
——————-
buhari@rogers.com

Series Navigation