கரு

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

எஸ். ஜெயலட்சுமி


டாக்டரிடம் போய் விட்டு அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த நிர்மலாவுக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும் ஒரு புறம் களைப்பாகவும் இருந்தது.
அன்று நர்சிங் ஹோமில் நல்ல கூட்டம். ஒவ்வொருவராகப்
போய் விட்டு வந்த பின் இவளைக் கூப்பிட்ட போது மணி இரண்டாகி விட்டது.
உடல் களைப்பாக இருந்தாலும் உள்ளாம் பூரித்திருந்தது. டாக்டர் செக்கப் பண்ணி முடிவு சொல்லும் வரை ஒரே டென்ஷனாக இருந்தது. எப்படியோ டாக்டர் கன்•பர்ம் பண்ணி சொல்லி விட்டாள்!
கங்ராஜுலேஷன்ஸ்! என்று சொன்னதும் தான் உயிர் வந்த
மாதிரி யிருந்தது. ஆனால் இந்தத்தடவை ரொம்பவும் ஜாக் கிரதையாக இருக்க வேண்டுமாம்.

முதல் தடவை டாக்டர் கர்ப்பம் என்று உறுதி செய்தபோது நிர்மலா, சுரேஷ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சுரேஷ் அவர்கள் வீட்டில் ஒரே பையன். அவனுக்குப் பின் அவர்கள் வீட்டில் சின்னக் குழந்தை களே யில்லை. பஸ்ஸிலோ ,கடையிலோ, தியேட்டரிலோ யாராவது சின்னக் குழந்தை வைத்திருந்தால் நிர்மலாவிடம் ”அதோ பார் நமக்கும் அதே போல குழந்தை வேண்டும்.சுருட்டை முடியோடு அந்தக் குழந்தை தான் எவ்வளவு அழகாக இருக்கு! சிரிக்கும் போது கன்னத்தில் எவ்வளவு அழகாகக் குழி விழுகிறது! என்று மிகவும் ரசிப்பான். நிர்மலா உண்டாகியிருக்கிறாள்
என்று தெரிந்ததும் அவளைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறை தான்! மெதுவாக நட, ரொம்ப வேலை செய்யாதே .உனக்கு என்னென்ன வேணுமோ சொல்லு வாங்கித் தரேன். மாங்காய் வேணுமா, சாம்பல் வேணுமா? என்றெல்லாம் கலாட்டா செய்வான். குழந்தைப் படங்களை வாங்கி பெட் ரூமில் மாட்டி னான். இருவருமாக என்ன பெயர் வைக்கலாம் என்று பெயர்களைத் தேடினார்கள்.

ஒரு நாள் நிர்மலாவுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாத படி நல்ல
காய்ச்சல்! மறு நாள் உடம்பெல்லாம் பொரி பொரியாக வேர்க்குரு மாதிரி வெடித்திருந்தது. பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வயதான மாமியிடம் கேட்டார்கள். அவள் பார்த்து விட்டு இது
சிச்சிலுப்பை மாதிரி இருக்கு. எதுக்கும் டாக்டரிடம் காட்டி
விட்டு உங்க அம்மாவையும் வரச்சொல்லுங்க” என்றாள்.
அம்மாவும் வந்தாள்.டாக்டர் சொன்னதைக் கேட்டு இருவருக்கும் ஒரே அதிர்ச்சி! கருவைக் கலைத்து விட வேண்டுமாம்! வைசூரி கண்டு விட்டால் அது கருவைப் பாதிக்குமாம் அதனால் பிறக்கும் குழந்தை 95% ஊனமாகப் பிறக்கலாம்” என்றார். இருவரும் பிரமை பிடித்தது போலானார்கள். ”எர்லி ஸ்டேஜ் என்பதால் பிரச்சனை ஒன்றும் இருக்காது” என்று டாக்டர் தைரியம் சொன்னார். காலமெல்லாம் ஒரு ஊனமுற்ற குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப் படுவதை விட அபார்ஷன் பன்ணுவதே மேல் என்று டாக்டர் சொன்னதும் சரியாகத்தான் தோன்றியது. நிர்மலாவின் அம்மாவும் தைரியம் சொன்னாள்.”என் அண்ணாவின் பெண்ணுக்கும் இதேபோல் சிச்சிலுப்பை வந்ததால் 3வது மாதத்திலேயே அபார்ஷன்
பண்ணும் படி ஆச்சு. ஆனா அதுக்கப்புறம் ரெண்டு கொழந்தை
கள் பொறந்து இப்போ நன்னாயிருக்கா” என்று சமாதானம் சொன்னாள். ஒருவாறு அபார்ஷனுக்கு சம்மதித்தார்கள். .

நிர்மலாவின் உடம்பு தேறிவந்த போதிலும் மனதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிய வில்லையே என்ற ஏக்கம் இருந்தது. சுரேஷ் தான் அவளுக்கு ஆறுதல் சொன்னான். அவர்கள் வீட்டு வேலைக்காரக் கிழவி ”கவலைப் படாதீங்க, குழிப்பிள்ளை மடிலன்னு சொல்லுவாங்க. சீக்கிரமே அடுத்த புள்ள பொறக்கும்” என்பாள். ஒரு வருஷம்
கழித்து நிர்மலா மீண்டும் கருவுற்றாள். நாற்பது நாட்கள்
ஆனதுமே டாக்டரிடம் போனார்கள். ஸ்கேன் செய்ததில்
கர்ப்பம் உறுதியானது. ஆனால் வேறொரு சிக்கல்! இந்தத்
தடவை கரு, கருப்பைக் குழாயிலேயே இருப்பதாகவும் நாள் ஆக ஆக அது வளரும் போது பிரச்சனைகள் ஏற்பட்டு மிகவும் சிக்கலாகி விடும் என்றார்கள். அதனால் ஒரு வாரத்துக்குள் கட்டாயமாக அபார்ஷன் செய்தேயாக வேண்டும். நல்ல வேளை
யாக சீக்கிரமே கண்டு பிடித்ததால் பிரச்சனை யிருக்காதாம். நிர்மலாவுக்கு பூமியே காலடியிலிருந்து நழுவியது போலிருந் தது. ஏன் இப்படி? எனக்கு மட்டும் ஏன் இப்படி அடுத்தடுத்துச் சோதனைகள்? அந்தக் காலத்தில் எப்படித்தான் ஏழு எட்டு
என்று பெற்றார்களோ? விசாரித்ததில் எத்தனையோ பேர்களுக்கு இது போல் பிரச்சனை ஏற்பட்டு அதன் பின் குழந்தை பிறந்தி ருப்பதாகத் தெரிந்து கொஞ்சம் சமாதான மடைந்தார்கள்.

இதோ மூன்றாவது தடவையாக உண்டாயிருக்கிறாள். டாக்டர் உறுதியாகச் சொல்லிவிட்டார். போன் செய்து இந்த சந்தோஷ சமாசாரத்தை சுரேஷிடம் சொல் லலாமா என்று நினைத்தாள். அடுத்த நிமிடமே அவன் தான்
நாளை வந்து விடுவானே, போனில் சொல்வதைவிட நேரில் சொல்லும்போது இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் நேரம் ஆக ஆக அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுரேஷைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்க வேண்டும் போலிருந்தது. போனில் நம்பரை அமுக்கினாள். மறுமுனையில் சுரேஷ். வழக்கமான விசாரிப்புக்குப் பின் ”நீங்க நாளைக்கு வரும் போது உங்களுக்கு ஒரு குட் ந்யூஸ் இருக்கு” என்றாள்.
”ஒன்னோட கதை கவிதை ஏதாவது பிரசுரமாயிருக்கா?”
”அதெல்லாம் நேர்ல தான் சொல்லுவேன்”.
”ஏதாவது க்ளூ கொடேன். லெட்டர் எதாவது வந்திருக்கா”
”ஊகூம் அதெல்லாம் சொல்ல மாட்டேன். நேர்ல தான்”
என்று போனை வைத்து விட்டாள்.
மறுபடியும் அவனே போன் செய்து ப்ளீஸ் என்னன்னு சொல்லேன் என்றான். ”வெயிட் வெயிட். மற்றவை நேரில்”
என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

காலையில் எழுந்ததிலிருந்தே மனம்
சிட்டாகப் பறந்தது. அவனுக்குப் பிடித்தமான மோர்க்குழம்பும்
பீன்ஸ் உசிலியும் செய்வதில் முனைந்தாள். வெட்டிங் டேக்கு அவன் வாங்கித்தந்த இளம் ரோஸ் கலர் புடவையும் அதற்கு மேட்ச்சாக ரோஸ் நிற ப்ளவுசும் அணிந்து கொண்டாள்.
என்ன ஸ்வீட் செய்யலாம் என்று யோசித்தாள். தேங்காய் பர்பி செய்ய நெய் இருக்கிறதா என்று பார்த்தாள். போன் ஒலிக்கவே
சுரேஷ் தான் என்று சொல்லிக்கொண்டே விரைந்து வந்தாள்.
மறு முனையில் ”இது சுரேஷ் வீடு தானே?”என்ற குரல் கேட்டது.
பேசியது யார் என்று தெரியவில்லை.”மேடம் நான் சுரேஷ் கூட ஆபீசில் வேலை பார்க்கிறேன். நாங்க வந்த பஸ் ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சு. நான் ஷீபா ஹாஸ்பிட்டல்ல இருந்து பேசறேன். பயப்பட வேண்டாம். நீங்க உடனே வாங்க. ரூம் நம்பர்113.
”போனை வைத்து விட்டார்.

நிர்மலா ஒரு நிமிஷம் திகைத்தாள். அடுத்த
நிமிடமே காஸ் அடுப்பை அணைத்தாள். அப்பாவுக்கு போன் செய்தாள். பீரோவைத்திறந்து இருந்த பணத்தை எடுத்துக் கொண்டாள். பக்கத்து வீட்டு ஸரோஜாவிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் தானும் உடன் வருவதாகச் சொல்லவே அவளுடன் கிளம்பினாள். ஆபீஸ் நண்பர் பயப்பட வேண்டாம் என்று சொல்லி யிருந்த போதிலும் நிர்மலா ஆஸ்பத்திரி வரும் வரை வேண்டாத தெய்வமில்லை. வந்து பார்த்ததுமே எவ்வளவு பலத்த அடி என்பது தெரிந்தது. ஐ.சி.யு வில் சுரேஷைப் பார்த்ததுமே மயங்கி விழுந்து விட்டாள். நினைவு வந்து கண் விழித்த போது எல்லாமே மச மச வென்று மங்கலாகத் தெரிந்தது.

”நிம்மி.நிம்மி என்று அம்மாவின்
குரல் எங்கேயோ கூப்பிடுவது போலிருந்தது.”அவங்களுக்கு இன்னும் நினைவு திரும்பல. அவங்கள தொந்தரவு செய்ய வேண்டாம்” யாரோ எங்கேயோ சொல்வது அரை குறையாகக் கேட்டது.

நினைவு வந்த பொழுது அவளால் எழுந்திருக்க முடியவில்லை. படுத்த படியே ஒவ்வொன்றாக வரிசையாக நினைவு படுத்த முயன்றாள். சுரேஷைப் பார்க்க வந்தது, அவன் தலையிலும் கையிலும் கட்டோடு படுத்திருந்தது அவனுக்கு ஆக்ஸிடெண்ட் என்று போன் வந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. அவனுக்குத் தானே அடி பட்டது? எனக்கு என்ன வந்தது? ஏன் எழுந்திருக்க முடியவில்லை? டயர்டா இருக்கு.” என்றாள்.”ஒண்ணுமில்ல, நீ சுரேஷைப் பாத்ததும் மயக்கமாயிட்ட. அதான்”என்றாள் அம்மா.”எனக்கு அவரைப் பார்க்கணும்”.
”டாக்டர் வரட்டும்”

டாக்டர் வந்ததும் ”டாக்டர், எனக்கு சுரேஷைப் பார்க்கணும்” என்றாள். ”பார்க்கலாம், ஆனால் அவர் கிட்ட எதுவும் பேச முடியாது. அவருக்கு இன்னும் நினைவு திரும்பலை. உணர்ச்சி வசப்பட்டு சத்தம் போட்டு அழக்கூடாது.” என்ற கண்டிப்பான உத்திரவோடு அனுமதி தந்தார் டாக்டர். வீல் சேரில் போகும் போது, சுரேஷிடம் அன்றே இந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லாமல் போனேனே. இப்பொழுது டாக்டர் எதுவும் பேசக் கூடாதென்று தடை உத்திரவு போட்டு விட்டாரே! சுரேஷிடம் சொன்னால் எவ்வளவு சந்தோஷப் படுவார்! என்று நினைத்தாள்.

பாவம் நிர்மலா, அவளுடைய
கரு கலைந்து போன விபரம் இன்னும் அவளுக்குச் சொல்லப்பட வில்லை.

***********************************************

.

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி