கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ப. இரமேஷ்


ஒரு கதையைக் காப்பியமாக வடிவமைப்பதில் அதன் கட்டமைப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றன, காப்பியக் கட்டமைப்புக் கூறுகளில் புறக் கட்டமைப்பும்(External Structure),, அகக் கட்டமைப்பும் ‹ (Internal Structure) முக்கியபங்கு வகிக்கிறது. காப்பியத் தலைவனின் பிறப்பு முதல் இறப்பு வரை விவரிப்பது ஒருவகை, மற்றொரு வகை அவனது வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளில் தொடங்கித் தேவைக்கேற்ப முன்பின் நிகழ்வுகளை நிரல்படுத்துவது மற்றொரு வகை இவ்வகையில் கப்பலுக்கொரு காவியம் முதல் வகையில் அமைவது. காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்த தண்டியலங்காரம் குறிப்பிடுகின்ற காப்பிய கட்டமைப்பைக் கப்பலுக்கொருக்காவியம் பெற்றிருக்கிறதா என்பதை ஆராய்வதே இக்கட்டுரை¬யின் நோக்கமாகும்.
1.1. கப்பலுக்கொரு காவியத்தில் புறக் கட்டமைப்பு :
புறக் கட்டமைப்பு என்ற நிலையில் தண்டியலங்காரம் சருக்கம் இலம்பகம், பரிச்சேதம் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும் காதை, படலம், காண்டம் முதலியவையும் காப்பியப் பிரிவுகளாக அமைகின்றன. இவ்வகையில் கப்பலுக்கொரு காவியத்தை நோக்கும் பொழுது சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் முதலிய பாகுபாடு இல்லாமல் தனித்தனி தலைப்பிட்ட கவிதைகளாக அமைந்துள்ளன. மேலும் காப்பிய பிரிவுகளாக உள்ள காதை, படலம், காண்டம் முதலியவை இடம்பெறவில்லை. இராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பபியங்களில் காணப்படும் காண்டம் போலவே வாய்மைநாதன் அவர்கள் வ.உ.சியின் வாழக்கை வரலாற்றை இளமை, இல்லறம், போர்க்களம், சிறைக்களம், எதிர்நீச்ல் என்று ஐந்து பாகமாகப் பிரித்து விளக்கியுள்ளார்.
பாகம் என்று பகுத்திருப்பதைப் பார்க்கும் போது அவை ‘காண்டம்’ என்ற காப்பிய பிரிவுக்கு ஒத்து விளங்குவதைக் காண முடிகிறது. மேலும் தண்டியலங்காரம் கூறுகின்ற வாழ்த்து, வணக்கம், வருபொருள் போன்ற காப்பிய இலக்கணம் இதில் பின்பற்றபடவில்லை. நேரடியாக வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்புகிற விதம் அமைக்கப்பட்டுள்ளது.
1.2 கப்பலுக்கொருக் காவியத்தில் அகக்கட்டமைப்பு :
காப்பிய அகக்கட்டமைப்புகளில் வருணனைக் கூறுகள், நிகழ்ச்சி விளக்கக் கூறுகள் குறிப்பிடத்தகுந்தன. வருணனைக் கூறுகளாக மலை, கடல், நாடு, வளநகர், சூரியன், சந்திரன் ஆகிய இரு சுடர்த் தோற்றம் முதலானவற்றைத் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. இவ்வருணனைக் கூறுகள் பல கப்பலுக்கொருக் காவியத்தில் இயல்பாக அமைந்துள்ளன. வ.உ.சியின் பிறப்பு பற்றிக் குறிப்பிடும் பொழுது,
“சந்திரனை விளையாட அழைக்கும் பிள்ளை
தாய்முகத்தைப் புதுமழையாய்க் குழைக்கும் பிள்ளை
செந்தமிழில் மழலைத்தேன் சேர்த்தே இன்பச்
சிகரங்கள் தொட்டுக்கை கொட்டும் பிள்ளை
என்ற வரிகளில் சந்திரனையும் சிகரத்தையும் பற்றி குறிப்பிடுகிறார். மேலும்
“குற்றால அருவிக்குத் தம்பியானான்
குணம் வளர்க்கும் மரமாயி செல்வனானான்
என்ற வரிகளில் அருவி பற்றியும்
“வற்றாத பொருநைநதி அலைகள் போல
வளர்பிறை போல் முகம் பொலியும் மகிழ்ச்சியானான்”
என்ற பாடல் அடிகளில் நதி பற்றியும் சந்திரன் பற்றியும் குறிப்பிடுகிறார்.
“நடு வானில் உதிர்ந்துவிட்ட விண்மீனாக
தேனாக அவர் பெயரைச் சூட்டிக் கொண்டு”
என்பது மூலம் நட்சத்திரங்கள் பற்றியும் வர்ணனைகள் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. வ.உ.சிக்கு திருமணம் செய்ய பெண்பார்க்கும்போது வள்ளியம்மையின் அழகை,
“பொதியமலை தொட்டுவந்த தென்றல் மூக்கில்
புகுந்ததனால் புத்துணர்வு பிறந்தார் போன்றும்
நதியலைகள் நடந்ததனால் ஆற்று மண்ணில்
நடனங்கள் அரங்கேறும் புதுமை போன்றும்”
என்று குறிப்பிடுகிறார்.
1.2.1. இருசுடர் தோற்றம் பற்றிய பொழுது வர்ணணனை
“புது வானில் முழுநிலவு எழுந்தார் போலும்
பொய்கையில் செந்தாமரையே மலர்ந்தாற்போலு”
என்று வள்ளியம்மையின் அழகை நிலவு தோற்றத்திற்கும் மலர் பூப்பதற்கும் ஒப்பிடுகிறார் மேலும்,
“சிவப்புநிறச் சூரியனும் கிழக்கு வானைச்
செம்பட்டால் அணி செய்யும் காலை வேளை”
என்று சூரியன் உதிக்கும் நிகழ்வை காலை வேளை இவற்றின் மூலம் இருசுடர் தோற்றம் பற்றிய பொழுது வர்ணனைகளும் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
1.2.2. நாடு வர்ணனை
காப்பியத்தில் நாட்டு வர்ணனை என்பது இயல்பிலே அமைந்து விடுவதைக் காண்கிறோம். கப்பலுக்கொரு காவியத்தில் வ.உ.சி பிறந்த ஊரான நெல்லைப்பூமி பற்றிய வர்ணனைகள் காப்பியத்திற்கும் காப்பியத் தலைவனுக்கு அணி சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.
“குறிஞ்சி முதல் ஐந்நிலமும் குலவும் பூமி
குவியலாய்ப் பருத்தி விளைகின்றபூமி
உறிஞ்சுகின்ற தன்னலத்தின் நிழல்படாத
உழைப்பாளர் வியர்வையிலே தழைக்கும் பூமி”
என்று நெல்லையின் சிறப்பை வர்ணித்து, அங்கு பாய்கின்ற
“பொருநை நதி சம்புநதி மணிமுத்தாறு
பூரித்து வளம் தரும் திருநெல்வேலி”
என்று ஆறுகளைப்பற்றி குறிப்பிடுகிறார்.
1.2.3. அருவி வர்ணனை
திருநெல்வேலி ஊரின் சிறப்பை எடுத்துக்கூறும் பொழுது அங்கு உள்ள அருவியை
“மேற்குமலைத் தொடருக்குக் கிழக்கில் செல்வம்
விளைவிக்கும் இயற்கைப்பெண் கூத்து மேடை!
காற்சலங்கை ஒலிப்பது போல் அருவிப்பாய்ச்சல்
காற்றெழுது துள்ளுகிற அழகின் மேய்ச்சல்
மேற்பட்ட மலைச் சரிவில் காப்பிய ரப்பர்
மிகுந்தோட்டம் ஏலக்காய் விளையும் நெல்லை
காற்பட்ட விலங்குடைக்கும் வீரனுக்கே
காத்திருந்து களிக்கிறது வருகை கண்டே!”
அருவியை கால் சலங்கை ஒலிக்கு உவமைப்படுத்தி வர்ணிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் விளைகின்ற காப்பி, ரப்பர், ஏலக்காய் தோட்டங்கள் வ.உ.சி.யின் வருகைக்காக காத்திருந்து மகிழ்ச்சியடைந்தது என்று குறிப்பிடுவதன் மூலம் தண்டியலங்காரம் குறிப்பிடுகின்ற அனைத்து வர்ணனைகளும் இடம் பெற்றிருப்பது புலனாகிறது.
அரசியல் :
தன்னிகரில்லாத் தலைவனுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளான இல்லறம், அரசியல் பற்றிய செய்திகளைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. அரசியல் நிகழ்வுகளைத் தண்டியலங்காரம் சுட்டும் மந்திரம் (மந்திரம்-ஆலோசனை), செலவு (செலவு-பயணம்), தூது, இகல் (இகல்-பகைமை), போர், வெற்றி முதலியவை பற்றிய விவரிப்புகள் கப்பலுக்கொரு காவியத்தில் போர்களம், சிறைக்களம், எதிர்நீச்சல் என்ற மூன்று பாகங்களில் இடம் பெற்றுள்ளன.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் விட்டும் அவர்களுக்கு எதிராக பேசியும் அரசியலில் சேர்ந்து, போராட்டங்களில் பங்கெடுத்தும் அதனால் சிறை சென்று செக்கிழுத்தும் தம்முடைய பங்களிப்பை செய்துள்ள வ.உ.சி. பற்றி அனைத்துச் செய்திகளும் மேற்கண்ட மூன்று பாகங்களில் இடம் பெறுகின்றன. இவையெல்லாம் தண்டியலங்காரம் குறிப்பிடுகின்ற அரசியல் நிகழ்வுகளை ஒத்துள்ளது. மேலும் வ.உ.சிக்கு பெண்தேடும் படலம் முதல் வ.உ.சிக்கும் வள்ளியம்மைக்கும் நடைபெற்ற திருமணம் வரையிலான நிகழ்வுகள் வாழ்வியல் நிகழ்வுகளாகக் காவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காப்பியக் கதை :
காப்பிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மையக் கதையோடு ஒருங்கு இணைக்கப்படுகின்ற திறத்தைக் கட்டமைபுத்திறன் என்று வ.வே.சுப்ரமணியன் குறிப்பிடுகிறார் இதற்கேற்ப கப்பலுக்கொருக் காவியம் மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. வ.உ.சியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் ஒருங்கே இணைக்கப்பட்டுள்ளது.
தொகுப்புரை :

தண்டியலங்காரம் குறிப்பிடுகின்ற காப்பிய புற, அக கட்டமைப்பில் கப்பலுக்கொருகாவியம் புற கட்டமைப்பை விட அக கட்டமைப்பில் பெருமளவில் ஒத்து விளங்குகிறது. ஒரு காப்பியத்திற்கான அத்தனைப் பண்புகளையும் தாங்கி நிற்கின்ற வகையில் வாய்மைநாதன் கப்பலுக்கொரு காவியத்தைப் படைத்துள்ளார். காப்பியக் கதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, தண்டியலங்காரம் குறிப்பிடுகின்ற வர்ணனைகளுடன் அழகுற அமைந்துள்ள விதத்தைப் பார்க்கும் பொழுது கவிஞரின் கட்டமைப்புதிறன் வெளிப்படுகிறது. பொதுவாகக் காப்பியம் முழுமைக்குமான ஒரு அலசலில் கப்பலுக்கொரு காவியம் அகக்கட்டமைப்பில் சிறந்து விளங்குவதைக் காணமுடிகிறது.

ப. இரமேஷ்,
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்),

Series Navigation

ப.இரமேஷ்

ப.இரமேஷ்