கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

ஜி ராமகிருஷ்ணன்



அலைக்கற்றை ஊழலைப் பற்றிய மற்றுமொரு அலசலை நீங்கள் இங்கே ஊகிக்க வேண்டாம். கல்வி என்பதே இத்தலைப்பின் இறுதிச் சொல். கல்வி பற்றியது இக்கட்டுரை. சில வாரங்களுக்கு முன் தமிழகக் கல்வி நிலை பற்றி எழதியிருந்தேன். அதையொட்டிய இன்னும் சில செய்திகள், எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

காங்கிரசும் கழகமும் இயற்கையான அணி போலும். ஊழல், தரமலிவு, அரசு சார் இயக்கங்களை, நிறுவனங்களை மலினப்படுத்துவது, போலியான மாறுதல்களைக் கொணருவது என்பதில் அவர்கள் காட்டும் முனைப்பு வியக்கவைக்கிறது. அதிலும் கபில் சிபல் ஊழலில் ஒரு “கலைஞர்”.

கபில் சிபல் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை நீக்கி சீர்திருத்தம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார். இந்தத் தேர்வை அவர் நீக்கியதற்குக் கூறிய ஒரே காரணம் மாணவர்களுக்கு தேர்வினாலான மன அழுத்தம் அதிகமாகிறது என்பது மட்டுமே. மாணவர்களின் மன அழுத்தத்தைப் பத்தாம் வகுப்பிலானத் தேர்வை நீக்குவதன் மூலம் குறைக்க இயலுமா? பன்னிரண்டாம் வகுப்பிலோ அல்லது அதற்கு மேலோ மன அழுத்தம் வராதா? என்றெல்லாம் கேட்காதீர்கள்? அழுத்தம் பூஜ்யம் என அறிக்கை விட்டுவிடுவார் சிபல். இவ்வாண்டின் இறுதித் தேர்வை ஒட்டிய அறிவிப்பைச் சென்ற மாதம் CBSE வெளியிட்டது. அதில் தான் அளிக்கும் வினாத்தாள்களைக் கொண்டு, தான் குறிப்பிடும் கால அட்டவணையில் தேர்வு நடத்தி; குறிப்பிட்ட மதிப்பெண் கையேட்டுப்படி விடைத் தாட்களைத் திருத்தி முடிவை தனக்கு அனுப்பவேண்டுமென பள்ளிகளை CBSE மையப் பள்ளிக் கல்வி ஆணையம் அறிவுறித்தியிருக்கிறது. மன அழுத்தம் ஒன்பதாவதிளிருந்தே துவக்கம் இப்புதிய முறையில்.

சில நாட்களுக்கு முன் CBSE இயக்குனர் ஹிந்து பேட்டியில் (அது என்ன அரசு சார் பேட்டிகள் இந்துவிலே அதிகம் வருகின்றன!!). மாணவர்களின் மதிப்பிடலை இன்னும் கூடுதலான பரிமாணங்களில் செய்ய புதிய முறை வழிவகுப்பதாகச் சொல்லியிருந்தார். இது போதுத்தேர்வெழுதாத பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்தும். மூன்றில் இரு பங்கு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதைத் தவிர்த்திருக்கிறார்களென CBSE இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுவே சரியான தகவலா எனத் தெரியவில்லை. நானறிந்த பள்ளிகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் பொதுத் தேர்வு எழுதுகிறார்கள். 11, 12 ற்கு மாநிலப் பாடத் தேர்விற்கு மாறுவதற்கு பொதுத் தேர்வு கட்டாயத்தேவை. பெரும்பாலான மாணவர்கள் +2 வில் மாநிலப் பாடத் திட்டத்திற்கு மாறும் உத்தியைக் கைக்கொள்கின்றனர். அதனால் இந்த புள்ளிவிவரமே அலைக்கற்றைப் புள்ளிவிவரமோ? மேலும் தொடர் மதிப்பிடல் என்ற முறையில் பல்வேறுவிதமான முறைகளை (quiz, project) போன்று பட்டியலிட்டு இவைகளும் கணக்கிடப்படும் என்றார். பள்ளிகள் ஓரிரு தேர்வுகளைச் செய்து கணக்குக் காட்டுகின்றன.

CBSE ஐக் கேளுங்கள் என்றொரு பகுதி ஹிந்து நாளேட்டில் வருகிறது. பிப் எழாந்தேதிப் பதிப்பில் பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்குப் பள்ளிகள் 11 ஆம் வகுப்புக் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கக்கூடும் என ஊகமாகப் பதிலிருக்கிறது. தேர்வு எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களைவிட தேர்வைப் புறந்தள்ளிய மாணவர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள். கலைஞர் உத்தி போல் தெரியவில்லை? என்னே புரட்சி! ஆயினும் இதே பகுதி பிப்ரவரி 14 ஆம் தேதி அதற்கு முரணாகப் பேசுகிறது.

பொறியியல், மருத்துவத் தேர்வுகளை ஒரே தேர்வாக ஆக்கபோகிறேன் என்று அறிவித்தார் கபில் சிபல். மருத்துவ நுழைவுத்தேர்வை தமிழகம் எதிர்த்ததைக் கணக்குக் காட்டி ஒத்தி வைத்தார். இந்தியத் தொழிநுட்பக் கழகம் IIT இதில் விலக்குப் பெற்று விட்டது. தனியார் பல்கலைக் கழகங்கள் பற்றி வாயே திறக்கவில்லை ; இந்திய விண்வெளி தொழில்நுட்பக் கல்லூரி IIST போன்றர்வர்கள் தனித் தேர்வு நடத்துவதையுயம் கண்டுகொள்ளவில்லை.
அதனால் பள்ளிக் கல்வித் திட்டத்தில், நுழைவுத் தேர்வுகளில் என்ன தான் மாறுதல் கொண்டு வந்தார் கபில் சிபல் என்கிறீர்களா? எனக்கும் தெரியவில்லை. ஆனால் பூஜ்யம் என்று சொல்லமாட்டேன்.

என் அனுமானம். பட்ட மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம். குத்துமதிப்பான கணக்கில் 4000 கோடி பணப்புழக்கம். இதில் உரிய பங்கு பெற முயற்சிகள் நடை பெறுகிறது. அயல் நாட்டுக் கல்வி நிறுவனங்கள் இங்கு கடை போட அடிகோலப்படுகிறது (TVU?). இது மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 43 தனியார் பல்கலைக் கழகங்களை தகுதி மறுபரிசீலனை செய்யப்போவதாகக் கூறியுள்ளார். கோடிகளைக் குவிக்கச் செய்யும் மோசடியின் முகப்பூச்சு இந்தப் பள்ளிக் கல்விச் சீர்திருத்தம்.

மும்பைத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு சிவராஜ் பாட்டிலை சிதம்பரம் கொண்டு உள்துறை அமைச்சகத்திலிருந்து வெளியேற்றினார்கள். அதைக்கண்டு அப்பாடா நிதியமைச்சகம் தப்பித்தது (சிதம்பரத்திடமிருந்து) என்று எண்ணினேன். அதுபோல் அலைக்கற்றை ஊழலையொட்டிய அமைச்சரவை மாற்றத்தில் கபிலையும் கல்வியையும் பிரிப்பார்களெனக் கனவு கண்டேன். நிகழவில்லை! காங்கிரஸ் மந்திரிகளில் வேறுபாடு என்ன எனக் கேட்டீர்களானால் என்னிடம் சரியான விடையில்லை. விடியுமா என்று சிறு சபலம் தான். அதிலும் சீர்திருத்தம் என்ற பெயரில் நடக்கும் மோசடி மிக்கவே வேதனை அளிக்கிறது. RTE என்றொரு மோசடி! அதைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.

இது பற்றி பா ஜ க பெரிய கருத்துகளையோ விமர்சனங்களையோ வைக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்திற்கு வருவோம். இதே போன்ற நிலை தான். பள்ளிக் கட்டண சீரமைப்பு என்ற பெயரில் நடந்த கூத்தை நான் விவரிக்கத் தேவையில்லை. சிறு வேறுபாடு! தமிழக பாஜகவிலிருந்து திரு ராஜா, மன்னிக்கவும் H. ராஜா, (எதற்குப் பெயர்க் குழப்பம்) குரல் கொடுத்திருந்தார். சிறுபான்மை சலுகைப்போராட்டத்தினூடே இதையும் பா ஜ க தொட்டிருக்கலாம்.

தொழிநுட்பக் கல்விப்பெருக்கத்தில் முந்தைய தலைமுறை காட்டிய முனைப்பின் விளைவு இன்றைய இந்திய வளர்ச்சி. கழக காங்கிரஸ் கூட்டணியினால் அது வேகமாகப் பலவீனப்படுகிறது.

நல்ல கூட்டணி! வெளியேறும் நாள் என்றோ?

Series Navigation