கனவுகள் கொல்லும் காதல்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

செல்வநாயகி.


****

இதோ வழக்கம்போல் வந்துவிட்டுப் போயிருக்கிறது….வண்ண வண்ண வான வேடிக்கைகளுடனும், விதவிதமான மேளவாத்தியங்களுடனும்…. ‘காதலர் தினம் ‘. வாழ்த்து அட்டைகள் விற்றுத் தீர்ந்திருக்கலாம். பரிசுப்பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கு இந்தமாதம் லாபம் கூடியிருக்கலாம்… மேலை நாடுகளில் மட்டும்

ஆடிக்கொண்டிருந்த இந்தப் பிசாசு சமீபகாலமாக இந்தியாவிலும் கால்பதித்து விட்டது மற்றும் சில பிசாசுகளுடன். இப்போதைய தமிழ்

சினிமாக்களுக்கும் காதல் தவிர்த்து வேறு களன் இல்லை. வித்தியாசமாக எடுக்கப் படுகிற படங்களானாலும், அந்த வித்தியாசம் காதலைக்

காட்டும் முறைதனில்தான் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் எடுத்தவருக்கும் போனியாகும். காதல் அந்த அளவு முக்கியத்துவம்

வாய்ந்ததாகிவிட்டது. சரி, காதல் இல்லாத வாழ்வு இனிக்குமா என்ன ?

இனிக்க முடியாது. காதல் கழித்த வாழ்வு இருண்டுதான் போகும். காய்ந்து கொண்டிருக்கிற மனதில் சொட்டுச் சொட்டாய் ஈரம் சுரக்க

வைப்பதும், பட்டுப்போகா வண்ணம், வாழும் ஆசையைத் துளிர்க்கவைத்துக் கொண்டிருப்பதும் காதல்தான், காதலேதான். ஆனால், காதலின்

இன்னொரு முகம்தான் கவலையளிக்கிறது. இந்தக் கட்டுரை எழுதத் தூண்டியதே இன்று (பிப்ரவரி 04) ஆனந்த விகடனில் வெளியான

ஒரு செய்திதான். ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் காதல் ஜெயித்த கதை அது. தன் 15 ஆவது வயதில் தினமும் பள்ளிக்குச்

செல்லும்போது பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிற இளைஞன் மீது காதலுற்றுப் பின் பொதுத்தேர்வு முடிந்ததும் வீட்டுக்குத் தெரியாமல்

திருமணம் செய்து, பெண்ணின் பெற்றோர்கள் ‘மகளைக் காணவில்லை ‘ என்று புகார் கொடுத்து, அதனால் இந்த ஜோடியைப் போலீஸ்

தேடி, போலீஸ் பிடிக்கும் முன்பே இவர்களாகக் காவல் நிலையம் ஒன்றில் ஆஜராகி, இருவரில் அந்தப் பெண், போலீஸிடம் ‘இவர்மீது

குற்றமில்லை, நான்தான் இவரை வற்புறுத்தித் திருமணம் செய்துகொண்டேன் ‘ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

போலீஸோ, ‘ நீ இன்னும் மேஜராகவில்லை, எனவே நீ செய்திருக்கும் குற்றத்திற்கு, உன்னை சிறுவர், சிறுமியர் சீர்திருத்தப் பள்ளியில் 3

ஆண்டுகள் வைப்போம் ‘ என்று சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்கள். 3 ஆண்டுகள் கழித்து வெளியில் வந்து, அவருக்காகக்

காத்திருந்த அதே இளைஞனை மணம் செய்துகொண்டு இப்போது தாய்மையடைந்திருக்கிறாராம். அவர்களின் காதல் ஜெயித்திருக்கிறது.

காதல் வாழ்க! இருப்பினும் அந்தப் பெண்ணின் பேட்டியில் மனம் வலிக்கச் செய்த வரிகள், ‘ என் வீட்டில் எனக்கு இரண்டு அண்ணன்கள்,

நான் கடைக்குட்டி, எனவே உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள், என்னை நன்கு படிக்க வைத்துப் பெரிய ஆளாக்கும்

ஆசையில்தான் பள்ளிக்கு அனுப்பினார்கள். நானும்கூட கலெக்டர் ஆகும் கனவில்தான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தக் கனவு

இவரைக் காணும் வரைதான், பின் அந்தக் கனவு போய், இவரோடு வாழ்வதே என் கனவானது! ‘ என்று உணர்ச்சி பொங்கக்

கூறியிருக்கிறார்.

‘காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் ‘ என்பது சரி. ‘கனவினை அழித்தேன் ‘ என்றால்…. இந்த ஜோடியாவது காதலில் வெற்றி

பெற்றிருக்கிறார்கள், அதுவரை மகிழ்ச்சியே. அப்படியுமின்றி எந்த ஒரு முதிர்ச்சியான புரிதலும் இல்லாத, மிக இளம் வயதில் காதலுக்கும்,

அதன் பின் உயிர்க்கொல்லி மருந்துகளுக்கும், இரயில் தண்டவாளங்களுக்கும், பெற்றோர்களின் சாபங்களுக்கும் பலியாகிற இளம்

ஜோடிகளின் கதை தினம் ஒரு செய்தித்தாளிலாவது வந்துகொண்டேதான் உள்ளன. வாழ்வின் திசையறியாப் பயணத்தில், இன்று இருப்பை

நிலைநாட்டிக் கொள்வதற்கும், குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தையேனும் கடைப்பிடிப்பதற்குமான போராட்டமே கடினமாயுள்ளது.

கல்வியும், வேலைவாய்ப்பும் மிகப்பெரிய சவாலாகிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், ‘படித்திணைக்கு இடமிருந்தால் அதைக்

குடித்தனத்திற்கு வாடகைக்கு விட்டிருப்பேன் ‘ என்ற பாரதிதாசன் வரியில் ‘குடித்தனம் ‘ என்ற வார்த்தை ‘குடித்தனங்கள் ‘ என்று

மாநகரங்களில் ஆகிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்றைய இளம் தலைமுறையின் கனவுகள் ‘காதல் ‘ என்கிற ஒற்றை வார்த்தையால்

முடங்கிப் போவது இந்த சமூகத்திற்கே நல்லதல்ல. இந்தத் தவறில் இருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இந்த

சமூகத்திற்கே உண்டு.

பணக்கார நாடுகள் என்று மெச்சப்படுகிற இடங்களில்கூட பெற்ற குழந்தைகளுக்காகத் தாய்தகப்பன் செய்கிற தியாகங்கள் குறைவுதான்.

‘சூப்பர் செண்டர்களில் ‘ காசாளராகவும், ‘பிஸ்ஸா ஹட்களில் ‘ டெலிவரி கொடுப்பவர்களாகவும் ‘நியூஸ் பேப்பர் நிறுவனங்களில் ‘ ஹோம்

டெலிவரி செய்பவர்களாகவும் இருந்து பணம் சம்பாதித்து, அதன் மூலம் படிக்கின்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்

அமெரிக்காவில்கூட அதிகமாகவே இருக்கின்றனர். ஆனால் நம்நாட்டுக் குடும்பங்களின் தியாகம் அளப்பரியது. எண்ணெய் வாங்கக்கூடக்

காசு செலவழிக்காமல் பரட்டைத் தலையுடன் கூலி வேலை செய்யும் தாய் தன் குழந்தையைக் கஷ்டப்பட்டுப் பள்ளியில் படிக்கவைக்கிறாள்.

அறுந்துபோன செருப்பைத் தைத்து அணிந்துகொண்டு, கல்லூரியில் கணிதம் படிக்கும் மகளுக்குக் கால்குலேட்டர் கேட்டவுடன் வாங்கித்

தரும் கடைநிலை அரசு ஊழியரான அப்பா உண்டு. தன் ME கனவைக் கொன்றுவிட்டு BE முடித்த கையோடு கிடைத்த வேலைக்குப்

போய் தம்பியையோ, தங்கையையோ MBBS ஆக்கும் அண்ணண்களும் உண்டு. இப்படிப்பட்ட உறவுகளைக் கொண்டிருக்கக்

கொடுப்பினை பெற்றவர்கள், இந்த நாட்டிற்கு, உலகிற்குச் செய்ய நிறைய இருக்கும்போது காதல் விளையாட்டில் போதையேறிக்

கவிழ்ந்து விடாதிருக்க அவர்களைப் பழக்க வேண்டும்.

தேர்வுகள் நடத்தப்படுவதோடு, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அவர்களுக்கு, படிக்கின்ற கல்வி சார்ந்தும், கூடவே வாழ்வின் வெற்றி

சார்ந்தும் பயிற்சிப் பட்டறைகள் பல நடத்தப்படவேண்டும். வீட்டில் தொலைக்காட்சியும் (இப்போது இண்டர்நெட்டும்), வெளியில்

சினிமாவும்தான் இவர்களைப் பெரிதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. இவை மற்ற எதையும்விட, காதலை மட்டுமே அதிகம்

வலியுறுத்துகின்றன. அதன் விளைவாய்ப் பல விபரீதப் போக்குகள் தொடர்கின்றன. எனவே, ‘இனிமேல் காதலுக்குப் பதிலாய்,

இளைஞர்களுக்கு இயேசுவையும், புத்தரையும் மட்டுமே போதியுங்கள் ‘ என்று நாம் கோரிக்கை வைக்கப்போவதில்லை. இளைஞர்களுக்குள்

காதலும் இருக்கட்டும்!! ஆனால் அது கனவுகள் வெல்லும் காதலாக இருக்கட்டும், கனவுகள் கொல்லும் காதலாக வேண்டாம்!!! இதை

மீடியாக்களும் கருத்தில் கொண்டால், சுற்றிலும் சுபமே.

****

snayaki@yahoo.com

Series Navigation