கனம் 1 கதை 10 – வரிசை 6 ஆதலினால் காதலே

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

ம. காமுத்துரை


“எனக்கு ஒப்பல…” – மகேஸ்வரன் ரெண்டாவதாகவும் சொன்னான்.
“அதத்தே நானுஞ் சொன்னே… இந்த லூசுப் பயக தான் இங்க பிடிச்சு வந்துட்டாங்கெ…” நண்பர்கள் ரவியையும் சக்தியையும் கண்டித்துச் சொன்னான் செல்வம்.
வீரப்பய்யனார் கோயில் மலை வானுயற நின்று இவர்களது பேச்சை அமைதியாய் கேட்பது போலிருந்தது.
கரும்புத் தோட்டம் அறுப்பு முடிந்து அழிந்து போய் கிடந்தது. கரும்புக் கரணை வேரும், மோட்டுகளும் நிலம் குத்தி நின்றன. கரும்புச் சோகைகள் பாத்தியயங்கும் பரவி நிலம் மூடிக் கிடந்தது. ரெண்டொருநாள் காய விட்டு மொத்தம் கட்டி தீவைப்பார்கள். ஒன்றிரண்டு கரணைகளில் புதிதாய் சிம்பு விட்டு தளிர் விரல் நீளம் நீண்டிருந்தது.
கிணற்றோரமாய் மூன்று பேரும் நின்றிருந்தார்கள்.
மகேஸ்க்கு ரெண்டு விதங்களில் குழப்பம் நீடித்தது. தேவையில்லாம தலய குடுத்துட்டமோ… ஒண்ணு. ரெண்டு நண்பனோட பிரச்சன. முத்திப் போய் நிக்கிது. சரியான நேரத்துல தன்னால உதவ முடியலங்கற குற்ற உணர்ச்சி.
“அதெல்லா ஓசிக்க டயமில்லப்பா… பாதிப் படம் ஓடீருச்சு… இனி கிளைமாக்ஸ்தே… தேவயானத மட்டும் ஓசி…” – சக்தி ரெம்பவும் நிதனாமாய்ப் பேசினான்.
“இதத்தே நா மொதல்லயே சொன்னே… வேணாண்டா லவ்வு கிவ்வெல்லா… சரிப்படாதுண்ணு…”
“பார்ரா… ஒனக்கு அரச்சீனி காப்பிதேன்னூ… அல்லாருக்கும் அப்படியேன்னு நௌச்சுக்கிறதா… ஏண்டா…”
“மாப்ள… தின்ன சோத்துக்கு நீ வெஞ்சனந் தேடுற… அதவிடு, இவன காப்பாத்தற வழிய மட்டும் பேசுவம்…”
விசுக்கென விரைத்தான் செல்வம், “என்னய எவனும் காப்பாத்த வேணாம். என்னா மயித்துக்குடா என்னிய இங்குட்டு இழுத்துட்டு வந்தீக… அங்க இருந்தா என்னிய கொன்னா போட்ருவாங்கெ…”
“கேனக்கூதி கேனக்கூதி… ஏண்டா ஒன்னால ஒரு பொட்டப்பிள்ள மருந்தக்குடிச்சு சாகக் கெடக்கு ஒன்னய மால போடு மணவறைக்கா இழுத்துப் போவாங்கெ… இந்நேரம் ஒவ் வீட்ல என்னென்னா கூத்து நடக்குதோ… பிரண்சிப்பாச்சேன்னு கூட்டிவந்தா மவனே கூப்பாடு போடுற… போடா…” – சக்தி அவனை அடிக்காத குறையாய்ப் பேசினான்.
ஒரு வகையில் அது சரியாகத்தான் இருந்தது.
காலம்பறவே ஒரு கும்பல் ஆட்டோவோடு வீட்டில் வந்து தகராறு செய்திருக்கிறார்கள். செல்வத்த எங்க.. என்று அம்மாவையும் அப்பாவையும் மிரட்டி இருக்கிறார்கள். தெரியல என்று சொல்லியும் வீதியையே கலக்கி வீட்டாளுகளை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
“ஆத்தாளையும் அப்பனையும் தூக்குங்கடா பிள்ள தானா வருவான்…” என்று டயலாக்கும் பேச, தெருக்காரர்கள் ஒன்றுகூடி சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது கேள்விப்பட்டதும் தான் சக்தியும் ரவியும் செல்வத்தை ஊருக்கு மேற்கே மகேசுவின் தோட்டத்துக் இழுத்து வந்துவிட்டார்கள்.
“பகல்ல எங்கியும் பஸ் ஏறி வெளியூர் போக முடியாது. எல்லாப்பக்கமும் எவனாச்சும் துப்பாளு இருப்பாங்கெ… ராத்திரி வரைக்கும் இங்கிட்டு திரிவோம் நைட்ல எங்குட்டாச்சும் எடவெளில பஸ்ச மறிச்சு ஏறிடுவம்…” – என்று ஐடியா கொடுத்திருந்தனர். பள்ளிவாசலில் வாங்கு சொன்ன நேரம் காலை அஞ்சுமணி இருக்கும். ஆள் பாத்து விட்டார்கள். திட்டம் பாழாகி விட்டது.
“டெய்லி ரேசன்கடைய அரிசி. சீமெண்ணன்னு பெரிய பெரிய லாரீல கடத்தீட்டுப் போறாங்கெ… அதெல்லா கண்டுக்காம… விட்றாங்கெ… இந்த மாதிரி காரியத்தமட்டும் எப்பிடித்தே கரெக்டா கேச் பண்ணீர்றாங்களோ…”
“அதாண்டா நைட்ல கெளம்பீர்க்கணுன்டா… இவெ இறங்கி எந்திர்ச்சு வேலைக்கு போற மாதிரி ஆறுமணிக்கு வெளியேறுனா… அவெவெ வாக்கிங்னு சொல்லி நடுகுடு சாமத்துலருந்து லொங்கு லொங்குனு நடக்க ஆரம்பிச்சிடுறாங்கெளே… வீட்ட விட்டு ஒடணம்ன பயக ஒறக்கத்த பாக்கலாமா…”
அப்படித்தான் முதலில் நினைத்திருந்தான். இரவு பனிரண்டு மணிக்கு கிளம்பி விடுவோம் என்று தான் அவளிடம் செல்வம் சொல்லி இருந்தான். அவள் பன்னண்டு மணியைப் பார்த்து அச்சப்பட்ட மாதிரி தெரிந்தது. ஒரு வேளை பேய் நடமாடும் நேரம் என யூகித்திருப்பாளோ…
“அந்நேரம் நாயயல்லாம் வெளீல திரிமே… அதுகளே கத்தி கொலச்சு புடிச்சுக்குடுத்துரும்…”
அதும் ஓரளவு சரியாகத்தான் இருந்தது. அவளது ஏரியாவில் அந்த ஏரியா மட்டுமென்ன ஊரே நாய்த் தொல்லை ஜாஸ்திதான். அதும் அவளது வீதியில் பண்ணை வைத்து போல நாய்கள் இருந்தன. ராத்திரி எட்டு எட்டரைக்கு மேல் யாரும் நுழைய முடியாது. தெரிஞ்ச ஆள் தெரியாத ஆளெல்லாம் அதுக்கு கணக்கில்லை. லேசாய் ஒரு நாய் உரும ஆரம்பித்தால் சரவெடி போல மடமடவென ஒவ்வொரு நாயும் வெவ்வேறு குரல்களில் ஏற்ற இறக்கத்தில் குலைக்க ஆரம்பித்து விடும். ஊருக்கு புதியதாய் வந்தவரென்றால் நிச்சயம் பயத்திலேயே உறைந்து போய் விடுவார்கள்.
“வந்தா ராத்திரி பத்துமணிக்குள்ள வரலாம். இல்ல மொதக் கோழி கூப்பிடும்ல… அல்லா ஓதுற நேரம் சரியா இருக்கும்…” அவளும் சரியாகத்தான் யோசனை சொன்னாள். அந்நேரம் யாரும் – வீட்டாளுகள் – எந்திரிக்கப் போவதில்லை. பஸ் ஸ்டாப் வரை தான். வந்தவுடன் பஸ்சில் ஏறிவிட்டால் அடுத்த நிமிசம் அசலூர்காரனாகி விடலாம்.
பிரண்ஸ்களெல்லாம் கூட சரியாக வந்துவிட்டானுகள். மகேஸ் மட்டும் தான் வரவில்லை. ஆரம்பத்திலிருந்தே தடுதலாய்ப் பேசியவன் அவன் தான். அவனது வாக்குப்படியே எல்லாம் பலித்து விட்டது.
செல்வம் நாலு மணிக்கே பஸ் ஸ்டாண்ட் வந்து விட்டான். இரவெல்லாம் உறங்கவில்லை என்பது வேறு. அவள் வந்த போது தான் பிரச்சனை. தன்னைப் போல் சாதாரணமாக வந்திருக்கலாம். ஏதோ காசிக்குப் போவதைப் போல பெருத்த துணி பேக்கோடு வந்ததுதான் வினை. பஸ் ஸ்டாண்ட் டீக்கடைக்கு பால் ஊத்த வந்த வடமுலுக்கோனால், “என்னாத்தா இந்நேரத்துல வெளியூரா…” – என்று சாதாரணமாகக் கேட்டிருக்கிறார். அவளது தோளில் தொங்கும் பை தொடர்ந்து கேள்வியை எழுப்பி இருக்கிறது. “அம்மா வர்லியா… நீ..யாவா… ஆர் கூட” என்ற அடுத்தடுத்த கேள்வியில் அவள் திணறிய போது, உசாராகிய கோணார்… அந்த செங்கமங்கலான பொழுதில் நாலாபுறமும் பார்வையை ஓட்ட, செல்வமும் நண்பர்களும் நிற்கிற தோரணை அவருக்கு ஓரளவு அனுமானிக்க உதவி இருக்கிறது.
அந்த நேரம் தெற்கே வந்த பஸ்சை மறித்த நண்பர்கள், “சீக்கிரமா வாம்மா… ஏறு… வா புள்ள…” – என்று செல்வத்தை உள்ளே திணித்து விட்டு அவளை அவசரப்படுத்தியதில் களவு ஊர்ஜிதப்பட்டுப் போனது கோனாருக்கு. பஸ் எற எத்தனித்தவளை இறுகப் பிடித்துக் கொண்டார்.
ஏ.வி.எம் டீக்கடை மாஸ்டர் தான் கோனாரை சத்தம் போட்டான், “வெட்டியா ஒரு ஜோடிய பிரிச்சுட்டியே கோனாரே…”
“வக்காள்ளி அந்தக் கெழட்டுப்பயல அங்கனயே அடிச்சு சாச்சுப் போட்ருந்தா இந்நேரம் கதையே வேற…” – சக்தி ரெம்பவும் வருத்தப்பட்டுப் பேசினான். ராத்திரி பூராவும் முழிச்சிருந்து பஸ் ஏறுவதிலிருந்து, காலை டிபன் சாப்பிடுவது, இறங்குவது யார் வீட்டில் அடைக்கலம் கேட்பது என்பது வரைக்கும் சுத்தமான திட்டமிடல் அவனுடையது. அத்தனையும் ஒரு நொடியில் வீணாகிப் போனதே.
“சரி… அந்தப்புள்ள எதுக்கு மருந்தக் குடிச்சிச்சினு தெரிலியே மறுபடி சக்தி அப்பாவித்தனமாய்க் கேட்டான்”
“ம்… நடுவீதில கள்ளப்பயல புடிச்ச மாதிரி கைப்பிடியா புடிச்சு இழுத்துட்டுப் போயிருக்காக… வீதியல எத்தன கேள்வி வந்திருக்கும். வீட்ல சும்மாவா இருப்பாக… அங்க என்னென்னா இம்சயோ… பதில் சொல்றதுக்குப் பதிலா… தான் பரலோகம் போயிரலாம்னு நௌச்சிருக்கும்…” – மகேஸ் முகத்தை இன்னமும் உர்ரெனக் கொண்டே சொன்னான்.
“எனக்கொரு சந்தேகம். அந்தப்புள்ள ஏற்கனவே மருந்து பாட்டில வாங்கி வச்சிருக்கும்னு நௌக்கிறேன். வெளியூர் போனதும் இவனுக்கும் ஊத்தி சேந்து செத்துப் போயிரலாம்னு நௌச்சிருக்குமோ…”.
அந்த கஷ்டத்திலும் மூவருக்கும் சிரிப்பு வந்தது.
செல்வம் கொதி உலையாய் உள்ளுக்குள் தவித்தான். ஒரு பார்வ பாத்துட்டு வந்திட்டா நிம்மதியாயிரும்… கட்டிப்போட்ட மாதிரி இப்பிடி விடாப்பிடியா நிக்கிறானுகளே…
“நா எந்தக் குத்தமுஞ் செய்யலீல்லடா…”
“ஏண்டா ஒரு பொம்பளப் பிள்ளய முழுமூச்சா அள்ளீட்டுப் போக பாத்திருக்க… இதுக்கு மேல என்னாடா குத்தஞ் செய்யணும்… ஓந்தங்கச்சயி எவனாச்சும் இப்பிடி கூட்டிப் போனா சும்மாயிருப்பியா…” – மகேஸ் பயங்கரமாய் வெறுப்பை உமிழ்ந்தான்.
மூன்று பேருக்கும் அது ஷாக் அடித்தது. எதிரியோட கோட்டைய நொளைஞ்சிட்டமோ… என்று எண்ணம் வரச் செய்தது.
“மகேசு…” – சக்தி வியந்து கேட்டான்.
“ரெண்டு பக்கமும் பாக்கணுன்டா… நாயக்காரெ நாயக்காரென்னா என்னத்துக்கு ராத்திரில வீட்டவிட்டு ஓடணும். சட்டமா போய் சட்டமா கூப்பிடு தாலியக் கட்ட வேண்டிதான…”
“லவ்வுன்னா அப்பிடித்தாண்டா…”
“எது காணாம ஓடிப் போறதா… அது களவானித்தனம்டா…”
“அப்ப வீட்ல வேணாம்னு சொன்னா… நீ தங்கச்சி மாதிரி, நா அண்ணெ மாதிரின்னு டயலாக் பேசி வேறாளப் பாக்கணும்ங்கறியா…” – சக்தி
மகேஸ்வரனுக்கு தலையில் அடித்துக கொள்ள வேணும் போல் இருந்தது. அடித்தும் கொண்டான். வெய்யில் நன்றாய் உறைக்க ஆரம்பித்தது. நிலத்தில் கிடந்த சோகையில் தெறித்த வெயில் இவர்களின் உடம்பில் பிரதிபலிக்க உடம்பு எரிச்சலெடுத்தது. கிணற்றை ஒட்டி வளர்ந்திருந்த பூவரசு மரத்தின் நிழலில் மகேஸ்வரன் ஒதுங்கிக் கொண்டான். பம்ப் செட் தொட்டியில் மற்ற முவரும் அமர்ந்திருக்க. செல்வம் நீரோடும் வாய்க்காலில் கிடந்த கணுக்காலளவு நீரில் பாதம் நனைத்து உட்கார்ந்திருந்தான்.
“என்னா பதிலக் காணாம்…”
“எனக்கென்னமோ ஓம் பேச்சு ஒப்பலப்பா…”
சக்தியும் ரவியும் மாறி மாறிப் பேச, செல்வம் அமைதியாய் இருந்தான்.
“நேர்மையான பேச்சு யாருக்கும் ஒப்பாதுடா…”
“எது நேர்மையான பேச்சு… எந்தங்கச்சிய ஒர்த்தே இழுத்துட்டு ஓடணும்ங்கறதா…”
“நா அப்பிடியா சொன்னே… கழுத்துன்னா முன்னும் பின்னும் அசையணும்…”
“ஒன்னோட விடுகதைக்கெல்லாம் நேரமில்லப்பா…”
“விடு, எதுக்கு லவ் பண்றீக….” – நேரடியாய் விசயத்துக்கு வர யத்தனித்தான்.
“எதுக்கு…” – மூன்று பேரும் திகைத்தனர்.
“வாழத்தான… சேந்து வாழத்தான…”
“ஆமா…”
“அதுக்கு ரெண்டு குடும்பமும் சம்மதிச்சா நல்லது தான…”
“அடேயப்பா… சந்தோசமில்லியா…”
“அப்பறம் ஏன் சம்மதிக்க மாட்றாங்க?”
“அதான பெரச்சன… சம்மதம் யார் சொல்றா…”
“அதத்தான் கேக்குறேன் ஏன் மறுக்கறாங்க?”
மூன்று பேருக்கும் சரியான பதில் தெரியவில்லை. வாய்க்குள் முனகினாலும் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை.
“சாதி, காசு, பணம், கெளரவம், கெட்டுப் போயிடுவாங்களோங்கற பயம்… இப்பிடிச் சொல்லலாமா…”
………..
“அடிப்படைல தாம் பிள்ளைக. சீரழிஞ்சுடுவாங்களோங்கிற அடிமனசு பயம் தான் பெத்தவங்களுக்கு… அத நீக்கற மாதிரி நீங்க நடக்கலாம்ல. அதவிட்டு, பொய், பொரட்டு, களவு, கன்னக்கோல்னு அதிரடியா அவங்கள அலக்கழிக்கிறப்ப யார் சம்மதப்படுவாங்க…”
“நேரப் பேசுனாத்தே அங்கங்க பேசி பிரிச்சு வச்சிடுறாகள்ல…”
“நம்பிக்கைய உண்டாக்கப்பா… நாங்க சேந்தம்னா எங்களக்காட்டிலும் நல்லா வாழ்வம்னு செஞ்சு காமி… தம்புள்ள வாழப் பொறுக்காத தாய் தகப்பெ உண்டுமா…”.
“அப்ப கொடி பிடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணச் சொல்ற…”
“நேருக்கு நேரா சந்திச்சுப் பேசனும்னு சொல்றேன். எத்தன பெரிய உலகப் போரும் உக்காந்து பேசினப்பத்தான் தீந்துருக்கு…”
“கட்டிவச்சு அடிச்சாங்கன்னா…”
“யூகத்துக்கெல்லா பதில் சொல்ல முடியாது வெங்காயம். ஆனா ஒண்ணு நிச்சியம் அதிதீவிரமான போக்க விட, இந்த மாதிரியான வழில அனுகூலம் கிடைக்கும். இந்தா நீங்க பண்ணுன அலப்பறைல… பொட்டப்பிள்ளைய மருந்து குடிக்க வச்சுட்டீகள்ல. இதவிடவா பெரிய தும்பம் வந்துரும்…”
மகேஸ்வரன் இந்தப் பிரச்சனையில் இத்தனை நாள் ஒதுங்கி நின்றதன் காரணம் முழுசாய் விளங்கியது மூவருக்கும்.
“நீ இருக்க சீரப்பாத்தா… நீயே எங்கள புடிச்சுக் குடுத்துருவ போல…” – சக்தி நிதானமாகச் சொன்ன போது. தோட்டத்தின் வேலியில் இருசக்கர வண்டி என்று வந்து நின்றது. தோட்டத்தின் வேலியில் இருசக்கர வண்டி என்று வந்து நின்றது. தோட்டத்தின் வேலியில் இருசக்கர வண்டி என்று வந்து நின்றது. அதன் சத்தம் கேட்டு மூவரும் உள்ளம் பதைக்க எழுந்து நின்றனர்.
“நம்ம வண்டிதே… நமக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கு…” – அமைதியாய் மகேஸ் சொன்னான்.
நால்வரும் கை கழுவினர்.
சாப்பாடு மோட்டார் ரூம் சென்றது. வரப்பில் நின்ற வாழை மரத்தில் இலை வெட்டி வந்து சாப்பிட அமர்ந்த போது செல்வத்தைக் காணவில்லை.
>>>
makamuthurai@gmail.com

Series Navigation